Andrucha waddington; மூன்றாம் நிலை ஆணிய கருத்தியலும், தளமும்.

1960களில் மூன்றாவது நிலை சினிமா லத்தீன் அமெரிக்க நாட்களில் உருப்பெற்றது. மூன்றாம் உலகப் பார்வையில் சமூக, பொருளாதார சூழலை - உலகை முன்னிறுத்தி பார்ப்பதே மூன்றாவது நிலை சினிமாவாகும். அத்துடன் கமாரா, எடிட்டிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கூடாக காட்சிப்படிமங்களை, குறியீட்டு முறையில் அல்லது மறை பொருளாக, சில சமயங்களில் நேரடியாக (வித்தியாசமான கமாரா கோணங்களுககூடாக) வெளிப்படத்தப்படும். 1976ல் வெளிவந்த பிலிப்பினோ படமான Perfumed Nightmare (– Dir: Kidlat Tahimik)ல் சிறு கற்களால் கட்டப்பட்ட மிகப் பெரிய வியாபார போல் வித்தியாசமான கமாரா கோணங்களால் காட்டப்படுகின்றது. இது தொழிலாளர்களின் நிலையையும், சிறு வியாபாரிகளின் வெளியேற்ற நிலையையும் சுட்டிக் காட்டுகின்றது. உலகமயமாதலின் கோரத்தை இப்படம் மக்கள் முன் வைத்தது. 1989ல் வெளிவந்த "Romero" Dir : John Duigan மற்றொரு சிறந்த உதாரணம் மூன்றாம் சிலைப் படத்துக்கு.

உள் நாட்டுப் போரின் போது. வெளியாகும் படங்கள், இயக்கங்களின் ஆதரவின்றி வெளிவரமுடியாது. இயக்கங்கள் பெரும்பாலும் சகல சமூக தாபனங்களையும், ஊடகங்களையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அதே நிலை மறுபுறம் அரசினாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. இவற்றைத் தாணடி இயக்கங்களின் ஆதரவின்றி வெளிவரும் படங்கள் பெரும்பாலும் சர்வதேச சந்தைகளை நோக்கியே வெளிவருகின்றன. இப்படங்கிளின் நிதியும். கருவும் பெரும்பாலும் இந்த சந்தையையால் கட்டுப்படுதப்படுகின்றன. இவை புத்திஜீவி மட்டத்திலேயே பிரச்சினைகளை ஆராய்கின்றன. (No More Tears-Rajini’s Murder) போரின் உக்கிரங்களுடான படங்கள் போரின் பின்ரே புதிய அரசின் ஆதரவுடன் வெளிவருகின்றன. (வியட்நாம் யுத்த படங்கள்)

மூன்றாவது நிலை சினிமாவின், முக்கியத்துவத்தையும், கருத்தியலையும், அரசியல், இயக்க சூழ் நிலைகளும், உலகமயமாதலும் கட்டுப்படுத்துகின்றன. இவை உண்மையில் வெளிப்படுத்தப்பட வேண்டிய விடயங்களை வெளிப்படுத்து முடியாமல் உளளன. (பிறிதொரு கட்டுரையில் இவை பற்றி விரிவாக பார்க்கலாம்).

மூன்றாவது நிலை சினிமாவின் வளர்ச்சிக் கட்டுப்பாட காரணிகளிலிருந்து விலகி பிரேசிலிய சினிமா வெளிப்பட்டுள்ளது. இக்கட்டுரையின் நோக்கம், பிரேசிலிய சினிமாவுடன், பெண்ணிய பார்வையில் யதார்த்தவாத சினிமாவை உண்மைக் கருப் பொருள்களை மையமாகக் கொண்டு படைத்த Addrucha Waddingtonன் படங்களையும் பார்ப்பதே.

பிரேசிலிய சினிமா வளர்ச்சியானது கரடுமுரடாணது. 1970 கள் முடியும் வரை வெற்றி நடை போட்ட சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், பின்னர் வங்குரோத்து நிலையை அடைந்தன. 1985-1989 வரை பிரேசிலிய அதிபரான Jose Sarneyன் காலத்தில் சினிமா தயாரிப்பாளருக்கு வரி விலக்கு போன்ற சலுகைகளை அளித்து உற்சாகப்படுத்தியது.ஆனாலும் 1990ல் 13 படங்களும், 1993ல் 3 படங்களும் தயாரிக்கப்பட்டன. முப்பது வருடங்களின் பின்னர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட Fernado Collor de Mello (1990-1992)ல் தான் நிலைமை மோசமடைந்தது.1995-2003 வரை ஆண்ட அதிபர் Fernado Henrique cardosoன் ஆட்சியில் மேலும் சலுகைகள் அளிக்கப்பட்டன. அத்துடன் அரச நிதியும் வழங்கப்பட்டது. பொருளாதார உலகமாயக்களின் விளைவால் பிரேசிலின் திரைப்பட தயாரிப்பாளர்களும் சர்வதேச சந்தைகளையும், திரைப்பட விழாக்களையும் குறிவைத்து தமது திரைப்படங்களை தயாரித்தனர். “தேசியம்” மற்றும் தேசிய வடிவங்கள், கருத்துக்களுக்கான கவர்ச்சி குறைந்து, சமூக புதிய வடிவங்களுக்கான கருத்துக்கள் வரவேற்பை பெற்றன. இதனால் பல படங்களுக்கான தயாரிப்புக்கு சர்வதேச தயாரிப்பு நிறுவனங்கள் நிதி அளித்தன. இதன் விளைவு சில படங்கள் ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்டன (Kiss of the Spider Women).

1998ல் பெரும் வெற்றி பெற்றதும், சர்வதேச விழாக்களில் விருதுகளையும் குவித்த Central Station படம் Sundance Instituteல் தயாரிக்கப்பட்டு Sony and Miramax நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்டது. கொலம்பியா நாட்டு இணைத்தயாரிப்பான Four Days in September (1997) அமெரிக்காவில் பரவலாக விநியோகிக்கப்பட்டதுடன், ஆஸ்காருக்கும் பரிந்துரைக்கப்பட்டது. சர்வதேசச் சந்தைகளில் கவர்ச்சிப் பொருளான பாப் இசையை மையமாகக் கொண்டு Rio's Love Songs, Black Orpheus, Nova போன்ற படங்கள் வெளிவந்தன.

ஒரு புறம் சர்வதேசச் சந்தைகளை நோக்கி படங்கள் நகர்ந்தாலும், மறுபுறம் உள் நாட்டு பிரச்சினைகளை மையமாக் கொண்டு பல படங்கள் வெளிவந்தன. உலகமயமாதல் - Savage Capitalism – Dir: José Klotzel, The Machine Gun – Dir: Jorge Furtado, The War of Canudos -Dir: Sergio Rezende, Behind the Sun – Dir: Walter Salles Jr, நகர வன்முறைகளை மையமாகக் கொண்ட Island of Flowers- Dir: Jorge Furtado Nghd போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பிரேசிலின் சினிமா வளர்ச்சிக்கு பல பெண் சினிமா இயக்குனர்களின் பங்களிப்பு காத்திரமானதும், உரமிட்டதுமாகும். Ana Carolina tpd; Mar de rosas (Sea of Roses ), Heart and Guts, Dream of a Waltz போன்ற படங்கள் பெண்ணிய பார்வையில், பெண்களுக்கு எதிரான பாலியல், சமூக வன்முறைகளை பதிவாக்கின. Tizuka Yamasaki d; Parayba, a Strong Woman, the Roads to Freedom போன்றன தொழில்சார் ஊடகவியலாளர்கள் மற்றும் வேலைக்குப் போகும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடூரங்களை பதிவாக்கின.

பிரேசிலின் சினிமா வரலாற்றில் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை பதிவாக்கிய They Don't Wear Black Tie – Dir: Leon Hirszman, The Hour of the Star – Dir: Suzana Amaral, Hidden City – Dir: Chico Botelho போன்றன குறிப்பிடத்தக்கவை. இவை பெண் தொழிலாளர்கள் வீதியல் அனாதரவாக விடப்பட்ட சிறுவர்கள், குடியேற்றவாசிகளுக்கு எதிரான முதாளித்துவ வர்க்கத்தின் கொடூரங்களையும் வெளிப்படுத்தின.

