“நீர்வை பொன்னையனுடைய சிறுகதைகள் பொழுது போக்குக்காகவோ, வாசிப்பு இரசனைக்காகவோ, உள்ளக் கிளர்ச்சிக்காகவோ படைக்கப்படுபவையல்ல. அவை ஒவ்பொன்றும் வாழ்வியலை நெறிப்படுத்தும் அற்புத ஒளடதங்கள். படிப்பவர்களது சிந்தைனையை சரியான பாதையில் செல்ல வழி காட்டுபவை.

இவர் தனது படைப்புகளுக்குப் பாடுபொருளாக பல்வேறு பிரச்சனைகளையும், வித்தியாசான களங்களையும் எடுத்தாண்டுள்ளார். ஆயினும் மார்க்சியப் பாதையில் சென்று கொண்டிருக்கின்ற முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாம் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாகவும், சுரண்டலுக்கும், சூரையாடலுக்கும் எதிராகவும் குரலெழுப்பி உத்வேகமூட்ட வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டுள்ளார்.

neervai ponnaiyanஇதனடிப்படையில் இவரது படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களாகிய தொழிலாளர்கள், நிலமற்ற விவசாயிகள், சாதியால் தாழ்த்தப்பட்ட மக்கள், பால் ரீதியாக அடக்கப்படும் பெண்கள், வஞ்சிக்கப்படும் குழந்தைகள், இனரீதியாக அடக்கப்படும் தமிழ் மக்கள் ஆகியயோரின் பிரச்சினைகளையும், அவ்வடக்கு முறைகளுக்கு எதிராக மக்களின் எழுச்சிகளையும், போராட்டங்களையும் சித்தரிப்பதில் முக்கிய கவனமெடுத்துள்ளன.

இந்த வகையில் தொழிலாள வர்க்கத்தினரது பிரச்சனைகள் எனப் பார்க்கும் போது மில் தொழிலாளர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள், நெசவாளர்கள், பஸ் தொழிலாளர்கள், கடைச் சிற்றூழியர்கள், அரசு நிறுவனத் தொழிலாளர்கள் எனப் பலவகைப்பட்ட தொழிலாளர்களைத் தனது படைப்புகளின் நாயகர்களாக ஆக்கியுள்ளார்.

இனக்கலவரத்தைத் தொடர்ந்து, போரின் வெம்மை தமிழர்களை அவர்களது தாயகத்திலேயே சுட்டெரிப்பதை இவரது சிறு கதைகள் சித்தரிக்கின்றது. மேலும், போர் காரணமாக தமிழ் சமுதாயத்தில் நிகழும் மாற்றங்கள், பொருளாதார வீழ்ச்சி, பெண்கள் மீதான அடக்குமுறை, போரின் தாக்கத்தையும் மீறி சிலர் செய்யும் சமூக விரோத, சுயநல நடவடிக்கைகள் ஆகியவற்றையும் தொடர்ந்து பதிவு செய்துள்ளார்.”- என ‘நீர்வை பொன்னையன் சிறுகதைகள்’ தொகுப்பாசிரியர்கள் வ. இராசையா, எம்.கே. முருகானந்தன் ஆகியோர் தொகுப்புரையில் புகழ்ந்துரைத்துள்ளனர்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் நீர்வேலியில் ஒல்லைக் குறிச்சி என்னும் இடத்தில் மார்ச் திங்கள் 24 ஆம் தேதி 1930 ஆம் ஆண்டு பிறந்தார் நீர்வை பொன்னையன். தமது ஆரம்பக் கல்வியை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பயின்றார். பின்னர் மட்டக்களப்பு – கல்லடி சிவானந்தா கல்லூரியில் பயின்று, கிழக்கிலங்கையில் சம்மாந்துறை முஸ்லீம் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.

தனது பட்டப் படிப்புக்காக கொல்கத்தாவுக்குச் சென்றார். அப்பொழுது கொல்கத்தாவில் முற்போக்கு இடதுசாரிச் சிந்தனை கொண்ட தொழிலாளர் போராட்டங்களும் முகிழ்த்துக் கொண்டிருந்தது. மாணவர்கள் பல்வேறு சமூகப் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தக் கொல்கத்தா வாழ்க்கை நீர்வை பொன்னையனின் சிந்தனையிலும், உள்ளத்திலும், நடத்தையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது. அவை சமூக நீதியின் பாற்பட்ட போராட்டக் குணாம்சமுள்ள போராளியாக உருவாகக் காரணமாயிற்று.

