“உழைப்பு கருவிகளின் வளர்ச்சியானது படிப்படியாய் உழைப்பின் ஒழுங்கமைப்பில் (Organisation) மாறுதல் உண்டாக்கிற்று. இயற்கை வழியிலான உழைப்புப் பிரிவினையின் (Division of Labour) ஆரம்பக் கூறுகள் தோன்றலாயின. அதாவது ஆண், பெண் பாலருக்கும் வெவ்வேறு வயதினருக்கும் ஏற்ப அமைந்த உழைப்புப் பிரிவினை தோன்றலாயிற்று. பெண் குழந்தைகளையும் இல்லத்தையும் கவனித்துக் கொண்டனர். உண்டி தயாரித்தனர். குழுவினர் இடம் பெயர்ந்து சென்ற போது வழியில் ஆடவர்கள் வேட்டைக்குச் செல்வதற்கு வசதியாய் இருக்கும் பொருட்டு பெண்டிர் அக்குழுவின் சொற்ப உடைமைகளைச் சுமந்து சென்றனர்”.

பிழைப்புச் சாதனங்களைப் பெறும் முறைகளில் இதன்பின் தொடர்ந்து ஏற்பட்ட முன்னேற்றம் பயிர்ச் சாகுபடி கால்நடை வளர்ப்பு ஆகியவற்றின் ஆரம்ப வடிவங்களுடன் சம்பந்தப்பட்டதாகும் என்று இயற்கை வழியிலான உழைப்புப் பிரிவினையை அரசியல் பொருளாதாரம் விளக்கிச் செல்கிறது.

இனக்குழு

“பூர்வீகக் குடியமைப்பு : புராதன மனித கணம் காலப்போக்கில் பூர்வீகக் குடியமைப்பாய் வளரலாயிற்று. பொது மூதாதையரிடமிருந்து தோன்றியவர்களைக் கொண்டு உருவானதே பூர்வீகக் குடி. ஆரம்பத்தில் இக்குடி இரத்த உறவு கொண்ட இருபது, முப்பது உறவினர்களால் ஆனதாகவே இருந்தது. இக்குடிக்குப் புறம்பானவர் எவரும் அயலாராய்க் கருதப்பட்டார். பூர்விகக் குடியமைப்பில் தொடக்கத்தில் பெண்களே ஆதிக்க நிலையில் இருந்தனர். பூர்விகக் குடி தாய்வழி மரபுடையதாய் இருந்தது.

உற்பத்தி சக்திகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்த போது தாய்வழி மரபு மறைந்து தந்தைவழி மரபு தலைதூக்கியது. ஆடவர்கள் ஆதிக்க நிலை பெறலாயினர். நாடோடி முறையிலான கால்நடை வளர்ப்பின் உதயமே இந்த மாறுதலுக்கு பெருமளவு காரணமாய் இருந்தது. வேட்டையாடுவதைப் போலவே கால்நடை வளர்ப்பும் ஆடவர்க்குரிய வேலையாகியது. இதற்குள் பயிர்ச் சாகுபடியின் கட்டத்துக்கு உயர்ந்து விட்ட விவசாயத்தையும் ஆடவர்களே மேற்கொள்ள முற்பட்டனர்”. (பக். 32. அரசியல் பொருளாதாரம்) என்று விளக்குவதைக் காணலாம்.

வேட்டைச் சமூக வாழ்வு

“வேட்டுவர்” வேட்டையாடுதலையே தொழிலெனக் கொண்டு வாழும் குடிகள். அவர்கள் வேட்டையாடும் விதத்ததைப் பற்றி நற்றிணையின் பாடல் விளக்குகின்றது.

“கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழிப் போல” (நற். பா. 75: அடி : 6-7)

அதாவது, “வளைந்த வில்லையுடைய வேட்டுவன் கோட்டினையுடைய பன்றியை யெய்து கொன்று அதன் பசிய தசையிற் பாய்ச்சினதாலே சிவந்த அம்பைப் போல” (நற். பக். 96) என்ற உதாரணம் வருகின்றது. ஆக, பன்றியை வேட்டையாடி வேட்டுவர் உணவாக கொண்டமை புலப்படுகின்றது. மேலும், “சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் ஃ சேறாடு இரும்புறம் நீறொடு சிவண ஃ வெள்வசிப் படீஇயர் மொய்த்த வள்புஅழீஇக் ஃ கோள்நாய் கொண்ட கொள்ளைக் கானவர் பெயர்க்குஞ் சிறுகுடியானே” (நற்றிணை பா. 82: அடி : 7-11) என்ற பாடலில்,

‘சிறிய கண்ணும், பெரிய சீற்றமும் உடைய ஆன்பன்றி சேற்றில் விழுந்ததினால், உடல் முழுதும் புழுதி படிந்திருக்கின்றது. அப்புழுதியோடு செல்ல சுருக்குவார் (சுருக்கு - விலங்கு பிடிப்பதற்கு பயன்படுத்தும் ஓர் கருவி) வைத்த கருவியில் மாட்டிவிட, அங்கே அதை கொன்று மிகுதிப்பட்ட தசைகளை நாய்கள் கொண்டு போகாதபடி கானவர் சென்று நாய்களை விலக்கி பன்றி இறைச்சியைக் கைப்பற்றி கொண்டு செல்லும் சிறுகுடியின் பக்கத்திலே (ப. 104) என்பதே மேற்கண்ட பாடலின் விளக்கம் ஆகும். ஆக, இஃது அடிப்படையில் வேட்டைச் சமூக வாழ்வை வெளிக் கொணர்கின்றது.

மேலும், “கானவ னெய்து கொணர்ந்த முட்பன்றிகள் கொழுவிய தசைத் துண்டத்தைத் தேன்மணங் கமழும் கூந்தலையுடைய கொடிச்சி மகிழ்ந்தேற்றுக் கொண்டு காந்தள் மிக்க சிறுகுடியிலுள்ளோர் பலருக்கும் பகுத்துக் கொடா நிற்கும் உயர்ந்த மலைநாட்டையுடைய நம் காதலன்” (நற். பக். 107) என்ற, கருத்திற்குரிய கீழ்காணும் பாடல்,

“கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை
தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி மகிழ்ந்து கொடு
காந்தளஞ் சிறுகுடிப் பகுக்கும்
ஓங்கு மலை நாடன்...” (நற். பா. 85)

என்று புலவர் உணர்த்துகின்றார். இப்பாடலில் 3 -வகை கருத்துக்கள் நிலவுகின்றன.

