ஏடும் எழுத்துமறியாக் காலத்திலேயே எங்களது இலக்கியமும் கலையும் இம்மண்ணில் உருவாகிவிட்டன என்று தலித்துகள் கூறுவதில் யாதொரு புனைவுமில்லை. மனிதகுலத்தின் ஆதிநிலைகளில் உருவான தோல்வாத்தியங்களும் குழல்வாத்தியங்களும் இன்றளவிலும் தங்களிடம் எஞ்சியிருப்பதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு தலித்துகள் இவ்வாறு கூறிவிடவில்லை. உழைப்பு, உற்பத்தி என்கிற தொல்பழங்கால சமூகத்தின் கூட்டுச் செயல்பாட்டிலிருந்து- அதே தன்மையிலான கூட்டுவடிவங்களாக வெளிப்பட்ட கலைவடிவங்கள்- அந்த கூட்டுத்தன்மை சிதையாமல் இன்றளவும் தங்களிடம் இருப்பதையும் ஆதாரமாகக் கொண்டே தம்மை நிறுவிக் கொள்கின்றனர்.

Dalitஓய்விலிருந்தும் யோசிப்பிலிருந்தும் உருவானதாக- தனிமனித ஆற்றல்களை மட்டுமே குவித்துக் காட்டுவதாக அறிவித்துக் கொள்கிற செவ்வியல் மரபை நிராகரித்து, உழைப்பிலிருந்து பிறந்த தங்களது கலையும் இசையும் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுச்செயல்பாடாக- அனைவரையும் உள்ளடக்கியதாக- சமவாய்ப்பளிப்பதாக இருக்கின்ற பெருமிதமும்- கூட்டாக இயங்குகிறோம் என்ற உணர்வு தருகிற பலமும் சேர்ந்தே தலித்துகளின் கலைவடிவங்களில் மூர்த்தன்னியம் கூடி வெளிப்படுவதற்கு அடிப்படை எனக் கொள்ளலாம்.

பிறப்பு, இறப்பு, திருமணம், இயற்கை வழிபாடு, உற்பத்தி, செய்தி பரிமாற்றம் ஆகிய அன்றாட வாழ்வின் பிரிக்கவியலாத தேவைகள் சார்ந்த சடங்குகளையும் பாவனைகளையும் நிகழ்த்துகிற தலித் கலைகளின் மையநோக்கம் சமூகப் பயன்பாடுதானேயன்றி பொழுதுபோக்கல்ல. உழைப்பிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டவர்களிடம் போக்கித் தொலைக்கவேண்டிய அளவுக்கு பொழுது வீணே மிச்சமாகிக் கிடந்ததால் கலையின் நோக்கம் பொழுதுபோக்கு என்று அவர்கள் அறிவித்துக் கொண்டதற்கு நேரெதிரான அரசியலை முன்வைக்கின்றன தலித் கலைகள். கலை இலக்கியத்தின் நோக்கம்/ பயன் குறித்த விவாதங்களின் தொடக்கப்புள்ளியாக இதுவே இருக்கக்கூடும்.

தேர்ந்த- பொறுக்கியெடுத்த ரசனைமிக்கவர்களுக்கானதாக செவ்வியல் மரபு தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், தலித் கலைகள் வெட்டவெளியில் மக்கள்திரள் யாவருக்கும் பொதுவானவையாக நிகழ்த்தப்படுகின்றன. கூட்டமாக வாழ்தல் என்கிற- சமூகத்தின் கூட்டுமனங்களின் ஆழத்தில் தங்கியுள்ள புராதன உணர்வை மீட்டெடுப்பதன் வாயிலாக - யாவரையும் தன் பார்வையாளராக மாற்றிக் கொள்கிற நுட்பங்களையும் வீச்சையும் இயல்பாகவே கைக்கொண்டிருக்கின்றன தலித் கலைகள். அதாவது மனிதகுலத்தின் தொன்மையான கலை மரபுகளை உட்செரித்தவையாக தலித் கலைகளே இருக்கின்றன எனக் கூறலாம்.

இந்த மண்ணின் தொல்குடிகளுடைய மொழி, கலை இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை இழிவுபடுத்துவதன் மூலம் தன்னுடையவற்றை புனிதப்படுத்திக் கொள்ளும் ஆரியக் கருத்தியலை எதிர்த்தப் போராட்டவுணர்வின் குறியீடாக தலித் இலக்கியம் அடையாளப்படுத்தப்படுகிறது. தமது மொழியை தேவமொழி என்று அறிவித்துக் கொண்டு கடவுளுக்கும் மனிதனுக்குமான கற்பித உரையாடலை தொடங்கி வைத்ததன் மூலம், இயற்கைக்கும் மனிதனுக்குமுள்ள தொடர்பையும் தொடர்பின்மையையும் அறிவதில் நாட்டம் கொண்டிருந்த இந்த மண்ணின் அறிவியல்பூர்வமான சிந்தனையோட்டத்தை இடைமறிக்கத் துணிந்தது ஆரியம்.

அதிலிருந்து உருவாகி வந்த பார்ப்பனீயம், கலை இலக்கியத்தை கடவுளின் சந்நிதானத்தில் வைக்கும் காணிக்கைப் பொருளாகவும் அரசனை குஷால்படுத்தும் அல்லக்கை சொறிதலாகவும் மாற்றிய அதேவேளையில் ஏற்றத்தாழ்வான வர்ண- சாதியப் பிரிவினை, அதை நிலைநிறுத்த ஒடுக்குமுறை, பாரபட்சம், சுரண்டல், மூடநம்பிக்கை ஆகியவற்றை நிறுவவும் நிலைப்படுத்தவும் நியாயப்படுத்தவும் தேவையான பிரச்சார ஊடகமாகவும் பயன்படுத்தியது. ஆகவே சமத்துவம், நாத்திகம், பகுத்தறிவு, உழைப்பைக் கொண்டாடுதல் ஆகிய தலித் இலக்கியத்தின் உட்கூறுகள் ஆரிய/பார்ப்பனீய எதிர்ப்பு நிலையிலிருந்து உருவானவையல்ல, அவை அதற்கும் முன்பாக இந்த மண்ணின் பூர்விக சிந்தனை மரபிலிருந்து பெறப்பட்டவை என்றறிக.

2.

அவ்வை என பலர் அறியப்பட்டபோதிலும், அவ்வையின் பெயரால் அறியப்படுகிற ஆத்திச்சூடியில் வெளிப்படும் கருத்துக்கள் பௌத்த நெறிகளின் நுண்வடிவங்களே என்கிறார் அயோத்திதாசர். திருவள்ளுவர் பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் பிறந்தவர் என்றும், இவர் ஒரு பார்ப்பன வித்தாய் இருப்பதனாலேயே அளப்பறிய மேதைமையோடு திகழ்வதாகவும் பார்ப்பனர்கள் உரிமை கோரியபோது, பார்ப்பனச் சமூகத்தில் இருக்கும் அசமந்தங்களும் அறிவிலிகளும் யாருடைய வித்துக்கள் என்று அயோத்திதாசர் கேள்வி எழுப்பி வாய் மூட வைத்ததை நாமறிவோம் (நான் பூர்வ பௌத்தன்). அறிவு என்பதை பார்ப்பனரது சொத்தாகவும் - அறிவு துலங்கும் ஆளுமைகளை பார்ப்பன வித்தாகவும் மாற்றி பூணூல் மாட்டி உட்செரித்துக் கொள்ளும் மோசடிகளை அம்பலப்படுத்திய அயோத்திதாசர் புத்ததன்மக் கருத்துக்களே திருக்குறளில் இடம் பெற்றிருப்பதாகவும், தலித்துகள் பூர்வ பௌத்தர்கள் என்றும் நிறுவுவதை ஏற்போமானால், உலகப் பொதுமறை எனக் கொண்டாடப்படும் திருக்குறளை உலகுக்குத் தந்தவர் ஒரு தலித் என்றாகிறது.

தலித்துகளில் வள்ளுவப் பறையர் என்று ஒரு பிரிவு இருப்பதையும், ‘கேரள தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் ‘‘ஆதி திருவள்ளுவர் தைவீக சபா’’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதற்கு வள்ளுவரை ஆதி குருவாகவும், குறளைத் தமது வழிகாட்டி நூலாக வைத்து வாழ்ந்து வருவதும்...’ (கேரள சமூக நீதிப் போராட்டங்கள், கி.நாச்சிமுத்து- பக்.50) அயோத்திதாசரின் கூற்றை மெய்ப்பிக்கும் சான்றுகளாக உள்ளன. திருவள்ளுவரை சமணமுனி என்கிறவர்களும் உண்டு. வடக்கே பௌத்தம் என்று அழைக்கப்பட்டதே தென்னாட்டில் ஜைனம்/சமணம் என்றழைக்கப்பட்டதாக அயோத்திதாசர் கூறுவதை பின்தொடரும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. எப்படியேயாயினும் வள்ளுவர் ஒரு பார்ப்பனீய எதிர்மரபைச் சார்ந்தவராகிவிடுகிறார்.

ஆரியத்தால்/ பார்ப்பனீயத்தால் குறுக்கீடு செய்யப்பட்ட ஒரு சமூகம் என்ற அடிப்படையில் தன் மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவே பௌத்தத்தையும் சமணத்தையும் இச்சமூகம் கண்டடைந்தது. அவ்வையின் ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்ற பிரகடனமும், ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்றும் ‘சுழன்றும் ஏர் பின்னது உலகம்’ என்றும் வள்ளுவர் விடுத்த பிரகடனமும் தலித் இலக்கியத்தின் மையமாக சாதியெதிர்ப்பும் சமத்துவமும் உழைப்பைக் கொண்டாடுதலுமே இருக்கமுடியும் என்பதை உணர்த்தி நிற்கின்றன. அதன்பொருட்டு, சாதியமைப்புக்கான தத்துவபலத்தை வழங்கிவரும் பார்ப்பனீயத்தை எதிர்ப்பதும், அதன் சமத்துவ விரோதக் கருத்தியல்களுக்கு எதிர்நிலைகளை முன்னிறுத்துவதும் தலித் இலக்கியத்தின் பிரிக்கவியலாத உள்ளுறைப்பகுதியாக முன்னெழுவதையும் உணரமுடியும்.

மட்டுமன்றி, ஓரிடத்தில் நிலைத்துத் தங்கி வேளாண்மை மூலம் உணவை உற்பத்தி செய்துகொள்ளவும் பிற வாழ்வதாரங்களைத் திரட்டிக்கொள்ளவும் நெடுங்காலத்திற்கு முன்பே நாகரீக வளர்ச்சி பெற்றிருந்தவர்கள் தலித்துகள் உள்ளிட்ட இந்த மண்ணின் பூர்வகுடிகள். உணவை உற்பத்தி செய்துகொள்வதற்கான வேளாண் அறிவைப் பெற்றிராத காரணத்தால் உணவு சேகரிக்கும் நாடோடிகளாக வந்தவர்களும் (இன்றளவும் அதேநிலையில் நீடிக்கிறவர்களும்) - உணவு உற்பத்தியறிவை எட்டாத தமது அறியாமையை மறைத்துக் கொள்ள வேளாண்மையையும் உடலுழைப்பையும் தீட்டுக்குரியதாக அறிவித்தவர்கள் ஆரியர்கள். எனவே உழைப்பைக் கொண்டாடுதல் என்பதோடல்லமல், உழைப்பை இழிவுபடுத்துகிற ஆரிய/ அதன் இன்றைய குஞ்சுகுளுவான்களின் கருத்துக்களை எல்லா முனைகளிலும் எதிர்க்கிற வரலாற்றுப் பிரக்ஞையும் தலித் இலக்கியத்திற்கு தேவைப்படுகிறது.