இந்தியாவுக்குச் சென்று மேற்கு வங்க மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் பயின்று பட்டதாரியாக இலங்கைக்குத் திரும்பினார். இந்திய மக்கள் கலாச்சார மன்றத்தின் ஹுக்ளி பிரதேச அமைப்புச் செயலாளராகப் பணியாற்றினார்.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மார்க்சியச் சிந்தனைகளினால் கவரப்பட்டு, இலங்கையின் வடபகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். மேலும் பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.

தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டங்களிலும், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களிலும், பல தொழிலாளர் அமைப்புகளுடன் இணைந்து நேரடியாக களத்தில் இறங்கிப் போராடிய உண்மையான போராளி.

1957 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து, பல ஆண்டுகளாக வேலைதேடி அலைந்து வேலை கிடைக்காமல் தோட்டக்காரனகவே வாழ்ந்தார்.

கொழும்பில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மொழி பெயர்ப்பாளராகவும், விபவி சுதந்திர இலக்கிய மாற்றுக் கலாச்சார மையத்தின் தமிழ் மொழி இணைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும், இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்திலும் தீவரமாகச் செயற்பட்டார்.

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் மூலம் இலக்கிய கூட்டங்கள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், நினைவுப் பேருரைகள், நூல் வெளியீடுகள் முதலியவைகளை முன்நின்று நடத்தியுள்ளார்.

நீர்வை பொன்னையனின் படைப்புகள் : காலவெள்ளம், உதயம், பாதை, வேட்கை, நிமிர்வு, நீர்வை பொன்னையன் சிறுகதைகள், மேடும்பள்ளமும், உறவு, பேய்களும் பிசாசுகளும், ஜென்மம், நினைவுகள் அழிவதில்லை, விடிவு, பாஞ்சான் முதலிய சிறுகதைத் தொகுப்புகள், நாம் ஏன் எழுதுகின்றோம், உலகத்து நாட்டார் கதைகள், முற்போக்கு இலக்கிய முன்னோடிகள், நினைவலைகள், மூவர் கதைகள் முதலியவைகளாகும்.

‘மூவர் கதைகள்’ என்ற தொகுப்பில் செ. கதிர்காமநாதன், செ. யோகநாதன், நீர்வை பொன்னையன் ஆகிய மூவரது கதைகள் அடங்கியுள்ளது.

‘நினைவலைகள்’ இவரது சுயசரிதை நூல். இந்நூலில் இலங்கை இடது சாரி அரசியலின் எழுச்சியும் வீழ்ச்சியும் குறித்து பதிவு செய்துள்ளார்.

நீர்வை பொன்னையன் சிறுகதைகள் சுதந்திரன், ஈழநாடு, கலைமதி, தமிழன், வீரகேசரி, தேசாபிமானி, வசந்தம், ஈழநாடு, கலைச்செல்வி, தினக்குரல் முதலிய இதழ்களில் வெளி வந்துள்ளது.

நீர்வை பொன்னையன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழ்களான தேசாபிமானி, தொழிலாளி ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றினார்.

‘நிமிர்வு’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘உடைப்பு’ என்ற சிறுகதை தேசிய ஒருமைப்பாடு, முதலாளி தொழிலாளி முரண்பாடு, பெண்ணியம் போன்ற சமகாலப் பிரச்சிளைகளைப் பேசுகிறது. ‘நிமிர்வு’ என்ற சிறுகதை அரசியல் போலிகளை அம்பலத்துக்குக் கொண்டு வருகின்றது. தமிழைப் பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் சாதியத்தைச் சாடும் சிறுகதை ‘மீறல்’. தனியார்துறையின் தான்தோன்றித்தனத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. மேலும், தாழ்த்தப்பட்ட தமிழருக்கு தனியார்துறையில் வேலை வாய்ப்பு என்பது முயற்கொம்பு தான் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. ‘மீட்பு‘ என்ற சிறுகதை சமூகத்தில் வாழும் அடிமட்ட மக்களின் உன்னதங்களைப் பேசுகின்றது. பட்டம், பணம், பதவி வழங்கித் தம் பக்கம் இழுக்க முயலும் மேல்தட்டு வர்க்கத்தைத் தூக்கி எறியும் நிலையைப் பேசுகின்றது.

