ஐயா, வணக்கம். இலக்கியத்தை "உலகமயமாக்கல்" எனும் சந்தைப்படுத்தலில் வணிகமாக்கி ஏராளமாய்ப் பொருளும் புகழும் குவித்துக் கொண்டு அதுவே தமிழுக்கும் அதன் இலக்கியத்துக்கும் செய்யும் சேவை என்று(!) ஏமாற்றிக் கொண்டிருக்கும் பம்மாத்து ஒருபுறம். அரசியல் அதிகாரத்தின் பயங்கரங்களுக்குள் ஒளிந்துகொண்டு மொழியை ஆதாயமாக்கி அந்த இனத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் கொடூரங்களின் அன்றாட நிகழ்வுகள் மறுபுறம். அதனூடான மனிதத்துக்கு விரோதமாய் எப்போதும் "இயங்கியல் விதி" போல நடந்து கொண்டிருக்கும் சாதிய வன்கொடுமைக் கேவலங்கள் இன்னொரு புறம் என இருக்கிற தமிழ்ச் சூழலை எதிர்கொள்கிறவர்களுக்குத்தான் "கவிதாசரணின்" இதழ்ப் பணி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர முடியும். சமூக இருட்டுக்குள் ஒற்றைப் புள்ளியாய் ஒரு வெளிச்சம் போல வந்து, ஊழித்தீயாய் மாறி, இப்பொழுது இதழின் வழியாக எவராலும் புறந்தள்ள முடியாத ஓர் இலக்கிய இயக்கமாகியிருக்கிறது "கவிதாசரண்." இந்த நிலையை அடைய அது எடுத்துக்கொண்ட காலச் சேதமும் பொருள் நட்டமும் ஒருபுறம் இருக்கட்டும். எதிர்கொண்ட அவமானங்களும் காயங்களும் தனிமைப் படுத்தல்களும் ஆறாத மனக்காயங்களாகியிருப்பதை உடன் இருந்து அவதானிக்கிற எம்மைப் போன்றவர்களின் உள்ளக் குமுறலாகத்தான் தங்களின் "ஆசிரியர் பக்கம்" அமைந்திருக்கிறது.
"கால்டுவெல் நூற்பதிப்பை முன்வைத்து" பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். கால்டுவெல் தலித் இல்லை. அடிப்படையில் மதம் சார்ந்த அடையாளங்களுடன் வாழ்ந்தவர். ஆனால் அவருக்கு மதங்கடந்த மனிதப் பார்வை, மாந்த நேயம் இருந்திருக்கிறது. அதனால்தான் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை" வெறும் மொழியியல் வெளிப்பாடாகக் கொண்டு வராமல் வரலாறு சார்ந்த, சமூகம் சார்ந்த இனவரைவியல் நூலாகவும் கொண்டு வந்திருக்கிறார் என்பதை 133 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் இப்போது தேடிக் கண்டுபிடித்துச் சொன்ன பிறகுதான் "தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு"த் தெரிய வந்திருக்கிறது. அதற்கு இந்தச் சமூகம் என்ன செய்ய வேண்டும்? நன்றி பாராட்ட வேண்டும். அதுதான் நாகரிகமுடைய ஒரு சமூகத்தின் நல்ல அடையாளம். ஆனால் உண்மை நிலை அப்படியில்லை.
