the young karl marx

ஐ ஆம் நாட் யுவர் நீக்ரோ (I Am Not Your Negro)” ஆவணப்படம் போன்ற உலகப் புகழ்பெற்ற படைப்புகளைக் கொடுத்த ஹெய்தியைச் சேர்ந்த கறுப்பின இயக்குனர் ரவுல் பெக் இயக்கிய மற்றொரு படைப்பு தான் “தி யங் கார்ல் மார்க்ஸ் (The Young Karl Marx)” என்கிற ஜெர்மானிய மொழித் திரைப்படம். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும் பரவலான கவனத்தைப் பெற்றது.

கார்ல் மார்க்ஸ் என்றால் உடனே நினைவுக்கு வருவது அவரது வெண்தாடியும் புன்சிரிப்பு கூட இல்லாமல் இறுக்கமாக இருக்கும் அவரது கருப்பு வெள்ளை புகைப்படம்தான். அதன்பிறகுதான் அவரது எழுத்துக்களும் கொள்கைகளும் உலகிற்கே மிக முக்கியமான கொள்கைகளைச் சொன்ன கார் மார்க்ஸின் இளமைப்பருவம் எப்படி இருந்திருக்கும் என தி யங் கார்ல் மார்க்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

படத்தின் முக்கிய கூறுகள்

கார்ல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் பற்றிப் புத்தகங்களின் வழியே, எழுத்துக்களாக மட்டுமே உணர்ந்தவர்களுக்கு, மேலும் நெருக்கமாக அவர்களை உணரச் செய்ய ஒரு நுழைவு வாயிலாக நிச்சயம் இந்தத் திரைப்படம் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், ஜென்னி மார்க்ஸ், மேரி பர்ன்ஸ், புரூதோன் ஆகியோரின் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

ஜெர்மனியில் வாழும் ஏழை மக்கள் காடுகளில் உள்ள மரத்திலிருந்து உதிர்ந்த சுள்ளிகளைச் சேகரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது, அந்தக் காட்டினுடைய சொந்தக்காரனின் அடியாட்கள் குதிரைகளில் வந்து சுள்ளிகளைச் சேகரித்துத் கொண்டிருந்த முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் ஈவு இரக்கமின்றி வெட்டிச் சாய்க்கிறார்கள். இது தான் படத்தின் ஆரம்பக் காட்சி. இந்த ஆரம்பக் காட்சியே பார்ப்போரின் மனத்தைக் குலுக்கிவிடும்.

“பச்சை மரத்தை சேகரிக்க அதனை உயிருள்ள ஒரு மரத்திலிருந்து வலுக்கட்டயமாகப் பிடுங்க வேண்டும். ஆனால், உதிர்ந்த சுள்ளிகளை எடுப்பதென்பது உடைமையிலிருந்து அகற்றுவது ஆகாது. உடைமையிலிருந்து ஏற்கனவே பிரிக்கப்பட்டிருந்தது தான் இப்போது அகற்றப்படுகிறது” என்று ஆரம்பித்து, அந்தச் சம்பவத்தைக் கண்டித்து, மிக காட்டமான ஒரு கட்டுரையை எழுதுகிறார் கார்ல் மார்க்ஸ். அந்தக் கட்டுரையை எழுதியதற்காக கார்ல் மார்க்ஸை கைது செய்ய குதிரையில் காவலர்கள் அங்கு வருகிறார்கள். அவர்கள் வருவதை ஜன்னல் வழியே, சுருட்டை புகைத்தவாறு பார்த்துக் கொண்டிருப்பதாக கார்ல் மார்க்ஸின் அறிமுகக் காட்சி வருகிறது.

அலுவலகத்தில் கார்ல் மார்க்ஸுடன் பணிபுரியும், ஹெகலின் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் சகப் பத்திரிகையாளர்களுடன், எழுதப்பட்ட அந்த கட்டுரைக் குறித்து கடும் விவாதம் நடக்கிறது. எழுதுவதில் சற்று நிதானம் வேண்டும் என அவர்கள், கார்ல் மார்க்ஸ்க்கு அறிவுரை கூறுகிறார்கள். அதனை ஏற்க மறுத்து அவர்களுடன் சண்டையிட்டுப் பின் மார்க்ஸ் கூறுகிறார் “நான் இனி குண்டூசிகளை வைத்து சண்டையிட மாட்டேன்” என்று. அடுத்தடுத்த காட்சிகளில் எங்கெல்ஸ், மேரி பர்ன்ஸ், ஜென்னி மார்க்ஸ், ஹெலன் டெமூத் மற்றும் புரூதோன் என அனைவரும் அறிமுகம் ஆகிறார்கள்.

