“கலை, இலக்கியம் என்பனவற்றின் இன்றியமையாத பண்புகளிலொன்று மனித நேய உணர்வாகும். இவற்றைப் படைக்கும் கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோர் தம்மளவிலும் இவ்வுணர்வை உடையவர்களாகவே திகழ்வர் எனச்சமுதாயம் எதிர்பார்ப்பது இயற்கையே. ஆயினும் பெரும்பான்மையான கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோரிடம் இவ்வுணர்வை நிறைவாக நாம் கண்டுகொள்ள முடிவதில்லை. ஓரு சிலரிடம் அதனை நாம் முழுமையாக அவதானிக்க முடிகிறது. அத்தகைய மிகச் சிலருள் ஒருவர் நம் மத்தியில் வாழும் இலக்கியவாதி டொமினிக் ஜீவா.” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கலாநிதி சு.வித்தியானந்தன் புகழ்ந்துரைத்துள்ளார்.

டொமினிக் ஜீவா, ஒரு படிக்காத மேதை, உன்னத மனிதாபிமானி முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த பத்திரிக்கையாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, கனல் கக்கும் பேச்சாளர், கடின உழைப்பாளி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன் - எனப் பன்முக ஆளுமை படைத்தவர்.

dominic Jeevaடொமினிக் ஜீவா 27.06.1927 அன்று யாழ்ப்பாணத்தில் அவிராம்பிள்ளை ஜோசப் -மரியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை ஜோசப் யாழ்ப்பாணத்தில் முடிதிருத்தகம் நடத்தி வந்தார்.

“பிறப்பில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சவரத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவன். ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். அந்தக் காலத்தில் தான் என்னை வெகுவாகப் பாதித்த அந்த நிகழ்ச்சி நடந்தது. என்னுடைய இலக்கியத்துறை பிரவேசத்திற்கே இந்த நிகழ்ச்சிதான் காரணம். நான் அப்போது தொடக்கப்பள்ளி மாணவன். அந்த பிஞ்சுப் பருவத்திலேயே என் இதயத்தில் விழுந்த அடி, அதன் வடு, என் படிப்பை, என்னை வளர்த்த என் தந்தை செய்த தொழிலைச் சுட்டிக் காட்டிய பொழுது, என் இதயத்தில் விழுந்த காயந்தான் என் எழுத்தில் எரிகிறது” எனத் தமது இளமைக்கால கொடுமையான நிகழ்வு குறித்தும், இலக்கிய உலகில் பிரவேசிப்பதற்கான சமூகச் சூழல் பற்றியும், ‘ஈழத்திலிருந்து ஒரு இலக்கியக் குரல்’ என்னும் தமது நூலில் டொமினிக் ஜீவா பதிவு செய்துள்ளார்.

ஈழத்து நவீன இலக்கியத்துறையில் 1946 ஆம் ஆண்டு அடி எடுத்து வைத்தார். தமிழகத்து கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவரான ப. ஜீவானந்தம் தலைமறைவு வாழ்வின் பொருட்டு 1948 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகை புரிந்தார். அப்போது டொமினிக் ஜீவா ப.ஜீவானந்தத்தை சந்தித்து, அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் தமது அரசியல், சமூக இலக்கிய நோக்கினை சரியான திசைவழியில் அமைத்துக் கொண்டார். அது முதல் டொமினிக் என்ற தமது பெயருடன் ‘ ஜீவா ’ என்று இணைத்துக் கொண்டு ‘டொமினிக் ஜீவா ’ என்று அழைக்கப்பட்டார்.

‘சுதந்திரன் ’ இதழ் 1956 ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் டொமினிக் ஜீவாவின் ‘ எழுத்தாளன் ’ என்னும் சிறுகதை முதற் பரிசைப் பெற்றது. தினகரன், ஈழகேசரி முதலிய ஈழத்து இதழ்களில் டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டது. மேலும், தமிழகத்து இலக்கிய இதழ்களான சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகிய இதழ்களிலும் இவரது சிறுகதைகளும், படைப்புகளும் வெளியானது.

‘மல்லிகை ’ இதழை 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியிட்டார். ‘மல்லிகை’ இதழின் ஆசிரியராக, பதிப்பாசிரியராக, வெளியீட்டாளராக, வினியோகிப்பாளராக விளங்கினார் டொமினிக் ஜீவா.