வடக்கே பௌத்தம் நிகழ்த்திய புரட்சிகரமான மாற்றங்களை பின்னுக்குத் தள்ளவும் பார்ப்பனீயத்தின் கட்டுக்குள் மீண்டும் சமூகத்தை பிடித்து நிறுத்தவும் பிருகத்ரதனைக் கொன்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினான் புஷ்யமித்திர சுங்கன் என்ற பார்ப்பனன். ஒவ்வொரு புத்தபிக்குவின் தலைக்கும் நூறுபொற்காசுகள் என விலைநிர்ணயித்து கொன்றுகுவித்து பௌத்தத்தை அழிக்கத் தலைப்பட்டான். அவனது கொலைச்செயல்களை நியாயப்படுத்த சுமதிபார்கவா தொகுத்தெழுதிய மநுஸ்மிருதி வேதமறுப்பாளர்களை அதாவது பௌத்தர்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தது. வர்ணக்கலப்பில் பிறந்த ஒருசாராரை தீண்டத்தகாத சாதியினராக அறிவித்து அவர்களையும் வெளியேற்றியது. தீண்டத்தகாதார் உருவாகிய வரலாற்றின் ஒருமுகம் இப்படியாக பதிவாகியிருக்கிறது.

‘இளமையில் கல்’, ‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’, ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ ‘கற்க கசடற..’ என கல்வியை ஜனநாயகப்படுத்துகிற மரபை பௌத்தமும் சமணமும் கைக்கொண்டிருந்தன. கல்வியை தன் முற்றுரிமையாக்கிக் கொள்ளும் வெறியோடு ஏகலைவர்களது கட்டைவிரல்களைத் தேடி நாடுமுழுவதும் துரோணர்களை அலையவிடுவதாய் இருந்தது பார்ப்பனீயம். பள்ளிகளையும் சங்கங்களையும் அமைத்து சமூகத்தை கல்வியிலும் ஞானத்திலும் ஆற்றல்படுத்துகிறவர்களாய் இருந்தனர் சமணர்களும் பௌத்தர்களும். அனல்வாதம், புனல்வாதம் நடத்தி அவர்களது இலக்கியங்களை தொலைத்துக் கட்டுவதில் முனைப்பாயிருந்தது பார்ப்பனீயம். அப்போதும் ஆத்திரம் தணியாது கழுவிலேற்றியும் கொன்றது. கல்வியறிவுடனும் உலகத்திற்கு நல்லறங்களை போதிப்பதற்கான உள்ளாற்றலுடனுமிருந்த ஒரு சமூகப்பிரிவு கல்வியறிவற்றதாக பார்ப்பனீயத்திற்கு கீழ்ப்படிந்ததாக எவ்வாறு மாற்றப்பட்டதென்ற வரலாறு இன்னொரு கிளையெடுத்துச் செல்கிறது.

3.

பார்ப்பனர்களின் முற்றுரிமைகளைப் பேணி காத்துவந்த மூவேந்தர்களையும் முறியடித்து நிறுவப்பட்டது களப்பிரர் ஆட்சி (கி.பி.3- கி.பி.6ம் நூற்றாண்டு). பார்ப்பனர்களின் அதிகாரங்களையும் சலுகைகளையும் பறித்த காரணத்தாலேயே அதை உயர்சாதி வரலாற்றாசிரியர்கள் ‘இருண்டகாலம்’ என்று குறிப்பிடுகின்றனர். இதே காலகட்டத்தில் வடக்கே நடந்துகொண்டிருந்த குப்தர்களின் ஆட்சியை பொற்காலம் என்ற இவர்கள் குறிப்பிடுவதற்கான அரசியல் நமக்கு விளங்கக்கூடியதுதான். ஆனால், பார்ப்பனர்களுக்கு இருண்டகாலமாய் இருந்த களப்பிரர் ஆட்சிக்காலம் பார்ப்பனரல்லாத ஏனையோருக்கு பொற்காலமாய் இருந்ததற்கான சான்றுகள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு என்பதன் கீழ் வரும் பலநூல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகிய காப்பியங்களும் இந்த இருண்ட காலத்திலேயே இயற்றப்பட்டுள்ளன. வச்சிர நந்தி என்பவரால் திரமிளச் சங்கம் தொடங்கப்பட்டதும் இதேகாலத்தில்தான். பார்ப்பனீய எதிர்மரபைக் கொண்டதாய்- பௌத்த மற்றும் சமண ஆதரவு கொண்டதாய் விளங்கிய களப்பிரர் ஆட்சிக்காலத்தில் உருவான இலக்கியப் படைப்புகளில் தங்களது மரபின் தொடர்ச்சியைக் கண்டடைய வேண்டியது தலித் ஆய்வாளர்களின் பொறுப்பாக அமைந்துள்ளது.