நீர்வை பொன்னையனது சிறுகதைகளைப் பொருள் அடிப்படையில், 1) தொழிலாளர் பிரச்சினைகள், 2) உள்நாட்டு நிலப்பிரபுத்துவத்தின் அவலம் பற்றிப் பேசுபவை 3) சாதியக் கொடுமைகள் குறித்துப் பேசுபவை 4) இனப்பிரச்சினை தொடர்பாகப் பேசுபவை என வகைப்படுத்தலாம்.

“மனித மனங்களின் உணர்வலைகளை எழுத்துகளாக்கி உணர்ச்சிபூர்வமாக படைக்கும் திறனை ஆசிரியரிடத்தே காணமுடிகிறது. இதனால் கதையில் உயிரோட்டம், யதார்த்தம் என்பன ஒன்றிணைந்து கதையோடு ஒன்றச் செய்து விடுகின்றது எதைச் சொல்ல வந்தாரோ அதனை அழுத்தமாகச் சொல்லிச் செல்லும் பாங்கு, கதையமைப்பு, உத்திகள் என்பன சிறப்பாக கையாளப்பட்டுள்ளன. சமூகத்தின் விரிந்த தளத்தை கூர்மையோடு நோக்கும் நீர்வை பொன்னையனின் திறமையே அவரது படைப்புகளை ஈழத் தமிழிலக்கிய அன்னையின் அரியாசனத்தில் ஏற்றி வைத்துள்ளது என்றால் மிகையில்லை.” - என ஈழத்து இலக்கிய விமர்சகர் கார்த்திகாயினி சுபேஸ் தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

உலகத்து நாட்டார் கதைகள்: இந்நூல் பள்ளிச்சிறார்கள் முதல் முதியோர் வரை பயனளிக்கத் தக்கதொன்றதாகும். இந்நூலை தமிழில் மீள் மொழிவு செய்துள்ளார் நீர்வை பொன்னையன்.

“முற்காலங்களில் அதிகாரத்திலிருந்த பிரிவினரின் அநீதிகளையும், அக்கிரமங்களையும், சுரண்டல் சூறையாடல்களையும், அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் மக்கள் விரோத நடிவடிக்கைகளையும் வெறுத்த மக்கள், நாட்டார் கதைகளினூடாக தமது எதிர்ப்பையும், கண்டனங்களையும் வெளிப்படுத்தினர். அத்துடன் இக்கதைகள் மூலம் அதிகார வர்க்கத்தினரின் போலித்தனம், சின்னத்தனம், சீரழிவு என்பனவற்றையும் அம்பலப்படுத்தி கேலியும் கிண்டலும் செய்தனர். இத்தகைய மானுட விழிப்புணர்வு மாத்திரமின்றி இக்கதைகளில் நீதி, நேர்மை, நியாயம், தர்மம், கருணை, அன்பு முதலிய மனித விழுமியங்கள் வெளிப்பட்டு நிற்பதையும் காண்கின்றோம்.

நாட்டார் கதைகளில் மனிதர்கள் மாத்திரமல்லாது மிருகங்கள், பறவைகள், மரங்கள், கடல், சந்திரன், சூரியன், காற்று, முகில் என்பனவும் பாத்திரங்களாக அமைந்துள்ளன. இது, மனிதர்களுடன் மாத்திரமல்லாது ஏனைய பிராணிகளுடனும், இயற்கையுடனும் மனிதர்களுக்கிருந்த நெருங்கிய ஈடுபாட்டையும் உறவையும் இவற்றின் மீது அவர்களுக்கிருந்த அக்கறையையும் நேசத்தையும் வெளிப்படுத்துகின்றது.

மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து வாய்மொழி இலக்கியமான நாட்டார் கதைகளும், நாட்டார் பாடல்களும் என்றுமே மக்கள் குரலாக ஒலித்து வந்துள்ளன. இந்த வாய் மொழி இலக்கியம் மனித குலத்தின் ஆத்மா. இது சர்வவியாபகமானது, சிரஞ்சிவியானது.”- என ‘உலகத்து நாட்டார் கதைகள்’ என்னும் நூலின் முகவுரையில் நீர்வை பொன்னையன் குறிப்பிட்டுள்ளார்.

