velliangiri malaiபத்தாண்டுகளுக்கு முன் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜைக்கான விடுமுறையில் சும்மா கிடந்த சங்கை ஊதி ராகம் கொண்டோனாக நண்பர் தேவா விளையாட்டு போக்கில் கேட்க விளையாடி பார்க்கும் போக்கில் சரி என்றேன்.

நாங்கள் தான் ஒரே அலுவலகம்... ஒரே மாதிரி வாழ்க்கை சூழல்... மாற்றி உத்வேகம் ஏற்றிக் கொள்ள இந்த காரியத்தில் ஈடுபட்டோம் என்றால்.. நண்பர் கவி... நான் சிவனேன்னு தான்டா இருந்தேன்... என்பது போல அன்று தான் சென்னையில் இருந்து ஒரு நீண்ட நெடிய நரகவாசத்துக்குப் பின் வீடு வந்திருந்தார். வந்தவர் வீட்டில் இருந்திருக்கலாம். விதி விஜி வீட்டுக்கு போ என்று விரட்டி இருக்கிறது.

வந்தவரோடு கோடம்பாக்கம் விபரங்கள் கேட்டுக் கொண்டிருக்க... "சரி கவி டைம் ஆச்சு... கிளம்பறேன்..." என்றேன்.

"இந்த நேரத்தில் எங்க...!" என்றார்.

"இந்தா... இடையர்பாளையத்துல நம்ம நண்பர் தேவா இருக்கார்... அவரை பார்த்துட்டு... அப்டியே... இந்த வெள்ளியங்கிரி மலை வரைக்கும் போயிட்டு வந்தர்றேன்" என்றேன்.

"வெள்ளியங்கிரி மலையா... அட நானும் வரேன்... ரெம்ப நாளா போகணும்னு நினைச்ருந்தேன்... ஊர்ல இருந்து வேற வந்துருக்கோம்... ஒரு பூஜையை போட்ட மாறியும் ஆச்சு" என்றார். சந்து பல் சிரிப்பில் தன் ஆப்பு தானே கெக்கலிக்குமாம்.

மலை அடி வாரத்தில் பூஜை போட்டால் வெள்ளியங்கிரி மலை சென்றதாக ஆகி விடும் என்று கவி நினைத்திருக்கிறார். அட என்ன பெரிய வெள்ளியங்கிரி மலை. மருதமலையே ஏறிட்டோம்.. இத ஏற மாட்டோமா... என்ற எண்ணம் எனக்கு.

இன்னும் சொல்ல போனால்... மலை ஏறுதல் என்ன இப்டி ஏறி அப்டி இறங்கிட போறோம் என்ற அளவு தான் அது பற்றிய சிந்தனை. எல்லாம் அறிந்த தேவா என்ன நினைத்தாரோ... போன மாதம் TA அளவன்ஸ் குறைச்சு குடுத்தேன்னு திட்டம் தீட்டினாரா தெரியவில்லை.

மூவரும் கிளம்பி வடவள்ளி வழியாக வீரகேரளம் நுழைந்து பேரூர் பின் பக்க தோட்டத்தின் வழியே நொய்யல் பாலம் கடந்து பேரூர் பேருந்து டெர்மினஸ் - சாலையில்... இணைந்து பேரூர் சாலையில் பயணிக்கையில் மணி இரவு எட்டு மணி.
நானும் கவியும் என் மஞ்சள் குதிரையில். தேவா அவரின் யமஹா சிறுத்தையில்.

இந்த சாலை எப்போதும் எனக்கு பிடரியில் சிறகு முளைக்க செய்து விடும். ஒரு புராதான காலத்தது ராஜ வடிவம் பாவனையில் வந்தமர்ந்து விடும். இரவு காற்றில்... இனிது இறங்க... இசை கேட்கும் செவியோடு இன்னபிற இன்பம் இதுவென்பேன்… இதுதானென்பேன்.

பேரூரிலேயே ஆளுக்கு இரண்டு புரோட்டா… ஒரு ஆம்லெட். அளவாக சாப்பிடலாம் என்றார். எனக்கு அதுவே போதும் என்று தான் இருந்தது. ஆலாந்துறை... தாண்டுகையில் வெயில் காற்று வெப்பம் குறைந்து ஈர காற்று மினுமினுக்க ஆரம்பித்து விட்டது.