நான் நீ அவர்கள். (Me You Them - Eu Tu Eles Dir: Andrucha Waddington

பிரேசிலின் வட மேற்குப்பிரதேசத்தில் ஓர் குக் கிராமம். Darlene தாயின் செத்த வீட்டிற்கு கிராமத்திற்கு வருகின்றாள். வயிற்றில் கருவுடன் கிராமத்தை விட்டுச் சென்ற Darlene மீண்டும் வயிற்றில் கருவுடன், கையில் சிறுவனுடன் தாயின் முகத்தை இறுதியாக சந்திக்க வருகின்றாள். அவளது வறுமை, அவளுக்கு ஒசியஸ் சுடன் திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கின்றது. திருமணம் ஓர் ஒப்பந்தம். வெகு இலகுவானது. ஒசியஸ் தங்குவதற்கு வீடு தருகின்றான். டார்லின், ஓசியஸ்ற்கு சமைத்து போடவேண்டும்.. ஓசியஸ் வயது முதிர்ந்தவன். ஆடு மேய்ப்பவன். பிள்ளை பிறக்கின்றது. பிள்ளை கருப்பு நிறம். ஊட்டச் சத்து குறைவு என கருத்துக் கூறுகின்றாள். ஆனாலும் கருப்பு நிறம் நிரந்தரமாகிவிடுகின்றது. இவர்களது வீட்டில் தங்க, தனது வீட்டால் கலைக்கப்பட்ட, ஓசியஸின் ஒன்று விட்ட உறவினன் சிசின்கோ வருகின்றான். இவனும் ஓசியஸின் வயதை ஒத்தவன்.

இவனுக்கும் டார்லினுக்கும் உறவு ஏற்படுகின்றது. டார்லின் மீண்டும் கர்ப்பமாகின்றாள். டார்லின் கரும்புத் தோட்டத்திற்கு வேலைக்கு செல்கின்றாள். மூன்றாவது பிள்ளை பிறக்கின்றது. சிசின்கோ நன்றாக சமைப்பான். இதனால் ஒசியஸ் எதுவும் கூறவில்லை. மீண்டும் கரும்புத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லும் டார்லின், இளைஞனான சைரோவைச் சந்திக்கின்றாள். அவளது வீட்டில் தங்க வைக்கின்றாள். இவர்களுக்கு உறவு ஏற்பட்டு, மற்றொரு பிள்ளை பிறக்கின்றது. இப்பொழுது மூன்று கணவன்கள். நான்கு பிள்ளைகள் ஒரே வீட்டில். ஒரு நாள் காலை, புதிதாக பிறந்த பிள்ளையும், ஏனைய பிள்ளைகளையும் காணவில்லை.

தேடிக்கொணடிருந்த பொழுது ஓசியஸ் இந்தப் பிள்ளைகளுடன் வந்து கொண்டிருக்கின்றான். ஓசியஸ் ஒரு பத்திரத்தை டார்லினிடம் நீட்டுகின்றான். அது பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சி பத்திரம். அந்த பிள்ளைகள் அனைத்தும் தனது பிள்ளைகள் என ஓசியஸ் அதில் பதிந்துள்ளான்.

இது உண்மைக்கதையை மையமாகக் கொண்டது. Marlene de Silva Saboia என்ற பெண்மணியின் உண்மைக் கதையே இது. இந்த லத்தீன் அமெரிக்கப் படத்துக்கான திரைக்கதையை Elena Soarez என்ற பெண் எழுதியிருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் இப்படம் திரையிட்ட போது பல மேற்கத்திய விமர்சகர்கள், இப்படம் படமாக்கப்பட்ட முறைக்காக பாராட்டினார்கள். திரைக் கதையை பெரிதாக வரவேற்கவிலலை. காரணம் மூன்று கணவன்மார். மேற்கத்திய முற்போக்கு கலாச்சாரம் என்று கூறிய போதும் இவர்கள் பெண்கள் வியத்தில் பிற்போக்கானவர்களே.

இப்படத்திலும்; ஆணாதிக்க வெளிப்பாடுகள் சிறப்பாக வெளிப்படுகின்றன. ஆணாதிக்க சமுதாயத்தில் வளர்ந்த ஓசியஸ், தனது மனைவயின் உறவுகளை அங்கீகரிப்பதன் காரணம் என்ன? முதலில் டார்லினை வயிற்றில் கருவுடனும், கையில் குழந்தையுடனும் ஏற்றுக் கொள்கின்றான். தனது வீடு அவளது வீடு எனக் கூறுகின்றான். பின்னர் அதன் விளக்கத்தை கூறுகின்றான் “நீ எனக்கு சொந்தமானவள், எனவே உனது வீடும் என்னுடையதே”. சைரோ வீட்டினுள் வரும் பொழுது, ஓசியஸ் அழுத்தமாக கூறுகின்றான் “இது எனது வீடு, இவள் எனது மனைவி”. இவ்வளவு அழுத்தமுள்ள பாத்திரம், இறுதியாக தனது ஆணாதிக்க வெளிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. சகல பிள்ளைகளையும் தனது பிள்ளைகளாக பதிவு செய்வதன் மூலம். இது தியாகமாக வெளிப்படலாம், ஆனால் உண்மையில் இதுவும் ஓர் ஆணாதிக்க வெளிப்பாடே. அனைத்தும் எனக்கே சொந்தம்.