கார்ல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் நட்புப்பாலம்

கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரின் முதல் சந்திப்பு அவ்வளவு திருப்திகரமாக இருவருக்கும் அமையவில்லை என்பதே வரலாறு. அதனையும் படத்தில் அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார்கள். எங்கெல்ஸ் ‘பெரிய முதலாளியின் மகன்’ என்கிற காரணமே, மார்க்ஸ்’க்கு ஒருவித ஒவ்வாமையைக் கொடுக்கிறது. பிறகு, எங்கெல்ஸ் மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளைக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்குகிறார். பதிலுக்கு மார்க்ஸ்’வும் எங்கெல்ஸ் எழுதிய கட்டுரை குறித்துப் பேசுகிறார். இருவருமே கட்டுரைகளின் வழியே முன்னரே அறிமுகமாகியிருந்த போதிலும், நேரடியான அந்த முதல் சந்திப்பு ஏனோ மன நிறைவாக இல்லை.

செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள்

கார்ல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் என இருவரும் செல்வந்தர்கள் வீட்டில் பிறந்தவர்கள் என்ற போதிலும், அவர்களின் சிந்தனைகள் முழுவதும் உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட ஏழைத் தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தைப் படைப்பதிலும் தான் இருந்தது. அதற்காக தங்களின் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள். மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரின் சிந்தனையிலும் ஏற்பட்ட மாற்றங்கள், இதற்கு முன்னர் இருந்த தத்துவங்களை அவர்கள் பார்த்த விதம், பிற தத்துவவாதிகளின் கூட்டங்களுக்குச் சென்று தர்க்கம் செய்த விதம், தொழிலாளர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளுதல் என திரைக்கதை மெல்ல மெல்ல பயணிக்கிறது.

இயக்குநரின் காட்சி அமைப்புகள்

சில கற்பனைகளும் பல உண்மை நிகழ்வுகளுமாய் திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். மார்க்ஸிற்கும் ஏங்கல்ஸிற்கும் உண்டாகும் நட்பில் ஆரம்பித்து கிபி1848ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இருவரும் இணைந்து எழுதி முடிப்பது வரை நடந்த நிகழ்வுகளை சுவாரசியமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் . மார்க்ஸைப் பற்றி வெறும் வாய் வார்த்தைகளில் அல்லது எழுத்துக்களில் மட்டும் படித்த விசயங்களை திரையில் பார்ப்பது என்பது அருமையான திரை அனுபவம்

ஒருங்கிணைந்த பிரஷ்யாவிலிருந்து மார்க்ஸ் நாடு கடத்தப்படுவது, தலைமறைவு வாழ்க்கை, ஏங்கெல்ஸின் குடும்ப பிண்ணனி, மார்க்ஸ் – ஜென்னி தம்பதியினரிடையே இருக்கும் அளவற்ற அன்பு, ஏங்கெல்ஸின் காதல் என இருவரின் இளமைப் பருவத்தின் நிகழ்வுகளை அருமையாகக் கோர்த்துள்ளனர். ஏங்கெல்சைத் தவிர வேறு யாரும் மார்க்ஸின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் மார்க்ஸ் யாருக்கும் வளைந்துகொடுக்காமல் தான் சொல்லும் கருத்தில் உறுதியாக இருக்கிறார்.

முக்கியமாகப் பாரிஸ் புரட்சிக்கு முன்பு உருவான உழைப்பாளர்களின் அமைப்பின் தலைவர்களிடையே பேசும்பொழுது அனைத்து உழைக்கும் மக்களுக்காகவும் ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். அதே நேரத்தில் மூத்த தலைவர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவதையும் மார்க்ஸ் மறக்கவில்லை. அவர்களுக்கான மரியாதையை துளியும் குறைக்காமல் மார்க்ஸின் சொல்லாடல்களின் காட்சிக்கான வீரியத்தை அதிகரித்திருக்கிறார்கள். இப்போதும் புர்ஷ்வா என்பதை குறித்து பேசியிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அன்றே உழைக்கும் மக்களின் நிலையில் நின்று பேசியிருக்கிறார் மார்க்ஸ்.