‘முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்’ என்னும் நூலின் என்னுரையில் நீர்வை பொன்னையன் கூறியுள்ளதாவது : “முற்போக்கு இலக்கிய மூலவர்களின் படைப்புகளில் நவீன யுகத்தின் இதயத் துடிப்பையும், இரத்த ஓட்டத்தின் வீறாப்பையும், சுரண்டிச் சூறையாடப்படும் வர்க்கத்தின் தர்மாவேசத்தையும், புரட்சிப் போராட்டப் புயலையும், சத்திய வேட்கையையும், புத்தொளிப்பின் விசாலிப்பையும், சிருஷ்டி ஆற்றலின் கம்பீரத்தையும் நாம் காண்கின்றோம். இப்படைப்பாளிகள் வாழ்ந்த சமூகத்தில் காணப்பட்ட விழிப்புணர்வையும், அரசியல், சமூக, பொருளாதார உறவுகளையும், அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும், யதார்த்தங்களையும் கலைத்துவத்தையும் இவர்களுடைய சிருஷ்டிகளில் பார்க்கக் கூடியதாக உள்ளது. இப்படைப்புகள் எளிமையானவையாக, தூய்மையானவையாக, வலுவுள்ளவனாக, உலகின் பல்வேறு நாடுகளில் அடக்கி ஒடுக்கப்பட்ட சுரண்டிச் சூறையாடப்பட்ட விடுதலைக்காகப் போராடுகின்ற, புரட்சியை வேண்டி நிற்கின்ற தொழிலாளர்கள், விவசாயிகள், பரந்துபட்ட வெகுசனங்கள் ஆகியோருக்கு ஆதர்ஷமானவையாகவும், புரட்சிப் போராட்ட உணர்வை ஊட்டுகின்ற உந்த சக்தியாகவுள்ளன.

இந்த முன்னோடி இலக்கியப் படைப்பாளிகள் தேசபக்தி மிக்கவர்கள், தத்தமது தாய்நாட்டின் விடுதலைப் போராட்டங்களிலும், புரட்சிப் போராட்டங்களிலும் நேரடியாக பங்கு பற்றியவர்கள். இவர்களில் பலர் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு உள்ளாகி சிறை சென்றவர்கள். இவரது படைப்புகள் அதிகார வர்க்கத்தினரால் தடை செய்யப்பட்டவை. தர்மத்தின் பக்கம் நின்று சத்திய வேட்கையுடன் போராடியவர்கள். தொழிலாளார்கள், விவசாயிகள் பரந்துபட்ட வெகுசனங்கள் உரிமைப் போராட்டங்களிலும் புரட்சிப் போராட்டங்களிலும் தம்மை அர்ப்பணித்தவர்கள். இப்போராட்டங்களில் தாம் பெற்ற அனுபவ ஞானத்தையும் புரட்சி உணர்வையும் உராமாகப் பயன்படுத்தி தமது சிருஷ்டிகளை உருவாக்கியுள்ளனர். இதனால் தான் இந்த இலக்கியப் போராளிகளின் சிருஷ்டிகள் முற்போக்கு இலக்கியத்தின் இலக்கணமாய், முன் உதாரணங்களாய் அமைந்துள்ளதுடன் உலக இலக்கியத்திற்கு வளத்தையும் செழிப்பையும் ஊட்டுகின்ற மரமாயும் அமைந்துள்ளன.”- எனப் பதிவு செய்துள்ளார்.

மேற்படி நூலில், மார்க்ஸிம் கார்க்கி, பிரேம்சந்த், லூசுன், சரத் சந்திரர், ஆஸ்த்றோவஸ்கி, தகழி சிவசங்கரம் பிள்ளை, கே.ஏ. அப்பாஸ், ராகுல சாங்கிருத்யாயன், முல்க்ராஜ் ஆனந்த், கிருஷன் சந்தர் ஆகிய முற்போக்கு இலக்கிய முன்னோடிகளின் வாழ்வும், பணியும் மற்றும் அவர்களது சிறுகதை படைப்பும் இடம் பெற்றுள்ளது.

