snegethiyeaஇந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும்போது சமீபத்துல நான் என் வாட்சப் ஸ்டேட்டஸ்ல எழுதியிருந்த வரிகள் சட்டுனு நினைவுக்கு வருது

"ஜோதிகா மட்டும் இருந்திருக்கலைனா என்ன ஆகியிருக்கும் நம்ம வாழ்க்கை. நினைச்சே பாக்க முடில. நம்ம சின்ன வயசை அவ்ளோ கலர்ஃபுல்லா மாத்தினதுல ஜோதிகாவுக்கு பங்கு இருக்கு" (இந்த மாதிரி இன்னும் கொஞ்சம்)

ஸ்டேட்டஸ் ஒரு புறம் இருக்கட்டும். இதை எதுக்கு இப்போ சொன்னேன்னு முதல்ல சொல்லிடுறேன். திடீர்னு ஒரு ஆசை வந்தது நான் பார்த்த ரசித்த திரைப்படங்களைப் பற்றி எழுதணும்னு. அதுக்கும் முன்னாடி ஒரு திரைப்படத்தைப் பற்றி எனக்கு எழுத வருதான்னு தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு. அதுக்காக செஞ்ச முதல் முயற்சி தான் இது.

சரி எந்தப் படத்தை வெச்சுத் துவங்கலாம்னு யோசிச்சப்போ எனக்கு ரொம்ப பிடிச்ச படமான நான் இதுவரை ஐம்பது முறைக்கும் மேல் பார்த்த படமுமான 'சிநேகிதியே' படத்தைப் பற்றி எழுதலாம்னு தோணுச்சு

துணிஞ்சு இறங்கிட்டேன்

~ சிநேகிதியே ~

பள்ளி நாட்களில் வெளியான படம்.

2000 ஆவது ஆண்டு வெளிவந்துள்ளது. இயக்குனர் ப்ரியதர்ஷன் அவர்களின் இயக்கத்தில் வித்யாசாகர் அவர்களின் இசையில் வெளியான படம். படம் வெளியாகி இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன என்று நினைக்கும்போது பிரமிப்பாய் இருக்கிறது.

இந்தப் படத்தைப் பற்றி எழுதத் தொடங்கும்போது முதல் விஷயமாய் எனக்கு நினைவுக்கு வந்தது என்னன்னா, படம் வெளியான சமயத்தில்

"ஏய் இந்தப் படத்துல ஹீரோவே இல்லையாமா தெரியுமா.. எல்லாருமே பெண்கள் மட்டும்தானாம்" என்ற ஒரு விஷயம் அதிகமாப் பேசிக் கொள்ளப்பட்டது தான்.

ஆமாம் முழுக்க முழுக்க பெண்களால் நிறைஞ்ச ஒரு படம் சிநேகிதியே

எனக்கு இந்தப் படத்தோட டைட்டில் ரொம்ப புடிக்கும். டைட்டிலோட பிண்ணனி இசை, அந்த இசை கூடவே மெலிசா ஒலிக்கிற அந்த இரவோடு சத்தம். அவ்ளோ ரம்மியம்.

படத்தின் முதல் காட்சியிலிருந்தே, அடுத்ததா என்னமோ நடக்கப் போகுது அப்படிங்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்துது ஒவ்வொரு காட்சியும். எதிர்பார்ப்பையும் ஒரு வித பதற்றத்தையும் உருவாக்குவதோடு மட்டும் நின்றுடாமல் அதைப் பூர்த்தி செய்வது மாதிரி ஏதாவது ஒண்ணு நடந்துக்கிட்டே இருக்கு எல்லா காட்சிகள்லயும் வாசு (வாணி சுப்ரமண்யம் . சுருக்கமா வாசு) ராதிகா அப்படின்னு ரெண்டு காலேஜ் ஃப்ரெண்ட்ஸ். அவங்களைச் சுற்றித்தான் கதை நடக்குது.

அவ்ளோ கலர்புல்லா தொடங்குது படம் ராதிகாவோட பிறந்தநாள் கொண்டாட்டத்தோட. வாசுவின் சேட்டைகளோட. வாசு ராதிகா இருவருக்கும் இருக்கும் ஜென்ம விரோதி கீதாவினோடான பகையோட.

ஜென்ம விரோதியும் காலேஜின் கூந்தல் அழகியுமான கீதாவின் கூந்தலை வெட்டுவது ஹிட்லர் மேடமை கடுப்பேத்திக் கலாய்ப்பது நிதி வசூல் செய்து அந்தக் காசில் ஊர் சுற்றுவது அப்படின்னு சேட்டைக்கு மேல ஒரு சேட்டை தான் வாசு

சண்டையும் சச்சரவுமா ஜாலியா போய்ட்டிருக்குற காலேஜ் வாழ்க்கைக்கு நடுல, தன்னோட அண்ணண் மகளான ராதிகாவுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சு அத்தனை சொத்துக்களையும் ராதிகாவோட பொறுப்பில் விட்டுவிட காத்துக்கிட்டு இருக்காங்க அத்தை லட்சுமி.