எல்லாரும் அவரவர் சாதியை, அதன் பெருமையை மனதில் குப்பையாகச் சேர்த்துவைத்துத் தூக்கித் திரிகிற "சாதிச் சங்க காலம்" இது. சங்க காலத்திலும் இப்படித்தான் இருந்திருக்கும் போல. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று உலகத்துக்குச் சொல்லிவிட்டு "யாதும் ஊரே யாவரும் கேளிர்/ ஊரும் சேரியும்/தனித்தனி இடத்தில்" (இது விரைவில் வரவிருக்கும் என்னுடைய போன்சாய் ஹைக்கூ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது) என்று தம் சொந்தச் சகோதரர்களைச் சாதியச் சிலுவையில் அறைந்தவன்தானே அவன்? சாதியை ஒழிக்க வேண்டும், சாதியற்ற மனிதனாகத் தமிழன் தன்னை முன்னிறுத்த வேண்டும், தலை நிமிர வேண்டும் என்றுதானே நீங்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறீர்கள். பார்த்தார்கள் நம் தமிழர்கள். உங்களைச் "சாதியற்ற தமிழன்" சிலுவையில் அறைந்துவிட்டார்கள். அதற்காக நாம் ஏன் வருத்தப்பட வேண்டும்? பெருமையல்லவா படவேண்டும்? உங்களையும் என்னையும் இந்தத் தமிழ்ச் சமூகத்தையும் இப்படிப் பாழ்படுத்தி வைத்திருக்கிற நம் "சாதித் தமிழர்கள்"தாம் வெட்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக நீங்கள் குறிப்பிடுவதுபோல எல்லாருமே தெரிந்தேதான் மௌனிகளாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது மனிதருக்கு மனிதர் செய்யும் வஞ்சகம் என்றும் மனித சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர்களுக்குத் தெரியாதா என்றால் நம்மை விடவும் நன்றாகவே தெரியும். பிறகு நாம் என்ன செய்ய? நாசமாய்ப் போக" என்று மண்ணை வாரித் தூற்றலாம். அவ்வளவுதான்.
ஏசுவை சிலுவையில் அறையும்போது அவரைச் சிறுமைப்படுத்த எண்ணி அவருக்கு இரண்டு பக்கங்களிலும் இரு கொலைக்குற்றவாளிகளைச் சிலுவையில் அறைந்தார்கள். இப்போது தமிழர்கள் சாதியற்ற உங்களுக்கு ஒரு பக்கத்தில் சாதி இழிவுடைய தலித்தையும் மறு பக்கத்தில் கால்டுவெல்லையும் சேர்த்து சிலுவையில் அறைந்து விடுவார்கள். வேண்டுமானால் பாருங்கள். கடைசியில் அதுதான் நடக்கப்போகிறது. ஆனால் ஒன்று. ஏசுவல்ல நாம், மூன்றாம் நாள் பகைவர்களுக்கருளவென்றே உயிர்த்தெழ. மாறாக, சாதிப் பகை ஒழித்து அதே சாதியச் சிலுவையில் சாதி வெறியர்களை அறைந்து, தன் சாம்பலிலிருந்து தானே எழும் பீனிக்ஸ் பறவைகள்போல நாம் என்பதைக் காலம் உணர்த்தும்.
குறிப்பு: "ஆசிரியர் பக்கத்தில்", "திருவள்ளுவர் பெயரால் ஒரு கால நெடுங்கணக்கை அரும்பாடுபட்டுத் தேர்ந்துகொண்ட தமிழக அரசு அதற்கான தமிழ்ப் புத்தாண்டு நாளையும் உடன் நிகழ்வாக அறுதியிட்டு நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். தமிழ் சார்ந்த இவ்விதமான அரசு நறுவிசுகளில் தமிழ்நாட்டு அரசு ஒருபோதும் முறையறிந்து செயல்படவில்லை என்பதுதான் தமிழர்கள் எதிர் கொள்ளும் அதிர்ச்சி மிக்க அறைகூவல்," என்று எழுதியிருந்ததைத் தொடர்ந்து நம் இதழில் "கலைஞர் தலையை வெட்டுவோம்" என்ற இந்து பாசிசத்தின் திமிரை எதிர்த்துப் பதிவு செய்த "எச்சரிக்கை" எனும் என் கவிதையையும் கணக்கில் வைத்துப் பார்த்த நேரம், தற்போது தமிழக அரசு தை முதல்நாளைத் தமிழப் புத்தாண்டாக, தமிழர் ஆண்டு முதலாக அறிவித்திருப்பது நம் "கவிதாசரண்" இதழுக்குக் கிடைத்த மெய்யான தமிழ் வெற்றி என்று கருதலாம் அல்லவா?
- பாரதி வசந்தன். புதுச்சேரி - 10
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ஒரு கடிதம்
- விவரங்கள்
- பாரதி வசந்தன்
- பிரிவு: கவிதாசரண் - ஆகஸ்டு 2008