சில் எப்போதும் நமக்கு சூடேத்தும்... என்பதால்... சிலிர்ப்பை உடலேற்றி கொண்டாடியது மனம். சக வேகத்தில் சத்தமாக பேசி கொண்டே இரவில் வெளிச்சம் பாய்ச்சுவது அப்போதிருந்த பணிச்சுமையிலிருந்து விலகி மலை மீது எங்கோ மெழுகுவர்த்தி ஏற்றுவது போல சந்தோசம்.

சில இடங்களில் ஓவென சத்தமிட்டு கத்தவும் வாய்த்தது. குதூகலம் ஆகிவிட்டால் குரங்கொன்றை கொண்டு விடுவேன். பிறகு கிறுக்கு தேசம் தான் என் வழியெங்கும்.

அப்படி இப்படி என்று கிட்டத்தட்ட 35 கிலோ மீட்டர்கள் கடந்து இருட்டுப் பள்ளம் தாண்டி… வலது பக்கம் குறுக்கு சாலையில் நுழைந்து செம்மேடு தாண்டி.. ஒரு பிரிவில் நிற்கையில் வலது பக்கம் போனால் பேஷா ஈஷா.

இடது பக்கம் திரும்பினாள் ஆண்டி பூண்டி. அங்கேயே வனத்துறை வழி மரித்தது. வழிமறிப்பதில் கொம்பு முளைத்த குதூகலம் வனத்துறைக்கு.

"என்ன மலை ஏறவா...?"- சந்தேகத்தோடு பார்த்தார்கள். ஆமா என்றும் நாங்களும் சந்தேகத்தோடு தான் பார்த்தோம். சந்தேகங்கள் எதிர் திசையில் நின்று காணுகையில் பொதுவானதாக தான் தெரியும். தெரிந்தது.

பல கட்ட வழக்கத்துக்கு பின் உள்ளே காட்டுக்குள் பயணிக்க ஆரம்பித்தோம். காடு எனக்கு புதிதல்ல. ஆனால் அன்றைய தினம் புதிர் நிறைந்த புதிது. புதர் நிறைந்த காடுகளில் புத்தர் நிறைந்திருப்பார் என்று தோன்றும். ஒவ்வொரு நொடியும் எனக்கென செதுக்கி வைத்தது போல நம்பினேன்.

பூண்டி அடிவாரத்துள் நுழைகையிலேயே... மக்களின் ஆராவாரம் ஆங்காங்கே தென்பட… அத்தனை நேரம் இருந்த இருள் விலகி இருந்தது. மனிதர்கள் தான் கோயிலுக்கு அழகு என்று தோன்றியது.

வண்டியை பார்க் செய்ய வழி காட்டினார் ஒருவர். "என்ன... மஞ்சள் குதிரையை ஒருவன் மறைப்பதா..!" என்பது போல பார்த்தேன். சரி போனா போகட்டும் என்பது போல கெத்தில் தலை கோதியபடியே வண்டியை ஸ்டேண்டில் போட்டு டோக்கன் வாங்கினேன்.

"என்ன... மலை ஏறவா...?!" - கேள்வி மறுபடியும்.

ஏன் நாங்கெல்லாம் ஏற கூடாதா.. இவன்கிட்டல்லாம் என்ன பேசுவது. புன்னகைத்துக் கொண்டேன். தேவா முன்னின்று அழைத்துக் கொண்டு போகிறார். அடிவார கோயிலில் கவி வேண்டிக்கொண்டார். பூஜை கூட போட்டார்.

தேவாவும் கும்பிட்டு கொண்டார். நமக்கு கடவுள் பழக்கம் அவ்வளவு இல்லை என்பதால்... தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டேன். இரவில்... காட்டுக்குள்.. வேடிக்கை மனம் வாய்த்தத்தில் லக லக லக லக லக லயிப்பு தான்.

