“மண்ணில் வயல்களை உழுது உழுது

பொன்னை விளைக்கும் கண்ணயரா உழைப்புக்கு...

புயத்தின் வலிமையை முழுதும் சேர்த்துப்

பூமிக்குத் தந்திடும் உடலின் வன்மைக்கு ....

உழுபடை மேனியில் ஒளியாய்த் துளிர்த்து

ஓடையாய்ப் பெருகி ஓடும் வியர்வைக்கு ...

அகிலம் துய்க்க உணவை அளிக்கும்

தர்ம ஊற்றாம் வேர்வை நீருக்கு ....

ஏது விலை? எது விலை??”

“வயல்களை எல்லாம் உழுது உழுது மண்ணில் பொன்னை விளைவிக்க ஓய்வென்பதே அறியாமல் உழைக்கும் வலிமை முழுவதையும் நிலத்திற்கே அர்ப்பணிக்கும் உழுபடை வீரர் தம் உடலில் துளிர்த்து ஓடையாய்ப் பெருகும் வியர்வைக்கு வியந்தவைப் பெருக்குக்கு தர்ம ஊற்றுக்கு வியர்வை நீருக்கு விலையே இல்லை!

                - என்று உழவர்களைப் பற்றிப் பாடியவர் ஆந்திர மாநில தெலுங்கு மகாகவி ஸ்ரீஸ்ரீ ஆவார். “கண் இருந்து காணக் கூடியவர்களுக்கும், எழுதுகோல் ஏந்தி எழுதக் கூடியவர்களுக்கும் இந்த உலகில் தீண்டத்தகாதது என்று எந்தப் பொருளும் இல்லை”- என்று கூறி எழுதுகோல் ஏந்தியவர்! விவசாயகிள், பாட்டாளிகள், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையைப் பாடினார்! அவர்கள் மீதான ஆதிக்கத்தை, சுரண்டலை ஒடுக்குமுறையைப் படம் பிடித்துக் காட்டினார்! அவர்கள் சிந்தும் கண்ணீர் குறித்துக் கவிதைகள் இயற்றினார்! மக்களால், ‘புரட்சிக் கவிஞர் ஸ்ரீஸ்ரீ’ எனப் புகழப்பட்டார்! அவரது கவிதைகள், மக்களைச் சோம்பலிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் தட்டி எழுப்பின! முற்பாக்குத் தடத்தில், புரட்சிகரப் பயணத்திற்கு அழைத்துச் சென்றன! அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் முழுமையானதாகவும் மாற்றியமைத்தன!

                srisriஆந்திரப்பிரதேசம் பெர்ஹாம்பூரில், பூடிபெட்டி வேங்கட்டரமணய்யா-அப்பல கொண்ட ஆகியோருக்கு 15.04.1910 ஆம் நாள் மகனாக மகாகவி ஸ்ரீஸ்ரீ பிறந்தார். குழந்தையாக இருந்த பொழுதே, ஸ்ரீரங்கம் சூரிய நாராயணாவுக்குத் தத்துப்பிள்ளையாகப் போய்விட்டதால், அவரது குடும்பப்பெயர் மாறிவிட்டது. ஸ்ரீஸ்ரீ என்ற யெரே நிலைத்துவிட்டது! (அதாவது ஸ்ரீரெங்கம் ஸ்ரீநிவாசராவ் என்பதன் சுருக்கம்)

                தனது ஐந்தாவது வயதில் ஸ்ரீஸ்ரீ பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆரம்பக் கல்வி முடித்து, உயர்நிலைப் பள்ளிக் கல்வியை சிவராமய்யா என்ற தனியார் பள்ளியில் கற்றார். பள்ளியில் படிக்கும் பொழுதே சமஸ்கிருதமும் கற்றுக் கொண்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தையொட்டி மகாத்மாக காந்தியடிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய மறியல் போரில் கலந்து கொண்டார்.

                பள்ளியில் படிக்கும் பொழுதே ‘வீரசிம்ம விஜயசிம்மலு’ என்ற முழு நீள நாவலையும்’ ‘பதிணாயகெஸ்யமு’ என்ற குறுநாவலையும் எழுதினார்! பள்ளிப் படிப்பு முடிந்தபின்னர், சென்னை கிருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்தார்.

                விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சிறிதுகாலம் பொருட்களை நிறுத்துப் போடுவதாக வேலையில் சேர்ந்தார். பின்னர், திருமதி.ஏ.வின்.என். கல்லூரியில், விலங்கியல் துறை விளக்குகளாகச் சேர்ந்தார். சென்னை வானொலி நிலையத்திலும் பின்பு டெல்லி வானொலி நியத்திலும் செய்திவாசிப்பாளராகச் சிறிது காலம் பணியாற்றினார்.

                ‘ஆந்திரப் பிரபா’ இதழில் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார். லக்னோவில் இராணுவக் கண்டோன்மென்ட் சோதனைக் கூடத்தில் உதவியாளராக அமர்ந்தார். ‘கம்யூனிஸ்ட்’ எனக்கூறி இராணுவத்திலிருந்து. இவரை வெளியேற்றிவிட்டனர். பின்பு, நிஜாம் அரசத் தலைமைச் செயலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராகக் சிலகாலம் பணியாற்றினார்.

                தெலுங்கு இலக்கிய உலகில் தன்னுணர்ச்சிப் பாடல் வகை 1920 ஆம் ஆண்டுகளில் உச்சத்தில் இருந்தது. இவரது ‘பிரபவா’ என்ற கவிதைப் படைப்பு 1923 ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் ‘கவிதா சமிதி’ யால் வெளியிடப்பட்டது. அந்தக் கவிதை நூல் ஸ்ரீஸ்ரீக்கு “ஒரு நல்ல படைப்பாளி” என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

                ‘நடலி’ என்ற நாடகக் குழுவில் இணைந்து, ‘ஆனந்த வாணி’ என்னும் இலக்கிய இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது, ஆந்திரப்பிரதேச முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக ஸ்ரீஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                நந்தியாலாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சந்திர ராஜேஸ்வரராவ் ஸ்ரீஸ்ரீக்கு சிறப்புமிகு ‘மகாகவி’ என்று பட்டத்தை வழங்கி பாராட்டினார்!

                இலக்கியத்தைத் தாண்டி திரைப்படத்துறையிலும் நுழைந்தார். படத்தயாரிப்பு, திரைக்கதை அமைப்பு, நடிப்பு ஆகியவற்றிலும் ஈடுபட்டார்.

                சென்னை ராஜதானியில் மேல்சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். ‘நனவோடை’ என்னும் நவீன உத்தியை, அறிமுகப்படுத்திய முதல் தெலுங்கப் படைப்பாளர் ஸ்ரீஸ்ரீ!

                ‘கட்க கிருஷ்டி’ என்னும் கவிதைத் தொகுதிக்கு 1966 ஆம் ஆண்டு “சோவியத்நாடு” பரிசை ரஷ்யாவுக்குச் சென்று நேரில் பெற்றார்.

                ஆந்திரப் பிரதேச சாகித்திய அகாதமியின் ஆட்சிக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார் ஸ்ரீஸ்ரீ.

                புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் (விரசம்) தலைவராக விளங்கினார். டெல்லியில் நடைபெற்ற ஆப்பிரிக்க, ஆசிய எழுத்தாளர்களின் நான்காவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அகில இந்திய புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழுவை 1970 ஆம் ஆண்டு ஏற்படுத்தினார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவராக செயல்பட்டு மனித உரிமைகளுக்காகவும், காவல்துறையினரின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.

                ஸ்ரீஸ்ரீ ‘எழுதிய சத் அசத் சம்சயம்’ என்னும் படைப்புக்கு சாகித்திய அகாதெமியின் விருது வழங்கப்பட்டது.

                ஆந்திரஜோதி இதழின் வாசகர்களால் ‘தெலுங்கின் மிக முக்கியமான மனிதர்’ என்று தேர்வு செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். ஆண்டன் செக்காவ், நஸ்ஸல் பேகர், கிரேக்கக் கவிஞர் ஒடினுஸ் எவிலியிஸ், ரஷ்யக் கவிஞர் விளாதிமிர் மயகாவ்ஸ்கி, சிலியின் புரட்சிக் குயில் பாப்லோ நெருடா, ஸ்பானிய நாட்டுப் புரட்சிக் கவிஞர் ரீஜா வேவேஜோ, புரட்சியாளர் சேகுவேரா, துருக்கிக் கவிஞர் நஜீம் ஹக்கண்ட், அங்கோலா நாட்டுக் கவிஞர் அஹோஸதி ஆகியோரின் படைப்புகளை தெலுங்கில் மொழிபெயர்த்து அரும்பெரும் சாதனை படைத்தார்

                கவிதை உலகில் தலை நிமிர்ந்து, தோளுயர்த்தி நின்றார். அவரது சிறு நாடகங்கள், சிறுகதைகள், விமர்சனக்கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், நேர்காணல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகளாகும்.

                தனது எழுச்சி மிக்க கவிதை வரிகளால் இளைஞர்களைக் கீழ்க்கண்டவாறு அறைகூவி அழைத்தார்! “எதிர்ப்படும் தடைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அணிவகுத்து முன்னேறு! புதியதோர் உலகம் படைக்க முன்னேறு! செம்பதாகையின் கீழ் முன்னேறு!” “மனிதர்களாக இல்லாமல் வெறும் நிழல்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை மக்களை விடுவிக்கப் பாடுங்கள்!”. என எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

                மானுடத்தின் வரலாற்று உண்மைகளை வரிவரியாகவும் விரிவாகவும் காண வேண்டும் என்பார்! நைல் நதி நாகரிகம் செழித்தோங்கிய காலங்களில் கூட, சாதாரண மனிதன் எப்படி அங்கே நடைப்பிணமாய்க் கிடந்தான்? ஒளிசிந்தும் தாஜ்மகாலைக் கட்டுவதற்காக, அங்கு சலவைக் கற்களைத் தூக்கிச் சுமந்தவன் யார்?- அரசனின் பல்லக்குகளைத் தம் தோளில் சுமந்து சென்ற அடிமைகள் யார்?-நாடு பிடிக்கும் போர்ப் படையில் வீர நடைபோட்டுச் சென்ற சிப்பாய்கள் யார்? இவை போன்ற கேள்விகளால் வரலாற்று உண்மைகளை வருங்காலச் சந்ததிக்கு எடுத்து இயம்பினார். அக்கேள்விகளுக்குக் கிடைத்த விடைகளே உண்மை வரலாறாகும்.

- பி.தயாளன்