களப்பிரர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு நிறுவப்பட்ட பேரரசுகள் மீண்டும் பார்ப்பனீய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தின. கல்வி மற்றும் அறிவுத்தளத்தில் களப்பிரர்கள் தொடங்கி வைத்த மாற்றங்கள் முடக்கப்பட்டன. ஆனாலும் எழுத்தறிவு மறுக்கப்பட்டதாலேயே ஒரு சமூகத்தின் இலக்கியமோ கலையோ அழிந்து போய்விடுவதில்லை. அவை மக்களின் மனங்களில், சமூகத்தின் கூட்டுநினைவில் வாய்மொழி மரபாகவும் நிகழ்த்துக்கலைகளாகவும் உருமாறி நிலை பெற்றுவிடுகின்றன. தலித்துகள் தங்களின் படைப்புமனதை இவ்வாறாகத்தான் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு சேரிக்குள்ளும் ஒருநூறு கதைக்காரர்களும், கூத்துக்காரர்களும், இசைக்கலைஞர்களும், பாட்டுக்காரர்களும் இன்றளவும் நீடித்திருப்பதற்கு இதுவே காரணம். உலகத்தின் தோற்றம், பெயர்க் காரணங்கள், குலதெய்வங்கள், வாழ்க்கைவட்டச் சடங்குகள், சாதியின் தோற்றம் என்று எல்லாவற்றைப் பற்றியும் தலித்துகளிடையே பற்பல புனைவுகள் உலவுகின்றன. தங்களை ஒடுக்கி, உழைப்பைச் சுரண்டுகிற ஆதிக்கசாதியினரை விமர்சித்தும் பகடி செய்தும் தலித்துகளிடையே புழங்கும் பழமொழிகள், பாடல்கள், பழமரபுக்கதைகள், சிறுவர் விளையாட்டுகள், விடுகதைகள் ஆகியவற்றை ‘நலிந்தோர் ஆயுதம்’ என்கிறார் ஆய்வாளர் அ.இருதயராஜ் (கலகக்காரர்களும் எதிர்க்கதையாடலும், பக்.4).

பௌத்தத்தை வாழ்முறையாகவும் அரசநெறியாகவும் ஏற்றுக்கொண்டிருந்த அரசுகள் வீழ்ந்தபிறகு பிரிட்டிஷார் நுழையும் வரை இந்தியாவில்/ தமிழகத்தில் தலித்துகளின் நிலை பெருத்த மாறுதலின்றி இவ்வண்ணமே தொடர்ந்தது.

4.

1813 ஆம் ஆண்டு இங்கிலாந்து நிறைவேற்றிய சாசனச் சட்டம் ‘அறிவியல் துறைகளின் அறிவை அறிமுகப்படுத்தி வளர்ப்பதற்காக’ இந்தியர்களுக்கு இலவசக் கல்வியளிப்பதற்கு வழிகோலியது. தாமஸ் பேபிங்டன் மெகாலே கொடுத்த பரிந்துரைகளை பரிசீலித்து, இந்திய மக்களுக்கு அய்ரோப்பிய இலக்கியங்களையும் அறிவியலையும் கற்றுத் தரப்போவதாக 1835 மார்ச் 7ம் நாள் அறிவித்தது. ஆனாலும் இயற்கை, வேளாண்மை, கால்நடைகள், மருத்துவம் குறித்த பட்டறிவினையும் இசைநுட்பங்கள், ஆட்ட அடவுகள் உள்ளிட்ட கலைமரபுகளையும் அறிவியல்ரீதியாக விளங்கிக் கொண்டிருந்த தலித்துகளுக்கு அந்த கல்வி வெகுகாலம்வரை எட்டிவிடாதவாறு ஆதிக்கசாதிகள் கவனமாக தடுத்து வந்தன. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்கூட, பம்பாய் சுதேசிக் கல்விக்குழு நடத்திவந்த ஒரு பள்ளியிலிருந்து தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் நடத்திய பள்ளிகளிலாகட்டும், மிஷனரிகள் நடத்தியவற்றிலாகட்டும், தலித்துகள் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியவில்லை.

சமூக உளவியல் தடைகளைத் தாண்டி படிக்கவந்த தலித்துகள் கடுமையாக அவமரியாதைக்கும் மனவுளைச்சலுக்கும் ஒதுக்குதலுக்கும் ஆளாக வேண்டியிருந்தது. இதில் யார் பக்கம் நிற்பதென்பதில் பிரிட்டிஷாருக்கு எவ்விதக் குழப்பமுமில்லை. அனைவருக்கும் இலவசக்கல்வி என்று அது ஆர்ப்பாட்டமாக அறிவித்துக் கொண்டபோதிலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்பில் படித்தவர்கள் யாரெனத் தெரிகிறதா இப்போது?) வழங்கப்பட்டது.

‘ஓய்வுநேரத்தையும் தம்நாட்டு மக்களின் மீது இயல்பான செல்வாக்கையும் கொண்டுள்ள மேல்சாதி மக்களுக்குத் தரப்படும் கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே மக்களின் தார்மீக மற்றும் அறிவுப்பூர்வமான நிலையைச் சீரியமுறையில் மேம்படுத்துவதற்கு உதவும்...’ என்று இங்கிருந்த சாதியப் படிநிலைக்கு தானும் கீழ்ப்படிந்ததாய் மாறியது அரசு. ஆனபோதிலும் கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம் என்ற முறையில் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி கல்விபெறுவதற்கு பெருவிருப்பத்தோடு தலித்துகள் திரள்வதை அரசால் தடுக்க முடியவில்லை. தலித்துகள் கல்வி பெறுவது குறித்த உயர்சாதியின் பொறுமல்களுக்கும் சகிப்பின்மைக்கும் செவிமடுப்பதாய் பிரிட்டிஷ் ஆட்சி இருந்தது. ‘... கல்வியும் பண்பாடும் உயர்ச்த சாதி மக்களிடமிருந்து கீழ்த்தட்டு மக்களுக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்திற்கு ஒரு புதிய சக்தி கிடைக்கும். ஆனால் எப்பொழுதுமே அது கீழ்த்தட்டு மக்களிடமிருந்து மேல்தட்டு மக்களுக்கு கொண்டு செல்லப்படக்கூடாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே கல்வியைத் தந்தால் அது ஒரு பொதுஜன வெறுப்பிற்கு வழிவகுக்கும். அந்நியர்களான நாம்தான் அதற்கு முதல் பலியாக இருப்போம்... ’ என்ற அதிகாரிகள் அரசை எச்சரித்துக்கொண்டேயிருந்தனர்.

சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டத்தின் வழியே தலித்துகளுக்காக அம்பேத்கர் பெற்றெடுத்த உரிமைகளை மெய்ப்படுத்திக் கொள்ளும் ஆர்வத்தில் தலித்துகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொதுவெளிக்குள் நுழைந்தனர். பலதிறத்தான பின்புலம் கொண்ட தலித்துகள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அதிகாரத்திலும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டது இடஒதுக்கீடு. பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்தபோதும், இடஒதுக்கீடானது தலித்துகளில் ஒரு சாராரை உத்திரவாதப்படுத்தப்பட்ட வருமானம் கொண்டவர்களாகவும், சுயசார்புடையவர்களாகவும் மாற்றியது. கூடவே தலித்துகள் உயர் படிப்புகளுக்குள் நுழைவதையும் சாத்தியப்படுத்தியது.

அறிவுக்கும் திறமைக்கும் மதிப்பளிக்கும் சமுதாயமாய் இது இல்லை என்பதை தலித்துகள் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்தனர். மட்டுமல்லாது, எது அறிவு எது திறமை என்பதை மறுவரையறைப்படுத்த வேண்டிய தேவையையும் உணர்ந்தனர். நிலவிக்கொண்டிருந்த சமூக அமைப்பின் அறங்களுக்கும் மதிப்பீடுகளுக்கும் எதிர்நிலைகளை தம்முடையதாய் முன்னிறுத்த வேண்டும் என்ற அரசியல் முனைப்பு கொள்ளத் தொடங்கியது இவ்விதமாகத்தான். எனவே அவர்கள் மதஇலக்கியங்களான புராணங்களையும் இதிகாசங்களையும், வேதங்களையும் உபநிஷத்துகளையும், பகவத் கீதையையும் இன்னபிற புனிதநூல்கள் எனப்படுகிறவைகளையும் படித்து அவற்றினுள்ளே இருந்த பார்ப்பனீயக் கூறுகளையும் மேலாதிக்கவாதத்தையும் அம்பலப்படுத்தினர். சமூக நடப்புகள் ஒவ்வொன்றையும் தலித்தியப் பார்வையில் எதிர்கொண்டு கருத்து சொல்வதற்கான ஊடகங்களைத் தொடங்கிய தலித்துகள், பொதுப்புத்தியில் அழுத்தமான குறுக்கீடுகளை செய்யத் தொடங்கினர்.

சாதிமுறைமையினை நியாயப்படுத்தும் எதுவொன்றையும் பொதுவிவாதத்திற்கு உட்படுத்தினர். ஜோதிராவ் புலே, அயோத்திதாசர், அம்பேத்கர் போன்ற அறிவாசான்களிடமிருந்து தலித் விமர்சனக் கண்ணோட்டம் இப்படியாக செழுமையுற்றது. பார்ப்பனீயத்தால் உட்செரிக்கப்பட்ட பௌத்த சமண இலக்கியப்படைப்புகளைக் கண்டறிந்து அவற்றின் மூலபாடங்களைத் தேடித் தொகுப்பதன் மூலம் தலித்துகளின் வேர்களைக் கண்டடையும் பணியிலும் இவர்கள் ஈடுபட்டனர். சிந்துசமவெளி நாகரீகம் பற்றிய ஆய்வுகளோ விவாதங்களோ மேலெழும்பாத காலத்திலேயே, பார்ப்பனீயத்தீன் தாயும் தகப்பனும் தாதியுமாய் இருக்கிற ஆரியர்களை வந்தேறிகள் என்று ஆதாரப்பூர்வமாக அறிவித்தவர்கள் தலித்துகளே. ஆரியர் திராவிடர் என்ற வாழ்வியல் முரண்களை கருத்தியல் எதிர்மைகளாக எழுத்துரீதியாக கட்டமைத்தவர்களும் தலித்துகள்தான். இவ்வாறாக நவீன தலித் இலக்கியம் உருவாவதற்கான முன்தேவைகளை- அதற்கும் முன்பே உருவான தலித் விமர்சன மரபு நிறைவேற்றித் தந்தது.

5.

அம்பேத்கரால் 1945ல் பம்பாயில் நிறுவப்பட்ட மக்கள் கல்விக் கழகம் நடத்திய சித்தார்த்தா கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற முதல் அணியினரைக் கொண்டு ‘சித்தார்த்தா இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பு 1950ம் ஆண்டுவாக்கில் உருவாக்கப்பட்டதாகவும், இந்த அமைப்பிலிருந்தே பின்னாளில் மராத்திய தலித் இலக்கியச் சங்கம் உருவானதாகவும் கூறுகிறார் அர்ஜூன் டாங்ளே. 1958ல் ஒடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் முதல் இலக்கிய மாநாடு பம்பாயில் நடைபெற்றிருக்கிறது. அம்பேத்கரால் அவுரங்காபாத்தில் தொடங்கப்பட்டிருந்த ‘மிலிண்ட் கல்லூரி’யின் முதல்வராயிருந்த எம்.என்.வாங்கடே அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்து திரும்பியபோது அவர் ஆவேசம் மிக்க கறுப்பின இலக்கியத்தையும் உடனெடுத்து வந்திருந்தார்.