மார்க்ஸின் வறுமை பக்கங்கள்

நிறைய புத்தகங்களிலும் மேடைப்பேச்சுகளிலும் கேட்ட மார்க்ஸின் வறுமை பக்கங்களை சில இடங்களில் மட்டும் குறிப்பிட்டு பெரிதாக காட்சிப்படுத்தாமல் கடந்துபோனது அருமை. மார்க்ஸிம் ஏங்கெல்ஸிம் தொடர்ந்து பேசும்போதெல்லாம் புரட்சி குறித்த பேச்சுக்களே மிகுந்து இருக்கிறது. மார்க்ஸின் மனைவியான ஜென்னியையும் ஏங்கெல்ஸின் காதலி மேரியையும் முடிந்த அளவிற்கு மையகதைக்குள் இணைத்துள்ளனர். உழைக்கும் மக்கள் குறித்தும் வறுமை குறித்தும் எல்லோருக்கும் சமமாக வாதிடுகின்றனர். சந்தைமயமாவதை, பொருள்மயமாவதைப் பயங்கரமாக எதிர்த்தாலும் தன் வாழ்க்கைக்கும் பணம் தேவைப்படுகிரது என உணரும் இண்டத்தில் மார்க்ஸின் அடுத்த கருத்துருவாக்கம் ஆரம்பிக்கிறது.

இறுதியாக ஏங்கெல்ஸ் பேசும் காட்சியும் அதன் பின் கம்யூனிசம் எனும் வார்த்தையை முதன்முதலாய் உச்சரிப்பதும் என கம்யூனிஸ்ட்கள் மட்டுமின்றி எல்லோருக்கும் னெகிழ்வை ஏற்படுத்தும் தருணம் அது. அதன் பின் வரும் காட்சிகள் மார்க்ஸின் சுயமாரியாதைக்கு ஒரு சான்று. வரலாற்றில் நாம் கேள்விப்பட்ட கதாபாத்திரங்கள் எல்லாம் இளமையாக இருந்தபோதும் அவர்களது பார்வை முதிர்ச்சியின் வெளிப்பாடாகவே அமைகிறது. படம் முழுக்க மார்க்ஸ் ஆக்கிரமித்து இருந்தாலும் ஏங்கெல்ஸை மறந்து மார்க்ஸை நினைக்க முடியாது என்பதை அவர் வரும் காட்சிகள் அழுத்தமாக சொல்கின்றன.

முந்தைய தலைமுறையின் மிக முக்கியமான ஆளுமையை அடுத்த தலைமுறைக்கு மிகவும் புத்துணர்ச்சியோடு இளமையாக அறிமுகம் செய்து மார்க்ஸ் குறித்தான வாசிப்பைத் தூண்டுகிறது. தி யங் கார்ல் மார்க்ஸ். இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதி முடிக்கும்பொழுது அதனைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலெழும்புகிறது. கம்யூனிஸ்ட்களுக்கு என குறுக்காமல் மார்க்ஸை அறிந்துகொள்ள நினைக்கும் அனைவருக்கும் இந்தத் திரைப்படம் மிக உதவியாக இருக்கும்.

தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் அப்போது நிலவிய கருத்தியல் முரண்பாடுகள், புரட்சிக்கர கருத்துகள், கார்ல் மார்க்ஸும், எங்கெல்ஸும் இணைந்து செயல்பட்ட விதங்கள், ஜென்னி’க்கும் கார்ல் மார்க்ஸ்’க்கும் இடையேயான காதல், அவர்களின் குடும்பச் சூழல், குழந்தைகளின் நிலை, எங்கல்ஸ்’க்கும் மேரி பர்ன்ஸ்’க்கும் இடையேயான காதல் என பயணிக்கும் திரைக்கதை, இறுதியாக கார்ல் மார்க்ஸும் எங்கெல்ஸும் இணைந்து “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (The Communist Manifesto)” எனும் நூலை வெளியிடுவதுடன் திரைப்படம் நிறைவுப் பெறுகிறது.

“தி யங் கார்ல் மார்க்ஸ்” என்கிற இந்த ஜெர்மானிய மொழித் திரைப்படம், உலகெங்கும் சுரண்டலுக்கு உள்ளாகும் ஒடுக்கப்பட்ட அத்துணை மக்களின் உரிமைகளையும் வென்றெடுக்கக் கூடிய ஒரு சித்தாந்தத்தின் இளமைப் பருவம் குறித்த ஒரு வரலாற்றுப் பாடம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

- கலைவாணி இளங்கோ