Appa 2016 tamil movie

கல்வி முறை குறித்து  அறிவு தளத்தில் மிகப்பெரிய அளவில் விவாதம் நடந்து வருகிற சூழலில் சமான்ய மக்களிடம் அழுத்தமான பரப்புரையை அப்பா படக்குழு செய்திருக்கிறது. இயக்குனர் சமுத்திரக்கனி பாராட்டுதலுக்குரியவர். சமூக கொடுமைகளை எதிர்ப்பதற்காக, எங்கிருந்தோ அன்னா அசாரே போன்ற தலைவர்களும் அவர்களின் ஆலோசனையின் பேரில் இளைஞர் பட்டாளம் புரட்சி செய்வது போன்ற அபத்தமான கற்பனை இத்திரைப்படத்தில் இல்லை. அடித்தட்டு மக்களின் முகத்துடன், குணத்துடன், கோபத்துடன் நடுத்தர வயது கதாநாயகன் வருகிறார்.

சமூக மாற்றம் என்பது கல்வி முறை மாற்றத்துடன் தொடர்புடையது என்பதை இத்திரைப்படம் அழகாக சொல்லியிருக்கிறது. சாதி, பிற்போக்குத்தனம், மக்களின் அறியாமை இவை மூன்றும் எந்த காரணம் கொண்டும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் அதிகார வர்க்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆக,சமூக மாற்றம் குறித்து எந்த வித உணர்வும் மக்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் இன்றைய கல்வி முறை மிகத் தெளிவாக இருக்கிறது. பெரியாரையும் படி, மார்க்ஸையும் படி, ஆனால் மனப்பாடம் செய்து கொள். அவ்வளவுதான். எதற்கும் பயிற்சி எடு முயற்சி எடு.முழுமையடைந்து விடாதே இதுதான் இன்றைய கல்விச் சூழல்.

பள்ளிக்கூடங்களில் மழலைகளுக்குத் தரும் அலங்கார வேலைகள் குழந்தைகளின் புத்தாக்கத்திறனை வெளிப்படுத்தவா அல்லது வணிக நிறுவனங்களுடன் தனியார் பள்ளிகள் போடும் ஒப்பந்தங்களை புதுப்பிக்கவா என்கிற கேள்வியை இத்திரைப்படம் எழுப்புகிறது. முழுமையாக வணிக வளாகங்களாக மாறிப் போன நமது கல்வி வளாகங்களைப் பார் என்று அப்பா திரைப்படம் நமக்கு உரக்கச் சொல்கிறது.

சமூக மாற்றம் குறித்து சிந்திக்க கூடாது,தன் முன்னேற்றம் என்பதில் மட்டும் அக்கறையாக இருக்க வேண்டும்,இந்த கல்வி பந்தயத்தில் தன் மகன் எப்படியாவது வெற்றிப் பெறுகிற குதிரையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற கதாபாத்திரம் தம்பி ராமையாவிற்கு. மிக கச்சிதமாக நடித்திருக்கிறார். அவர் வரும் அனைத்து காட்சிகளிலும் மக்கள் கை தட்டி சிரிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் அந்த கோமாளியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற சமூக எதார்த்தை பார்வையாளர்கள் சுய விமர்சனத்துடன் ஏற்கிறார்கள்.ஏற்றுக் கொள்ள வைக்கிறார் சமுத்திரக்கனி.

அது மட்டுமல்ல, பேராசை பிடித்த தம்பி ராமையாவின் வீட்டில்  சங்கராச்சாரியார் படம் மாட்டப்பட்டிருப்பதை இரண்டு முறை காண்பித்திருக்கிறார் இயக்குனர். அந்த காட்சிகளின் மூலம் மறைமுகமாக  ஒரு நுட்பமான அரசியலை பேச விழைகிறார்.

சமுத்திரகனியின் மகன் நட்பு கொள்ளும் இசுலாமியப் பெண் கதாபாத்திரத்தை எதார்த்தமாக வடித்திருக்கிறார். ஏழை குடும்பத்துப் பெண்ணாக வரும் அவர்,எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்களை பாலினமோ,மதமோ பெரிய அளவில் கட்டுபடுத்துவதில்லை.மனித திரளுடன் கலப்பதையே சமான்யர்கள் விரும்புகிறார்கள் என்கிற உண்மையை அந்த கதாபாத்திரம் காண்பிக்கிறது.

தம்பிராமையா, தனது மகன் வசதி வாய்ப்பு இல்லாத சராசரி பெண்ணை காதலிக்கிறான்  என்று நினைத்து பேசும் வசனங்கள் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கின்றன. இல்லாதவர்கள் என்றால்,இயலாதவர்கள் என்றால் எதுவும் செய்யலாம் எப்படியும் பேசலாம் என்கிற உடைமைச் சமூக மனநிலையை அந்தக் காட்சி பிரதிபலிக்கிறது.

அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூலை ஒரு இடத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஒழுக்க நெறிகளுக்கு முன்னுதாரணமாக மதநூல்களை மட்டுமே உபதேசித்து வந்த திரைப்படங்களுக்கு மத்தியில் இந்த காட்சி நல்ல துவக்கம்.