 ‘மல்லிகை’ இதழின் மகுட வாக்கியம், “ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார் ” என்ற பாரதியின் வாக்காகும்.

“சிகை அலங்கரிக்கும் நிலையம் ஒன்றினுள் இருந்து வெளிவந்த ஒரே சஞ்சிகை மல்லிகை தான். சலூனில் தொழில் செய்பவரைக் கொண்டு வெளிவந்த சர்வதேசச் சஞ்சிகையும் மல்லிகைதான், இது சவரக்கடையல்ல-எனது சர்வகலாசாலை. எழுத்து எனக்குத் தொழில். பேனா சமூக மாற்றத்திற்கான வலிமைமிக்க ஆயுதம்” என பெருமிதத்துடன் டொமினிக் ஜீவா பதிவு செய்து உள்ளார்.

“எமது மண் வாசனையுடன் யதார்த்த இலக்கியம் தோன்றிய போது அதற்குத் தளம் கொடுக்கச் சஞ்சிகைகள் இருக்கவில்லை. இந்தியச் சஞ்சிகைகளும் எமது இலக்கியத்தை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளாது புறக்கணித்தன. இந்நிலையில் எமக்கென்று ஒரு சஞ்சிகையின் அவசியத்தை உணர்ந்து அதன் வழி மல்லிகையைத் தோற்றுவித்தேன்”. என மல்லிகை இதழின் வரலாற்றுத் தேவையை டொமினிக் ஜீவா தமது நேர்காணலில் கூறியுள்ளார்.

ஈழத்து இலக்கியத்தை இனங்கண்டு வெளியிட்டு தமிழிலக்கியத்திற்கு அளித்தல் வேண்டும். அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் விடிவிற்கான படைப்புகளை முன்னுரிமையுடன் வெளியிடல் வேண்டும். கொள்கை கருத்துக்கள் வேறுபட்ட தரமான படைப்புகளையும், படைப்பாளிகளையும் தமிழுலகு அறிய வைத்தல் வேண்டும். புதியதொரு எழுத்துப் பரம்பரையை தோற்றுவித்தல் வேண்டும் என்பனவற்றை ‘மல்லிகை ’ இதழ் நோக்கமாகக் கொண்டு வெளிவந்தது.

‘மல்லிகை’, இதழ் ஈழத்து எழுத்தாளர்கள் உருவாகி வளர்வதற்கேற்ற தளத்தை உருவாக்கியது. டொமினிக் ஜீவா தமது சுய வளர்ச்சியை தியாகம் செய்து ஏனைய இலக்கியவாதிகளுக்கு தளம் அமைத்துக் கொடுத்தார்.

‘மல்லிகை’ இதழில் சிறுகதைகள், புதுக்கவிதைகள், பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகள், திறனாய்வுகள், உலகச் செய்திகள், துணுக்குகள், வாதப்பிரதிவாதங்கள், நூல் மதிப்புரைகள் என ஏராளமானச் செய்திகள் இடம் பெற்றன. மேலும், ஆசிரியர் தலையங்கம், தூண்டில் பகுதியும் சிறப்பாகக் கூறக்கூடியவைகளாகும்.

மனிதப் பலவீனங்களை பயன்படுத்தி இலக்கியம் என்ற பேரில் சொகுசான வியாபாரம் பண்ணிக் கொண்டிருக்காமல் வாசகர்கள் எதனை விரும்புகிறார்கள் என்பதை விடுத்து, எதனை விரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அவற்றை ‘ மல்லிகை ’ இதழ் நடைமுறைப்படுத்தி தரமான வாசகர் கூட்டத்தைப் பெருக்கியது.

‘மல்லிகை’ இதழ் ஏழை விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தொண்டாற்றி வருகிறது. சராசரி வாசகர்களை இலக்கியத் தரத்திற்கு உயர்த்தும் பணியைச் செய்து வருகிறது. இனவிரோதம், சாதி உணர்வுகளற்ற சமுதாய பணிகளோடு உலகளாவிய உயர்ந்த நோக்கங்களை இளைஞர்களுக்கு உணர்த்தி வருகிறது.

“ இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இயக்க வேகம் குறைந்த நிலையில் முற்போக்கு இலக்கியப் பணியினைத் தொடர்ந்து செய்வதற்கென டொமினிக் ஜீவா மல்லிகை சஞ்சிகையினை ஆரம்பித்தார் ”. என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

‘மல்லிகை’ பல சிறப்பிதழ்களையும், ஆண்டு மலர்களையும் வெளியிட்டுள்ளது. சோவியத் குடியரசின் ‘யுகப்பரட்சி’ சிறப்பிதழ், இலங்கையர்கோன் சிறப்பிதழ், துரையப்பாப்பிள்ளை பாவலரின் நூற்றாண்டு நினைவு இதழ், மலையகச் சிறப்பிதழ், பாரதி நூற்றாண்டுச் சிறப்பிதழ், கைலாசபதி சிறப்பிதழ், முல்லைச் சிறப்பிதழ், கிளி நொச்சி மாவட்ட சிறப்பிதழ், மாத்தளை மாவட்ட சிறப்பிதழ், ஆஸ்திரேலியே சிறப்பிதழ் மற்றும் மல்லிகை வெள்ளி விழா மலர் (1990) முதலியவற்றையும் வெளியிட்டுள்ளது.

‘மல்லிகை’ இதழ்களின் அட்டைகளை அலங்கரித்தவர்கள் நாவலாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள், ஓவியர்கள், இசை மேதைகள், சிற்பக் கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் எனப் பலதிறப்பட்டவர்களாவர். மேலும் அவர்களைப் பற்றிய கட்டுரையும் அந்த இதழில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, கவிஞர் முருகையன், எம். ஏ. நுஃமான், கலாநிதி க. அருணாசலம், தெணியான், பேராசிரியர் நா. சுப்பிரமணியன், டாக்டர் ச. முருகானந்தன், பேராசிரியர் சபா. ஜெயராசா, கே.எஸ்.சிவகுமாரன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், செ.யோகநாதன், புதுவை இரத்தினதுரை, பேராசிரியர் மௌனகுரு உட்பட பல இலக்கிய்த திறனாய்வாளர்களும்,படைப்பாளிகளும், கவிஞர்களும் மல்லிகை இதழ்களில் எழுதியுள்ளனர்.

மல்லிகை இதழ்களில் ஈழத்தின் புகழ் பூத்த கவிஞர்களான, கவிஞர். கல்வயல் வே.குமாரசாமி, அலை அ. யேசுராசா, சண்முகம் சிவலிங்கம், மேமன்கவி, சோலைக்கிளி, கருணாகரன், வாசுதேவன், அன்பு முகைதீன், துறவி, கவிஞர் சோ. பத்மநாதன் உட்பட பல கவிஞர்களின் கவிதைகள் வெளியாகியுள்ளன.

‘மல்லிகை’ இதழில் ஏறத்தாழ 700 சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மேலும், மலையாளம், சிங்களம், ஆங்கிலம் முதலிய பிறமொழிச் சிறுகதைகளும் வெளியிடப்பட்டுள்ளது. மல்லிகை இதழில் வரதர், நந்தி, குறமகள், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், செங்கை ஆழியான், செ. கணேசலிங்கன், அ. முத்துலிங்கம், திக்குவல்லை கமால், லெ. முருகபூபதி, தெணியான், சட்டநாதன், ப. ஆப்டீன், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன், மாத்தளை சோமு, யோகேஸ்வரி, கே. எஸ். சிவகுமாரன், கே. சிவராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

‘மல்லிகை’ இதழ் ஈழத்து சமகால இலக்கிய வரலாற்றின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியின் வளர்ச்சிப் போக்கை பிரதிபலித்து வந்துள்ளது.

“ சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் இடதுசாரி சிந்தனைகளுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளின் காரணமாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்க முடியாத நிலையிலும் தளராது, அச்சிந்தனையை விட்டுக் கொடுக்காது முற்போக்கு இயக்கத்தின் உயிர்ப்பை எடுத்துக் காட்டும் வகையில் ‘மல்லிகை’யை டொமினிக் ஜீவா நடத்தி வந்துள்ளார். ” என மேமன்கவி பதிவு செய்துள்ளார்.

