"இதுவரை இந்த மாதிரி மலக்குழி மரணங்களுக்கு தண்டனை தரப்படவில்லை" என்ற வரியோடு தான் இந்த படம் முடிகிறது.

நமக்குள் வரி வரியாய் கவலையும் அச்சமும்... இந்த மேம்போக்கான சமூகத்தின் மீதான பதற்றமும்... அதிகரிக்கிறது.

இந்திராணி துப்புரவு தொழிலாளி. ஆனாலும்.. மகனை கல்லூரியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஓர் இரவில் அவன் மலக்குழியில் இறங்க கட்டாயப்படுத்தி அதன் மூலம் நேர்ந்த துர்மரணம்.. என்று தான் படம் ஆரம்பிக்கிறது.

ஒரு இளைஞனை மலக்குழியில் இறக்கி... அது விபத்தாக இருப்பினும்.... அப்படி இறக்கி விடக் கூடாது என்ற சட்டத்தை காவு வாங்கிய பின்... அது கொலை என்றுதானே எடுத்துக் கொள்ள முடியும். அதற்கு நியாயம் கேட்க தானே வேண்டும். அது தான் இந்த சினிமா.witnessதனது வாழ்வின் மொத்த நம்பிக்கையான... தன் மகன் இறந்த பிறகு அந்த தாய் படும் பாடும் வேதனையும் சொல்லி மாளாது. சொற்களில் கூடாது.

காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கி தர அவரும்... அவருக்காக துணை வரும் தோழர் கூட்டமும் முன்னெடுக்கும் போராட்டங்கள்... சுதந்திர நாட்டின் முகத்தில் அறைந்து காரி உமிழுபவை. எந்த சட்டமும் மீறுவதற்கு தான் இங்கு தயாராக இருக்கிறது. அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கும்... சாதிய வேர்களின் கிறுக்குத் தனங்களும் எப்போதும் தன் ஆணவத்தை அரணாக வைக்க தயங்குவதில்லை. அது தப்பு என தெரிந்த பின்னும் அது நடந்தது உனக்கு தானே என்ற அலட்சியமும் உயர் சாதியென நம்பும் அரிப்பும் பல துயர்களை போகிற போக்கில் நிகழ்த்தி விடுகின்றன.

அதிகாரத்தை.... படித்த.... வசதி படைத்த வர்க்கமே எதிர்க்க முடியாத சூழல் தான் இங்கு. இது இப்படி இருக்க... படிப்பிலும் பின்தங்கி... மற்றோரால் இழிவாக பார்க்கப்படும் வேலையை செய்யும் பொருட்டு.... அவர்களை இன்னும் கீழே தள்ளி ஒதுக்கி வைக்கும்... பொது சமூகத்தை எதிர்த்து.... எப்படி.... இந்த சிறு கூட்டம் தன் வினை ஆற்ற முடியும்....?

அதிலும் ஒரு தனி மனுஷி... இத்தனை பெரிய சூட்சுமத்தை எதிர்த்து எப்படி போராட முடியும்.

இந்திராணியின் போராட்டம் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெயர் தெரியாத மனுஷியின் போராட்டமாகத் தான் இருக்கிறது. அப்படித்தான் உணர முடிகிறது.

மலக்குழிக்குள் கட்டாயப்படுத்தி இறக்கி விடப்படும் அந்த இளைஞன் ஒரு தேர்ந்த நீச்சல்காரன் என்பதும் அவனாலேயே உள்ளே தாக்கு பிடிக்க முடியாத போது சராசரி மனிதர்களின் கதி என்ன என்று யோசிக்க வேண்டும் தானே.

படம் பார்க்க பார்க்கவே எனக்கு "மலர்வதி"யின் தூப்புக்காரி நாவல் நினைவுக்கு வந்தது.

அந்த நாவலை படித்து முடித்த இரவு... தலைக்குள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த இனம் புரியாத தவிப்பை மீண்டும் இந்த படம் கொடுத்தது.

அன்றைக்கான வாழ்வில்... அதுவும் பிறரின் குப்பைகளை... கழிவுகளை அகற்றி... அதையே வேலையாக.... வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தை அப்படியே அவர்களாகவே வைத்திருக்க செய்யும் அதிகாரமும் ஆணவமும்..... சட்டம் போட்டு... அதை அப்படியே இருக்க.... காவல் காப்பது தான் சுந்திர நாடு என்றால் பாரதி சொன்னது போல எல்லாம் ஐயோவென போகட்டும்.

எது எதற்கோ இயந்திரம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்... இதற்கு கண்டு பிடிக்க முடியாதா.... என்ற கேள்வி தொடர்ந்து நமக்குள் இருக்கிறது.

