தலித்துகளின் நிலைமையைப் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. இந்தியாவில் தீண்டாமைக் கொடுமை இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. ஆனால் இப்படியெல்லாம் சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளனவா என்ற கேள்வியை பல்வேறு விஷயங்களை சார்ந்து எழுப்புகிறது India untouched. Stories as a people apart என்ற விவரணப்படம்.

விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்டதாக இந்தியாவே கொண்டாட்டத்தில் வீழ்ந்திருக்கிறது. அந்த நிலையில் நம் முகத்தில் அறையும் விவரணப்படம் இது. சென்னையிலும் மதுரையிலும் சமீபத்தில் இந்தப் படம் திரையிடப்பட்டது. சாதி, தீண்டாமை வன் கொடுமைகள் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி கேள்வி எழுப்புபவர்கள் அனைவருக்கும் உரிய பதிலை ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளது இந்தப் படம்.

தலித் மக்கள் மீது சுமத்தப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் இந்தச் சமூகம் மௌனமாக ஏற்றுக் கொண்டு வருகிறது. தலித்துகளை ஒடுக்கி, அவர்கள் எந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தார்களோ அங்கேயே நிறுத்த வேண்டும் என்பது தான் சாதியத்தின் அடிப்படை நோக்கம்.

தலித் மக்கள் வரலாற்று ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நில உரிமை, சொத்துரிமை, கல்வி உரிமை ஆகிய அனைத்தும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. சமூகத்தின் கீழ்நிலைக்கு என ஒதுக்கப்பட்ட, மோசமான நிலைமைகளைக் கொண்ட வேலைகள் தலித் மக்கள் செய்ய வேண்டும் என்று ஒடுக்கப்பட்டனர். இப்படி இந்தியாவில் புரையோடிப் போன ஒரு சமூகச் சீர்கேடு தீண்டாமைக் கொடுமை ஆங்கிலேயரிடம் இருந்து அடிமைத் தளையில் இருந்து விடுபட்டதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தச் சதியா, இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் தீண்டாமைக் கொடுமையைப் பல்வேறு வகைகளில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்தப் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வு தீர்வுக்கான தேடல், முன்னோடி முயற்சிகள் மிகக் குறைவாக இருக்கின்றன என்பதே இப்படம் கோடிட்டுக் காட்டும் விஷயம்.

இந்தியா முழுவதும் குறிப்பாக எட்டு மாநிலங்கள் பயணித்துள்ள இந்த விவரணப் படம், நான்கு ஆண்டுகள் தீவிர உழைப்பின் வெளிப்பாடு ஒன்றே முக்கால் மணி நேரத்துக்கு மேல் படம் சென்றாலும், தெளிவான தொகுப்பு, முன் வைக்கும் கருத்து காரணமாக பார்வையாளரின் கண்களையும், சிந்தனையையும் தன் பின்னால் இழுத்துச் செல்கிறது.

மனுவாதிகளின் குரல்

மனுவாதிகள் எப்படி ஒடுக்குமுறையை சுமத்துகிறார்கள் என்பது பற்றி அவர்களே தரும் வாக்குமூலங்கள் படத்தின் முக்கியமான பகுதிகள் பனாரஸ் அறிஞர் குழுவின் தலைவர் என்று அழைத்துக் கொள்ளும் காசியில் உள்ள துளசி மானஸ் கோயிலின் தலைமை பூசாரி பாதுப் பிரசாத் சர்மா, காஞ்சி ஜெயேந்திரன், ராஜபுதனர்கள் என அனைவரும் ஒடுக்குமுறையை எப்படி நடைமுறைப்படுத்துகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் மூடத்தனமான கொள்கைகள் என்ன என்பது அவர்களது வாக்குமூலங்களாகவே வருகின்றன.

வேதம் தான் மாறாத உண்மைகளை எடுத்துரைக்கிறது. மனுதர்மம் மட்டுமே பின்பற்றத் தக்கது. இந்திய அரசியல் சாசனம் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்கிறார் அந்தப் பூசாரி மனுதர்மம் வேதப்படி. அவரவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் அதை மீறக் கூடாது இப்படி அவரது கர்ணகடூரக் குரல், படம் நெடுக இந்து வெறியர்களின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

குஜராத்தில் உள்ள ராஜபுதன விவசாயிகள் இந்த மனுவாதியின் குரலை மாறாமல் ஒலிக்கின்றனர். அவர்கள் வேதம் படிக்கவில்லை. மனு தர்மம் படிக்கவில்லை.
ஆனாலும் ஒடுக்கு முறையை பற்றி தெளிவாகப் பேசுகிறார்கள். அது தான் இந்து மதத்தின் ‘சிறப்பு’ ஒருவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், எங்கள் முன் தரையில் தான் அமர வேண்டும். எங்களுக்கு எதிராக ஒரு புகாரைக் கூட தலித் மக்களால் கொடுக்க முடியாது. மீறி சென்றால், காவல்துறையினர் எங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலில் தகவல் தருவார்கள். நாங்கள் இங்கு வைத்து எல்லாவற்றையும் தீர்த்து விடுவோம் என்கின்றனர்.