அடுத்த பத்தாவது நிமிடம்... முதல் மலைக்கான படிக்கட்டில் ஏற ஆரம்பித்திருந்தோம். அது முதல் மலை இரண்டாவது மலை என்றெல்லாம் எனக்கு அந்த நொடி வரை தெரியவில்லை.

"பொதுவாக.. ரெண்டு மூணு மலை ஏறணும்னு நினைக்கறேன்" என்ற கவியை... "என்னது ரெண்டு மூணு ரெண்டு மலையா..? புரியலையே!" என்றேன். ஒரு சுற்றுலாக்காரன் மொழி எனக்கு.

"நாம சாமி கும்பிட்டு திரும்பிடுவோம்னு நினைச்சா நீங்க மலை ஏற கூட்டிட்டு வந்துட்டீங்க... ரெண்டு மூணு மலை இருக்குனு கேள்வி பட்டிருக்கேன்..." கவி காதுகளின் வழியே பேசுவது போல பேசினார். நான் அந்த வெண்ணிற இருளிலும் நெற்றி சுருக்கினேன். நிலவொளி சளீரென பிரகாசித்ததாக நினைப்பு.

எங்களை வேகமாய் கடந்த ஒருவர்.. "ஹலோ.... ரெண்டு மூணு இல்ல மொத்தம் ஏழு இருக்கு" என்று சொல்லி பதிலுக்கு காத்திராமல் வெக் வெக்கென்று நடந்து கடந்து முன்னேறிக் கொண்டிருந்தார்.

படிக்கட்டுகள் நம்ம வீடு மொட்டைமாடிக்கு போவது போல இல்லை. நெட்டு குத்தலாக... சில இடங்களில்... திருச்சி உச்சி பிள்ளையார் படிக்கட்டுகள் போல.

திக்கென்றது. என்னது ஏழு மலையா... மணி இரவு 10. சில் காற்றும்.. ஈர காற்றும்... லேசாக தூறும் மழைத் துளியும் உள்ளே கலவரப்படுத்தியது.

இன்னொன்று என்னவென்றால்.. எங்களைக் கடந்து வேக வேகமாய் முன்னேறுபவர்கள் அனைவரின் கையிலும் ஒரு கம்பு இருந்தது. முதுகில் ஒரு பேக் இருந்தது. கவனித்துக் கொண்டே நடக்க நடக்க… அனிச்சையாய் தாகம் எடுக்க ஆரம்பித்தது. அப்போது தான் ஒரு தண்ணீர் பாட்டில் கூட வாங்காமல் வந்து விட்டது உரைத்தது.

இந்தா.. இப்டி ஏறி… ஒரு டூ ஹவர்ஸ்ல கீழ இறங்கிட போறோம். இதுல என்ன பெருசா... தாகமோ பசியோ வந்தர போகுது... நினைத்த மனதில் சிக்கல் விக்கல்.

ஒவ்வொருவரையும் கவனிக்க கவனிக்க... மலை ஏறுகையில்,.. அடிப்படையாக கடைப்பிடிக்க வேண்டிய எதுவுமே நாங்கள் செய்யவில்லை என்று புரிந்தது.

ஒரு வயதானவருடன் பேச்சு கொடுக்க… அவர் "என்ன தைரியத்துல இப்டி ஒரு தண்ணி கேன் கூட எடுக்காம மலை ஏற வந்திருக்கீங்க..."என்றவர் கழுத்தை மலை அளவுக்கு உயர்த்தி… "அவன் தான் காப்பாத்தனும்" என்றார். அவர் நடை கூடியது. எங்கள் நடை கால்களைத் தேடியது.

சட்டென்று "தேவா திரும்பிடலாம் தேவா" என்றேன். கவி... ஆமோதிப்பது போல நடையைத் தளர்த்தினார். ஒரு முக்கோண தடுமாற்றம் எங்களுள். முன் சென்ற தேவா நிதானமாக மூச்சிழுத்து நின்று திரும்ப... பின் சென்ற நாங்கள் பெருமூச்சு விட்டபடியே நின்று பார்த்தோம்.

"நம்ம ஏழுமலை ஏற வேண்டாம். ஒரு ரெண்டு மலை ஏறிட்டு... வந்துருவோம்..." என்றார்... இடுப்பில் கை வைத்து நின்று சிரித்தபடியே பார்த்த... தேவா.