தமிழ் ஆக்க இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ‘ மல்லிகை ’ ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பு என்னவெனில் வளரும் இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்குத் தனது இதழில் களம் அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தமைதான். என எழுத்தாளர், விமர்சகர் ஜ. ஆர்.அரியரத்தினம் தமது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

‘மல்லிகை’யினூடாக தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கினை மட்டுமல்ல. இந்த நாட்டுத் தமிழ் பேசும் மக்களின் சமகால வாழ்க்கை நிலை மாற்றங்கள் கூட வருங்காலச் சரித்திர ஆய்வுகளுக்கான ஆதாரப்பூர்வமான தரவுகளாக அமையும். இந்த நாட்டுத் தமிழ் இலக்கிய படைப்பாளிகளிடையே, ஆழ்ந்த சமூகப் பார்வையோடு எழுதவேண்டுமென்ற ஆர்வத்தை வளர்த்ததிலும், தார்மீகப் பொறுப்புணர்வோடு எழுத வேண்டுமென்ற துடிப்பை ஏற்படுத்தியதிலும் மல்லிகைக்கும், ஜீவாவுக்கும் கணிசமான பங்கு உண்டு. ” என ஈழத்து எழுத்தாளர் யோக பாலச்சந்திரன். ‘மல்லிகை ’ இதழின் சிறப்பு குறித்து பதிவு செய்துள்ளார்.

டொமினிக் ஜீவா தமிழுலகிற்கு படைத்து அளித்துள்ள நூல்கள்:

சிறுகதைத் தொகுதிகள் பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள்,    தண்ணீரும் கண்ணீரும் ( இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நூல்), ஈழத்திலிருந்து ஒர் இலக்கியக் குரல் (பேட்டிகள், செய்திகள்), டொமினிக் ஜீவா சிறுகதைகள் ( 50 சிறுகதைகளின் தொகுப்பு), தலைப்பூக்கள் ( மல்லிகைத் தலையங்கங்கள்), முன்னுரைகள் –சில பதிப்புரைகள், அட்டைப்பட ஓவியங்கள் (கட்டுரைத் தொகுப்பு நூல் மூன்று தொகுதிகள்), எங்களது நினைவுகளில் கைலாசபதி ( கட்டுரைத் தொகுப்பு), மல்லிகை முகங்கள் ( கட்டுரைத் தொகுப்பு), பத்தரே பிரசூத்திய (சிறு கதைகள் சிங்கள மொழி பெயர்ப்பு) அனுபவ முத்திரைகள், முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள், எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (சுய சரிதம்), Undrawn Portrait For  Unwritten  Poetry (மொழிபெயர்ப்பு கந்தையா குமாரசாமி) முதலிய நூல்களாகும்.

மல்லிகை சிறுகதைகள் ( தொகுதி-ஒன்று இத்தொகுதியில் 30 சிறுகதைகளும்), மல்லிகைச் சிறுகதைகள் ( தொகுதி –இரண்டு இத்தொகுதியில் 41 சிறுகதைகளும்) இடம் பெற்றுள்ளன. இச்சிறுகதைத் தொகுதிகளை தொகுத்து வழங்கியவர் ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியான்.

‘அட்டைப்பட ஓவியங்கள்’ முதல் தொகுதியில் ‘ மல்லிகை ’ இதழின் அட்டைப் படத்தில் வந்த 35 இலக்கிய ஆளுமைகளின் குறிப்புகள் அடங்கியுள்ளன. அடுத்த இரண்டாவது தொகுதியில் 65 இலக்கிய ஆளுமைகளின் குறிப்புகளும், இறுதியாக வந்த தொகுதியில் 44 இலக்கிய ஆளுமைகளின் குறிப்புகளும் அடங்கியுள்ளன.

                டொமினிக் ஜீவாவின் நேர்காணல்கள், படைப்புகள் தமிழகத்திலிருந்து வெளிவரும் சமூக நிழல், கணையாழி, கல்கி, மக்கள் செய்தி, இதயம் பேசுகிறது, சாவி, சகாப்தம், தீபம், ஜனசக்தி, தீக்கதிர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

                தமிழகத்தில் 1981 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘ சிறுகதையும் சாதியமும் ’ என்னும் தலைப்பில் உரையாற்றினார் டொமினிக் ஜீவா.

                டொமினிக் ஜீவா சோவியத் நாட்டின் அழைப்பை ஏற்று மாஸ்கோவிற்கும், அய்ரோப்பாவில் இயங்கும் இலக்கியச் சந்திப்பின் அழைப்பை ஏற்று பிரான்ஸ், இங்கிலாந்து முதலான நாட்டுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

                டொமினிக் ஜீவாவின் இலக்கியப் பணியைப் பாராட்டி, ஆறுமுக நாவலர் சபையினர் ‘இலக்கிய மாமணி ’ என்னும் பட்டம் அளித்துச்சிறப்பித்தனர். மேலும் மானுடச் சுடர் எனும் பட்டமும் வழங்கப்பட்டு உள்ளது.

                டொமினிக் ஜீவா ‘ மல்லிகைப் பந்தல் ’ வெளியீட்டகம் மூலம் தமது நூல்களையும், பிற எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு உள்ளார்.

                டொமினிக் ஜீவாவிவின் படைப்புகள், மல்லிகை இதழில் வெளிவந்த பிற படைப்புகள், மல்லிகை இதழில் வெளிவந்த தலையங்கங்கள் ஆகியவைகள் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் ஆய்வுக்காக எடுத்துள்ளது.

                மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான பாடநூலாக டொமினிக் ஜீவாவின் ‘தண்ணீரும் கண்ணீரும் ’ என்னும் சிறுகதைத் தொகுப்பு வைக்கப்பட்டுள்ளது.

டொமினிக் ஜீவாவின் அயராத இலக்கியப் பணியைப் பாராட்டி மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் சிறப்பு விருந்தினராக அழைத்து உறையாற்றச் செய்து சிறப்பித்தது.

டொமினிக் ஜீவா மதுரையில் நடைபெற்ற ஜந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் ஈழத்திலிருந்து பேராளராக கலந்து கொண்டார்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2013 ஆம் ஆண்டுக்குரிய ‘இயல் விருது ’ 17.07.2014 அன்று டொமினிக் ஜீவாவுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வழங்கப்பட்டது.

டொமினிக் ஜீவாவின் மூன்று சிறுகதைகள் டாக்டர் கமில் சுவலபிலால் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

‘தண்ணீரும் கண்ணீரும் ’ ‘பாதுகை ’ ‘ சாலையின் திருப்பம் ’ முதலிய சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள பல சிறுகதைகள் ருஷ்ய மொழியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

டொமினிக் ஜீவா இலங்கை சாகித்திய மண்டலத் தமிழ் இலக்கிய குழுவிற்கு 1971 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

80- களில் மல்லிகையில் வெளிவந்த விமர்சனங்களை ஆய்வு செய்து ம. தேவகௌரி என்பவர் தமது பட்டப் படிப்புக்காக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த நூல் ‘எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

“ ஈழத்து தமிழருக்கோர்

 இலக்கிய மரபு வேண்டும்.

வாழ்வுக்குப் பொருத்தமான

வாசனை வீசுமாறு

சூழலைத் திருத்த வேண்டும்.

சொற்களை புதுக்க வேண்டும்

ஏழைகள் செழிக்க வேண்டும்

என்பன இலக்காய்க் கொண்டார். ”

-              டொமினிக் ஜீவா குறித்து கவிஞர் முருகையன் படைத்த கவிதை

படைப்புகள் குறித்து டொமினிக் ஜீவாவின் கருத்துக்கள் :

“தான் வாழும் காலத்தின் உணர்ச்சிகளை சமுதாய நிலைமைகளை அரசியல் மாற்றங்களை ஏன் அயோக்கியத்தனங்களைக் கூடக் கவனத்திலெடுத்து, நாட்டு மக்களின் அபிலாஷைகளையும் விருப்பு வெறுப்புகளையும் யதார்த்த ரீதியாக உற்றுப் பார்த்து, அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, அதனுள்ளே புதைந்த போய் கிடக்கும் எதிர்காலச் சுபீட்சத்துக்கான கருவை இனங்கண்டு, அதை வளர்த்து வளப் படுத்தித் தனது தனித்துவப் பார்வையுடன் மெருகூட்டிய படைப்பை தனக்குத் தந்துதவிய மக்களுக்கே திருப்பிப் படைப்பது தான் ஒரு மக்கள் எழுத்தாளனுடைய கடமை. உண்மை எழுத்தாளன் ஒரு தீர்க்கதரிசி. எக்காலத்தின் கருத்துக்கும் தாக்குப்பிடிக்கக் கூடிய உள்ளடக்கமும் உணர்வும் கொண்ட சிருஷ்டிகளை உருவாக்கும் கலைஞனே காலக்கிரமத்தில் மறக்கப்படாமல் வாழ்வான்.” ‘ஈழத்திலிருந்து ஒர் இலக்கிக் குரல்’ என்னும் நூலில் டொமினிக் ஜீவா மக்கள் இலக்கியம் படைப்பது குறித்து தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.

                “டொமினிக் ஜீவா –சமூகத்தின் கேவலமானதும், நியாயப்படுத்த முடியாததும், ஆனால் தமிழ்ச் சமுதாயத்தில் ஆழமாகப் புரையோடிப்போயுள்ளதுமான சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியதுடன் மாத்திரமின்றி, அதற்காக முன்னின்று போராடிய- சத்திய ஆவேசம் கொண்ட போராளி” என      எழுத்தாளர்எம்.கே. முருகானந்தன் தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

                “ஈழத்து இலக்கியத்தின் முன்னும் - எழுத்தாளர் முன்னும் தோன்றிய சகல பிரச்சனைகளிலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்னின்று பணியாற்றியுள்ளது. மக்களின் கலை, கலாச்சார, மொழி உரிமைக்காகப் பாடுபட்டது. அந்நிய இலக்கிய ஊடுருவலையும், ஏகபோக ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடியது. ஈழத்து சிருஷ்டி இலக்கியத்துக்கு எதிராக எழுந்த மலட்டுப் பாண்டித்தியத்தின் சூன்யக் குரலை எதிர்த்துப் போராடி முறியடித்தது. இவ்வேளையில் சங்கத்தின் முன்னணித் தளபதிகளில் ஒருவராக நின்று டொமினிக் ஜீவா செயலாற்றினார்.

                நமது யுகத்தின் சிந்தனைகளை, நமது நாட்டின் சூழ்நிலையுடனும், பண்பாடுடனும் இணைத்துப் பிணைத்து, நமது இலக்கியம் தேசியப் பிரச்சனைகளோடு ஐக்கியமாக வேண்டுமென தேசிய இலக்கியம் என்னும் முழக்கம் எழுப்பப்பட்ட போது அதனைச் செயலுருவாக தமது இலக்கிப் படைப்புக்கள் வாயிலாகச் செய்து காட்டியவர்களில் டொமினிக் ஜீவா முன்னணியில் நின்றார்.

                இலக்கியம் பொய்மையின் வெளிப்பாடாக இல்லாமல், உண்மையின் நிலைக்களனாக உயர்வதற்காக யதார்த்த இலக்கி முழக்கத்தை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்வைத்த போதும், டொமினிக் ஜீவாவின் பேனா அதனைச் செய்து காட்டியது” என எழுத்தாளர் என்.சோமகாந்தன் தமது கருத்தை பதிவுசெய்துள்ளார்.

“இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி. வரலாற்றின் பிரதிபலிப்பு, ஆத்மாவின் வெளிப்பாடு, மனசாட்சியின் குரல் என்ற வரையறுப்புகளின் ஒட்டு மொத்தமான உருவமாக ஜீவாவின் இலக்கியப் படைப்புகளும், தனிமனிதனான ஜீவாவின் ஒரு இலக்கிய நிறுவனமான ஜீவாவின் இலக்கியப் பணிகளும் ஒளிர்விடுகின்றன என்று துணிந்தும் நிதானித்தும் கூறலாம்.

                சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட ஒரு பகுதியின் விழுப்புண்களை ஏந்திய மைந்தனாகப் பிறந்த ஜீவா, அடக்கப்பட்ட எந்தவொரு மக்களுக்கும் இருக்கும். இருக்க வேண்டிய தர்மாவேசத்தை, அக்கிரமித்தை எதிர்த்து எரிசரமாக சாடும் ஆத்மாவின் கொதிப்பை, தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும், எதிரான அனைத்துக் கொடுமைகளையும் எரித்துப் பொசுக்கத் துடிக்கும் உள்ளக் குமுறலை புதிய புரட்சிகர வீறு முழுமையாகவும் தன்னுள் மூர்த்திகரித்து நிற்பது தற்செயலானதல்ல.     