கண்டு பிடித்து விட்டால்... அவர்களை முடக்கி தனக்கு கீழே வைத்துக் கொள்ளும் நிலையை அதிகார ஆணவ வர்க்கம் இழக்க நேரிடும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அவர்களுக்கு எப்போதும் எப்படியும் தங்களுக்கு கீழே ஒரு கூட்டம் அடிமையாக இருக்க வேண்டும். அது தான் அவர்களின் இருத்தலுக்கு அவர்கள் செய்து கொண்ட வசதியான சட்ட திட்டம். இதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

சாதிய மனநிலை ஒரு பழக்கப்படுத்தப்பட்ட மனநோய்.

இதுக்கு தான் படிச்சு முன்னேறி போய்டுங்க என்று சொல்லும் ஒரு வழக்கம் கொஞ்சம் முன்னேறிய சமூகத்தில் இருக்கிறது. அதையும் இந்த சினிமாவில் ஷ்ரத்தா பாத்திரம் பளிச்சென போட்டுடைக்கிறது. நன்றாக படித்த ஒரு ஆர்க்கிடெக்ட். அவரையே அதே சாதியை காட்டி ஒரு அபார்ட்மெண்ட்டே ஒதுக்கி வைத்திருப்பதும்... தொல்லை கொடுப்பதும்... சினிமாவுக்காக கொஞ்சம் அதிகப்படியாக காட்டுகிறார்கள் என்றெல்லாம் எடுத்துக் கொள்ள கூடாது. இது எல்லா பக்கமும் இருக்கிறது. சுற்றிலும் சாதியில் தகித்தவன் இருக்கும் இடத்தில்.....அது அப்பார்ட்மெண்ட்டோ வில்லாவோ... கல்லூரியோ பள்ளியோ... இன்ஸ்டிடூட்டோ யூனிவெர்சிட்டியோ.... சாதியில் தவித்த ஒருவன் வாழ்ந்திடவே முடியாது.

இங்கு முக்கால்வாசி பேர் சென்னை மழைக்கு சப்பாத்தி சுட்டு கொடுக்கும் தமிழர்கள் அவ்வளவே. மற்றபடி... உனக்கு கீழ நான்....இருந்தாலும்...எனக்கு கீழ அவன்... இருக்கான்ங்கற மன நிம்மதில அதன் மூலம் கிடைக்கும் சுய திருப்தில இன்னொருவருக்கு கீழே இருக்க சம்மதிக்கும்...அதே நேரம் இன்னொருவரை தனக்கு கீழே எப்பாடு பட்டாவது வைத்திருக்கும் பூர்ஷ்வா இனம் தான்.

மகனை பறிகொடுத்து விட்டு நிராதரவாக நித்தமும் உள்ளே புழுங்கி... குமுறி இயலாமையில் நடை பிணமாக இருக்கும் இந்திராணிக்கு... தோழர்கள் உதவ முன் வருகிறார்கள். அதிகாரம் எத்தனை விதமான அடக்குமுறைகளை ஏவி விடுகிறது....! திரும்பும் பக்கமெல்லாம் அறிவின் சூழ்ச்சி. அதிகாரத்தின் ஏய்ப்பு. என்னதான் செய்வான் சாமானியன். ஆனாலும் அவன் கடைசி ஆயுதமென தன்னையே போராட்ட களமாக செய்வான். அது தான் அடுத்து நடக்கிறது.

தோழர் செல்வா தோள் கொடுக்கிறார்.

தோழர் செல்வா இந்த படத்தில் தோழராகவே வருகிறார். வசனம் பேசி ஹீரோயிசம் செய்யாத தோழர்.. நிஜ களத்தை கண்முன் காட்டுகிறார். என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிகள் மட்டும் அல்ல.... இங்கு அதிகாரத்தில் இருப்போரும் கூட தீர்மானிக்கிறார்கள் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இறந்த உடலை காட்டாமலே போஸ்ட் மார்ட்டத்துக்கு கொண்டு செல்வதும்... அதை தொடர்ந்து.... அதை மறைக்க... காவல்துறை போடும் நாடகமும் நிஜமாகவே அச்சத்தில் நம்மை உறைய வைக்கிறது. எத்தனை மோசமான உலகத்தில் தமிழன் தமிழன் என்று பெருமை பேசி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற சுய கழிவிரக்கம் வருவதை தடுக்க முடியவில்லை. அறிவு அபாயகரமானது....என உணரும் வேளையில் அதே அறிவு தான் ஆற்றுப்படுத்தவும் உண்மையை உரக்க கூறுவதற்கும் உதவுகிறது. சண்முக ராஜன் பாத்திரம் சட்டத்தை எந்த வகையில் எல்லாம் உண்மையை நிலைநாட்ட பயன்படுத்த முடியுமோ அந்த வகையில் எல்லாம் நுழைந்து வாதிடுகிறது.