தலித் இலக்கியம் என்றிருந்தால் செட்டியார் இலக்கியம், முதலியார் இலக்கியம் என்றெல்லாம் இருக்கிறதா....? என்று அறிவார்த்தமான கேள்விகளை எழுப்புகிற சா.கந்தசாமிகள் அமெரிக்காவில் பிறந்திருக்கவில்லை. எனவே கறுப்பு இலக்கியம் என்ற ஒன்று இருந்தால் மஞ்சள், நீலம், ஆரஞ்சு வண்ணங்களிலும் இலக்கியம் இருக்கிறதா என்ற குதர்க்கவாதம் அமெரிக்காவில் பேரளவில் கூட எழவில்லை. ஒரு கறுப்பரின் வாழ்வை வெள்ளையரால் எழுத முடியாது என்பது அங்கு அறுதியான ஒன்று. ஏனென்றால் கறுப்பருக்கும் வெள்ளையருக்கும் இருவேறு வாழ்க்கைமுறைகள். அதாவது ஒன்றை ஒடுக்கி அதன்மீது கட்டியெழுப்பப்பட்ட இன்னொன்று. எனவே இரண்டும் ஒன்றாக ஒருபோதும் மாற முடியாது என்ற குறைந்தபட்சத் தெளிவு இருந்தது. தெகிட்டி தீவில் கருநிறம் பூசி அலைந்த ஓவியன் பால் காகின் போல ஜான் கிரிஃபின் என்ற அமெரிக்க சமூகவியலாளர், தன்னுடல் முழுக்க கருப்புவண்ணத்தைப் பூசிக்கொண்டு கறுப்பர்களின் சேரியொன்றில் இரண்டுமாதங்கள் தங்கியிருந்துவிட்டு 'An Insider's view of Black society in America' என்ற நூலை எழுதினார். கறுப்பின மக்களை உள்வாங்கிக் கொள்வதற்கான முயற்சியாகவே அது வெளிப்பட்டிருப்பதாகவும் அதில் கறுப்பர்களின் உளவியல் பதிவாகவில்லை என்றும் பின்னாளில் அவரே ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

கறுப்பு இலக்கியத்தின் ஆவேசம், அதன் எதிர்ப்புக் கிளர்ச்சி உணர்வுகள், அதில் எதிரொலித்த அதிர்ச்சி தரும் பட்டறிவுகள், அது தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் வடிவம் ஆகியவற்றுடன் ஒருமை கொள்ளும் சாத்தியங்கள் கொண்டதாய் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் இருப்பதை தனது ஆய்வின் முலமாக கண்டறிந்த வாங்கடே, 1967 ஏப்ரல் 30 அன்று புசாவலில் நடைபெற்ற மகாராஷ்ட்ர பௌத்த இலக்கியப் பேரவை மாநாட்டில் கறுப்பர்களைப் போலவே ஒடுக்கப்பட்ட எழுத்தாளர்களும் கிளர்ந்தெழுந்து தங்களது சொந்த இலக்கியத்தைப் படைக்க அறைகூவல் விடுத்தார். இந்த அறைகூவல் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உருவாகி வந்த எழுத்தாளர்களுக்கிடையே பெரும் படைப்பூக்கத்தை கட்டவிழ்த்துவிட்டது.

சமூக அகக்கட்டுமானம் குறித்து அரசியல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த உயர்நோக்கங்கள் வெறும் எழுத்துக்களாக மங்கிக் கொண்டிருப்பதை தலித்துகள் முன்னுணர்ந்தனர். கடந்த காலங்களைப் போலவே, சுதந்திர இந்தியாவின் மெய்யான அதிகாரமும் பார்ப்பனர் கையிலேயே சிக்கிக்கொள்ளுமோ என்று அம்பேத்கர் கொண்டிருந்த அச்சம் உண்மையாகிக் கொண்டிருந்தது. அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு தலித் அணிதிரட்சியிலும் அமைப்பாக்கத்திலும் பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்தும் கருத்தியல் போராட்டத்திலும் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து தீவிரமாய் அக்கறை கொள்கிற ஒரு புதிய சமூக அடுக்கு நாடெங்கிலும் உருவாகியிருந்தது. அம்பேத்கர் முன்வைத்த புரட்சிகர சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு அவரது ‘கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்’ என்ற செயலூக்கமுள்ள முழக்கங்களை மெய்ப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்த இப்பகுதியினரை மராத்தியில் தொடங்கிய தலித் இலக்கிய எழுச்சி கவ்விக் கொண்டது இயல்பான நிகழ்வே. தமிழகத்தில் நவீன தலித் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இந்த பொதுவியல்புக்குள் பொருந்தும் எனக் கொள்ளலாம்.

6.

தலித் இலக்கியம் உருவான காலம்தொட்டு இன்றுவரை ஒரேமாதிரியான சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. பெயரை வைத்துக் கொண்டு எதுவும் பிறப்பதில்லை என்பது தலித் இலக்கியத்திற்கும் பொருந்தும். தலித் படைப்பாளிகள் தங்களது சொந்த- வட்டார மொழியில் தமது வாழ்வியல் அனுபவங்களை எழுதியபோது அவற்றில் வெளிப்பட்ட நம்பகத்தன்மையும் எளிமையும் பாசாங்கற்ற வெளிப்படைத்தன்மையும் துயரங்களும் கலகக்குரலும் அதுவரை இல்லாத இலக்கியவகைமையாக வாசகர்களாலும் விமர்சகர்களாலும் பிரித்தறியப்பட்டது.

தலித்சாதியினர் எழுதியதெல்லாம் தலித் இலக்கியமாகிவிடுவதில்லை. ஒரு தலித்தாகிய வால்மீகி எழுதிய ராமாயணத்தை இன்றுவரை யாரும் தலித் இலக்கியமென்று கொண்டாடாமல் இருப்பதற்கான காரணங்கள் மிகவும் வெளிப்படையானவை. ஒன்று, அது தலித் வாழ்க்கையைப் பேசவில்லை. மற்றது, அது பார்ப்பனீயக் கருத்தியலுக்கு இசைவானதாய் இருக்கிறது. எனவே இங்கு தலித் வாழ்க்கையின் சுயஅனுபவமும் பார்ப்பனீய/சாதீய எதிர்ப்பும் தலித் இலக்கியத்திற்கான அடிப்படைப் பண்புகளாக மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. அப்படியானால் தலித்துகளை கதைமாந்தர்களாகக் கொண்டு அவர்கள்மீது கொண்டுள்ள மெய்யான அக்கறையில் தலித்தல்லாதவர்கள் படைத்தவைகள் தலித் இலக்கியமாகாதா என்ற விவாதம் முன்னெழுந்தது.