                டொமினிக் ஜீவாவின்மூச்சின் ஒவ்வொரு துளி சுவாசத்திலும், அவரது படைப்பின் ஒவ்வொரு எழுத்திலும் இந்த அனல், அக்கினி சுவாலை மூண்டெரிவதை எவராலும் உணர முடியும், காண முடியும். அதே தர்மாக்கினியால் வசப்படுத்தப்பட்டு அதில் சங்கமமாக முடியும்.

                டொமினிக் ஜீவா தன்னை அறிந்த நாள் முதல், தனது மக்களையும் சமூகத்தையும் அறிந்த நாள் முதல், தன்னை மக்களுள் ஒருவனாக பிணைத்துக் கொண்டு, அந்த மக்களின் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், அவலங்கள் அனைத்தையும் தனதாக்கியதோடு இந்தப் பீடைகளிலிருந்து மக்களின் மெய் விடுதலையைக் காண்பதற்கான தேடலில் ஈடுபட்டார்.

                இந்தத் தேடல் தான் அவரை தன்னைச் சேர்ந்த மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவராக மாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களினது மட்டுமல்ல, சரண்டப்படும், நசுக்கப்படும், அடிமைப்படுத்தப்படும் மானுடம் முழுவதினதும் மெய்யான விமோசனத்திற்கு வழிகாட்டிய ஒரு சத்தியத்தின் பக்கம், சமூக தர்மத்தின்பக்கம், சமுதாய விஞ்ஞானத்தின் பக்கம் அவரை அணிவகுத்து நிற்கச் செய்தது.

                முற்போக்கு இலக்கியக்காரர்களினதும், ஏனைய எல்லா எழுத்தாளர்களிதும் பொது அரங்கமாக அவர் ‘மல்லிகை ’ யை பொதுமைப் படுத்தியப் பக்குவம் இலக்கிய முதிர்ச்சியின் ஆத்ம நிறையின் சத்திய வெளிப்பாடாகும். வர்க்கப் பகைவர்களைத் தவிர ஏனைய அனைத்து எழுத்தாளர்களையும் இலக்கியக்காரர்களையும் அவர்களின் கருத்து நிலை வேறுபாடுகளைப் பொருட்படுத்தாது ஐக்கியப்படுத்தும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உன்னத மரபுக்கும், இலக்கிய தர்மத்துக்கும் ‘மல்லிகை’ மூலம் ஜீவா வலிமையூட்டியுள்ளார். இலக்கியத்தை சமூக தர்மத்திற்கான போராட்டத்தின் ஒரு போர்க்கருவியாக கருதிச் செயற்பட்டார் ஜீவா” என இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் டொமினிக் ஜீவாவின் இலக்கியப் பணி மற்றும் இதழ் பணி குறித்து புகழ்ந்துரைத்துள்ளார்.

                “ஈழத்தில் வாழும் அடக்கி ஒடுக்கப்பட்ட அடிநிலை மக்களின் வாழ்வின் சரித்திரங்களைக் கூர்மையான வர்க்கப் பார்வையுடன் கூடிய படைப்புகள் டொமினிக் ஜீவாவின் பேனாவிலிருந்து பிறந்தன. மனித நேயம் மிக்க ஈழத்து மண்வாசைன கமழும் சிருஷ்டிகளாக மிளிர்ந்தன. குழப்பம் ஏதுமற்ற தெளிவான அரசியற் கொள்கைப் பற்றுறுதியுடன் விளங்கின” என ஈழத்து எழுத்தாளர், நாவலாசிரியர் தெணியான் கருத்துரைத்துள்ளார்.

தமிழும் இலக்கிய வரலாறும் உள்ளவரை டொமினிக் ஜீவாவின் பெயரும், அவரது ‘மல்லிகை’ யின் பணிகளும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்!. தமது தொண்ணூற்று இரண்டாவது வயதிலும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் டொமினிக் ஜீவா.