கதாசிரியர், இவற்றையெல்லாம் மீறி டார்லினை தனது மூன்று கணவன்மாருடனும் தொடர்ந்து சேர்ந்து வாழவைக்கின்றார்.

பாலச்சந்தர் தனது படங்களில் மரபை மீறிய உறவுகளை காட்டிவிட்டு, மரபு கலாச்சாரம் மிக முக்கியமானது எனக் கூறி, இந்த உறவுகளை உடைத்துவிடுவார். மிக அண்மையில் வெளி வந்த “பச்சைக்கிளி முத்துச்சரம்” என்ற படத்தில் வேறு பெண்ணுடன், கணவனுக்கு ஏற்படும் நட்புக்கு, சுகயீனமுற்ற பிள்ளைக்காக உடலுறவை மறுத்த மனைவி காரணம் எனக் காரணம் காட்டப்படுகின்றது. இவ்வாறு பெண்கள் மீது மரபையும் கலாச்சாரத்தையும் திணிக்கின்றார்கள் படைப்பாளிகள். ஜெயகாந்தன் “சினிமாக்குப் போன சித்தாளு” வில் பிரபல நடிகனை நினைத்து உறவுகொள்ளும் மனைவியைப்பற்றி கூறுகின்றார். எத்தனை கணவன்மார் நடிகைகளை நினைத்து மனைவிகளுடன் உறவு கொள்கின்றனர் அதனைப்பற்றிய பதிவு எதுவும் இல்லை.

தர்மசிறி பண்டாரநாயக்கவின் “சுத்திலாகே கத்தாவ” (சுத்தியின் கதை) என்ற படத்தில் கணவன் சிறைக்குச் சென்ற பின்னர் தனது வயிற்றை நிரப்ப வேறு ஆண்களுடன் உறவு கொள்கின்றாள் சுத்தி, பின்னால் தனது கணவனாலேயே கொலை செய்யப்படுகின்றாள். பிரசன்ன விதானகேயின் பௌரு வலலு படத்தில் வயலிட்டின் முதல் மகள் திருமணமாகி விடுகின்றாள், மற்றவளுக்கு திருமண வயது. இந்நிலையில் தனது முன்னால் காதலனுடன் உறவு ஏற்பட்டு வயிற்றில் கருவைச் சுமக்கும் வயலட், தனது கரு பாவத்தின் சுமை என நினைக்கும் அளவிற்கு, சமுதாயம் அவளை விமர்சிக்கின்றது. பிரசன்னா சமூகத்தை எள்ளி நகையாடுகின்றார். பிரசன்னா மிக வித்தியாசமான படைப்பாளி, துணிச்சலுடன் சமூகத்தை விமர்சித்துள்ளார்.

அபர்ணா சென் தனது பரோமா படத்தில் தனது காதலுனுக்காக காத்திருக்கும் மனைவியைக் காட்டுகின்றார். அபர்ணா பெண் படைப்பாளி. அதனால் பெண் மீதான அக்கறையுடனும் துணிச்சலுடனும் பரோமாவை படைத்துள்ளார்.

Nirontor (Forever Flows) (என்றைக்கும் தொடரும்) என்ற பங்களாதேஸ் படம் - கடந்த வருடம்(2006) ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டது பங்களாதேஸின் தலை நகரான டாக்காவில் வாழும் நடுத்தர குடும்பம் ரீதியின் குடும்பம். ரீதியன் தகப்பனார் வேலை செய்யமுடியாத நிலையில் உள்ளார். அவளது தம்பியார் வேலையற்றவர். குடும்பம் அவளது அழகில் தங்கியுள்ளது. பாலியல் தொழிலாளியாக வேலை பார்க்கும் ரீதி, குடும்ப பாரத்தை சுமர்க்கின்றாள். அவளது தம்பி கீரு உணவகம் வைத்து நடத்த விரும்புகின்றார். அதற்கான பணத்தையும் ரீதியே கொடுக்கின்றாhள். கீருவின் உணவகம் சிறப்பாக முன்னேறுகின்றது. கீருவின் மனைவி மேலே படிக்க விரும்புகின்றாள். இப்பொழுது ரீதியின் உழைப்பு குடும்பத்திற்கு தேவையில்லை. அவளது உழைப்பை குடும்பம் எதிர்பார்க்கவில்லை. அவளது வாழ்வு எந்த பாதையில் நகரப்போகின்றது என்பதை அவளே தீர்மானிக் முடியாமல் உள்ளது.

ரீதியின் தாயார், ரீதியின் தோளை தொடமுற்படும் பொழுது, “என்னைத் தொடாதே, உனது தொடுதல் எனக்கு, எனது வாடிக்கையாளரையே நினைவுபடுத்துகின்றது” எனக் கூறுகின்றாள். இதுவே ரீதியின் வாழ்வின் உக்கிரத்தையும், அவளது அக வலியையும் சுட்டி நிற்கின்றது. அவளது இந்த வாழ்விற்கு, அவளது குடும்பமும் காரணம். அவளது விசாரணைகள் தொடுதலிருந்து ஆரம்பிக்கின்றன. தனிமனித ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும் ஒன்றை ஒன்று தங்கியிருக்கின்றன. ஆண்களின் கோட்பட்டியிலலில் தான் சமூகக் கோட்பாடுகள் தங்கியுள்ளன. இவை தான் ஒழக்க நெறிமுறைகளை தீர்மானிக்கின்றன. உனது நித்திரையும் தீர்மானிப்பது நான் தான். உனது உடலற்ற வாழ்வு தான் சமூக ஒழுக்கமும், எமத வாழ்வும் என ஆண்கள் குரலெலுப்புகின்றனர். அபு சயிட் சிறப்பாக தனது விசாரணைகள தொடர்கின்றார். இவை சில மூன்றாம் நிலை பெண்ணிய சிந்தனைவாத படங்களுக்கு உதாரணம்.

இங்கும் (நான் நீ அவர்கள்) டார்லினின் வாழ்க்கை நேரடியாக காட்டப்படுகின்றது. எதுவும் ஒளித்து வைக்கப்படவில்லை. டார்லினுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. இயல்பாகவே உள்ளாள். சிசின்கோ விடம் (இரண்டாவது கணவன்) சென்று சைரோ தங்குவதற்கு அறை கட்டி தருமாறு கேட்கின்றாள். அத்துடன் தனக்கும் சைரோவுக்கும் உள்ள உறவைப்பற்றியும் கூறுகின்றாள். பார்வையாளரிடம் இந்த தன்மை உணர்வு வெகு யதார்த்தமாக கொண்டு செல்லப்படுகின்றது. இது ஓர் பெண் கதாசிரியரால் தான் முடியும். அவளது பாத்திரக் கூறுகள் முக்கியமானவை. திருமணம் தனது வறுமைக்கே. குறிப்பாக தனது இரு கருக்களுக்காக. பின்னால் குடும்பத்துக்காக உழைக்கின்றாள். பின்னர், தனது புதிய கணவனுக்காக தங்குவதற்கு இடமும் குடும்பமும் ஏற்படுத்துகின்றாள். இவள் ஓர் சுமை தாங்கியாக செயற்படுகின்றாள். ஒவ்வொரு கணவனிடமும் ஒவ்வொன்று உண்டு ஒருவனிடம் காசு, மற்றவனிடம் பாசம், உழைப்பு, மற்றவனிடம் நவீனத்துவம்.

டார்லின் ஓசியஸ் எனது கணவன் என அழுத்திக் கூறுகின்றாள். ஓசியஸ் அவளுக்கு சொந்தமானவன். அதே போல் தனது மற்றைய இரு கணவன்மாருக்கும் “குஞ்சை அடை காப்பது போல்” தனது மற்றைய இரு கணவன்மாரையும் காக்கின்றாள். மீண்டும் தாய்வழி சமுதாய முறைக்கு சென்று விட்டோம் என நினைக்கத் தோன்றுகிறது. வெகு தூரத்தில் இல்லை தாய்வழி சமுதாய முறை.

டார்லினாக நடித்த Regina Casé பிரபல அழகி. படத்தில் அவரது அழகை பார்க்க முடியாது. அவரது சுமையைத்தான் பார்க்க முடியும். அவளது மன அழுத்தங்களின் வித்தியாசமான பரிமாணங்களைத்தான் காணலாம். படத்தின் மையமாக இவர் இருந்த பொழுதிலும், இவர் படைப்பு எந்த வணிக தன்மைகளையும் கொண்டிருக்கவில்லை.

லத்தீன் அமெரிக்க படங்கள் இன்று உலகின் சிறந்த படங்களுக்கு வழிகாட்டி. தனி நபர், சமூக மரபுகள், ஒழுக்கங்கள் மீதான விமர்சனங்களை விமர்சிக்கின்றன. கேள்வி கேட்கின்றன. ஆண்களின் உடல் உறவுக்கும், அதிகாரத்துக்குமான தொடர்புகள், அரசியவ் சக்திகளுக்கு சமூகத்தின் மீதான அக்கறை போன்றவற்றின் மீதான தொடர்ச்சியான விமர்சனங்கள், எதிர்-முரண் நிலை மீதான கருத்தியல்கள்.குற்ற உணர்வுகள் மிதான பார்வைகள் இவற்றையெல்லாம் தாங்கி படைப்புக்கள் வெளிவருக்கின்றன. இந்த விமர்சனவியலே இன்றைய சினிமாவின் தேவை.

The House of Sand - Brazil – Portuguese -2006

இது Andrucha Waddingtonன் இரண்டாவது படம்

எங்கும் மணல். எந்தப்பக்கம் திரும்பினாலும் மணல் மேடுகள். குனிந்தால் மணல், நிமிர்ந்தால் மணல். மணல், மணல், மணல், ..... அந்த பாலைவனத்தில் முகில் கூட்டங்களும், சூரியனும் அதிகப்படியான காணக்கிடைக்கக் கூடியவை. அந்த அனல் பிரதேசத்தில் Vasco de Sa (Ruy Guerra) தனது குழுவுடனும், தனது பிள்ளைத்தாச்சி மனைவியுடனும், மனைவியின் தாயருடனும் வாழ்கின்றார். வாழ்கின்றார் என்பதை விட அந்த மேட்டுப் பிரதேசத்தை வாங்கியுள்ளார். அங்குள்ள பலரும் அங்கு வாழ விரும்பவில்லை. ஆனால் வஸ்கோ பிடிவாதமாக உள்ளார். ஒரு இரவில் அவருடன் உடன் இருந்தவர்கள் ஓடி விட்டனர். இப்பொழுது இவரும், மனைவியும், மாமியாரும் மாத்திரம் தான். இவரும் அப்பொழுது நடைபெற்ற சிறு விபத்தில் இறந்து விடுகின்றார். இப்பொழுது தாயும் மகளும் தான் தனித்த அந்த பாலைவனத்தில். இது நடைபெற்றது 1910ல் பிரேசிலின் வட கிழக்கு பிரதேசத்தில். இப்பொழுது கற்பனையில் பாருங்கள் 1910, பாலைவனம், இரு பெண்கள் தனித்து. அந்த தனிமையையும், கொடூரத்தையும், பயத்தையும் உணர்வீர்கள். அந்த பாலைவனத்தை சுற்றி சுற்றி வந்துள்ள காமரா இந்த கொடூரத்தை உணர்த்தியுள்ளது. இவர்கள் ரியோவுக்கு தப்பிச் செல்லவேண்டும் என்ற கனவு, கனவாகிவிடுகின்றது.

காலம் கரைகின்றது இப்பொழுது 1919 ம் ஆண்டு. வஸ்கோவின் மனைவிக்கு, மரியா என்ற மகள் பிறந்து 9 வயதாகின்றது. இவர்களுக்கு அருகில் (சுமார் 4 மணித்தியால நடை தூரத்தில); உள்ள அடிமை வாசிகள் தான் இவர்களது நண்பர்கள். இவர்களில் ஒருவனான மாசு ரியோவில் இருந்து ஒரு குழு வந்து தங்கியிருப்பதாக கூறுகின்றான். சுமார் இரண்டு நாட்கள் நடந்து சென்று இவர்கள் இருப்பிடத்தை அடைகின்றாள் ஒரியா. இவர்கள் ஆடிப்பாடிக் கொண்டிருக்கின்றனர்.

முதன் முறையாக இசையைக் கேட்டவுடன் ஒரியாவின் கண்களில் இருந்து கண்ணீர் வருகின்றது. அவர்கள் மே 19 சூரிய கிரகரணத்தை காண வந்துள்ள விஞ்ஞானிகள். இவர்களுக்கு பாதுகாப்பாக ஓர் இராணுவ வீரனான லூயிசும் உள்ளான். ஒரியாவுக்கும், அவனுக்கும் நட்பும் உறவும் ஏற்படுகின்றது. ஒரியா, லூயிசுமூலம் ரியோ செல்லலாம் என நம்புகின்றாள். அவள் திரும்பி வரும் பொழுது ஒரியாவிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அவளது தாயார் இறந்துவிட்டார். ஒரியா ஏற்கனவே ரியோவிற்கு செல்வதற்காக ஏற்பாடு செய்திருந்த வண்டிக்காரன் சென்று விடுகின்றான். இறுதியாக நம்பியிருந்த இராணுவ வீரனான லூயிசும் ஒரியாவை விட்டு விட்டு சென்று விடுகின்றான். இப்பொழுது ஒரியாவுக்கும் மாசுக்குமான நட்பு அதிகரிக்கின்றது.

மீண்டும் காலம் செல்கின்றது. இப்பொழுது 1942. உலக மகாயுத்தம் நடை பெகின்றது. அமெரிக்க சண்டை விமானங்கள், ஜெர்மனி விமானங்களை கண்காணிக்கும் நோக்குடன், இப்பகுதியில் ரோந்தில் ஈடுபடுகின்றன. மரியா குழப்பமுற்றவளாக காணப்படுகின்றாள். அடிக்கடி குடிக்கின்றாள். வயது முதிர்ந்த இப்பொழுது இராணுவ அதிகாரி லூயிசு இவர்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கின்றான். லூயிசுவுடன் மரியா ரியோவுக்கு செல்கின்றாள்.

1969 ம் ஆண்டு ஒரியாவிடம் திரும்பும் மரியா, ஒரியாவிற்கு ஓர் ஒலிப்பதிவு நாடாக் கருவியை கொடுக்கின்றாள்.

கடந்த ஆண்டு ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்த நடிகைகள் படத்தில் மூன்று, இரண்டு பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழுக்கு இது புதிதல்ல. எம்.ஜி.ஆர், சிவாஜி ஒரே நேரத்தில், ஒரே காட்சியில், தனயனும், தந்தையுமாக, அண்ணன், தம்பியாக நடித்துள்ளனர். இங்கு சற்று வித்தியாசமானது. முதலில் தாயாக Fernanda Montenegro ம், மகள் ஒரியாவாக Fernanda Torres ம் நடித்துள்ளனர். பின்னர் ஒரியாவுக்கு வயது முதிர்ந்த பின்னர் ஒரியாவாக Fernanda Montenegro ம் ஒரியாவின் மகளுக்கு வயது முதிர்ந்து பாட்டியானபோது மீண்டும் Fernanda Torres ம் நடித்துள்ளனர்.

அதே போல் முதலில் ஒரியாவாக நடித்த Fernanda Torres பின்னர், ஒரியாவின் மகள் மரியாவாகவும் நடித்துள்ளனர். (ஒளிப்பதிவுக் கருவிக்கு பின்னால் மாத்திரமல்ல, நிஜத்திலும், இவர்கள் தாயும், மகளுமாகும். அத்துடன் மகள் Fernanda Torres இப்பட இயக்குனரின் மனைவியுமாவார்.) இந்த முயற்சி சற்று வித்தியாசமாக இருந்த போதினிலும், வயது முதிர்ந்த பாத்திரங்களில் ஒரே நடிகைகள் நடித்தமையினால் வெவ்வேறு பரிமாணங்களை கொண்டு வரமுடியவில்லை.

பெண்களின் உறுதியை வெளிக்கொணர்ந்திருக்கும், இப்படத்தின் கதையும், களமும் உலக சினிமாவுக்கு புதிது. சிந்தித்துப் பாருங்கள் 60 ஆண்டுகள் நகரத்துக்கு போகும் முயற்சிகள் எல்லாம் தோல்வி. சந்திரனில் இறக்கிவிட்ட மனிதர்கள் போல், வானத்தையும், கதிரவனையும், மணலையும் ஒரு சில மனிதர்களையும் பார்த்து வாழ்ந்த பெண்கள். இறுதியில் ஒரியா உறுதியுடன் அப்பிரதேசத்திலேயே தீர்மானமாக வாழ்கின்றாள்.

இவர்களுக்கருகில் தப்பியோடி வந்து வாழ்து கொண்டிருக்கும் கறுப்பின அடிமை வாசிகள். இவர்களில் ஒருவனான மாசு. மாசு ஒரு வேலைக்காரனுக்கும், கணவனுக்குமிடைப்பட்ட வாழ்க்கையை ஒரியாவுடன் வாழ்கின்றான். ஒரியாவின் முடிவுகளில் இவனது கருத்துக்கள் இருப்பதில்லை. ஒரியாவின் முடிவே முடிவானது.