1. கானவர் வேட்டையாடி பன்றியை கொண்டு வர, அதனை மனைவியான கொடிச்சி ஏற்று மகிழ்ந்து அச்சிறுகுடியிலள்ள பிறருக்கும் வழங்குகின்றாள்.

2. மலைநாட்டையுடைய காதலன் நாடன் என்பதன் வழி அச்சிறுகுடிக்கு தலைவனாக ‘நாடன்’ (பொதுப்பெயர்) விளங்குகின்றான் என்ற கருத்தும் நினைவிற் கொள்வது அவசியமாகின்றது.

ஆக, இனக்குழு வாழ்க்கை முறையே மேற்கூறிய கருத்து என உறுதி செய்யவே முடியும்.

இவ்வேடர்கள் “வேடர் - புலியோடு போர் செய்வர், யானை தந்தத்தை விரும்புவர் (பா. 65) பக்கம் 84-ல் இக்கருத்து காணப்படுகிறது.

இள மைந்தர்களின் செயல்கள்

“குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த
பைந்தாள் செந்திணைப் படுகிளி ஒப்பும்
ஆர்கலி வெற்பன்... (நற். பா. 104, அடி : 4-6)

இப்பாடலின் பொருளாவன,

மலையில் களிற்றுயானையொடு போர் செய்யும் போது, யானையால் ஏற்படும் துன்பத்தைக் கண்டு அஞ்சாமல், குறவரின் இள மைந்தர்க்ள, அங்குள்ள பெரிய மலைகளில் (பாறைகளில்) ஏறி நின்று, தமது கையில் உள்ள சிறிய தொண்டகப்பறையை அடித்து ஓசை எழுப்புவர். அதனால் திணைக்கதிர்களை திண்ண வரும் கிளிகள் அஞ்சி ஓடும் ” என்ற கருத்து காணப்படுகிறது.

மேலும், ‘யானையானது தனது குட்டியை விட்டு விட்டு, தினைப்புனத்திலுள்ள தினையை திண்ண வருவதைக் கண்ட குறவர் கணையுடையவரும், கிணைப் பறையுடையவரும், கைவிரலில் கோத்த கவண் உடையோரும், கூவி, பெரிய சப்தத்தை எழுப்ப குடியிருப்பு எங்கும் அச்சப்தம் ஒலிக்கும் மலைப்பகுதி” (நற். பக். 35) என்று உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.

விலங்கு வேட்டைக் கருவி

“அடார் - கருங்கற் பலகையை ஒருபால் சாய்வாக, நிமிர்த்திக் கீழே முட்டுக் கொடுத்து, வள்ளால் உணவு வைப்ப அவ்வுணவை விலங்கு சென்று தொடுதலுமங் கல்வீழ்ந்து கொல்லும் பொறி” (நற். பக். 150) போன்றவை எளிதாக விலங்கினை பிடிப்பதற்கு பயன்படுத்தியதாக குறிப்பு உள்ளது.

ஆயர்

இஃது பழந்தமிழகச் சூழலை உணர்த்துகிறது. ‘ஆ’ - பசு பசுக்களை உடையவர், உரிமையுடையோர் என்பர்.

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட ஆயர், சிறு சாகுபடி முறையை மேற்கொண்டனர்.

“விதை விதைக்கும் ஆயர் பலபடியாக உழுது புரட்டிய பழங்கொல்லைப் புழுதியில் நிறைவுற முறையை விதைக்கப்பட்டுள்ள ஈரிய இலை நிரம்பிய வரகின் கவைத்த கதிர்களைத் தின்ற கண்டார்க்கு விருப்பம் வருகின்ற இளைய பிணையின் மரல்வித்துக்க ளுதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டின்கண்” (நற். பக். 152) என்று, ஆயர் ‘வரகு’ விதை விதைத்ததும், யானை கதிர்களை திண்ண வரும் காட்சியையும் புலவர் வருணிக்கின்றார்.

“பறிபுறத்து இட்ட பால்நொடை இடையர்
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்
தண்டுகால் வைத்த ஒடுங்குநிலை மடிவாளி” (நற். 4-6 : பா. 142) என்று குறிப்பிடுகின்றது. ஆக, கால்நடை வளர்ப்பும், சிறுசாகுபடி முறையையும் கையாண்டுள்ளனர் என்பது புலனாம்.

பரதவர்

சேர்ப்பன், பரதவன் என இருபாற்பட்ட நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதை அறியலாம்.

“சிறையருங் களிற்றிற் பரதவர் ஒய்யுஞ்
சிறுவீ ஞாழல் பெருங்கடற் சேர்ப்பனை” (நற். பா. 74 - அடி : 4-5)

என்ற பாடலில் பரதவர், சேர்ப்பன் ஆகியோரை சுட்டுவதைக் காண்கின்றோம்.

மீன் பிடித்தலும், உப்பு விளைத்தலும் அடிப்படை தொழிலாக இருந்தது நாம் அறிந்ததே.
கடல் விளை அமுதம் பெயற்கேற்றா அங்கு
உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண்” (நற். பா. 88 - அடி : 4-5)

“கடல் நீரால் விளைந்த உப்புகுவடு” என்பர்.
கடலில் விளையும் அமுதமே உப்பு என்றுரைப்பர்.

பரதவர் வாழும் பகுதியை புன்னைச்சேரி மெல்ல (நற். பா. பரதவக்குடி : 145 : 9) புன்னை மரங்கள் உள்ள சேரி என்பதாம். ஆக ‘சேரி’ என்பது சிறிய ஊர் ஆகும்.

தொங்குகின்ற ஓலை (நற். பக். 169) யையும் நீண்ட மடலையுமுடைய பனையினது கரிய அடிமரம் புதைபடுமாறு மூடப்பட்ட மணல் மிக்க முற்றத்தின் கண்ணிருந்து அளவுபடாத உணவுப் பொருளை, வருகின்ற விருந்தினர்க்குப் பகுத்து கொடா நிற்கும் மெல்லிய குடி வாழ்க்கையுடையராயிரா நின்ற அழகிய குடியிருப்பை யுடைய சீறூர் மிக இனிமையாயிருந்தது” (நற். பக். 170) என்ற கருத்தின் வழி, அவர்களின் பனைமரம், பனை ஓலையால் ஆன குடியிருபைப் பற்றியும், அவர்களை தேடி வருபவர்க்கு பகிர்ந்தளித்து உணவு தந்தமையையும் புலவர் அழகுற வெளிப்படுத்துகின்றார்.

மீன் பிடிக்கும் வினைஞர் உழவினால் நெல் முதலியன விளைத்தல் இலராகலின் அவரது வாழ்க்கை வானம் வேண்டா வாழ்க்கை எனவும், அன்னராயினும் அவர் பிடிக்கும் மீனே அவருக்குப் பெரியதொரு வருவாயகலின் ‘வறனில் வாழ்க்கை’ எனப்பட்டது. (அ.நா. பா. 186, பக். 157)

பாணர் - மீன் பிடிப்போர் (ஐ.நூ. பா. 48)

மீன் படிப்போர் சிப்பிகளை விற்று கள்ளிற்கு விலையாக சேர்ப்பதும் (அ.நா. பா. 296) மீன் விற்று கள்ளுண்டு மகிழ்வர். பின்னர் பாண்மகளிர் (பாணன் மனைவி) சோறு இடுவதும், பரதவர் வீரர்களாக இருந்தனர் எனவும் (அ.நா. பா. 226)

மீனினை பிடிக்கும் பாண்மகள் நீரை அடுத்த கரையில் வரால்மீனை, பன்னாடையால் வடித்து எடுக்கப்பட்ட கள்ளையுண்டு களித்திருந்த தன் தந்தைக்கு வஞ்சிமரத்து விறகு கொண்டு சுட்டு அவன் வாயில் உண்பிப்பாள் (அ.நா. பா. 216) எனவும்,

பாண்மகள் - வாளை மீனுக்குப் பதிலாக தெருவில் பழைய செந்நெல்லை முகந்து வாங்கினாள் (அ.நா. பா. 126) என்ற பண்டமாற்று குறிப்பும் உள்ளது. கள் குடித்தல் பற்றி பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. கள் விற்பனை (அ.நா. 126) நனை - கள் ; கோஒய் - கள் விற்கும் கலம். கள்ளும் நெல்லும் உள்ள வே@ர் (அ. நா. 166) கள் (அ. நா. 166) கள் குடித்தல் (அ. நா. நித்திலம். பா. 356, களிற்று, பா. 116).

பரத்தை தொடர்பைப் பற்றி கூறும் பாண்மகள், “கள் உண்பார் செல்லும் பயணம் பனையில் நுங்கு உள்ளவரை தொடரும். நுங்கு நீங்கிய வழி பயணமும் நின்று விடும். பரத்தையின் வரவும் தலைவனிடம் பொருள் உள்ளவரை தான் (அ. நா. பா. 293) என்றும், ‘கள் குடித்தல் ‘தீது’ என்று உணர்ந்தும் குடிப்பவன் ” (கலி. பா. 73) பெண்கள் கள்ளைக் குடித்துவிட்டு தம் கணவரின் பரத்தையை பாடுவர் (அ.நா. 157, 186) போன்ற பல கருத்துக்கள் காணப்படுகின்றன.

சமவெளியான மருத நிலம்

வேட்டையாடுதல், கால்நடை வளர்ப்பு சிறு சாகுபடி முறை தாண்டி பெருஞ் சாகுபடி முறையும், கால்நடை வளர்ப்பும், வேட்டையாடுதலின் எச்சத்தையும் கொண்ட நிலப்பகுதியாக தொடக்கக் காலத்தில் விளங்கிய நிலப்பகுதியே சமவெளி பகுதி. நீரே முதன்மை ஆதாரமாக, மனித உழைப்பு மூல ஆதாரமாக மிக பெரிய, சிறந்த உற்பத்தியை மேற்கொண்டு மனித சமூக வளர்ச்சியை உந்தித் தள்ளிய சூழல். ஐநில பகுதிகளிலும் மாறுபட்ட, நன்கு வளர்ச்சியடைந்த நாகரீக வாழ்வை கொண்ட இந்நிலப் பகுதி வாழ்க்கையைப் பற்றி சங்க இலக்கியங்களும், பிற நூல்கள் எடுத்துரைத்துள்ளன. மக்களிடையே இருந்த உறவுகள் திட்டவட்டமாக உருவாகவும், அடிமைச் சமூக வாழ்வு தோன்றுவதற்குரிய சூழலையும் இந்நிலப் பகுதி நன்கு பெற்று தந்தது என்றே கருதலாம். அதாவது,

“பரிவர்த்தனை அதிக அளவுக்கு வளர்ச்சி பெறாமலிருந்த போது உற்பத்தியாளர்களாகிய சாகுபடியாளர்களும் கால்நடை வளர்ப்பாளர்களும் கைவினைஞர்களும் தமது உற்பத்திப் பொருள்களைத் தாமே பரிவர்த்தனை செய்து கொண்டார்கள். ஆனால் பரிவர்த்தனை செய்யப்பட்ட பண்டங்களின் பரிமாணம் இடையறாது அதிகரித்துச் சென்றது. இவை பரிவர்த்தனை செய்யப்பட்ட பிரதேசமும் இதே போல விரிவடைந்து சென்றது. இந்நிலையில் தான் வணிகர்கள் தோன்றினர். உற்பத்தியாளர்களிடமிருந்து இவர்கள் பண்டங்களை விலைக்கு வாங்கி, அவற்றை சந்தைகளுக்கு எடுத்து வந்து நுகர்வாளர்களுக்கு விற்பனை செய்தார்கள். உற்பத்தி இடங்களிலிருந்து இந்த சந்தைகள் சில சமயம் நெடுந்தொலைவு விலகி அமைந்திருந்தன”.