“கலை இலக்கியத்தை மக்கள் மயப்படுத்துவது, மக்களை இலக்கிய மயப்படுத்துவதுதான் முற்போக்கு இலக்கியத்தின் இலக்கு. கலை இலக்கியத்தின் மூலம் சமூக அரசியல் மாற்றத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்துவதுதான் முற்போக்கு இலக்கியவாதிகளின் இலட்சிய வேட்கையாக அமைய வேண்டும்” என- ‘உறவுகள்’ சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் நீர்வை பொன்னையன் பதிவு செய்துள்ளார்.

neervai ponnaiyan 1“எனது படைப்புகளில் தொழிலாளர், விவசாயிகள் தான் கதாநாயகர்கள், வர்க்க உணர்வுடைய, தன் நலமற்ற அர்ப்பணிப்பு, கூட்டுச் செயற்பாடு, தர்மாவேச போர்க்குணம் ஆகிய குணாம்சங்களையும், சுரண்டல் சூறையாடல் அநீதி அக்கிரமங்கள் நிறைந்த, மனிதனை மனிதனே விழுங்குகின்ற இந்த சீர்கெட்ட சாக்கடைச் சமுதாயத்தை முற்றுமுழுதாக மாற்றி, இல்லாரும் உள்ளாரும் இல்லாத ஒரு புதிய உன்னத உலகை அமைக்க வேண்டுமென்ற லட்சிய வேட்கையையும் கொண்ட தொழிலாளர், விவசாயிகள் தான் எனது கதாநாயகர்கள். இவர்கள் தான் எதிர்கால வரலாற்று நாயகர்கள்” என ‘பாதை’ சிறுகதைத் தொகுப்பின் என்னுரையில் நீர்வை பொன்னையன் குறிப்பிட்டுள்ளார்.

“எனது சிறுகதைகள் ஆரம்பத்தில் உழைக்கும் தொழிலாள விவசாய மக்களது வர்க்கப் போராட்டங்களை அடிநாதமாகக் கொண்டு புனையப்பட்டன. பின்னர் எமது தாயகத்திலுள்ள பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கத்தினதும் தமிழ் போராட்டக்குழுக்களதும் பாசிச நடவடிக்கைகளையும், அழிப்புகளையும் அம்பலப்படுத்தி எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றன. நான் தனியனல்லன். சுரண்டலையும் சூறையாடலையும் தகர்த்தெறிந்து ஒரு புதிய சகாப்தத்தை நிர்மாணிப்பதற்காகப் போராடி வருகின்ற பேரணியில் நானும் ஒரு உறுப்பினன். எமக்கென்று ஒரு வாசகத்தளமுண்டு. இதை இலக்காகக் கொண்டே எமது படைப்புகளைச் சிருஷ்டித்து வருகின்றோம்.” - என ‘நினைவுகள் அழிவதில்லை’ என்னும் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“தொழிலாளர்கள் விவசாயிகளுடன் சேர்ந்து வாழ்ந்து அவர்களுடைய இன்ப துன்பங்களில் வர்க்கப் போராட்டங்களில் பங்கு பெற்றாமையால் தான் அவர்களை வெற்றிகரமாக எமது கதாபாத்திரங்களாக நாம் சிருஷ்டிக்கிறோம். இத்தகைய எமது சிருஷ்டிகள் வலுவுடையனவாக இருக்கின்றன. அவை நிலைத்து வாழும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அது மாத்திரமல்ல மனித சமுதாயத்தை மாற்றுவதற்கு சுரண்டலும் சுரண்டப்படுதலுமற்ற ஓரு புதிய சமுதாயத்தை அமைப்பதற்கு உந்து சக்தியாக எமது சிருஷ்டிகளைப் படைக்கின்றோம். இது எமது வரலாற்றுப் பணி. ஒரு எழுத்தாளன் எதை எழுதுகிறானோ அதன்படி அவனும் வாழ்ந்து காட்ட வேண்டும். அப்பொழுது தான் சமுதாயம் அவனையும் அவன் எழுத்துகளையும் மதிக்கும்.” –என படைப்பின் முக்கியத்துவத்தையும், எழுத்தாளரது சமூகக் கடமையையும் நீர்வை பொன்னையன் பதிவு செய்துள்ளார்.