ஆம் நண்பர்களே, உங்களுக்கு வருத்தமளிப்பதாயிருந்தாலும் உண்மையைச் சொல்ல வேண்டியிருக்கிறது- அவை தலித் இலக்கியம் அல்ல என்று பதிலுரைக்கப்பட்டது. அதே வேளையில், சாதி, மதம், நிறம், பிரதேசம், பாலின அடையாளங்களற்ற அரூபமான மொக்கை மனிதர்களை கதைமாந்தர்களாகக் கொண்டு கற்பனையான வெளியில் பலரும் இலக்கியப்புட்டுகளை அவித்துக்கொண்டிருந்த நிலையில், ஒரு அரசியல் நிலைபாட்டுடன் தலித்துகள் மீதான கரிசனத்துடன் இவர்கள் எழுதியதை ‘தலித் ஆதரவு இலக்கியமாக- சாதியெதிர்ப்பு இலக்கியமாக’ வகைப்படுத்தலாமென முன்மொழியப்பட்டது. அதாவது, எங்கள் வாழ்க்கையை நாங்களே எழுதிக்கொள்கிறோம், நீ உன் வேலையைப் பார் என்று பேட்டை பிரிக்கிற குறுகிய நோக்கம் தலித்துகளுக்கு இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டது.

இங்கேதான் பயணி- சகபயணி என்ற சிக்கல் தொடங்கியது. அந்நியோன்னியத்திற்கும் அத்துமீறலுக்குமான இடைவெளியை பிரித்துணர முடியாத குழப்பங்கள் உருவானது. அனுபவத்திற்கும் அனுமானத்திற்கும் இடையேயான வேறுபாட்டை அங்கீகரிக்க மறுக்கும் போக்குகள் தலைதூக்கின. குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதியவற்றை குழந்தை இலக்கியம் என்று அழைப்பதைப் போன்று தலித்துகளைப் பற்றி தலித்தல்லாதவர்கள் எழுதுவதை ஏன் தலித் இலக்கியமாக கருதக்கூடாது என வாதிடப்பட்டது. அதாவது ஒரு தளத்தில் செய்துகொண்டிருக்கும் தவறை இன்னொருதளத்திலும் செய்வதற்கு அனுமதி கோருவதை எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்?

தாங்களும் குழந்தைப் பருவத்தை கடந்தே பெரியவர்களாகியிருப்பதால் குழந்தைமையை/ குழந்தைகளின் மனவுலகத்தை எழுதுவது சாத்தியமே என வாதம் நீண்டுகொண்டிருந்தது. இது சாத்தியமில்லை என்றபோதிலும்- ஒரு வாதத்திற்காக இந்த உதாரணத்தை எடுத்துக்கொண்டாலும், எல்லோரும் குழந்தையாக இருந்திருக்கிறீர்கள் என்பது உண்மைதான், ஆனால் எப்போதாவது தலித்தாக இருந்திருக்கிறீர்களா என்று பதில்வாதம் எழுப்பப்பட்டது. தாங்கள் தங்களை தலித்தாக உணர்வதாக அப்போது அறிவித்துக்கொண்டனர் சிலர். ஒருவர் தன்னை தலித்தாக உணர்வதற்கும் முன்பாக தன் சொந்த சாதியைத் துறக்கவேண்டும் என்று நினைவூட்டப்பட்டபோதுதான் எல்லாமே சிக்கலாக மாறிவிட்டிருப்பது புரியத் தொடங்கியது.

சொந்த சாதியை துறப்பதென்பது உடலுக்கு வெளியே நிகழ்கிற ஒரு செயல்பாடல்ல. கூட்டாக எடுக்க வேண்டிய முடிவுமல்ல. ஒருவரது பிறப்புக்கும் முன்பாகவே வம்சரீதியாய் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு தலைமுறையின் உளவியலிலும் கலக்கப்பட்ட விஷம் அது. தப்பிப் போக சிறுதுளையும் அற்றதொரு கொட்டடிக்குள் அடைக்கப்பட்ட கைதிகளைப் போல நாம் சாதிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம். சிந்தனை செயல் எல்லாமே சாதியாலேயே தீர்மானிக்கப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் என்ற உணர்வோடு தன் காலத்தை எதிர்கொள்ளும் ஒருவரால் ஒரு தப்படிகூட இயல்பாக எடுத்துவைக்க முடியாது. தன் நடவடிக்கையில் சொந்த சாதியின் கருநிழல் எதுவும் படிந்துவிடக்கூடாதே என்ற பதைப்பு ஒருவரைத் தொற்றிக் கொள்ளும்போது அதில் கவனம் செலுத்தவே அவருக்கு ஆயுள் போதாது. பிறகெங்கே அவர் தலித்துகளை உற்றுப் பார்த்து உன்னத இலக்கியம் படைப்பது?

தன் சாதி கற்றுக்கொடுத்த எல்லாவற்றையும் துறப்பதற்கான மனவலிமையை கொண்டிருப்பதோடு, தன்சாதியை எதிர்த்துப் போராடவும் வேண்டியிருக்கும். சாதியை தக்க வைத்துக் கொள்வதில் தன் சாதி வகிக்கும் பங்கை அம்பலப்படுத்தியும் கண்டித்தும் அவர் தன் மேதமைமிக்க படைப்புகளை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். தலித்துகளின் சேரிகளுக்கு குடிபெயர்வது, அவர்களோடு பகிர்ந்துண்பது, தலித் கலைமரபுகளைப் பயில்வது, அவர்களது பண்டிகை திருவிழாக்களில் பங்கெடுப்பது, தலித்துகளின் வாழ்வாதாரத் தொழில்களில் ஈடுபடுவது- தலித்துகளோடு ரத்தசம்பந்தம் உருவாக்கிக் கொள்வது- தலித்துகளின் தன்மதிப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தன் சொந்த வீட்டில் தீப்பிடித்த உணர்வோடு எதிர்கொள்வது- ஆகமொத்தத்தில் சாதிகெட்ட ஈனப்பயலாகவோ/ ஈனப்பெண்ணாவோ மாறுவது- அப்படி மாறியதை தியாகமாக கருதாமல் ஒரு இயல்பான மனித எத்தனிப்பாக உணர்ந்து கடந்து செல்வது என்ற - நீண்ட - தொடர்- நடவடிக்கையில் ஒன்றையுமே செய்யாமல் ‘அப்டியே சாப்பிடுவேன் என்கிற ஹார்லிக்ஸ் குழந்தையைப் போல’, ஒருவர் எடுத்தயெடுப்பில் எப்படி தன்னை தலித்தாக உணர முடியும் என்பதை புரியவைக்க எளிய கோனார் நோட்ஸ்கள் தேவையாயிருக்கிறது. (கோனார் என்பதும் சாதிதானய்யா...)

எனவே தான், தானாகவே இருக்கிற ஒருவர் தன்னைத்தானே தலித்தாக உணர்வதாகக் கூறுவது பாவனைதானேயன்றி உண்மையல்ல. இப்படி சொல்வதை அவரது அந்தரங்கசுத்தியையோ நேர்மையையோ சந்தேகிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தன்னிடமிருக்கும் தீண்டாமை மனோபாவத்தைக் கைவிடல்- பிறர் கடைபிடிக்கும் தீண்டாமைகளை எதிர்த்து நிற்றல் எனத் தொடங்கி சாதியெதிர்ப்பு, சாதியழிப்பு என நீளும் இடையறாதப் போராட்டத்தின் எந்தக் கண்ணியிலும் இணைந்துகொள்ள எவரொருவருக்கும் வாய்ப்பிருக்கிறது. இந்த உண்மைகளை பரந்த மக்கள் திரளிடம் கொண்டு சென்று சாதியழிப்புக்கான கருத்தியல் பலத்தைத் திரட்டுவதில் தலித் கலை இலக்கியவாதிகளும் தலித்தல்லாத படைப்பாளிகளும் ஒரே மேடையை பகிர்ந்து கொள்வது சாத்தியமே.

தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகள் நுட்பமான புதிய வடிவங்களில் வெளிப்படுகின்றன. நவீன வாழ்வின் எந்த நிலையை எட்டினாலும் புறக்கணிப்பு, அவமானம், உளைச்சல், பாரபட்சம் ஆகியவற்றால் சூழப்பட்டதாகவே தலித்துகளின் வாழ்க்கை அமைந்தவிடுவது தற்செயலானதல்ல. இச்சமூக அமைப்பின் எந்தவொரு சிறு அசைவும் தலித் வாழ்க்கை என்னும் பட்டகத்தின் மீது பாய்ச்சப்படும்போது அது சாதியமைப்புக்கு ஆதரவானதா எதிரானதா என்ற உண்மையான நிறத்தை வெளிப்படுத்திவிடுகிறது. எனவே இங்கே ஒரு தலித் படைப்பாளி, வெறுமனே மொழியின் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறவராகவோ, தலித் வாழ்க்கையை பதிவு செய்கிறவராக சுருங்கிப் போகாமல் சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் இடைமறிக்கவராகவும் இருக்க வேண்டியுள்ளது. இதன்பொருள், ஓர் அமானுட சாகசம் பொருந்தியவராக மாறுவது என்பதல்ல. முழுக்க முழுக்க அரசியல்மயப்படுத்தப்பட்ட மனநிலையோடு எப்போதும் இயங்குவது என்பதுதான்.

தலித் படைப்பாளிகள் பொழுதுபோக்கிற்காகவோ, இலக்கியத்தளத்தில் தலித்துகளை பிரதிநிதித்துவம் செய்வதற்காகவோ எழுத வரவில்லை என்பதைப் போலவே தன் படைப்புகளின் வழியே இச்சாதிய சமூகத்தை முற்றமுழுதாக மாற்றியமைத்துவிடும் புரட்சிகர நோக்கத்திற்காகவும் எழுதவரவில்லை. கண்ணியமானதொரு வாழ்வுக்கான எளிய விருப்பங்களை மூர்க்கமான நியதிகளாலும் சட்டதிட்டங்களாலும் நிராகரிக்கிற இச்சமூகத்தோடு இணங்கி வாழ முடியாத தன் சொந்த மனநிலையைத்தான் வெளிப்படுத்துகிறார். இந்த இணங்கி வாழ முடியாத மனநிலைதான் அரசியல்மயப்படுத்தப்பட்ட மனநிலை என சுட்டப்படுகிறது.

ஆனால் அரசியல்மயப்படுத்தப்பட்ட மனநிலைகளுடன் கூடிய தனிமனிதர்களாகவே இருந்துவிடுவதால், ஒரு படைப்பாளி தன் படைப்புகள் வழியே முன்வைக்கும் ஒரு கனவுச் சமூகம் அமைந்துவிடப் போவதில்லை. எனவே தான் முன்வைக்கும் கனவுகளுடன் ஒருமை கொண்டுள்ள இயக்கங்களில் பங்கெடுப்பதும் அவ்வியக்கங்களின் உள்ளுறையாற்றலாய் படைப்புகளை முன்வைப்பதும் அவசியமாகிறது. இலக்கியவாதி இயக்கவாதியாய் மாறுவதல்ல இது. இலக்கியம்தான் இயக்கமாக மாறுகிறது. அதாவது எவ்வித ஒடுக்குமுறையையும் ஏற்க மறுத்து- சகமனிதரை சமமாய் காண்கிற அரசியல் கூருணர்வுமிக்க ஒரு படைப்பாளியின் கனவைத்தான் இயக்கங்கள் பகிர்ந்து கொள்கின்றன.

(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் மதுரை திருமங்கலத்தில் செப்டம்பர்- 6 அன்று நடைபெற்ற தலித் இலக்கியம் குறித்த கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

- ஆதவன் தீட்சண்யா

Pin It