வாணிப மூலதனம் இவ்விதம் தான் தோற்றமெடுத்தது” (பக். 41, அரசியல் பொருளாதாரம்)

பண்டைய மக்களின் உணவு

நெல் சோறு முதன்மையான உணவாக இருந்திருக்கின்றது. திருமண விழாவில் நெய் மிகுந்த சோறு இடப்பட்டதை சங்க இலக்கியம் காட்டுகிறது. (அ. நா. மணிமிடை. பா. 136)

குறிப்பாக, உழுத்தம் பருப்போடு கூட்டி சமைத்த குழைதலையுடைய பொங்கல் - பெருஞ்சோற்று திரளை உண்ணுகின்றனர். இடையறாது உணவு பரிமாறுவது இடையறாது நிகழ்கிறது (அ. நா. களிற்று. 86) என்று அகநானூறு சுட்டுகின்றது. இதன் மூலம் திருமண நிகழ்வில் நெய் கலந்த சோற்றையும், உழுத்தம் பருப்போடு குழைந்த உணவான ‘பொங்கல்’ கி.பி. யின் தொடக்கத்திலேயே பரிமாறியதை சங்க இலக்கியம் காட்டுகிறது.

(கூடல் காலத்தில் வெள்ளி வட்டிலில் வார்த்த பால் பற்றி குறிப்பிடுகின்றது.) (கலி. பா. 72)

தலைவன் பரத்தைத் தொடர்பு கொண்டிருக்கும் போது, பரத்தை சிறிய அரிசியைப் புடைத்து, தாம் சமைத்து உண்டு தனித்தோர் ஆகி சுருங்கிய முலையினை சுவைத்து பார்க்க எளிமையுடன் தங்குவதாக (அ.நா. நித்தி. பா. 316) பாடல் குறிப்பிடும். மீனினை பிடிக்கும் பாண்மகள் நீரை அடுத்த கரையில் வரால் மீனை, பன்னாடையால் வடித்து எடுக்கப்பட்ட கள்ளையுண்டு களித்திருந்த தன் தந்தைக்கு வஞ்சிமரத்து விறகு கொண்டு சுட்டு அவன் வாயில் உண்பிப்பாள் (அ. நா. 216) - உழவர்கள் : நத்தையை உடைத்து திண்பர் (நற். பா. 280)

அகநானூறு 236 - (14-15)ம் பாடலில் “மீன் துண்டங்களை வயிறார உண்பர்.

உழுது உண்ணும் புலவர்தம் புதிய கவிதைகளைக் கொண்டு பலருடன் சேர்ந்து சுவைக்கும் மதில் சூழ்ந்த புனலை உடைய மதுரையை உடைய தலைவன் (பா. 68. கலி.)

அகநானூற்றில் 106-ம் பாடலில் - வளம்மிக்க ஊரன், பாண்டியனின் வாட்படையினையும், குற்றமற்ற படைக்கலப் பயிற்சியையும் கொண்டு செல்கின்ற கொல்லும் போரினை வெல்லும் உணவினை பெறும் பாணன்”.

வறுமை நிலை : பரத்தை : (பாஃ 306 : 12-17, அகநானூறு) தலைவன் மேற்கொள்ளும் பரத்தமையை வெறுத்து அவரோடு ஊடல் கொள்ளும் பெண்கள், தம்மிடத்து திருமகள் விலகிச் செல்ல, தம்மிடத்து ‘நொய் அரிசி’யை முறத்தால் புடைத்துத் தாமே சமைத்து உண்டு தனிமையை மேற்கொண்டவராய் இனிய மொழி பேசும் குழந்தைகள் பால் இன்றி உலர்ந்த முலையைச் சுவைத்துப் பார்த்து பெரிதும் வருந்தியிருப்பர்.

பொருளியல்

பாண்மகள் - வாளை மீனுக்குப் பதிலாக தெருவில் பழைய செந்நெல்லை முகந்து வாங்குகிறாள். (ஒரு பொருள் கொடுத்து வேறொரு பொருளை தெருவிலேயே வாங்கிக் கொள்ளும் மரபு - வணிகத் தொடக்கம்) (அ. நா. 126)

போர் முடிந்து கள்ளுண்ட உழவர், கடாக்களைக் கட்டவிழ்த்து விட்டு கடிய காற்றில் நெல்லினைத் தூற்ற பறந்து போன துரும்புகள் முழுவதும் உப்பளத்திலுள்ள சிறிய பாத்திகளில் இடமில்லாது எங்கும் வீழ்ந்து பரக்கிறது (பக். 145 - 146) நுளையர்கள் இனிமையான வெள்ளை உப்பு கெட்டமையால் சினந்து வயல் உழவரொடு மாறுபட்டு எதிர்த்து கைகலந்து மிக்க சேற்றுக் குழம்பினை எறிந்து செய்யும் போரினைக் கண்டு நரைத்த முதியோராகிய மருத நில மக்கள் போர் செய்யும் கைப்பிணிப்பினை விடுத்து விலக்கி, முற்றிய தேனாகிய கள்ளின் தெளிவை பரதவர்க்கு அளிக்கும் இடமாகிய பொற்பூண் அணிந்த எவ்வி என்பானது நீழல் என்னும் ஊர்” (பக். 146, நித்தி. 366).

(அ.நா.: நீண்டு குவிந்து கிடக்கும் வெண்ணிற உப்பின் பெருங்குவியல் பெருமழையின் ஓடுநீர்க்கு கரைவது போல் - உவமை. அ.நா. 206)

(மீனினைப் பிடிக்கும் பாண்மகள் நீரை அடுத்த கரையில் வரால் மீனை, பன்னாடையால் வடித்து எடுக்கப்பட்ட கள்ளையுண்டு களித்திருந்த தன் தந்தைக்கு வஞ்சிமரத்து விறகு கொண்டு சுட்டு அவன் வாயில் உண்பிப்பாள், (அ.நா. 216)

கைப்பிணிப்பினை விடுத்து விலக்கி, முற்றிய தேனாகிய கள்ளின் தெளிவை பரதவர்க்கு அளிக்கும் இடாகிய பொற்பூண் அணிந்த எவ்வி என்பானது நீழல் என்னும் ஊர்” (அ.நா. நித்திலக். பக். 146. பா. 366) என்ற குறிப்பு காணப்படுகின்றது. இதன் வழி மக்களுக்குள் உற்பத்திப் பொருளில் பாதிப்பு ஏற்பட சண்டையிட்ட நிழல் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் அறிகின்றோம்.

உழவர்கள் போர் முடிந்து கள்ளுண்டதையும் (அ.நா. 366) மள்ளர் - போர்மறவர் (ஐ.நூ. 94) மள்ளர் கூடி சேரி விழா நிகழ்த்திய குறிப்பும் (குறுந். பா. 31) விளையாட்டுப் போர் நிகழ்த்தியதையும் (குறுந். 364) மகளிர் துணங்கைக் கூத்து நிகழ்த்தியதையும் (குறுந். 31) “போர்ச்செறி மள்ளரின் புகுதரும் ஊரன்” (அ. நா. பா. 316) என்ற அடிகளின் வழியாகவும் உழவர்களின் நிலையை அறிய முடியும். இவர்கள் போர்க் காலங்களில் புல்லரிசி உணவை பகைவர்கள் உண்டனர் (ஐ.நூ. பா. 4) போன்ற குறிப்புகளும் காணப்படுகின்றன.

உழவர்களின் உணவு

உழவில் ஈடுபடுகின்ற போது, மீன் துண்டங்களை வயிறார உண்டு, பின்னர் நீண்ட கதிர்களைக் கொண்ட நெற்கட்டுகளையும் பனி தங்கிய கோரைகளையும், களத்தில் வெற்றிடம் இல்லாதவாறு கொண்டு வந்து குவிப்பர்” (அ.நா. 236 : 1-5) என்ற செய்தியும் காணப்படுகின்றது.

உழவர்கள் “கள் குடிக்கும்” செய்தியும் (அ.நா. 346-356) காணப்படுகின்றது. நத்தைகளை உணவாக உட்கொண்ட செய்தி (நற். பா. 280)யும் காணப்படுகின்றது.

உழவர், பரதவருக்கு ஏற்பட்ட முரண்

நெய்தல் நில மக்கள் உணவுக்கு இனிமை தரும் வெள்ளிய உப்பு பாழ்பட்டு போனமையால் சினந்து கழனி உழவருடன் மாறுபட்டு சேற்று குழம்பினை எடுத்தெறிந்து கைகலப்பில் ஈடுபட்டனர் என்ற குறிப்பு உள்ளது. வயலில் நெல்லினை தூற்றும் போது உப்பு விளைவிக்கும் இடத்தில் அத்தூசி விழ, இருவருக்கும் முரண் ஏற்படவும், அதனை பெரியோர்கள் தடுத்த நிகழ்வு குறிப்பிடப்;பட்டுள்ளது. போரில் ‘மள்ளர்’கள் ஈடுபட்டதாகவும் குறிப்பு உள்ளது.

“போர் முடிந்து கள்ளுண்ட உழவர், கடாக்களை கட்டவிழ்த்து விட்டு கடிய காற்றில் நெல்லினைத் தூற்ற பறந்து போன துரும்புகள் முழுவதும் உப்பளத்திலுள்ள சிறிய பாத்திகளில் இடமில்லாது எங்கும் வீழ்ந்து பரக்கிறது (பக். 145-146) நுளையர்கள் இனிமையான வெள்ளை உப்பு கெட்டமையால் சினந்து வயல் உழவரொடு மாறுபட்டு எதிர்த்து கைகலந்து மிக்க சேற்றுக் குழம்பினை எறிந்து செய்யும் போரினைக் கண்டு நரைத்த முதியோராகிய மருத நில மக்கள் போர் செய்யும் அரிப்பறை வினைஞர் - நெற்கதிர்களை அறுக்கும் போது பறையிசைத்து நெல்லை பாதுகாப்பவர் (ஐ.நூ. பா. 81) என்ற குறிப்பும் உள்ளது. உழவர்கள் (பா. 737, 346) பா. 309, உழுதல் (தொய்யல், பா. 367) உழவர்கள், நெற்கூடுகள், எருமைபாடு (நற். பா. 60) வயல் உழுமுறை, செல்வம் (பா. 387) நெற் பயிர் சாகுபடி செய்யும் ஊரினை சிறப்பாக அழைத்துள்ளனர். உதாரணமாக,

“நெற்குவியலையுடைய உறையூர் (அ. நா. பா. 6)
நெற்களையுடைய தெருவீதி (அ. நா. ப. 306)
பலவகை நெல் வளங்களைக் கொண்டது வேளுர் (அ. நா. 166)

நெல்லுடை நெடுநகர் (அ.நா. பா. 176) கரும்பு சாகுபடி செய்ததையும் (ஐ.நூ. பா. 65) அறிகிறோம். இதன் வழி, உழவர்கள் உழவுத் தொழிலில் ஈடுபட்ட முறையினை சங்க இலக்கியத்துள் தெளிவாக அறிய முடிகிறது. உழவர்களை ‘வேளாளர்’ என்று அழைத்துள்ளனர். வேளாளரை உழுதுண்போர், உழுவித்துண்போர் என 2 பிரிவாக இருந்ததை, உழுவித்துண்பார் (அ.நா. பா. 266) பற்றி அகநானூறு குறிப்பிடுகின்றது.

உழவர்களின் உணவு, பண்டமாற்றுச் சூழல்

நெல்லுக்குப் பதிலாக மீன், அணிகலன்களை பெற்றிருப்பதை அகநானூற்றின் 126ம் பாடல் (அ. நா. 126 : 11) விளக்குகிறது. மேலும், ஐங்குறுநூற்றில் 47-ஆம் பாடலும் விளக்குகின்றது.