இது தூண்டிலா... துண்டு வானம் பறித்து தரும் வித்தையா... தெரியவில்லை. மூச்சில் சூடு நிரம்பியது. நா வறண்டதை வாழ்நாளில் முதன் முதலாக உணர்ந்தேன்.

உள்ளுக்குள் சூடு. நெஞ்சு முழுக்க இதயம். மூளையில் தீராத படிக்கட்டுகள். உலகத்தை விட்டு வேறு எங்கோ வந்து விட்டது போல இருளும் நிலவும். மேலே விழும் சாரலில்... ஏதோ பெரிய தவறை செய்து விட்டோம்... என்று மனதுக்குள் பெருங்காற்று. முடிவெடுக்க முடியாத பயம் காதுக்குள் காட்டின் இரைச்சலாய்.

முதல் மலை ஏறி நிற்கையில்... கால்களில்... நடுக்கம் கூடி இருந்தது. சட்டை நனைந்திருந்த வியர்வையில்... இரவு இன்னும் கொஞ்சம் குளிர்ந்திருந்தது.

கூட்டத்தில் கை விட்டு கொட்டாமல் சோடா நிரம்பிய யூஸ் அண்ட் த்ரோ கோப்பையை வாங்கி என்னிடம் நீட்டினார் தேவா. அமிர்தம் அது தான் என்றேன்.. ஒரே மூச்சில் அருந்தி விட்டு... திரும்பினால் வெறி கொண்டு குடித்துக் கொண்டிருந்தார் கவி. கவி நெற்றியில் அடித்திருத்த விபூதி கரைந்திருந்தது. உடல் நனைய உள்ளம் கொதித்திருந்தது மூவருக்குமே.

"திரும்பிடலாம் தேவா..." தீர்க்கத்தின் அருகே திக்கினேன்.

"ஏங்க... ஆபீஸ்ல இந்த மேட்டர் தெரிஞ்சா நம்ம பத்தி என்ன நினைப்பாங்க... கேவலமா சிரிப்பாங்கங்க... இதுல ஜிம் பாடி வேற நீங்க..." உசுப்பேத்துகிறார் என்று தெரிந்தும்... உசுப்பானேன்.

"யு கான்ட் ஹூ கேன்..." மந்திர சொல் தந்திரமாய் தட்டிக் கொடுத்தது.

"சரி நடங்க..." என்றேன். நடுக்கத்தை வழியெங்கும் படிக்கட்டுகள்... பாவமாய் ஏந்திக் கொண்டன. பின்னால் முன்னால் என்று கூட்டம் தனியாக என்று மக்களின் வேண்டுதல்கள் நடையாய் நடந்தன.

"நாமளும் கம்பு கொண்டு வந்திருக்க வேண்டும்" என்றேன். மூச்சிரைக்க சொற்களில்... அரூப படிக்கட்டுகள்.

"யாருக்கு தெரியும் இதெல்லாம்" என்றார் தேவா.

"நான் இன்னைக்கு தானே சென்னைல இருந்து வந்தேன். எனக்கு இது தேவையா" என்று வடிவேலு உடல்மொழியில் கேட்ட...." கவி குரலில் காற்றின் வேகம்... அழாத குறை அருகாமையில். வடிவேலுவைப் பார்ப்பது போலவே இருந்தது. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாய் சிரித்து விட்டேன். தேவாவுக்கு நமட்டு சிரிப்பு.

மும்முரமாய் மலை ஏறிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில்... நாங்கள் மூவரும் எங்களுக்கே காமெடியாக தெரிந்தோம். தலையுமில்லாத வாலுமில்லாத தவித்த பிண்டமென மூச்சிரைத்தோம். இடையே பிசிறு நிறைந்த சிரிப்புகள்... பேச்சு வாக்கில்.

காதடைக்க ஆரம்பித்து விட்டது. இரண்டாம் மலையில் நின்று கீழே பார்க்க காட்டுக்குள் தான் அள்ளி இரையப்பட்ட ஊர்கள் இருப்பது போல மினுமினுத்தன வெளிச்ச துகள்கள்.