ஆனால் தீண்டாமைக்கு மதம் கிடையாது என்கிறது இப்படம். மனு தர்மத்தை பின் பற்றும் இந்து மதத்தில் தான் கடுமையான தீண்டாமை நீடிக்கிறது என்று வெறுப்படைந்த தலித் மக்கள், பிற மதங்களுக்கு மாறுகிறார்கள். அப்படி அவர்கள் கிறிஸ்வதும், இஸ்லாம், சீக்கியம் என மதமாற்றத்துக்கு உட்பட்டாலும் கூட சாதியம் அவர்களை விடவில்லை. இந்த மூன்று மதங்களும் எந்த கொள்கை அடிப்படையிலும் சாதியத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் ஏற்கனவே அந்த மதங்களின் உயர்பதவிகளைப் பிடித்து விட்ட உயர்த்திக் கொண்ட சாதிகள், அங்கும் தீண்டாமையைத் தொடர்ந்து அமல்படுத்தி வருகின்றன என்பதை இப்படம் தெளிவாகக் கூறுகிறது.

அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் வாயில்களில், உயர்த்திக் கொண்ட சாதியினரின் கதவு வழியாக நுழைந்த தலித் ஒருவரை தலையில் இரும்பு பட்டையால் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். அன்னதானம் வழங்கும் இடத்தில் தலித் சீக்கியர்களுக்கு தனி வாயில் உள்ளது. சீக்கியர்களின் மதப் புத்தகமான குரு கிரந்த சாஹிப்பை முழுமையாகப் படித்திருந்தாலும் கூட, சீக்கிய கோயிலின் தலைமைப் பதவியில் தலித் அமர்த்தப்படவில்லை.

இழிநிலையில் தலித்துகள்

பிஹாரில் உள்ள டேராம் எனப்படும் தலித் மக்கள், ஜாஜா பகுதியில் வசிக்கின்றனர். அங்கு ரயில் பாதைகளில் அடிபட்டு இறக்கும் மனிதர்களின் அழுகிய சடலங்கள், சிதைய ஆரம்பித்து விட்ட உடல் பாகங்களை அகற்றும் பணிகளை இவர்கள் செய்கின்றனர். மனிதர்கள் மட்டுமல்ல, ரயில் பாதைகளில் அடிபட்டு இறக்கும் விலங்குகளை அகற்றுவதும் இவர்களது பணியே மனித நேயமற்ற இந்தப் பணியைச் செய்யும் அந்தச் சாதி மக்களை, ரயில்வே அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கவில்லை. அவர்களுக்கு மிகச் சாதாரண கூலியே வழங்கப்படுகிறது.

பஞ்சாப் பாட்டியாலா நகராட்சியில் உள்ள சாலை தூய்மைப்படுத்துவதுவோரில் அனைவரும் தலித் சீக்கியர்களே,. ஜலநசதரில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளை அனைவரும் தலித் சீக்கியர்களே. ஜலந்தரில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்துபவர்கள் உயர்த்திக் கொண்ட சாதியினராக இருந்தாலும், அங்கு பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் சமர் சாதியைச் சேர்ந்த தலித் மக்களே.

இந்தியா முழுவதும் கழிவறைகள், ரயில் பாதைகள் மனித மலத்தை அகற்றுவது, சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை தலித் மக்கள் மட்டுமே செய்து வருகின்றனர். சாலை தூய்மைப்படுத்துவது, தோட்டி வேலை, சலவை செய்தல், தோல் பதனிடுதல், செருப்பு தைத்தல் போன்ற வேலைகள் இந்த 21ம் நூற்றாண்டிலும் தலித் மக்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் படிக்கும் அருந்ததிய குழந்தைகள், வலுக்கட்டயமாக கழிவறைகளை சுத்தம் செய்ய வைக்கப்படுகின்றனர்.

அரசுத் துறை என்றாலும், தனியார் துறை என்றாலும் இதுபோன்ற இழிதொழில்களாகக் கருதப்படுபவற்றைச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தலித்துகளே உள்ளாக்கப்படுகின்றனர். காலங்கள் மாறினாலும், நிர்வாகங்கள் மாறினாலும் சாதியம் மாறவில்லை.

நகரம் தலித்துகளின் நரகம்

கிராமங்களில் மட்டும் தான் சாதிய ஒடுக்குமுறை நிலவுகிறது என்று கூறுவது மற்றொரு மூட நம்பிக்கை. கிராமங்களை விட நகர்ப்புறத்தில் தான் தீண்டாமையின் கரம் மிக மோசமாக ஒடுக்குகிறது என்று இந்தப் படம் கூறுகிறது.

