திமுகவின் தலைவரும், முதலமைச்சருமான மு.கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ. 26.5கோடி. அஇஅதிமுக ஜெ. ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரு,25.35கோடி. இது 2006 தேர்தலின் போது இரு தலைவரும் தங்களது வேட்பு மனுவோடு சமர்ப்பித்த சொத்துப்பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரம். இந்த இரண்டு கோடீஸ்வர முதல்வர்கள் வசிக்கும் இதே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 3கோடிக்கும் மேல். தமிழகத்தை சுமார் 40வருடங்களாக ஆட்சி செய்து வரும் இந்த இரண்டு கழகங்களுமே தங்களது ஆட்சியை பொற்கால ஆட்சி என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றன. ஆனால், நிதர்சனம் தலைகீழாக இருக்கிறது.

தமிழகத்தில் சரிபாதிக்கும் மேலான மக்கள் உண்ண உணவு, உடுக்க உடை, சுகாதாரமான இருப்பிடம், மலத்தை கழிக்கக் கூட கழிப்பிடம் இல்லாமல் காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தான் ஆட்சியில் அமர்வது யார் என்பதை முடிவு செய்யும் பிரதான வாக்கு வங்கி. இவர்களை குறி வைத்துதான் 2006 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் இரு கழகங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்தன. இந்த இலவச அறிவிப்பு போட்டியில் வென்ற திமுக, ஆட்சியில் அமர்ந்து நான்கரை ஆண்டுகள் கழித்தும், அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தில் துளியும் முன்னேற்றம் இல்லை. அப்படி இருக்கையில் இலவச திட்டங்களின் நோக்கம்தான் என்ன?

2006 இல் பதவிப் பிரமாணம் எடுத்த சில நிமிடங்களில் முதல்வர் கருணாநிதி இலவச திட்டங்களுக்குத்தான் முதலில் கையெழுத்திட்டார். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, கேஸ் அடுப்பு, குடிமனைப்பட்டா, சைக்கிள், என இலவசங்கள் தமிழகத்தில் மழையாய் பொழிகிறது. ஆனால், சமூகத்தை மேம்படுத்தும் கருவியாக இருக்க வேண்டிய இலவசங்கள், மக்களை பயனாளிகளாக மட்டுமே மாற்றியிருக்கிறது. இலவசங்களை ருசித்த மக்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

குடிமக்கள் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது, அரசின் அடிப்படையான கடமை. ஆனால், தமிழக அரசு இலவசங்களை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு தனது அடிப்படையான கடமைகளை மறுத்திருக்கிறது. இந்த மறுப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களின் வாழ்க்கையை சூறையாடி வருகிறது. அரசு வழங்கி வரும் இலவசங்கள். கொடுப்பவர் _ வாங்குபவர் என்ற மனோபாவத்தை மக்களிடம் ஆழமாக பதித்து விட்டது. அடிப்படை தேவைகளை மறக்கடித்து நுகர்வோர் என்ற உணர்வினை ஊட்டி பயனாளி என்ற புதிய பட்டத்தை மக்களுக்கு வழங்கியிருக்கிறது.

இதனால் இலவசங்களுக்காக அரசு செலவிடும் தொகை தங்களுடையது என்பதை மக்கள் சிந்திப்பதில்லை. கலைஞர் கருணையுடன் கொடுத்தார். திமுக கட்சி கொடுத்தது என ஆட்சியாளர்கள்தான் இலவசங்களை கொடுக்கிறார்கள் என்ற மக்களின் மனவோட்டம் வாக்கு அறுவடைக்கு தோதாக இருக்கிறது. மேலை நாடுகளில் படித்துவிட்டு பணிக்காக காத்திருப்பவர்கள், மாணவர்கள், முதியவர்களின் அடிப்படைத் தேவைகளை அந்நாட்டு அரசுகளே பூர்த்தி செய்கின்றன. ஆனால், அவர்கள் இதை இலவசம் என்று சொல்வதில்லை. நம் நாட்டு அரசியல்வாதிகள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அந்த அரசுகள் அங்குள்ள விவசாயிகளுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகை அதிகம். அதை விவசாயிகள் இலவசமாக பார்ப்பதில்லை. இவைகள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சமூக பாதுகாப்பு திட்டங்களாக கருதப்படுகிறது.

ஆனால் இங்கு செல்வந்தர்களுக்கும் பன்னாட்டு, உள்நாட்டு வணிக நிறுவனங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் வழங்கிவரும் வரி தள்ளுபடி, வரிகுறைப்பு மற்றும் வரிச்சலுகை போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பு மற்றும் சலுகை என்று அழைக்கிறார்கள். ஆனால், ஏழைகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச வாழ்வாதார திட்டங்கள் கூட இலவசங்கள் என்று கொச்சைப்படுத்தப்படுகிறது. ஆனால் இங்கு வாக்கு வங்கியை பலப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு தமிழக அரசு கொடுத்தாலும், இதற்கு வழங்கப்படும் மானியம் என்பது சமையலுக்காக வாங்கப்படும் எண்ணை, பருப்பு, மிளகாய் உள்ளிட்ட பொருட்களின் விலையில் மறைமுக வரியாக உயர்த்தப்பட்டு ஈடுசெய்யப்படுகிறது. ஆகையால், இலவசம் என்ற வாதமே அர்த்தமற்றது. மக்களின் வரிப்பணம்தான் இலவச திட்டங்களுக்கான நிதி ஆதாரம் என்பது தெளிவாகிறது.

உலகத்தில் எந்த அரசும் மக்களுக்கு இலவசமாக டி.வி யை வழங்கியதாக சரித்திரமே இல்லை. மேலை நாடுகளில் சமூக பாதுகாப்புக்காக அத்தியாவசியங்களை மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில் கலர் டிவியை இலவசமாக கொடுப்பது மட்டமான அரசியல். வறுமையில் தவிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதை மறந்து பயனில்லாத இலவசங்களை மட்டுமே செயல்படுத்துவதில் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. கல்வியை தனியாரிடம் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டு, மதுவை அதீத இலக்கு நிர்ணயித்து அரசே விற்பனை செய்யும் அவல சூழ்நிலையில் தமிழகம் இருக்கிறது. இதோடு தொலைநோக்கற்ற இலவசங்களையும் வழங்கி மக்களை மந்தைகளாக மாற்றி இருக்கிறது.

இந்த தொலைநோக்கற்ற இலவசத் திட்டங்கள் மக்களை மட்டுமல்ல, அரசு எந்திரத்தையே முடக்கிப்போட்டுள்ளது. தொடர்ந்து இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதால் மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் ஒரு லட்சம் கோடியை தாண்டிவிட்டது. இதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியில் அரசு கை வைக்கிறது. தலித் மாணவர்களின் கல்வி, அந்த சமுதாயத்தினரின் மேம்பாடு ஆகியவற்றிற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி, அற்ப இலவச திட்டங்களுக்காக மாநில அரசு திசைதிருப்புவதால் அந்த சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களை முன்னெடுத்திருப்பதன் மூலம் திமுக அரசு தொலைநோக்குப் பார்வையை இழந்திருக்கிறது. இதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சுருங்கிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உயிர்நாடியான விவசாய உற்பத்தி, தொழில்வளர்ச்சி உள்ளிட்டவைகள் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கின்றன. வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மாற்ற என்ன செய்ய வேண்டும், என்பதை மறந்து இலவசங்களை அரசியல் லாபத்திற்கு மட்டுமே, பயன்படுத்துவதை அரசு கைவிட வேண்டும். அப்போதுதான் வரலாறு காணாத வீழ்ச்சியில் இருந்து மாநிலத்தை காப்பாற்ற முடியும்.

ஆள்பவர்களின் அக்கறையற்ற இலவசங்களை மக்கள் கண்மூடிக் கொண்டு அங்கீகரிப்பதுதான், அந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படக் காரணமாக இருக்கின்றன. வெளிநாடுகளில் அரசு வழங்கும் சமூக பாதுகாப்பை (இலவசங்களை) பெறும் அம்மக்கள் அதிலிருந்து எப்போது விடுபடுவோம் என்ற உந்துதலோடு உள்ளனர். ஆனால் இங்கு இன்னும் வேறு ஏதாவது இலவசமாக கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு சமூகத்தின் அவலமாக இருக்கிறது. உண்மையான வளர்ச்சிக்கு உதவாத இலவசங்களை மக்கள் புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டும். அதுவே வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

Pin It