மேகம் கூட தலையொட்டி போவது போல. மழை எங்களுக்கு கீழே பெய்வது போல. பௌதீக மாற்றத்தை மூன்றாம் மலையில் காணுகையில்... மூச்சில் பாதி தான் நிறைந்தது... பேச்சில்... கால்வாசி இருந்த காற்று.

உக்கார்ந்து உக்கார்ந்து... ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து... சோடா குடித்து சோடா குடித்து... நாங்கள் தான் நடக்கிறோமோ அல்லது யாரோ எங்களில் நடக்கிறார்களா என்று கூட ஆனது.

குதிகாலில்... குத்தும் கற்களில்... ஆரம்பத்தில் கிடைத்த கூச்சம் நகர்ந்து... இப்போது சுளீர் சுளீர் என்று உஷ்ணம் கிடைத்தது. மலை ஏறுவோர் செருப்பணிய கூடாது என்ற வழக்கம் வேறு மனதுக்குள் திகிலாடியது. வழக்கம் போல இந்த முறையும் செருப்பு தொலைந்தால் என்ன செய்வது என்று உள்ளே பெரும் பாறாங்கல் மனதில்.

ஐந்தாம் ஆறாம் மலைகளில்.. சோடாவும் கிடைக்காமல் தள்ளாடினோம். தேவா மீது கோபம் கூட வந்து விட்டது. இனி திரும்புவதில் எந்த பயனும் இல்லை. நேரம் அதிகாலை 5 மணியைக் காட்ட மலைக்கு பின்புறம் இருந்து வெளியே கசியும் வெளிச்சம் புது சுகந்த காற்றை அள்ளிக் கொட்டியது. இதுவரை இருந்த மூச்சு பற்றாக்குறை இப்போது இல்லை. காட்டில் புதிய வாசம் விடாப்பிடியாக விரவிக் கிடந்தது.

சில இடங்களில் பலர்.. பாறையொட்டி பாயும் நீர் அள்ளி குடித்தார்கள். சுண்ணாம்பு போல ஏதோ மண்ணை சிலர் சுரண்டி சேகரித்துக் கொண்டார்கள். சிலர் ஒரு குளத்தில் குளிக்கவும் செய்தார்கள். பார்க்க பார்க்க புது அனுபவமாக இருந்தது. நான் அந்த நடையை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.

கால்கள் வீங்கி விட்டாலும்... உடல் வலிமை அகன்று விட்டிருந்தாலும்.. மனதில்.. ஆச்சர்யம் ஏறி எங்கோ ஒரு மலை மீது... அதிகாலை இளங்காற்றை உடல் பூச... சிரிப்பும்... உத்வேகமும் நிரம்பியதை உணர்ந்தேன்.

என்ன ஆனாலும்... சரி... ஏழுமலை ஏறிட்டு தான் திரும்புவது.. .என்று உள்ளே சிரித்துக் கொண்டேன். பட்டும் படாமல் வெளிச்சத்தை இருளுக்குள் வீசி ஏறிந்து வண்ணம் சேர்ப்பது போல... நொடி நேர ஓவியங்கள் காணும் இடமெல்லாம் வந்து வந்து மிளிர்ந்தன.

வந்து மோதும் காற்றில் பச்சை வாசம். குளிர் காற்றில் நுரையீரல் நிரம்பி ததும்பும் சுவாசம் என்று உற்சாகம் தொற்றிக் கொள்ள நான் இன்னொருவனாக ஆகி இருந்தேன். தேவாவும் கவியும் கூட இன்னொருவராக முயற்சிப்பது போல தான் தெரிந்தது.

ஏழாம் மலை பெரும்பாலும் தவழ்ந்தபடி தான் ஏற முடியும். அத்தனை நேர்த்தியான நேர் கொண்ட உயரம். எதிரே மூச்சடைத்து இறந்த ஒருவரை தொட்டில் கட்டி கீழே தூக்கி போனதைக் காண்கையில் திக்கென்றது. தவழ்ந்தபடி காலச்சந்தில் திரும்பி பார்த்தால்... கரணம் தப்பினால் மரணம் தான்.