மெத்தப் படித்தவர்களின் கூடாரமாகக் கருதப்படும் நாட்டின் தலைநகர் டெல்லி இதற்கு உகந்த எடுத்துக் காட்டு. சப்தர்ஜங் மருத்துவமனையில் உள்ள துணைத் தலைமைப் பொறுப்பில் ஒரு தலித் வந்திருக்கிறார். ஆனால் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் விடுப்பில் சென்றால் தற்காலிக தலைமைப் பொறுப்பு இவருக்கு வழங்கப்படுவதில்லை. அவரை விட அனுபவம் குறைந்த சாதி இந்துவுக்கே தரப்படுகிறது. ஆராய்ச்சி மேற்கொள்ள, பணியில் மேம்படுத்திக் கொள்ளவும் தேவைப்படும் அறுவை சிகிச்சை அரங்கு ஒதுக்கீடு, உயர் பதவியில் இருந்தும் தலித்துக்கு ஒதுக்கப்படுவதில்லை.

நாட்டின் முன்னணி சிந்தனையாளர்கள், சமூகப் போராளிகளை உருவாக்கும் இடம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அங்கு படிக்கும் ஒரு பார்ப்பன மாணவன், தன் அறைத் தோழன் தலித் என்று தெரிந்து கொண்ட பிறகு அறையின் நடுவில் தடுப்பை வைத்து விட்டானாம். காலையில் தலித் முகத்தில் விழித்தால் அன்றைய தினம் அவனுக்கு விளங்காதாம். அங்கு ஆராய்ச்சி மேற்கொள்ளவும், படிக்கவும் வரும் தலித் மாணவ, மாணவிகளுடன் சாதி இந்துக்கள் பழகவும், நட்பு பேணவும் மறுக்கிறார்களாம்.

நாட்டின் எந்த நாளிதழை எடுத்துக் கொள்ளுங்கள், அதில் வரும் திருமண விளம்பரங்கள் சாதியப் பாகுபாட்டைக் கோடு கிழித்து, பத்திப் பிரித்து தெளிவாக வெளியிடுகின்றன. நகர்ப் புற சமூகம் எப்படி சாதிய எல்லைகளால் பிரிக்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்த ஒரு அத்தாட்சியே போதும். கண்ணுக்குத் தெரியாத இந்த வேலிகள் வலிமையாக இருக்கும் போது, ‘இந்தியா அமைதியை விரும்பும் நாடு, இங்கு தீண்டாமை என்ற ஒன்று இல்லை’ என்று இனவெறிக்கெதிராக தென்னாப்பிரிக்க மாநாட்டில் இந்திய அரசு போலியாக தன்னைநிவிக் கொண்டது.

எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் படக் குழுவினரின் உதவியுடன் குஜராத் இளஞ்சிறுமிகள் பொதுக் கிணற்றில் பயத்துடன் தண்ணீர் எடுக்கிறார்கள்.

இப்படிப்பட்ட காட்சிகள் படத்தின் இறுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. காலங்காலமாகத் தொடர்ந்து வரும் தீண்டாமைக் கொடுமையை அவ்வளவு எளிதில் அகற்றிவிட முடியாது. சாதியத்தின் கோர முகம், இந்த நவீன காலத்தில் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்பதை இப்படம் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளது. நாம் நினைப்பது போல் தீண்டாமை அவ்வளவு சாதாரண பிரச்சினை இல்லை என்பதை இப்படம் வாயிலாக இயக்குநர் கே.ஸ்டாலின் முன் வைத்துள்ளார்.

அகமதாபாத்தைச் சேர்ந்த இவர், மனித மலத்தை மனிதர்களே அகற்றும் கொடுமை தொடர்பாக லெஸ்ஸர் ஹியூமன்ஸ் என்ற படத்தை இயக்கியதன் மூலம் முன்னதாக கவனம் பெற்றிருந்தார். தீண்டாமையின் கோர முகத்தை வலிமையாக வெளிக் கொண்டு வந்துள்ள இந்தப் படம் எதிர்க்குரல் எழுப்புவோரின் கூர்மையான ஆயுதமாகப் பயன்படும்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுபவர்கள், இட ஒதுக்கீட்டை மறுப்பதற்காக கிரீமி லேயரை வலியுறுத்துவோரின் மற்றொரு முகம் இந்தப் படம் மூலம் வெளிப்பட்டுள்ளது. நம் சமூகத்தில் தீண்டாமை எப்படிப் புரையோடிப் போயுள்ளது என்பதை விளக்க இதை விட வலிமையான ஒரு விவரணப் படம் இருக்க முடியாது.

இந்தியா, ஒரு தீண்டாமை தேசம்.