இவர்களுக்கு ஏற்பட்ட நிலை தான் இன்று உலகம் முழுவதும். விரக்தியின் எல்லையில் சுதந்திரத்தை தேடி, பசிக்கு உணவு தேடி பின்னர் இது தான் வாழ்வு என்ற மனப்பக்குவத்துக்கு வந்துவிடுவோம். ஆணை மையமாகக் கொண்டு இவ்வுலகில் ஒரியாவின் சுதந்திர உணர்வு ஒடுக்கப்பட்டு, அவளது அடையாளங்கள் நசுக்கப்பட்ட நிலையில் ஒரியா தனது வாழ்வை தானே தனது பரிமாணங்களுக்குட்பட்ட நிலையில் தீர்மானிக்கின்றாள். இறுதியில் ஒரியாவுக்கு ரியோவுக்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்தும், அவள் செல்லவில்லை. இது அவளது விரக்தியின் வெளிப்பாடா? இல்லையேல் அவளது உறுதியன் வெளிப்பாடா? மரியா இறுதியில் தாயுடன் மீண்டும் இணைவது இன்றைய வாழ்வில் பெண்களின் நிலையை சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ள சிறந்த முயற்சி.

இப்படத்தின் திரைக்கதையாசிரியர் ஓர் பெண்மணியாவார். பெண்கள் பற்றிய அறிவுசார் நிலைகளை மதீப்பீடு செய்கின்றார். உங்களது இயக்கத்துக்கும், உங்களை சுற்றியுள்ளவர்களின் இயக்கத்தால் ஏற்படும் சார்பான, எதிரான இயங்குதலுக்கும், இவற்றை தவிர்த்த புறநிலை காரணிக்களால் ஏற்படும் தாக்கங்களுக்கும் ஏற்ப சமநிலையை ஏற்படுத்தவேண்டும். இந்த மனித இயங்குதலை திரைக்கதையாசிரியர்; அபத்த வகை திரைக்கதையாக சிறப்பாக எழுதியுள்ளார். பெண் பாத்திரங்களின் உள்ளுணாவுகளை துருவித் துருவி ஆராய்கின்றார்.

இப்படத்தின் ஒளிப்பதிவு மிகவும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பல பாத்திரங்களை ஒளிப்பதிவு உருவாக்கியுள்ளது. அதே போல் பிண்ணணி இசையும் குறிபப்பித்தக்கது.

இவ்விர படங்களும் நவயதார்த்தவாத படங்கள். இவை பெண்ணிய மேலாண்மையயை சுட்டிக் காட்டி நிற்கின்றன. ஒரியா தனது செக்ஸ் சுதந்திரத்தை தானே தீர்மானிககின்றாள். நான் நீ அவர்களில் டார்லின் செக்ஸ் சுதந்திரத்துடன், தனது கணவன்மார்களையும், அவளே தீர்மானிக்கின்றாள். வழக்கத்திற்கு மாறாக தந்தை வழி சமூக அமைப்புக்கு எதிராக செயல்படும் பாத்திரங்கள். தங்களது நிலையை தாங்களே தீர்மானிக்கின்றன. மனித விழுமியங்களான கௌரவம் போன்றனவற்றின் பிரதிநிதிகளாவும் அவர்களே உள்ளார்கள்.

அறிவார்ந்த அடிப்படையில் மரபு, பாலியல் விழுமியங்களையும், சமூக மரபுகளையும் உடைத்தெறிக்கின்றார் இயக்குனர். குறிப்பாக திரைக்கதை பெண்ணினால், பெண்ணிய மொழியில் படைக்கப்பட்டுள்ளது. இது இப்படங்களின் மிகச் சிறப்பான அம்சமாகும். இது இயக்குனரின் சமூக நோக்குடன், ஆண்களால் எழுப்பப்பட்டுள்ள தளத்தை சம நிலை நோக்கி திசை திருப்பும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றது. இயக்குனரின் உள்ளுணர்வும், அனுதாப உணர்வில்லாத தனது குற்ற உணர்வும், நுட்பமான காட்சிச் படிமங்களுக்கூடாக வெளிப்பட்டுள்ளன.

மனித உறவுக்கும், வரலாற்றுக்கும், சமூக கட்டமைப்புக்கும், அதிகாரங்களின் வளர்ச்சிக்குமான தொடர்பியலை முன்வைத்து, ஆண்களால் இவைக்கு இணைவாக எழுப்பட்டுள்ள கருத்தியலை இப்படங்கள் விமர்சிக்கின்றன. இப்படங்கள் சமூக தளத்தின் திசைகளை திருப்பியுள்ளன. 

- ரதன்