படத்தில் எழுந்து நின்று பாராட்ட வேண்டிய அம்சம் படத்தின் இறுதி பத்து நிமிடங்கள். உறைவிடப் பள்ளிகளின் உண்மை முகம் என்ன என்பதை  பகிரங்கமாக காண்பிக்கிறது. ஆசிரியர்களும்,அலுவலர்களும் இருக்க வேண்டிய கல்வி வளாகம் அடியாட்களும்,வியாபரிகளும் உலவக் கூடிய இடமாக இருக்கிறது என்பதை மிகையில்லாமல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. கல்வி வளாகங்கள்,திருமண மண்டபங்கள்,மருத்துவ மனைகள் இவை அனைத்தும் யாரோ ஒரு தொழிலதிபர் வசம் இருக்கிறது. திருமண மண்பங்கள் எப்படி ஒரு தொழிலோ அது போல்தான் கல்விக்கூடங்களும், மருத்துவமனைகளும் மிகப்பெரிய வணிகச் சந்தை. இன்னும் சொல்லப்போனால் கல்விதான் இன்று மிகப்பெரிய வியாபரச் சந்தை. கல்வி நிறுவனம் நடத்தும் யாருக்கும் கல்வி குறித்தோ குழந்தை நலன் குறித்தோ எந்த வித அக்கறையும் அறிவும் கிடையாது. அப்படிபட்டவர்கள் கையில்தான் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்குகின்றன.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கோழிப்பண்ணை பள்ளிக்கூடங்களை கடுமையாக சாடியிருக்கிறது இத்திரைப்படம். கல்வி என்றாலே கற்பித்தல் என்கிற நிலை மாறி வெறும் படித்தல்,படித்தல், படித்தல் என்கிற நிலை வந்து விட்டது. எதையும் கேட்காமல், எதை பற்றியும் சிந்திக்காமல் படித்துக் கொண்டே இரு என்பதுதான் இது போன்ற பள்ளிகளின் தாராக மந்திரம்.

பயிற்றுவிப்பது (coaching) மட்டுமே ஆசிரியர் பணி. சொல்லிக் கொடுப்பது  (teaching) கிடையாது. தேர்வு நடத்துவதும், அதை திருத்துவதும், மீண்டும் எழுத வைப்பது மட்டுமே இன்றைய ஆசிரியர்களின் பணி. இதில் யார் சிறந்தவர்கள் ? எந்த பள்ளி சிறந்த பள்ளி ? என்பதை வைத்துதான் தமிழகத்தின் முன்ணனி பள்ளிகள் உருவாக்கப்படுகின்றன. பெற்றோர்களின் பேராசை இது போன்ற பள்ளிகளுக்கு மூலதனமாக அமைகிறது.

கல்வி வளாகத்தில் மாணவர்கள் இறந்துவிட்டால் அல்லது பாதிக்கப்பட்டு விட்டால்,கல்வி வளாகம் எப்படி வினையாற்றுகிறது? .அந்த செய்தியை எப்படி திரித்து பேசுகிறது ? என்கிற உண்மையை அம்பலமாக்குகிறது அப்பா. இந்த காட்சியில் கல்லூரி வளாகங்களில் அடிப்படை வசதி கேட்டு போராடும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் கல்லூரி துணைவேந்தர்கள் நம் கண்முன்னால் வந்து போகிறார்கள். 15 மாதங்களுக்கு முன்னால் தமிழகத்தின் முதன்மையான பல்கலை கழகத்தில் போராடிய மாணவர்கள் எந்த அளவிற்கு வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.

சமூகத்தின் அவலங்களை மாற்றக்கூடிய, அழிக்கக்கூடிய, ஆற்றல் பெற்றவர்களாய் மாணவர்களை உருவாக்கக்கூடிய கடமை கல்விமுறைக்கு உண்டு. ஆனால்,நடக்கிற அனைத்து அவலங்களுக்கும் உடந்தையாக இருக்கக்கூடிய அல்லது பலியாகக்கூடிய ஜீவன்களாக மாணவர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது இன்றைய அமைப்பு. இந்த அவலத்தைதான் தோலூரித்துக்காட்டுகிறது அப்பா.

கல்வுி முறையில் மாற்றம் வேண்டும் என்கிற நவீன தத்துவத்தை பேசும் இயக்குனர், பெண் மகப்பேறு விசயத்தில் கற்காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார். என்னதான் நவீன காலம் வந்தாலும் அறிவியல் வளர்ந்தாலும், வலியை தாங்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை அறிவுரையாக கூறுகிறார். மாணவர்களின் எதிர்காலத்தை அறிவுப்பூர்வமாக அணுகும் சமுத்திரக்கனி அவர்கள், பெண்கள் விசயத்தில் ஏன் இவ்வளவு பழமைவாதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை?.

பெண் ஒரு சக உயிர் என்று பாடம் எடுக்கும் சமுத்திரக்கனி,அந்த பெண்ணிற்கு தன் பிள்ளைப் பேற்றை தீர்மானிக்கும் உரிமை உண்டு என்பதையும் உணர வேண்டும். இந்த ஒரு அபத்தமான சிந்தனையை தவிர்த்து விட்டுப் பார்த்தால், அப்பா தமிழ் சமூகம் கொண்டாடப்படவேண்டியவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

- ஜீவசகாப்தன்