கோட்டுக்கு அந்த பக்கம் இருக்கும் வரை சொகுசு வாழ்க்கை தான். இந்த பக்கம் வந்து பார்த்தால் தான் தெரியும்... சாவும் சாக்கடையும்... மலமும் மனித தன்மையற்ற செயலுமாய்... அடிமை சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் துயர வாழ்வு.

அவர்கள் என்றாலே எதிரே இருப்போர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற துளி சோற்று பதமாக.... படத்தில் வரும் அந்த மேஸ்திரி கதாபாத்திரம். வக்கிரத்தின் வடிவமாக அந்த சின்னஞ்சிறு வயதிலேயே விஷம் ஏறிய வார்ப்பு அவன். கொலைகாரனை விட கொடூரன்.

அவன் பேசிய பேச்சுக்கு எதிர்வினையை ஒரு அறையாக இந்திராணி காட்டி விட அதற்கு அவன் செய்யும் செயல் வாழ்நாள் சாபம்.

பத்து வருஷம்....ஒவ்வொரு இரவும் ரோடு ரோடாக தூய்மை பணி செய்த இந்திராணியின் சர்வீஸையே இல்லாமல் செய்து விட்ட வஞ்சம்... நெஞ்சம் தாங்காது.

அரசு அலுவலகம் என்றாலே மரியாதை என்னவென்று தெரியாத மண்டையோட்டு கூடுகள் என்றால் மிகையில்லை. தெரு நாயை விரட்டுவது போல அவர்களின் செய்கைகளும்... பேச்சும்... ஏச்சும்...சக மனிதனை உயிரோடு கொல்பவை. நல்லவேளை செத்து விடும் முன் அங்கேயே உட்கார்ந்து போராட ஆரம்பிக்கும் இந்திராணிக்கு வேறு வழி இல்லை. தனக்கான அடையாளத்தையே அழிக்கும் சக்தி அதிகாரத்திற்கு உண்டென நினைக்கையில் பதட்டப்படாமல் இருக்க முடியவில்லை. குருவி சேர்த்த கூட்டை களைத்து விடுவது போல அந்த ஒற்றை மனுஷி ஊரை கூட்டி சேர்த்த காசை இல்லை என்று சொல்லும் அதிகாரம் நிச்சயம் அச்சுறுத்தல் தான்.

இந்த மனிதர்களின் அன்பும் பாசமும் வாழ்க்கை முறையும் ... மற்ற மனிதர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை என்பது தான் புண்ணிய தேசத்தின் புதிர். புல்டோசர் விட்டு அடித்து நொறுக்க வேண்டியது அவர்களின் சிந்தனை காழ்ப்பு.

திரும்பும் பக்கமெல்லாம் இருக்கும் இயலாமை. எழுந்து விட முடியாமை. சுற்றிலும் பணம் உள்ளவன் வெட்டும் குழி. அதிகாரம் உள்ளவன் கட்டும் திட்டம்... என்று இவர்களை அடிமையாய் தொடர வைப்பதற்கு எல்லா வகையான வேலைகளும் கச்சிதமாக நடக்கின்றன. தாங்கள் செய்த தவறில் இருந்து தப்பித்துக் கொள்ள காசுள்ளோர் செய்யும் எல்லா வகையான ஊழலும் ஒன்று சேர்ந்து கொள்வது... கூட்டு களவாணித்தனம்.

பொறுப்பு துறப்பை இவர்கள் மீது சுலபமாக நிகழ்த்தி பார்க்கும் பொது சமூகம் தன் வேஸ்ட்டை தானே சுத்தம் செய்யும் நிலைக்கு வரும் போது தான் யோசிக்கும். தன் மலத்தை தானே பார்க்க குமட்டும் சூழலில் பிறர் மலத்தை சுத்தம் செய்ய வரும் அவர்களை கடவுளாக பார்க்க வேண்டாம். மனிதராகவாவது பார்க்க வேண்டும் தானே. அது தான் ஷ்ரத்தா பாத்திரமும்... ஒரு ஆர்கிடெக்காக அவர் உருவாக்கிய... அவரவர் வேஸ்ட்டை அவரவரே சுத்தம் செய்யும்படியான கட்டட வடிவமும்... பேசுகிறது.

வீடு மட்டும் உன்னுது... செப்டிங் டேங் மட்டும் மற்றவங்களுதா...? கேள்வி செருப்படி.