பிடி தவறி கீழே போனால்... மிஞ்ச நினைவு இருக்காது. சில இடங்களில்,..... படிக்கட்டுகள் இல்லாமல்... ஒற்றையடியாக... பச்சையில் பூத்த செந்நிற படுகை சிறு சிறு கற்களில்... சிந்தனை கூட்டும்.

ஒரு வழியாக ஏழாம் மலை உச்சியில்... நிற்கையில் நிறைந்து விட்டேன். நானே கடவுளென ஒரு துளி குறும்பன் வந்து நெற்றியில் வியர்வை வழித்தான்.

கீழே எறும்பூரும் வரிசையாய் மனிதர்கள் வருவதும் போவதும் என்று பார்க்க பார்க்க வானம் முட்டும் கற்பனை நம்மில் இருந்து நாலா பக்கமும் சிதறுவதை உணர முடிந்தது. எட்டிக் குதித்தால் வானத்தில் பஞ்சு மிட்டாய் பறித்து விடலாம்... போல. கைகள் தூக்கி காலம் தொட்டேன். வானம் முட்டி பறவை கற்றேன்.

கூட்டத்தோடு கூட்டமாக மக்கள் தற்காலிக நடைமேடை போல இருந்த கடவுளின் வாசலில் நின்று தரிசித்து விட்டு அந்த பக்கமாக வெளியேறி கீழே இறங்க வேண்டும் என்பது வழிமுறை.

வாசலில் நின்று திரும்பி வெளிப்புறம் காணுகையில்.. வலது பக்கத்தில் ஏறி ரெவெர்ஸ் பா வடிவத்தில் நகர்ந்து கடவுள் தரிசனம் கண்டு பிறகு இடது பக்கத்தில் நீளும் பா வின் ஒரு காலின் வழியே கீழிறங்க வேண்டும். மக்கள் சாரை சாரையாக இப்படி மேலேறி வந்து நின்று குவிந்து தரிசித்து அப்படி கீழிறங்கி கொண்டிருந்தார்கள்.

எனக்கு மலை தான் தரிசனம். நண்பர்கள் கடவுள் காண நான் கண்டவர்களை கண்டேன். அத்தனை முகத்திலும் அருள் பாலிக்கும் ஆன்ம திருப்தி. ஒவ்வொரு காலிலும் ஒரு நூறு வேண்டுதல். ஒவ்வொரு கண்களிலும் வாழ்வின் தீராமை.

பின்னால் இருந்த பாறையில் ஆங்காங்கே சாமிகள் சிலர் சம்மனமிட்டு சடை வளர்த்து கண்கள் மூடி அமர்ந்திருந்தார்கள். நானும் கூட அமர்ந்து பார்த்தேன்.

இரண்டு நாட்கள் இருங்கள்... வந்து அழைத்து போகிறோம் என்று சொல்வார்களா என்று கூட நொடியில் தோன்றியது. மலை உச்ச வாசத்தில் மானுட சகவாசம் அற்றிருக்க மனம் விரும்பியதை வாக்கியத்தில் அமைக்க வரிகள் போதாது.

போகும் பொது இருந்த சுய தடுமாற்றம் திரும்புகையில் இல்லை. ஒவ்வொரு மலையாக ரசித்து இறங்கினேன். கால்களில் வீக்கம் கூடியது. பாதங்களில் கொப்புளம் வேறு.

கண்களில் தூக்கம் வடிந்தது. தலையில் ஆசை கூடி வலி ஏறி கிண்ணென்றிருந்தது. பசி வேறு. காலை 10… 12... 2.. 3... என்று முதல் மலையைத் தொடுகையில்.. மாலை 4 மணி.

முந்தின நாள் இரவு 10 மணிக்கு ஆரம்பித்த யாத்திரை மறுநாள் மலை 4 மணிக்கு முடிவடைகிறது. இதில் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்து விட்டேன். மலை ஏறுகையிலேயே இரண்டாம் மலையில்... எனது நைட் பேண்ட் முக்கால் இஞ்ச்க்கு கிழிந்து விட்டது.

காலை வேகமாய் எக்கி ஏறுகையில் நிகழ்ந்திருக்கும்... கிழிசல் படலம். இருட்டுதானே என்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இறங்குகையில் நேராக இறங்க முடியவில்லை. பகல் பளீர்ன்னு பாய்ந்து வந்தது.

