ஆர்.கே.எஸ்.சம்சுகனி, டி.மாரியூர், பி.முத்தையா, புளியங்குடி.

கல்யாணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தப்பு இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது பற்றித் தங்கள் கருத்தென்ன?

சட்டப்படி தவறில்லை என்று சொல்லியிருக்கிறது நீதிமன்றம். அதைப் பொறுத்தவரை அதற்கென்று ஒரு சட்டம் இருந்து, அதை மீறினால்தான் குற்றம். பிரச்சனை சட்ட ரீதியானது அல்ல, தார்மீக ரீதியானது. அந்தந்த வயதிலேயே வேலை கிடைத்து வாழ்வில் நிலைத்துவிட்டால் உடன் திருமணம் செய்து கொள்வார்கள் ஆணும் பெண்ணும். அப்போது இந்தப் பிரச்சனை அனேகமாகக் குறைந்துவிடும். அடிப்படையாக நோக்குமிடத்து இதுவும் நாட்டின் பொருளியல் சம்பந்தப்பட்ட பிரச்சனையே.

ஆர்.கே.எஸ்.சம்சுகனி, டி.மாரியூர்.

ஆசிரமம் நடத்த அரசு தடை போடுமா?

சரியாப் போச்சு. அவ்வளவுதான் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தினர் கிளம்பி விடுவார்கள்.- மத சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கூறி. தடையைவிட போலிச் சாமியார்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றும் உணர்வுப்பூர்வமான பிரச்சாரமே அவசியம். நித்தியானந்தா சிக்கினார். அதற்கு முன்பு அதே நபருக்கு பத்திரிகைகளில் எவ்வளவு விளம்பரம்! கல்கி ஆசிரமத்தில் போதையில் பைத்தியக்காரர்கள் போலத் திரியும் ஆண் - பெண்களைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். அதற்கும் தடை உத்தரவு பெற்றார்கள். அதுதான் சாக்கு என்று பிறகு ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லையே! இந்தப் போக்குத்தான் கூடாது. போலிப் பொருட்களை மட்டுமல்ல போலிச் சாமியார்களிடமும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லிக் கொண்டே வரவேண்டும்.

ரா.தட்சிணாமூர்த்தி, கடலூர், கே.அரங்கராஜன், பாதிரக்குடி.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய்க்கு மட்டும் எதிர்ப்பு. அதேபோன்ற தக்காளி, வெண்டைக்காய், நெல்லுக்கு ஏன் எதிர்ப்பு இல்லை?

நியாயமான கேள்விதான். ஆனால் கத்தரிக்காயை ஒட்டி எழுந்த எதிர்ப்பு இதர காய்களுக்கும் பரவலாமே! பிரச்சனை கத்தரிக்காயா, தக்காளியா என்பதல்ல, இந்த பி.டி. வகைகள் தேவையா இல்லையா என்பதுதான். இயற்கை விஞ்ஞானிகள் என்போர் மரபணு மாற்ற வகைகளே கூடாது என்கிறார்கள். நவீன வேளாண் விஞ்ஞானிகளோ அவை மட்டும் வாராதிருந்தால் இந்தியா போன்ற நாடுகளில் கொடூரப் பஞ்சங்கள் ஒழிந்திருக்காது என்கிறார்கள். இயற்கை வகைகள், செயற்கை வகைகள் இரண்டுமே வேண்டும் எனப்படுகிறது. இதிலே பன்னாட்டு நிறுவனங்கள் பிடியில் நமது விவசாயிகள் சிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியம்.

எஸ்.சந்திரசேகரன், சென்னை.

நடிகை குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்து விட்டாரே?

அதனாலென்ன? அவருக்கு அந்த அரசியல் உரிமை உண்டு. இதிலே நெருடிய விஷயம் என்னவென்றால் தி.மு.க.வில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தனக்குப் பிடித்த கட்சி காங்கிரஸ் என்று கூறியிருந்தார். பிறகு ஏன் தி.மு.க.வில் சேர்ந்தார்? பிடித்த கட்சி ஒன்று, சேருகிற கட்சி இன்னொன்றா? மனதிலே ஒருவரை நினைத்துக்கொண்டு இன்னொருவரைக் கல்யாணம் செய்து கொண்ட கதையாகவல்லவா இருக்கிறது!

கே.பி.குணாளன், வேலூர்.

சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது என்று விஸ்வஹிந்து பரிசத் கூறியுள்ளதே, உங்கள் கருத்து என்ன?