உழுதுண்ட உழவனின் வாழ்வு

விவசாய கூலிகளாக பணியமர்த்தப்பட்டு அடிமைகளாகவே மாறிய உழவர்களின் வாழ்வு ஒரு புறம் வேதனையும், மறுபுறம் சாதனையாகவும் இருக்கின்றது. உற்பத்தி செய்வதில் வல்லவர்களாயினும் அடிமைத் தொழிலாய் அவர்கள் வாழ்வு மாறியிருந்ததை வரலாறு வெளிக்கொணரும்.

உழவர்களுள் அதிக எருமைகளை உடையவனே தலைவனாக போற்றப்பட்டுள்ளான். “(நற். 260, 476) என்ற குறிப்பு காணப்படுகின்றது. உழவரை ‘மள்ளர்’ என்றும் அழைத்துள்ளனர்.

வயல் உழும் முறை (நற். பா. 210) எருமை உழவு செய்த பின்னர் மருத மர நிழலில் தங்குதல் (நற். பா. 330) வயலில் உழவு செய்யும் போது ஏற்படும் பகடு (மேடு) நற். பா. 290) உழவர்கள் சாலடித்து உழும் முறை (நற். பா. 340) வெண்ணெல்லை அரிகின்ற உழவர்கள் முழக்கம், தண்ணுமைக்கு அஞ்சி மர நிழலில் தங்குவது (நற். பா. 350) உழுவதற்கு பயன்படக் கூடிய கடகப் பெட்டிகள் (உள்ளுறை) (நற். பா. 387, பா. 210) உழவர்கள் சாலடித்து உழும் முறை (நற். பா. 340) பலமுறை உழப்பட்ட வயல் (26) மருத நில நெற்கூடுகள் (96) நெல் அரியும் உழவர்கள் (116 : 1-5) வெண்ணெல் அரிஞர் (அ.நா. 236) மள்ளர்கள் கதிர் அறுப்பர் (பா. 400) உழவர்கள் நீர் தேக்குதல் (அ. நா. 346 : 5-6) தாழ்ந்த கிளைகளையுடைய மருதமர நிழலில் நெற்கதிரை காயவிட்டு தூற்றும் செய்தி (அ. நா. பா. 366) நெல்லை பாதுகாக்கும் காவலர்கள் இருந்துள்ளனர் (அ. நா. மணிமிடை, பா. 156) அறுவடை (அ.நா. மணிமிடை. 236) செயல்முறை, புனலுக்காக கரும்பில் இடைமறிப்பது (அ.நா. 116).

அச்சூழலுக்கு பின்னரான வாழ்க்கை முறையில் பழந்தமிழகத்தைப் பொறுத்தமட்டில் நிலமக்கள் ஒருபுறம் இருக்க அடியோர், வினைவலர், ஏவலர், இழிந்தோர் இருந்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன.

அடியோர்

‘அடியோர்’ என்ற சொல்லாட்சிக்கும் அச்சொல் சார்ந்த பிற சொற்களுக்குமான விளக்கம் காண்போம்.

அடியோர் - குற்றவேல்; குற்றம் புரிந்த ஏவலாளர்கள்; அடி - கால் : கீழ் : பாதம் : வேர் என கீழ்மை தன்மையையும், கீழ்நிலையிலுள்ள பொருளையும் உணர்த்துகின்றது. அடியோர் - அடிதொண்டு செய்து வாழ்பவர்; மன்னர் உடைமை சமூகத்தில் அடிமையாகி அவர்கள் பிறரிடம் யாசித்து வாழும் வாழ்;க்கையை உடையோராய் மாறியிருக்கின்றனர். அடிச்சுவடு - காலச்சுவடு; அடிச்சூடு - பாதத்தில் உறைக்கும் வெப்பம்; அடிச்சேரி - பணியாளர் குடியிருப்பு; நகர எல்லையில் இருக்கும் ஊர்;

அடிச்சேரிலாள் - குச்சிக்காரி; ஒழுக்கம் பிழைத்தவள் : அடிச்சி - அடிமைப்பெண்; அடியவள். அடிபடுதல் - பழமையாதல் ; அடிபறித்தல் - வேரொடு பறித்தல் - ஆக, “அடிமைத் தொழில் - மன்னர் உடைமை சமூகத்திலே நன்கு விரிவு பெற்றும், அஃது மட்டுமின்றி அடிமைப்படுத்தப்பட்டு யாசித்து வாழும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அவர்களை கீழ்நிலையினராக கருதியுள்ளனர்.

சிலம்பின் கொலைக்களக் காதையில்,
“குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி” (பா. 84-85)

என்ற பாடலடியில், பிறந்த குடியின் முதல் சுற்றமாகிய தாய், தந்தையரையும், பணிபுரியும் மகளிரையும், மற்ற வேலையாட்களின் கூட்டத்தையும்...” என்று விளக்கம் அமைகின்றது. அடிப்படையில், ‘அடியோர்’ என்பதற்கு மற்ற வேலையாட்கள் என்ற பொருள் கிடைக்கின்றது. இதில் தலைவி செல்லவும், அவள் கூட பணிபுரியும் பெண்கள் செல்லவும், அவர்களுக்கு பாதுகாப்பாக அடியோர் சென்றனர் என கருத முடிகிறது.

ஏவலர்

பிறர் ஏவல் வழி செல்லும் (இயங்கும்) நிலையை உடையவர். உயர்ந்தோர்களாக கருதியோருக்கு பணியாளராக அவர்களின் ஏவல்படி (கட்டளை) பணியை செய்பவர்களாகவும் இருந்துள்ளனர்.

ஏ - அம்பு, ஏவு - செலுத்து; ஏவுதல் - செலுத்துதல்; கூளியர் - ஏவலர் (திருமுருகாற்றுப்படை, பதிற்றுப்பத்து)

மன்னர்கள் போர் செய்தற்கு முன்னர் சென்று நிலப்பகுதியை சுத்தம் செய்து கொண்டே செல்பவர்களை பதிற்றுப்பத்து ‘கூளியர்’ என்கின்றது.