ரோகிணி எனும் தோழரின் இருப்பு இந்த படத்தின் மிக முக்கியமான வலு. மொத்த படத்தையும் துக்கத்தாலும் துயரத்தாலும் நிறுத்துகிறார். நடிக்கிறார் என்பது இரண்டாம்பட்சம். கிடைத்த ஒரு பொறுப்பு. துளியும் துறக்கவில்லை.

கோர்ட்டில் இவர்களுக்காக வாதாடும் வக்கீல் தன் வாதத்திறமையால் எத்தனை போராடியும்... எத்தனை சட்ட நுணுக்கங்களை முன் வைத்து பேசி... சட்டத்தை ஆயுதமாக்கி இது தப்பு... இதற்கு தண்டனை வேண்டும் என்று ஆணித்தரமாக வாதாடியும்... இறுதியில் சட்டம் தன் கடமையை செய்தது.

இதற்கெல்லாம் தீர்வே இல்லையா என்ற மௌனம் நம்மை சூழ்ந்து கொள்கையில்... இந்தளவு.... இருக்கும் பிரச்சனையை எடுத்து நம் முன்னே வைத்த இயக்குனர் தீபக்.. பாராட்டுக்குரிய தோழர்.

அதிகாரம் நினைத்தால்... அவர்களை எங்கிருந்து வேண்டுமானாலும் தூக்கி எங்கு வேண்டுமானாலும் குடி பெயர்க்கலாம். ஏன் என்று கேட்க கூடாது. கேட்டால் இருக்கவே இருக்கிறது... இல்லாத கேஸ்கள் எல்லாம். தாடி வெச்சவன்... அழுக்கா இருக்கறவன்... கருப்பா இருக்கறவன்... முக்கியமா சேரின்னு இவுங்களாவே பேர் வெச்சுகிட்ட இடத்துல வாழறவன்ன்னு எல்லாருமே தேவைக்கேற்ற குற்றவாளிகள் தான். சாதியின் கோர பிடியிலிருந்து விடுபட வர்க்க நிலை எப்போதும் விடாது என்பது கசந்தாலும் உண்மை தானே.

சரி... என்னதான் மாற்று. புரையோடி இருக்கும் சிந்தனையை மாற்ற... தொடர்ந்து விழிப்புணர்வை செய்வது தான். சாதியை சுமப்பதும் அதன் மூலமாக நிகழும் எந்த சுரண்டலும் தெரிந்தோ தெரியாமலோ அரங்கேறும் பழகிய அயோக்கியத்தனங்கள் என்று கருத்தில் கொண்டு அதை வேரோட அழிக்க போராடுவது தான்.

ஷ்ரத்தாவும் ரோகிணியும் காரில் வரும் ஒரு காட்சியில்... அந்த இறந்த ஆன்மா பின்னால் அமர்ந்து வருவது... ஆறறிவு உள்ள மனிதனிடம்...." உன்னை மாதிரி தானே நானும். பிறகு நான் மட்டும் ஏன்... இதை செய்து சாக வேண்டும்?" என்று கேட்பதாக தோன்றுகிறது. எல்லாம் தாண்டி மகனை இழந்த ஒரு தனித்த தாயின் கண்ணீருக்கு என்ன தான் பதில். வாழ்க்கை முழுக்க போராடிக் கொண்டே இருக்கும் செல்வா மாதிரியான தோழர்களுக்கு எப்போது தான் நிம்மதி. என்ன செய்தாலும் நாங்கள் இப்படி தான் என்று அதிகார வர்க்கம் செய்யும் அட்டூழியங்களுக்கு என்ன தான் தீர்வு.

இறுதிக்காட்சியில் இதயம் நொறுங்க அமர்ந்திருந்தேன்.

எழுதிய தோழர் முத்துவேல் அவர்களுக்கு நன்றிகள். படத்தில் பணி ஆற்றிய அனைத்து தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள்.

2k கிஸ்ட்களை போகிற போக்கில் கெடுத்து குட்டி சுவர் ஆக்கிக் கொண்டிருக்கும் பல படங்களின் மத்தியில்... விட்னெஸ் விழிப்புணர்வு. இன்றைய கால தேவையும் கூட. சினிமாவாக சில இடங்களில் முழுமை இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அது பேசிய பொருள் இங்கே எப்போதும் பேச வேண்டிய பொருள்.

ஒன்னு மெஷின் கண்டுபிடி. இல்ல சுழற்சி முறையில் எல்லாரும் மலம் அள்ளலாம் வா... என்பதுதான் நமது கோபம். ஆனால் அதையும் தாண்டி எந்த மனிதனும் இதை செய்ய கூடாது.. இயந்திரம் செய்ய... இதயம் கோர்ப்போம் என்பது தான் மானுடம்.

- கவிஜி