தலித் மக்கள் மத்தியிலிருந்து எழுந்த அறிஞர் அயோத்திதாசர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இந்தப் பிரச்சனையைச் சந்தித்தார். அப்போது 1910இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருந்தது. தனது "தமிழன்" ஏட்டில் அவர் எழுதியிருப்பதைக் காணுங்கள் - "இந்து சாதியாருக்குள்ள வகுப்புகளை விவரமாகக் கண்டறிய வேண்டுமென்றும் ஆலோசனைக் கொண்டுள்ள சென்செஸ் கமிஷனர் அவர்களின் உத்தேசத்திற்கு மாறுதலாக ரெவரெண்டு அன்று அவர்கள் தோன்றி தனது அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளார். அவை யாதெனில் இந்துக் கோவிலுக்குள் போகாதவர்களாய் இருப்பினும் இந்துவென்று கூறுவோர்களை யாதொரு மறுப்புமின்றி இந்துவென்றே எழுதிக்கொள்ள வேண்டும் என்கின்றார். இவற்றுள் இந்துக்கள் என்போர் பெருந்தொகையோர் எனக் காட்டி தங்கள் சுகத்தைப் பெருக்கிக் கொள்ளுவதற்கு சகலரையும் இந்துக்கள் என்றே அபிநயித்து தங்கள் காரியம் முடிந்தவுடன், அப்பா நீங்கள் இந்துக்கள் என்றால் உங்கள் உட்பிரிவுகள் என்ன, இந்துக்களுக்குள் தீண்டாதவர்களும் இருக்கின்றார்கள், அவர்களுக்கு எல்லாம் சமரச ஆட்சி கொடுக்கலாமா, அது சாதி ஆச்சாரத்திற்கு முரணாச்சுதே என்று கழித்துவிட்டு ஏழைகளை முன்னேறவிடாது செய்துகொள்ளுவார்கள்."

அன்று அரசாங்கம் சாதி வாரியாகக் கணக்கெடுக்க முன்வந்தது, அதைச் சிலர் எதிர்த்தார்கள். இன்று அரசாங்கம் சாதிவாரியாகக் கணக்கெடுக்க முடியாது என்கிறது, அதைப் பலரும் எதிர்க்கிறார்கள். சாதி வாரியாகக் கணக்கெடுத்தால் கணக்கு உதைக்கும் என்கிறார் உள்துறை அமைச்சர். உதைக்காதபடிக்கு ஒழுங்காகக் கணக்கெடுக்கிற வழியைப் பார்க்காமல் இப்படிச் சொல்வது அநியாயம். 1931க்குப் பிறகு சாதிக் கணக்கெடுப்பு எடுக்காததால்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அளவைத் தீர்மானிக்க முடியாமல் அரசாங்கமும் நீதிமன்றமும் தடுமாறுகின்றன. சாதி இருக்கிறது என்பது உண்மை. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கொண்டுவராததால் அது மறைந்துவிடுமா?  பத்திரிகைகளில் வரும் திருமண விளம்பரங்களைப் பாருங்கள், எத்தனை சாதிகள்! அழுகும் புண்ணை மூடிப் பயனில்லை. திறந்து பார்த்து வைத்தியம் செய்வதே அழகு.

ஜி.வத்சலா, திருநெல்வேலி.

ஜோதிடர் சொல்படிதான் முதல்வர் கருணாநிதி நடந்து கொள்கிறார் என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியிருக்கிறாரே?

அந்தப் பேச்சைப் படித்துப் பார்த்தால் அப்படி நடந்து கொள்ளக்கூடாது என்கிறாரா, அல்லது முதல்வரும் தன் வழிக்கு வந்துவிட்டார் என்று புளகாங்கிதப்படுகிறாரா என்று புரியவில்லை. பெரியார் - அண்ணா பெயரை அவ்வப்போது சொல்லிக்கொள்கிற திராவிட இயக்கக் கட்சிகள் ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கை எதிர்ப்பிலாவது உறுதியாக இருக்க வேண்டும். அதிலும் இல்லை என்பதுதான் பெருத்த சோகம்.

மு.மகேஸ்வரன், தஞ்சாவூர்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. என்ன செய்கிறது? சத்தத்தையே காணோமே?

மதமாச்சரியத்தை உண்டுபண்ண வழி கிடைக்காதா என்று அலைந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் திமுக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாகக் கூறி, அதைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அதன் தலைவர் அறிவித்திருக்கிறார். இதிலே தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்காக வேறு முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். மண்டல் குழு எதிர்ப்பு  "வீரர்களின்" இந்த சாகசம் கண்டு தமிழக மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. மதச் சிறுபான்மையோருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் பலவும் இன்னும் கிடைத்தபாடாயில்லை. அவர்களுக்கும் இதரபகுதி மக்களுக்கும் இடையே மோதலை உண்டுபண்ணத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

என்.சட்டநாதன், கடலூர்.

சீமான் கட்சி ஆரம்பித்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

சினிமாக்காரர்கள் கட்சி ஆரம்பிப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. தொலைநோக்குக் கொள்கைகளைக் கொண்டில்லாமல் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை வைத்தே அவர்கள் கட்சி நடத்தப் பார்ப்பதும் புதிய விஷயமல்ல. சீமானுக்குக் கிடைத்திருப்பது இலங்கைப் பிரச்சனை. "இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தனி ஈழம்தான் சரியான தீர்வு... தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும்" என்று (தினமணி 19-5-2010) பேசியிருக்கிறார். கொடூரமான யுத்தத்தின் காரணமாக அங்கே தமிழர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இங்கோ சீமான்கள் அவர்களைக் கொம்பு சீவி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களுக்கு நாம் காரியசாத்தியமான தீர்வுகளையே சொல்ல வேண்டும். நமது உணர்ச்சிமயமான அரசியலுக்கு அந்தப் பாவப்பட்ட ஜனங்களைப் பலிகடா ஆக்கக் கூடாது.

Pin It