“அரசன் தனித்து உறையும் பள்ளியறையே யாயினும், அரசன் விரும்பினால் விரும்புவோர்க்குச் சென்று செய்தி கூறவும், அரசனுக்குத் தேவைப்படும் உண்ணுநீர் போல்வன கொணர்ந்து கொடுக்கவும். ஏவலர் சிலர் ஆங்கும் இருப்பது இன்றியமையாதது. அதனால், ஆங்கு சில ஏவலரும் இருந்தனர். இடமோ நாட்டு நலம் காக்கும் நல்ல சிந்தனைகள் உருவாகும் இடம். அது உருவாக, அமைச்சர் உள்ளிட்டோர் தத்தம் உணர்வுகளை உரைவடிவில் வெளிப்படுத்தும் இடம். அத்தகைய இடங்களில் பணிபுரியும் ஏவலர், ஆங்கு அரசர் அமைச்சர்களிடையே உரையாடல் நிகழுங்கால், தம் காதுகளில் விழுந்தனவற்றை வாய்தவறி வெளிப்படுத்தி விடுவாராயின், அதனால் அரசுக்கும் நாட்டிற்கும் பெருங்கேடு விளைந்து விடும். அதனால் ஆங்கு அமர்த்தப்படும் ஏவலர்கள், இந்நாட்டு அரசியலில் ஆர்வம் காட்டும் தேவையற்ற அயல்நாட்டவராகவும், ஒரோவழி அதில் ஆர்வம் கொண்டு, கேட்டவற்றைக் கூற விரும்பினும், கூறமாட்டா ஊமையாகவும் இருப்பவர்களை மட்டுமே அமர்த்திக் கொள்வர்”. (பக். 60, முல்லைப்பாட்டு) என்று ஏவலரின் நிலையைப் பற்றி உரையாளர் தெளிவுற எடுத்துரைக்கின்றார். இன்னும் சில ஏவலர்களைப் பற்றிய குறிப்பையும் காண முடிகிறது.

“வணக்கமுள்ளவர்கள் ஆடைகளை மடக்கிக் கொண்டு தலைவர்கள் முன் நிற்பார்கள். தலைவர்களோ தம் ஆடை நிலத்தில் புரளும்படி உடுப்பார்கள். மேல் நாட்டு அரசர்கள், அரசிகள் இ;வ்வாறு தம் ஆடை நிலத்தில் புரளும்படி உடுத்திருப்பதை படங்களில் காணலாம். அவர்கள் நடக்கும் போது ஆடை துணிகளை எடுத்துச் செல்ல சில ஏவலர்கள் அருகில் இருப்பார்கள்.

“நிலந்தோய்பு உடுத்த நெடுநுண் ணுடையர்”
என்று இத்தகைய பெருமக்களைப் பற்றிய பெருங்கதை என்னும் பழங்காவியம் கூறும்”. (ப. 246, திருமுருகாற்றுப்படை) என்று குறிப்பிடப்படுகின்றது.

புகார்க் காண்டம் ‘கானல் வரி’ (பகுதி - 17: பா - 24) பகுதியில் கோவலன் மாதவியை விட்டு பிரிகின்ற காட்சி வருகின்றது.
“..................................................................
உவவுஉற்ற திங்கள் முகத்தாளைக்
கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுது ஈங்குக் கழிந்தது
ஆகலின், எழுதும்’ என்று உடன்எழாது,
ஏவலர் உடஞ்சூழக் கோவலன் - தான் போன பின்னர்” (பா. 52)

என்னைப் போல கானல்வரி பாடாமல், வஞ்சனையுடன் பொய்கள் சேர்த்து மாயம் செய்யவல்ல இவள், வேறு யாரையோ நினைத்துப் பாடினாள்” என்று எண்ணினான். யாழிசையின் மூலம் வந்த அவனுடைய ஊழ்வினை அவனுக்கு கோபத்தை ஊட்டியது. அதனாலே, முழு நிலவு நாளில் தோன்றுகின்ற நிலா போன்ற தூய முகமுடைய மாதவியுடன் இணைந்திருந்த தன் கையை நழுவினான். பொழுது சாய்ந்துவிட்டது என்று கூறி ஏவலர் மட்டும் சூழ மாதவியை விட்டுவிட்டுப் புறப்பட்டான்”. என்ற கருத்து காணப்படுகின்றது. இதன் வழி, மன்னர்கள், அந்தணர்கள், வணிகர்கள் மற்றும் சில உயர்ந்தோராக இருந்தோருக்கு ஏவல் செய்யும் பணியாளர்கள் இருந்ததை அறிய முடிகிறது. போர்த்தொழில் முதல் குடும்பம் வரையும் ஏவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தம் ஏவலாளராக நியமிப்போரின் அடிமையாக, பணிபுரிந்து வாழ்க்கையை நகர்த்தியுள்ளனர் என்பதை அறிகின்றோம்.

வழக்குரை காதையில் பாண்டியன் உயிர் நீக்கும் முன் கோப்பெருந்தேவி வரவும், பலரும் ஏவலர்கள் படைசூழ வந்தனர். கண்ணகியின் காற்சிலம்பை கையிலேந்தி ‘ஏவலன்’ வருகின்றான் என்பதெல்லாம் நினைவிற் கொள்ளத்தக்கது. ஆக, உயர்ந்தோராகவும், பொருளாதாரம் அதிகாரத்தில் இருந்தோரின் ஏவலராகவும் சிலர் வாழ்ந்து வந்ததை அறிகின்றோம்.

வினைவலர்

பிறர் சொன்ன செயல்களைச் செய்வோர்
தொழில் செய்வதில் வல்லமையுடையோர் - வினைவலர் என்பர். Those who do an act under orders, as of a king; பிறரேவிய காரியங்களைச் செய்வோர். தொல்காப்பியர்,
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இலபுறத் தென்மனார் புலவர்” (தொல். பொ. நூ.) என்பார். தொழில் செய்யும் தகுதியை உடையவரென கூறுவர் பல ஆய்வாளர்.