இப்படிப் போய்க்கிட்டு இருக்கும் போதுதான் ஒரு நாள் லெக்சிகன் காலேஜ் விழாவில் உரையாற்றும் ஏசிபி காயத்ரி பெண்களின் நட்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்டது மாதிரி பெண்களோட நட்பே சில காலம்தானோ என்ற வருத்தம் வாசுவையும் ராதிகாவையும் ரொம்பவே பாதிக்குது. அப்போ முடிவு பண்றாங்க ரெண்டு பேரும் இனி வாழ்க்கைல எப்பவும் ஒண்ணாவே இருக்கணும் அப்புறம் கல்யாணம் கூட ஒரே நேரத்துல செஞ்சுக்கணும் ஒருத்தரை விட்டு இன்னொருத்தர் வேற வாழ்க்கையைத் தேடிப் போகக்கூடாதுன்னு.

இந்த முடிவோட ஒரு பகுதியா ராதிகாவுக்கு அவங்க அத்தை ஏற்பாடு செய்ற கல்யாணத்துல இருந்து தப்பிக்க ஒரு பெரிய பொய் சொல்றாங்க வாசுவும் ராதிகாவும். அந்தப் பொய் அவங்க வாழ்க்கைல அடுத்தடுத்து எப்பேர்ப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துது அந்த விளைவுகள் எந்த அளவுக்கு ஒரு ஆபத்தான பிரச்சனைக்குள் கொண்டுபோய் இவங்கள நிக்க வெக்குது என்பதும் அந்த பிரச்சனைல இருந்து அவங்க எப்படி தப்பிச்சாங்க என்பதும் தான் கதை.

இந்தப் பிரச்சனை பயணிக்கிற பாதையில வாசு, ராதிகா, அத்தை லட்சுமி, காலேஜ் ஜென்ம விரோதி கீதா அப்புறம் ஏசிபி காயத்ரி எல்லாரும் ஒரே நேர்கோட்ல வந்து சேர்கிறார்கள்

ஏசிபி காயத்ரி படத்துல பேசுற வசனம் ஒண்ணு 'பொண்ணுக்கு கொடும அவ பொறக்கும்போதே ஆரம்பிக்குது. சாவுல தான் முடியுது'.. இந்த வசனம் தான் படத்தின் மையக்கரு

கல்லூரியில் சக மாணவி சரிகா, யாரோ ஒரு முகம் தெரியாத நபரால் ஃபோன் கால் லெட்டர் என சீண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டு சாலை நடுல வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமா கொலை செய்யப்படுகிறார். ஒரு வேளை பப்ளிக் நினைச்சிருந்தா அந்தப் பொண்ணோட மரணத்தைத் தடுத்திருக்கலாமோ என்னவோ.

இது ஒருபுறமிருக்க சாவித்திரி என்ற இளம்பெண் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த சாவித்திரி யாரென்ற உண்மை படத்தின் கடைசில தான் உடைக்கப்படுது. அதன்பின் ஒரு நேர்மையான ஃபிளாஷ்பேக்கும் இருக்கு.

தபு பேசுற வசனங்கள் ஒவ்வொன்றும் ஏசிபி காயத்ரிக்கு ஆண் இனத்தின் மேல் உருவான ஒரு அசைக்க முடியாத வெறுப்பை அளவா வெளிப்படுத்துது. அதே நேரத்துல அத்தனை அதீத வெறுப்பு உருவானதற்கான காரணங்களும் படத்துல இருக்கு.

ஜோதிகா., என்னைப்போல ஜோதிகா ரசிகர்கள் ஜோதிகா கிட்ட எதிர்பார்க்கும் chubby bubbly cuteness குறும்புகள் நிறையவே உண்டு படத்துல.

அதோட சேர்ந்து நட்பு பகை ஏமாற்றம் பதற்றம் கூடவே அந்த கூழாங்கல் கண்கள்ல ரொம்ப ரொம்ப பயம். நம்ம செஞ்ச முட்டாள் தனத்தால் நம்ம பிரெண்டு ராதிகா வாழ்க்கை வீணாப்போச்சே என்ற குற்ற உணர்ச்சி. இந்தப் பிரச்சனைல இருந்து எப்படியாவது தப்பிச்சே ஆகணும் என்ற ஆத்திரம். கையறு நிலைல உருவாகுற முட்டாள்தனமான துணிச்சல். இப்படி பல பரிணாமங்கள் இருக்கு ஜோதிகாகிட்ட ஷர்பாணி முகர்ஜி.

அழகா அசைஞ்சு அசைஞ்சு சிரிக்கிற பொம்மை. அவ்ளோ நட்பையும் பாசத்தையும் ஜோதிகாவுக்கு குடுத்துக்கிட்டே இருக்குற பொம்மை. ஜோதிகா செய்ற அத்தனையும் சொதப்பலா முடிஞ்சு ஆபத்தை விளைவிக்கிற ஒவ்வொரு முறையும் 'நான் அப்போவே சொன்னேனே கேட்டியான்னு ஜோதிகாவை கடிஞ்சுக்குவா.

ஆனா அத்தனைக்கும் அப்புறமும் ஜோதிகா மேல நம்பிக்கை வெச்சு அவ பின்னாடியே போவா. அவளோட அப்பாவித்தனத்துல அழகு பரிதாபம் கொஞ்சம் குருட்டு தைரியம் இருந்துட்டே இருக்கும். அந்தக் கொலை நடக்குற ஒரு சீன் போதும் படம் மொத்தத்துக்கும். அந்த 8 மணி அலாரம் அடிக்கும்போது அவ காட்டுற பயம் அவ்ளோ அழகான ஷர்பாணி முகர்ஜி.

அந்தக் காவல் நிலையம் காட்சியில 'அய்யோ ரமேசு' அப்படினு கதறிக்கிட்டு மயக்கம் போட்டு விழுந்த அந்தப் பாட்டிக் கதாப்பாத்திரம் அடுத்தடுத்து அவங்க எடுத்த எல்லா அவதாரங்கள்லயுமே மனசுல நின்னுட்டாங்க. ம்ம். கிளைமாக்ஸ் காட்சியில் ஏசிபி காயத்ரியைப் பற்றிப் பேசும்போது இன்னும் கொஞ்சம் அதிகமாவே ஈர்த்தாங்க.

ஒரே ஒரு காட்சியில வந்தாலும் மனசை அள்ளிக்கிட்டு போறதுல அவங்களை மிஞ்ச அவங்க மட்டும் தான் அப்படின்னு காட்டிட்டாங்க ஆச்சி அம்மாவும் வடிவுக்கரசி அம்மாவும்.

அதிகார அம்மாவா ஆசிரியர்களுக்கே அறிவுரை சொல்லும் கட்டத்திலும், இப்பேற்பட்ட பிரச்சனைல சிக்கிட்டாளே என்று மகளின் நிலையை நினைத்து உருகிக் கலங்கும் கட்டத்திலும். ஆச்சி துடுக்கான வசனங்களை நுனி நாக்கில் வெச்சுக்கிட்டு சலிக்காம அலுத்துக்குற கதாப்பாத்திரத்தில வடிவுக்கரசி அச்சோ. ஹிட்லர் மேடம் செம்ம கியூட்.

அட்வகேட் சௌமியா அழகா வந்துட்டு அழகாவே போயிடுறாங்க.

சக கல்லூரி மாணவிகளின் பங்கு, கதை அதன் போக்கில் நகர்வதற்கு வெகுவாக உதவுகிறது. 'அவ ஸ்ட்ராங்கா சொன்னா நாங்க ராங்கா போவோம்' என்று ரசிக்க வைக்கிறார்கள்.

கோவக்காரக் குருவி கீதா. எகிறிக் குதிச்சு வாசு கூட சண்டை போடுவதையும் வாசுவையும் ராதிகாவையும் வெறுப்பேத்தி வேடிக்கைப் பார்ப்பதையும் ஒரு தனி லட்சியமாகவே வைத்திருப்பவள். பின், நடந்த கொலைக்கு ஒரே சாட்சியாகித் தப்பித்து தலைமறைவாகி வாழ்ந்தும் படத்தின் இறுதியில் வாசு ராதிகா இருவரின் நட்பாய் மாறும் போதும் தனித்துவமான ஜொலிப்பு கீதாவிடம்.

ஒளிப்பதிவு.. அடுத்தடுத்து நடக்கப்போற சம்பவங்களின் மீதான எதிர்பார்ப்பும் பதற்றமும் கொஞ்சமும் குறையாமல் நகர்த்திச் செல்கிறது படம் முழுக்க. நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களின் வீரியத்தை மனதில் விதைத்து விடுகிறது.

வித்யாசாகர் இசையில் பாடல்கள் மனதுக்கு மிக நெருக்கமாகிவிட்டன. பிண்ணனி இசையில் மயிலிறகுகளும் உண்டு. அணுகுண்டுகளும் உண்டு. மர்மங்களும் உண்டு. கண்ணீரும் உண்டு.

ம்ம்ம்

தபு.

ஏசிபி காயத்ரி. இந்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றிக் கொஞ்சம் நிறையவே சொல்ல ஆசைப்பட்டு கடைசிக்காக சேமிச்சு வெச்சுருந்தேன்.

ஏசிபி காயத்ரி.

விலக்கி வைக்கப்பட்ட கனி.

தன்னைத் தானே எங்கிருந்தோ எதிலிருந்தோ விலக்கி வைத்துக்கொண்ட கனி.

அவங்களோட முகத்துக்கே உரித்தான ஒரு முகபாவம் இந்தப் படத்துக்கு அவ்ளோ பொருந்திடுச்சு.

கோவம் என்பது இயலாமையோட வெளிப்பாடோ அப்படின்னு தோணும் எனக்கு அதீத கோவப்படுபவர்களைப் பார்க்கும்போது.

இருக்கலாம். இருக்கவும் கூடும்.

ஆனா அந்த இயலாமைக்குப் பின்னாடி என்னென்ன விபரீதங்கள் எல்லாம் இருந்திருக்கக்கூடும், இருந்திருக்கும், இருக்கவும் முடியும் என்ற உண்மை எப்பேர்ப்பட்ட பயங்களை உருவாக்குது காயத்ரி. அவளுக்கு மட்டுமே கேட்டுக்கிட்டே இருக்குற ஒரு கூக்குரல். அழுத்தி அழுத்தி வைக்கப்பட்ட ஒரு கூக்குரல். திக்கற்ற மழலையின் தேம்பல். அந்த முகத்தில ஒலிச்சுக்கிட்டே இருக்கு படம் நெடுக.

தான் எப்படியாவது தப்பிச்சுடணும். வாழ்ந்தே ஆகணும் என்ற தவிப்பு .. ஒரு சின்ன பெட்டிக்குள்ள போட்டு அடைச்சு அடைச்சு வெச்சு அது ஒரு சந்தர்ப்பத்துல கணம் தாங்காமல் வெடுச்சு விடுகிற ரணம்.. பார்ப்பவர்களைக் கொன்றுவிடுகிறது.

முகம் முழுக்க ரத்தத்தோடு அந்த மூன்று பெண்கள் முன்னாடி துப்பாக்கியை நீட்டிவிட்டு.. பின் அந்தச் சிரிப்பு.. "ஆமா நான் தோத்துட்டேன். தோற்கடிக்கப்பட்டுட்டேன். இன்னும் எந்த எல்லை வரை என்னைத் தள்ளிவிடமுடியும் உன்னால். எல்லைக்கோடென்று ஒன்று இல்லாத வெளிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை இன்னும் எந்தத் தூரத்துக்குத்தான் தள்ளிவிட எத்தனிக்கிறாய் நீ. செய். முடிஞ்சா முயற்சி பண்ணிப் பாத்துக்கோ" என்றது அந்தச் சிரிப்பு.

ஏசிபி காயத்ரி. வாழ்க்கை இத்தனை கொடூரமானதாகவும் பாரபட்சமானதாகவும் கூட இருந்துவிடக்கூடும் என்ற ரணத்தைக் காட்டிவிட்டாள் உலகத்துக்கு..

சரிகாஷாவில் தொடங்கிய மரணம். என்று தணியும் இது.

தொண்ணூறுகளின் இறுதியில் 'ஈவ் டீசிங்' என்று நமக்கு அறிமுகமான ஒரு வார்த்தை, இன்று பூதாகரமாக விஸ்வரூபமெடுத்து 'பாலியல் வன்கொடுமை' 'கூட்டு வன்புணர்வு' என்று வளர்ந்து நின்று கொண்டிருப்பது எப்படி.

தன் அன்பான மகள் சகோதரி தோழி ஒருத்தி வன்கொடுமைக்கு ஆளாகி மரணித்த பின் அவளின் அன்புக்குரியவர்களின் கதி என்ன என்பதை நாம் அறிவோமா :

ஏத்துக்கவே முடியாது. நிச்சயமா ஏத்துக்கவே முடியாது. இன்னொரு சாவித்திரி சீரழிக்கப்படுவதையும் இன்னுமொரு காயத்ரி உருவாகுவதையும்.

மிக நீண்டதொரு பயணத்துக்குப்பின் அதன் வலிகளை எழுதி முடிக்கும் நொடியில் உருவாகும் ஒரு வெறுமைத்தனமான அமைதி உருவானது அந்தக் கடைசிக் காட்சியின் பின்னணி இசையில்

சிநேகிதியே

வாழ்வோடு ஒவ்வொரு நாளும் ஓர் பாடம் தானம்மா

- கிருத்திகா தாஸ்