குரல் வீங்கிய கவிக்கும் கண்கள் இடுங்கிய தேவாவுக்கும் சிரிப்போ சிரிப்பு. எனக்கே சிரிப்பு தாங்க முடியவில்லை. என்ன சோதனைடா இது என்றிருந்தது. மலை ஏறுகையில் அணியும் ஆடை எத்தனை முக்கியம் என்று பட்டது.

காலை ஒரு பக்கமாக சேர்த்து சேர்த்து ஒரு சேர நடந்து வந்தது காலத்துக்கும் கண்ணீர் மல்கும் சிரிப்பு நினைவு.

அதுவும் முதல் மலையில் கீழே கோயில் ஒட்டிய கடைசி 50 படிக்கட்டுகளில மலை ஏறியவர்களை வரவேற்க அவர்களின் மனைவிகள்… அம்மாக்கள் என்று பெரும் கூட்டம் தண்ணீர் குடத்தோடு காத்து நின்றது. பார்த்ததுமே பகீரென்றது. செத்தேன் நான்.

இந்த சோதனையை எப்படி கடப்பது. சுற்றிக் கொள்ள ஒரு துண்டு கூட இல்லை. சிரிப்பதா அழுவதா. இத்தனை படிக்கட்டுகளை கடந்த எனக்கு இந்த 50 படிக்கட்டுகள் ஏழுமலைகளைத் தாண்டியும் பெரிதாக இருந்தது.

எனக்கு முன்னால் இருவரும் சிரித்துக் கொண்டே என்னை மறைத்துக் கொண்டே நடக்க... நான் காலை ஒட்டி ஒட்டி ஒருவழியாக கீழிறங்கினேன். பப்பரப்பா காட்சி இப்போதும் முகம் மூடி சிரிக்கிறது.

கூட்டம் கடந்து... ஒதுங்கி நின்று அண்ணாந்து மேலே ஒரு முறை மலையைப் பார்த்தேன். கடவுளின் தூணாக புன்னகைத்தது மலை.

மலை ஏறுகையில் இருந்த மனம் மலை இறங்குகையில் இருக்காது. தத்து பித்து தத்துவமெல்லாம் தவிடு பொடியாகி வாழ்வென்னும் தாகத்தின் வலிமை என்னவென்று புரிந்து விடும். எல்லாமே காலத்தின் வகுப்புகள் என்றே நம்பினேன்.

"அண்ணே அந்த மஞ்ச பைக்கை கொஞ்சம் ஸ்டார்ட் பண்ணி எங்களை ஏத்தி உக்கார வைக்கறீங்களா" என்றேன். உடலில் மலை ஏறி இருக்க... நேத்திருந்த கெத்தெல்லாம் கத்திக் கொண்டு கரை ஏறி இருந்தது. பைக் ஸ்டேண்டில் டோக்கன் போடுபவர்... அர்த்தத்தோடு புன்னகைத்தார்.

நல்ல வேளை செருப்பு வழக்கம் போல தொலையவில்லை. வீங்கிய காலில் சிரமப்பட்டு நுழைத்தேன்.

"நான் சிவனேன்னு தான இருந்தேன்" கவியின் குரலில்... சத்தமில்லை. இடுங்கிய வீங்கிய உள்ளொடுங்கிய கண்களில் பார்க்க பார்க்க சிரிப்பு தான்.

மூவருமே சிரித்துக் கொண்டோம். சும்மா கிடந்த சங்கிலும் ஊத ஊத சங்கீதம் பிறக்கும்.

வழியெங்கும் தூங்கி தூங்கி வழிந்த கவியை தட்டி தட்டி எழுப்பிக் கொண்டே வீடு வருகையில் இரவு 7 மணி. வந்ததும் சாப்பிட்டு படுத்தது தான்… அடுத்து ஒன்றரை நாட்கள் மலை உச்சி பாறையாக கிடந்தேன். மன கண்களில்... பாறையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் யாரோ ஒருவர் என்னைப் போலவே தெரிந்தார்.

- கவிஜி