“ஆயர், குறவர், உழவர், பரவர் என முல்லை முதல் நானில மக்களும், நிலக்குறிப்பின்றி யாண்டுமுள ‘வினைவலர் ‘ஏவன் மரபினர்’ என்றிரு வகையின் மக்களுமாக அறுவகைப்பட்ட தமிழ்க்குடிகள் உண்மையைத் தொல்காப்பியரே அகத்திணையியலில் தெரிவித்துள்ளாராதலின்” (தொல். பொருள். ப. கூக) என்று நிலமக்கள் தவிர பிறமக்களே வினைவலர், ஏவலர் என்பதும் புலனாவதை காணலாம்.

இழிந்தோர்

இழிந்தோர் - தாழ்ந்தோர்; இழிபு - தாழ்வு; இழிந்தோர் - தாழ்ந்த நிலையில் இருக்கின்றவர். இழிசொல் - கேவலமான சொல், இழிசெயல் - கேவலமான செயல்

இழிவுபடுத்த - தாழ்வுபடுத்த - என இழி, இழிபு, இழிவு, இழிந்தோன் (ர்) போன்ற சொல்லாட்சிகள் மனிதன் ஏற்றுக் கொள்ள முடியாத அசிங்கமான, கேவலமான செயலை செய்வோர் என கருதினர்.

“சிறியா ரினத்துச் சேர்வின்மை
இழிந்தோர் குழுவிலே சேராதிருத்தல்” என்ற வரிகள் அவரிடம் சேராதிருத்தல் உயர்ந்தோரின் தகுதியென்பர். சிறியார் - இழிவான செயலை செய்யும் இனத்தார்;
தேவநேயப் பாவாணர், திருக்குறள் பாடல் 918, 919, 920, 921 - ஆகிய பாடல் கருத்தாக விலைமகளிரொடு கூடுவோர் ‘இழிந்தோர்’ என்பது கூறப்பட்டது என்றுரைக்கின்றார்.

பந்தி அம் புரவி நின்றும்
பாரிடை இழிந்தோர் (பா. 785 : 1 - 2)

வரிசையாக செல்லும் அழகிய குதிரைகளிலிருந்து நிலத்தில் இறங்கின மகளிர்” என்று விளக்கம் வருகின்றது.

பண்டமாற்றும் தனியார் உடைமையும், வர்க்கங்களும் தோன்றுதல்

ஆரம்ப கால உழைப்புப் பிரிவினையானது ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடையில் ஆண், பெண் பாலருக்கும் வெவ்வேறு வயதினருக்குமாகிய இயற்கையான வேறுபாடுகளை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. ஆனால் பிற்காலத்து சமுதாயங்களும் பிறகு தனிப்பட்ட உறுப்பினர்களும் பல்வேறு உற்பத்தித் துறைகளிலும் தனித்தேர்ச்சி பெறும் நிலை ஏற்படலாயிற்று. இது சமூக உழைப்புப் பிரிவினையாகும்.

செழிப்பான புல்வெளிப் பிரதேசங்களில் வசித்தக் குடிகள் பயிர்ச் சாகுபடியையும் வேட்டையாடுதலையும் கைவிட்டு, கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாயினர். கால்நடை வளர்ப்பானது பயிர் சாகுபடியிலிருந்து பிரிக்கப்பட்டதுதான் முதலாவது பெரிய சமூக உழைப்புப் பரிவினையாகும். இதன் விளைவாய் பண்டமாற்று (டீயசவநச) எழுந்தது.

விவசாயத்திலிருந்து கைத்தொழில்கள் பிரிக்கப்பட்டது இரண்டாவது பெரிய உழைப்புப் பிரிவினையாகும். இதனால் பண்டமாற்றுக்கு மேலும் விரிவான அடித்தளம் தோற்றுவிக்கப்பட்டது. கைவினைஞர்கள் உற்பத்தி செய்த பொருட்கள் யாவும், அல்லது அநேகமாய் யாவும் பரிவர்த்தனை செய்யப்பட்டன.

ஆரம்பத்தில் குடிகளின் தலைவர்களாகிய மூதாளர்களும் குலபதிகளும் இந்த பரிவர்த்தனையை நடத்தி வந்தனர். ஆனால் பரிவர்த்தனை வளர்ந்து விரிவடைந்ததும் இவர்கள் இதுகாறும் சமுதாயம் அனைத்துக்குமுரியதாய் இருந்த சொத்தை தமது சொந்த உடமையாய்க் கருத முற்பட்டனர். பரிவர்த்தனைக்குரிய இலக்குப் பொருள்களாயிருந்த கால்நடைகள் தான் முதலில் தனியார் உடைமையாக்கப்பட்டன. சமுதாய உறுப்பினர்களிடையே இவ்விதம் சொத்துடைமையில் சமத்துவமின்மை ஏற்படலாயிற்று. அதன் பின்னரான மன்னர் உடைமை சமூகத்திலேயே மேற்கூறிய வகுப்பமைவுகள் தமிழகத்தில் தோன்றியிருக்கின்றன.

துணை நூற்பட்டியல்

1. அரசியல் பொருளாதாரம், லெவ் லியோன்டியெவ், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ - 1975.
2. கழகத் தமிழ் அகராதி, சை.சி. நூ. கழகம், சென்னை.
3. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, தமிழ்ப் பல்கலைக் கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவூர். மு.ப. 2008.
4. தொல்காப்பியம், தி.சு. பாலசுந்தரம் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 1, மு.ப. 1953
5. சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985.
6. நற்றிணை, ஒளவை துரைசாமி, அருணா பப்ளிகே~ன்ஸ், சென்னை-17, 1968.
7. கலித்தொகை, மா. இராசமாணிக்கனார், வள்ளுவர் பண்ணை, சென்னை - 1, 1958.
8. பதிற்றுப்பத்து, சை.சி. நூ. கழகம், திருநெல்வேலி.

- முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம்