The Turin Horseஎதுவெல்லாம் இருக்கிறதோ அதுவெல்லாம் இருக்கிறது. எதுவெல்லாம் இல்லையோ அதுவெல்லாமும் இருக்கிறது. அர்த்தம் இருக்கிறது என்று காண ஆரம்பித்தலில்தான் அர்த்தம் அற்றுமிருக்கிறது.

ஒரு பரந்த நிலப் பரப்பு... பனி உதிரும் பாதை. தொடர்ந்து புயல் வீசிக் கொண்டிருக்கிறது.

அந்த வீட்டை நோக்கி ஒரு குதிரை வண்டியில்.... ஒருவர் சென்று கொண்டிருக்கிறார். சென்று கொண்டிருக்கிறார். சென்று கொண்டே இருக்கிறார்.

குதிரை போய்க் கொண்டிருக்கிறது.... போய்க் கொண்டிருக்கிறது.... போய்க் கொண்டிருக்கிறது... போய்க் கொண்டேயிருக்கிறது.

எங்கேயிருந்து என்று யோசித்தால்... எங்கிருந்து வேண்டுமானாலும். வேலை நிமித்தம்.... வேற ஊர் நிமித்தம்.. வேற வீடு நிமித்தம்.... வேறு ஒரு உருவகம் நிமித்தம்.. வேறு நாடு நிமித்தம்.... வேறு ஒன்றுக்கு தேவை இருக்கு என்று நிமித்தம். ஆனால் போய்க் கொண்டிருப்பது வீட்டுக்கு.

கருப்பு வெள்ளை வனாந்திரம் என்று சொல்லலாம். காற்றின் கைகள் நாட்டியம் செய்து கொண்டிருக்கும் வெளி என்று கூட சொல்லலாம். காற்றுக்கு உருவம் உண்டா என்றால்.. இந்த படம் பார்த்த பின் உண்டென்று சொல்லலாம். அது ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. அது குறித்த சிந்தனைக்குள் காற்றின் அசைவை நாம் உணர்ந்து கொண்டு காணவும் முடியும் என்பது கால வேலையின் அற்புதங்களில் ஒன்றெனவே கருதுகிறேன். பனி சூழ்ந்த காற்று வெளியில்... சூரிய ஒளியை கண்ணுக்கெட்டும் தூரம் வரை காணவே முடியாது.

வண்டியை விட்டு இறங்கி குதிரையை இழுத்து சென்று வீடொட்டி இருக்கும் பட்டியில் கட்டுகிறார். அங்கே ஒரு பெண் அவருக்கு உதவி செய்கிறாள். அவள் அவரின் மகளென்று நம் அறிகிறோம். அவருக்கு வலது கை இயங்குவதில்லை. குதிரையை அடைத்து விட்டு வீட்டுக்குள் சென்று கதவை அடைக்கிறார்கள். பட்டென்று காற்று நின்று விடுகிறது. வீட்டுக்குள் காற்றின் மொழி ஊமை.

அவர் படுக்கையில் படுத்து ஓய்வெடுக்கிறார். அந்த பெண் இரண்டு உருளைக்கிழங்குகளை வேக வைக்க சட்டியில் நீரூற்றி அடுப்பில் வைத்து விட்டு அருகே இருக்கும் மூடிய கண்ணாடி ஜன்னலின் எதிரே அமர்ந்து பார்க்கிறாள். ஜன்னல் வழியே தெரியும் பனி படர்ந்த வெளியில்.. சதுர பூமி நடுங்கிக் கொண்டிருக்கிறது. பார்த்துக் கொண்டிருக்கிறாள். பார்த்துக் கொண்டிருக்கிறாள்........ பார்த்துக் கொண்டயிருக்கிறாள்.

இந்தப் படத்தில் இந்த தொடர் நிகழ்வுகள் இப்படி ஆங்காங்கே தொடர்ந்தபடியே இருக்கிறது. அது நிகழ்ந்து கொண்டேயிருப்பதை நிகழ விட்டபடியே நாம் காண்கிறோம். உருளைக்கிழங்கு வேகும் வரை வெளியை வெறித்தபடியே அவள் அமர்ந்திருக்கிறாள். வெளியே காற்று தூசுகளாலும்..... இலைகளாலும்... குப்பைகளாலும்.... அசைவதை நாம் நமக்குள்ளும் காண்கிறோம். ஜன்னல் வழியேவும் காண்கிறோம்.

உருளைக்கிழங்கு வெந்து விடுகிறது. அவள் ஒன்றை தட்டிலிட்டு அப்பாவுக்கு கொடுத்து விட்டு இன்னொன்றை தன் தட்டிலிட்டு தானும் உண்ண ஆரம்பிக்கிறாள். அவர் இடது கையால் உருளைக்கிழங்கின் தோலை வேக வேகமாய் உரிக்கிறார். ஆவி பார்க்கிறது. சுட்ட விரல் ஊதி விட்டு.....இன்னும் வேகவேகமாய் உரிக்கிறார். உரிக்க உரிக்கவே கையில் கிடைத்த உரிபட பிய்ந்த கிழங்கின் துண்டை வாயில் போடுகிறார். ஆவி பறக்கும் வாயை மெல்லுகிறார். உரிக்க உரிக்க உரிக்கும் முன்னதான காலப்பசி வேக வேகமாய் வாய்க்குள் போகிறது. அப்போது தான் நமக்கு புரிகிறது. அவர் இத்தனை நேரம் ஜன்னலை பார்த்து அமர்ந்திருக்கையில்.... பசி அவரைத் தின்றிருக்கிறது. உருளைக்கிழங்குதான் அவர்கள் உணவென்றால்.... அப்போது தான் அங்கு நிலவும் வறுமை நமக்கு புலப்படுகிறது.

பல கட்ட இக்கட்டான சூழல்களில் மேலை நாட்டு மானுடத்தின் இரண்டாம் கட்ட பரிணாமத்துக்கு வித்திட்டது உருளைக்கிழங்குதான் என்பது வரலாறு பிசையும் செய்தி.

அவர் முக அசைவுகளை நாம் மிக அருகில் நாம் காண்கிறோம். எதுவுமற்ற செயலற்ற சிந்தனை அவர் முகத்தில் அசைகிறது. பசி கொண்ட வறுமையை அப்போதைக்கு வென்று கொண்டிருப்பதாய் அவர் மென்று கொண்டிருக்கும் தோரணையில் நாம் அறிகிறோம். அவரும் சாப்பிட்ட பிறகு... அந்த ஜன்னலை பார்த்து அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டே இருக்கிறார். என்று தீரும் இந்த பிணி என்பது போல நாம் மங்கலான சதுர உலகத்தில் சாத்தப்பட்ட தவிப்போடு அமர்ந்திருக்கிறோம்.

எல்லாமே கடத்தியதாக செயல்படுகிறது. காற்றின் ஊழி... கடத்துவது மானுட அவசியத்தை கேள்வி கேட்பதாக இருக்கிறது. நிரம்ப சுழலும் எண்ணங்களுக்கு காற்று என்று பெயர் இடலாம் போல. உருளைக்கிழங்கின் கனத்தில் உலகம் பசிக்கு வெந்து கொண்டிருக்கிறது.

இரண்டாம் நாள்.

ஆறு நாட்களில் நடக்கும் கதை தான் இந்தப்படம்.

ஆறு நாளிலும் திரும்ப திரும்ப நாம் காண்பது பசியும் வறுமையும். திரும்ப திரும்ப இங்கு கேட்டுக் கொண்டிருப்பது காற்றும் அதன் மொழியும். வீட்டுக்கு முன்பாக சற்று எட்டும் தூரத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அந்தப்பெண் அந்த கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க செல்கையில் நாயை போல காற்று பின்னாலயே செல்வதை நாம் பதைபதைப்போடு காண்கிறோம். தொண்டை கிழிய கத்தும் காற்றை மொழி பெயர்க்க இயலவில்லை. காற்றென்றே எழுத வருகிறது.

காற்றை எதிர்த்து அல்லது காற்றோடு நடக்கும் அந்த பெண்ணின் நடையில் ஒரு அபூர்வம் இருக்கும். ஒரு ஓவிய அசைவின் வெளி இயலாமையின் அடிகளை எடுத்து வைக்கும். நகர்ந்து நகர்ந்து அவள் காற்றில் இசைந்து இசைத்து செல்லும் காட்சி சருகு பூமியில் வறுமைதான் என்றாலும் வாழும் சித்திர வெளிப்படுதல் அது.

வசனங்கள் மிக குறைவு. இரண்டே பேர். தனிமையின் அபாரம். உலகிலிருந்து ஒடுங்கிக் கொண்ட அல்லது ஒதுக்கப்பட்ட.....அல்லது தனித்து
விடப்பட்ட எல்லாமே அங்கிருக்கிறது. பேச்சுக்கு வேலையில்லாத போதெல்லாம் அவர்கள்.. ஜன்னலை வெறிக்கிறார்கள். கண்ணில் படும் காட்சியல்லாம் எப்போதோ ஆரம்பித்த கண்ணில் பாடாத காட்சியின் தொடர்ச்சி தானே. இங்கு எதற்குமே ஆரம்பம் இல்லை என்ற உண்மை புரிந்து கொள்ள விஞ்ஞானமோ மெய்ஞ்ஞானமோ தேவை இல்லை. அவர்கள் வீட்டிலிருந்து ஜன்னல் வழியே காணுகையில் தெரியும் அந்த
ஒற்றை மரத்தின் நடுங்குதல் போதும்.

அந்த பெண்ணின் நடையில் பார்வையில்... பேச்சில் எப்போதுமே ஒரு வகை தளர்வு இருக்கிறது. அது பனியாலா.....புயலாலா... வறுமையாலா.....தன் மீதுள்ள இருத்தலின் குறிப்பினாலா...... உருளைக்கிழங்கு கொண்ட ரகசியம் அது.

வீட்டுக்குள் அடுப்பு கனன்று கொண்டேயிருக்கிறது. திரும்பவும் ஜன்னலை பார்க்கிறாள். திரும்பவும் உருளைக்கிழங்கு வேக வைக்கிறாள். சாப்பிடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அங்கு ஒரு நாள் தான். ஒரு நாளே ஒவ்வொரு நாள் தான். தினமும் தினமாகவே அன்றைய தினமாகவே தான் நேற்றைய தினமும் நாளைய தினமும் கூட இருக்கிறது.

இருள் சூழ்ந்த வீட்டுக்குள் ஒருவகை வேட்கை இருக்கிறது. வெளிச்சத்தின் கதவுகளுக்கு அந்த வீடு ஏங்குவதை அவ் வீட்டுக்குள் சுற்றும் சூனியத்தின் திறவுகோல் காட்டிக் கொடுக்கிறது. ஒரு நாளும் அவர்கள் அந்த உருளைக்கிழங்குகளை முழுதாக சாப்பிடுவதில்லை. சாப்பிட முடிவதில்லை. பசிக்கும் ருசிக்கும் இடையே ஒரு செயல் உண்பதென்று இருக்கிறது. அது அவர்களுக்கு இல்லை. பகிர்ந்து கொள்தலுக்கு அவர்களிடையே மிக சொற்பமான சொற்கள் தான் மிச்சம் இருக்கின்றன. சொற்பத்தில் நின்று கொண்டு பார்க்கவும் புரியவும் அந்த ஜன்னல் மட்டுமே சாட்சியாக இருக்கிறது.

கம்பளியை போர்த்திக் கொண்டு ஒரு நிழலை போல அவர் ஜன்னலையே பார்த்துக் கொண்டேயிருக்கிறார். சூனியம் அங்கு சுழன்று கொண்டே இருக்கிறது. அதுவரை அடைபட்டிருக்கும் மிருகம் போல கதவைத் திறந்ததும் காற்றின் கனத்த குரல் வெளியே கிணற்றுக்கு செல்லும் அவளின் உருவத்தை பூசிக் கொள்கிறது. காதிரையும் சத்தத்தில்... காற்றின் அகலம் நம்மையும் அசைக்கிறது. உலகின் கடைசி கொஞ்ச பேர்களில் இவர்களும் இருவரோ என்று கூட தோன்றும். கைவிடப்பட்ட விதியின் உருவங்கள் அவர்களாகி இருக்கிறார்களோ. அவர்கள் அவர்களை விட்டே ரெம்ப தூரம் வந்து விட்டது போல புரிந்து கொள்கிறேன்.

இவர்களை போலவே இந்த சுற்றுவட்டாரத்தில் எங்கோ குடியிருக்கும் ஒருவர்... கிட்டத்தட்ட நண்பர் போல தான் தெரிகிறார். காற்றோடு காற்றாக வந்து கதவைத் தட்டுகிறார். கதவு திறக்கப்படுகிறது. திறந்த செவ்வகத்தில் காற்று குதியாட்டம் போட கதவடைக்கும் அதே நொடி மூச்சு காட்டாமல் அடங்கி விடுகிறது. காற்றின் நாக்கு மீண்டும் வீட்டை ஒரு பிசாசைப் போல சுற்றுகிறது. உள்ளே வந்த அவர் பிராந்தி கேட்கிறார். ஊற்றிக் கொடு என்று மகளிடம் சொல்கிறார் பெரியவர்.

அந்த இடைவெளியில் வந்தவர் பேசிக் கொண்டே இருக்கிறார். மொத்த படத்துக்குமான வசனம் அவரிடம் இருக்கிறது.

உலகத்தின் வலிமை தரம் தாழ்ந்தது பற்றி... சாந்தியின் சமாதானத்தின் வேலி கட்டுடைந்தது பற்றி...வாழ்வின் நெறிகள் பற்றி... இல்லாமைக்கும் இயலாமைக்கும் இடையேயிருக்கும் நூல்முனை அனுபவம் குறித்து...இப்படி பேசிக் கொண்டே இருக்கிறார். மௌனம் எப்படி நீண்டிருந்ததோ அதே போல பேச்சும் நீள்கிறது.

தனிமனித தீர்ப்பு ஒருபோதும் தனிமனிதனுக்கு நலம் பயக்காது...... இந்த உலகில் மோசமானவைகளை நிகழ்த்தி விட்டார்கள்......அனுகூலமாகவும் அதிகார பூர்வமாகவும் அவர்கள் செய்ய வேண்டியதை அவர்களுக்காக செய்து கொண்டிருக்கிறார்கள். எலிகளை போல நாம் பதுங்கி இருக்க வேண்டி இருக்கிறது. சமாதானத்துக்கும் சண்டைக்கும் இல்லாத அர்த்தங்கள் பூசி... வெற்றிக்கும் அர்த்தமில்லை தோல்விக்கும் அர்த்தமில்லை என்றாக்கி விட்டார்கள்.

பிராந்தி வாங்க வந்தவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்.

அவர் பேசி முடித்து ஆசுவாசப்படுகையில்... அல்லது இவரிடம் கருத்து கேட்கும் தொனியுடன் பார்க்கும் சமயத்தில்...

" எல்லாம் மொக்கையா இருக்கு. முடிச்சிட்டியா...?" என்கிறார் பெரியவர்.

வந்தவர் "சரி நான் ஒன்னும் சொல்லல" என்பது போன்ற உடல்மொழியில் பிராந்தியை எடுத்துக் கொண்டு அதற்கான காசை விட்டெறிந்து விட்டு கிளம்பி விடுகிறார்.

அவர்களை சுற்றி நடக்கும் அரசியல் பேசப்பட்டது என்று நினைக்கிறேன். அது முடியாத போது வார்த்தை ஜாலங்கள் என்று இவர் உதாசீனப் படுத்தினார் போல. ஒரு கட்டத்துக்கு மேல் வார்த்தை ஜாலங்கள் மட்டுமல்ல.. வாக்கிய அமைப்புகள் கூட கோணல் மாணலாகி விடும். வாழ்வின் மறுபக்கத்தில் ருசியற்ற வெற்று நாக்குகள் அசைத்து கொண்டிருக்கின்றன என்பது தான் நிதர்சனம். அவர் காற்றுக்குள் போவதை ஜன்னல் வழியாக இருவரும் பார்க்கிறார்கள். தூரத்தில் அந்த ஒற்றை மரம்.... யோசனையற்று அசைந்து கொண்டிருக்கிறது.

ஒரு சமயம் ஜிப்ஸிகள் வந்து கிணற்றை சூழ்ந்து கொண்டு ஏதேதோ உளறி...கத்தி கூச்சலிடுகிறார்கள். அவர்களை அவள் விரட்டுகிறாள்.

"உன் கண்களில் சாத்தான் தெரிகிறான்" என்று சொல்கிறார்கள். "நீ ஒரு கோழை" என்று பேசுகிறார்கள். அதே நேரம் எங்களோடு அமெரிக்க வந்து விடு என்று அழைக்கிறார்கள். கிணற்றில் நீர் எடுக்கிறார்கள். சலம்புகிறார்கள். அவர்கள் பேசிக்கொண்டே ரகளையில் ஈடுபட... விறகு வெட்டி நல்ல பழக்கம் உள்ள அப்பா கோடரியோடு கிணற்றை நோக்கி வேகமாய் செல்கிறார். அவர்கள் குதிரையை கிளப்பிக் கொண்டு சென்று விடுகிறார்கள். இலக்கற்ற ஜிப்ஸிகளுக்கு பனி ரசனைக்குரியது. இவர்களுக்கு வாழ்வாதாரம். வேறு ஒரு கொள்கை வேறு ஒரு சமூகம் என்ற பயணத்தில் இந்த பூமி அதன் போக்கில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களோடு போய் இருக்கலாமோ என்று அவள் யோசிப்பதாக படம் முடிவதற்குள் ஒரு முறையாவது நாம் யோசித்து விடுகிறோம்.

ஒரு கட்டத்தில் கிணற்றில் நீர் இல்லாமல் போகிறது. செய்வதறியாது விழிக்கிறார்கள். இழுக்க மறுக்கும் குதிரையையும் நடத்திக் கொண்டே வண்டையை இழுத்தபடி கிளம்பி விடுகிறார்கள்.

புயல் சத்தம் இலை இலையாய் தவழ்கிறது. அந்த வழி முகப்பின் ஒற்றை மரம் தாண்டி செல்வதை நம் தூரத்து கண்களில் காண்கிறோம். சினிமாவின் அர்த்தம் புரிகிறது. காட்சிமொழியின் சதுரம் புரிகிறது. அந்த மரத்துக்கு பின்னால் ஒரு உலகம் இருக்கிறது. அது ஒரு போதும் இந்த பக்கம் வருவதில்லை. காற்று வீசிக் கொண்டே இருக்கிறது. மரம் அசைந்து கொண்டே இருக்கிறது. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை. இலைகள் பறந்து கொண்டிருக்க திரையை துளையிட்டு சப்தம் நம்மை வந்தடைந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் மீண்டும் திரும்பி வருகிறார்கள். பயணம் என்ன ஆச்சு என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. என்ன வேண்டுமானாலும் ஆகி இருக்கலாம் என்று அவர்களின் மௌனம் சொல்கிறது.

இம்முறை அவர்கள் உருளைக்கிழங்கு சுட்டு சாப்பிடுகிறார்கள்.

அவர்களிடம் பதில்கள் இல்லை. கேள்விகளும் இல்லை. நீரில்லை. பிராந்தியும் இல்லை. பசியாற்ற விளக்கேற்ற முயல்கிறார்கள். அது அணைந்து கொண்டே இருக்கிறது.

கதவடைக்கவும் காற்றின் மொழி நின்று விடுகிறது. ஆனால் கட்டுரையை முடித்தும் காற்றின் மொழி கேட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு சொல்ல இன்னமும் என்னவோ இருக்கிறது. கேட்பது பற்றிய அக்கறை ஒரு போதும் அதற்கில்லை.

அப்படியாக அந்த ஆறாம் நாளிலே சுட்ட உருளைக்கிழங்கை அவள் உண்ணாமல் செயலற்று பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

"சாப்பிடு...." என்று சொல்லி விட்டு சாப்பிட முடியாமல் கை உருளைக் கிழங்கை பிசைந்து கொண்டிருக்க...அவர் தலை குனிந்து அமர்ந்திருக்கிறார். யோசனையற்ற வெற்று நிலையில் புயல் மட்டும் தான் இருக்கிறது. அவர்கள் முகத்திலோ ஆறாம் நாளின் வெளிச்சம் மங்கலாக.

இனி ஏழாம் எட்டாம் ஒன்பதாம் பத்தாம் நாளெல்லாம் அவர்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.

Film: The Turin Horse
Directors: Béla Tarr, Ágnes Hranitzky
Language: Hungarian
Year: 2011
Movie available: You Tube

- கவிஜி