 “இலக்கியம் சமுதாயத்துடனும், வாழ்வுடனும், மக்களின் பிரச்சினைகளுடனும் பிரிக்க முடியாது இணைந்து, பிணைந்து பின்னிக் கிடக்கிறது என்றும், மக்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை ஊட்டி அவர்களுடைய எதிர்காலத்துக்குக் கோடிகாட்டி, நல்வாழ்வுக்காகவும், பிரகாசமான எதிர்காலத்துக்காகவும் மக்கள் நடத்தும் போராட்டத்தில் அவர்களின் பேராயுதமாகவும், வழிகாட்டியாகவும் திகழ வேண்டுமென்றும் நாம் ஆணித்தரமாகக் கூறுகின்றோம். நல்லதற்கும் கெட்டதற்குமிடையில், நீதிக்கும் அநீதிக்குமிடையில், தர்மத்திற்கும் அதர்மத்திற்குமிடையில், சுதந்திரத்திற்கும், அடிமைத்தனத்திற்குமிடையில், சுபிட்சத்திற்கும், சுரண்டலுக்குமிடையில் நடைபெறும் போராட்டத்தில், இலக்கியமும், இலக்கியகர்த்தாவும் முன்னதன் பக்கத்தில் நின்றேயாக வேண்டும். நீர்வை பொன்னையனின் சிறுகதைகள் மானிடத்தின் சுருதியாகவும், அநீதியைச் சாடும் தர்மாவேசமும் சுடர் விடுவதைக் காண்கிறோம்.”- என இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளர் பிரேம்ஜி ‘மேடும் பள்ளமும்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் பதிப்புரையில் பதிவு செய்துள்ளார்.

 “சமூகம், கருத்தியல், ஆக்கத்திறன் உளவியல், குறியீடுகளின் இயக்கம், முரண்பாடுகளை அழகியல் வெளிக்குக் கொண்டு வருதல் முதலாம் உறுப்பொருட்களின் சமநிலையில் மிதக்கும் சிறுகதை வடிவம் பற்றிய பிரக்ஞை கொண்டவர் நீர்வை பொன்னையன். அவரது எழுத்தும் வாழ்க்கையும் ஒன்றையொன்று தழுவியவை. எழுத்தில் ஒன்று வாழ்க்கையில் வேறொன்றாக அவர் இருந்ததில்லை. அதுவே அவரது எழுத்துக்களுக்குரிய அறவழிப்பாலம்.”- என ஈழத்துப் பேராசிரியர் சபா ஜெயராசா ‘பாஞ்சான்’ என்னும் சிறுகதைத் தொகுப்பின் முன்னீட்டில் பதிவு செய்துள்ளார்.

 “சமூக அக்கறையுள்ள இலக்கியக்காரனாகத் தமிழ்ச் சிறுகதையுலகில் பிரவேசித்த நீர்வை பொன்னையன் தான் வரித்துக் கொண்ட கோட்பாட்டின் வழி தீவிரமான போராளியாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டு, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துக்காகவும், ஐக்கியத்துக்காகவும் குரல் கொடுத்து, மாற்றத்துக்கான வழி தொழிலாளர் ஐக்கியமும், போராட்டத்தினால் ஏற்படும் புரட்சியுமே என்ற தீவிரக் கொள்கைப் பிடிப்புடன் எழுதியமையே அவரது ஆரம்ப முயற்சிகளாகும். துடிப்புள்ள ஒரு இடதுசாரியின் கனவும், வேகமும் அதில் முனைப்புடன் முகங்காட்டின. தீவிர பிரச்சாரத்தன்மை அவற்றில் முந்திக்கொண்ட போதும் ஒரு காலக்கட்டத்தில் இலங்கையில் நிலவிய சனநாயக சிந்தனைகளின் பதிவுகளாக உள்ளன.” - என ஈழத்து இலக்கிய விமர்சகர் கலாநிதி வ. மகேஸ்வரன் கூறியுள்ளார்.

நீர்வை பொன்னையனுடைய இலக்கியத் தொண்டைப் பாராட்டி 2017 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் ‘சாகித்திய ரத்னா’ விருது வழங்கப்பட்டது.

நீர்வை பொன்னையன் தமது 89 ஆவது வயதிலும் இலக்கியப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். ஈழத்தில் முற்போக்கு இலக்கியம் உள்ளவரை நீர்வை பொன்னையனின் பெயர் நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன்