நலவாழ்வும் உடையும்

உடலுக்கு அழகைத் தருவதுடன் நல்வாழ்வுக்கு அரணாகவும் விளங்குவது உடை. ‘உணவு, உடை, உறையுள்’ எனும் அடிப்படைத் தேவைகளுள் நடுநாயகமாக இருக்கும் ‘உடை’ உடலுக்கு அழகையும் தந்து, தட்பவெப்ப நிலைகளாலும், புற அழுக்குகளாலும் உடல் தரக்குரவு பெறாமல் பாதுகாக்கும் இரட்டைப் பயனைத் தருகின்றது. புறத் தூய்மைகள் என இன்றைய அறிவியல் மருத்துவர்கள் குறிப்பிடுவனவற்றுள் உடைத் தூய்மையும் ஒன்றாகும். ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ எனும் மூதுரை, உடைத் தூய்மையை வலியுறுத்தும். அழகுணுர்ச்சியும், நலவாழ்வு நோக்கும் இணைந்ததன் இனிய சின்னம் ‘உடை’, தசைகளின் போர்வையாக அமைந் துள்ள தோலின் பாதுகாப்பிற்கும், அதன் மூலம், உள்ளுறுப்புகளின் சிதைவைத் தடுப்பதற்கும் பேருதவி புரியும் உடையின் முதல் நோக்கம், நலவாழ்வு நோக்கமாக அமைதல் இன்றியைமையாததாகும். பருத்தி, பட்டு போன்ற இயற்கைப் பொருள்களிலிருந்து உருவாக்கப் படும் ஆடைகள் நலவாழ்வு நல்கும் திறனுடையன.

இன்றைய தமிழர் வாழ்வில் இடம் பெற்றுள்ள பல்வேறு வகையான ஆடைகள், அழகுணர்வை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அமைவதால், தோல் தொடர்பான பல்வேறு நோய்கள் ஏற்படுவதுடன் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களும் வர வாய்ப்புள்ளதை மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.

பழந்தமிழர் வாழ்வில் நிலவிய ‘உடை’ வகைகளைச் சங்க இலக்கியம் வழி ஆராய்ந்தால், அவை, நலம் நல்கும் நன் நோக்கத்தினையும், அழகுணர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டிருந்ததை அறியலாம்.

தழையுடைகள்

சங்ககாலத்தில் மகளிர் தழையுடை, மரவுரி ஆகிய இயற்கை ஆடை அலங்காரங்களையும் பருத்தியாலும் பட்டாலும் நெய்யப்பட்ட உடைகளையும் அணிந்திருந்தனர். குறமகள் மாமரக் கொத்துக்களை நடுவே வைத்து இலைகளையுடைய நறிய பூங்கொத்துகளைச் சுற்றிலும் வைத்துத் தொடுத்த பெரிய அழகிய தழைகளையுடைய ஆடையை உடுத்தினர். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அழகுணர்ச்சியைக் கொண்ட இத்தகைய தழையுடைகளை இன்றும் கிழக்கு ஆசிய நாடுகளான, பிஜித் தீவு, அவாய், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் வாழும் மகளிர் உடுத்துவது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

துகில், கலிங்கம்

செல்வந்தர்களும், அரசர்களும், ‘துகில்’ எனப்படும் ஆடை வகையினை அணிந்திருந்தனர். இன்ப துன்பங்களை உணர்த்தும் வகையிலும் அக்கால ஆடை வகைகள் அமைந்திருந்தன. கணவனைப் பிரிந்த காலத்து மனைவியர் மாசேறிய நூலால் தைக்கப்பெற்ற கலிங்கத்தை உடுத்திப் பிரிவுத் துன்பத்தை உணர்த்தினர். கணவனோடு உறையும் காலத்து பூ வேலைப்பாடுகளுடன் கூடிய ‘துகிலை’ உடுத்தி மகிழ்ச்சியைப் புலப்படுத்தினர்.

பல்வகை ஆடைகள்

பாம்பின் தோலைப் போன்ற ‘அறுவை’ எனும் ஆடை வகையையும், பட்டாடையையும், தன்னைப் பாடி வந்த பொருநர்க்குக் கரிகாலன் வழங்கினான். மூங்கில் பட்டையை உரித்தாற் போன்ற அழுக்கற்ற ‘அறுவை’ எனும் நீண்ட அங்கியை நல்லியக் கோடன் பாணர்க்கு நல்கினான். பாலாவி போன்ற தூய்மையும் மென்மையும் வாய்ந்த ‘கலிங்கம்’ எனும் உடையைத் தொண்டைமான் பாணர்க்கு அளித்தான்.

காலத்திற்கேற்ப உடை

காவிரிப்பூம்பட்டினத்துச் செல்வ மகளிர் பகற்காலத்தில் பட்டு ஆடைகளை உடுத்தினர். இராக் காலத்தில் மென்மையான துகிலை அணிந்தனர். அரசமாதேவியர் மார்பில் ‘வம்பு’ எனும் கச்சினை வலித்துக் கட்டினர்.

வீரர் உடை

இரவு நேரக் காவலர்கள் இரவில் நீல நிறக் கச்சையை அணிந்தனர். தொண்டை நாட்டுக் காவலர்கள் ‘படம்’ எனும் சட்டையை அணிந்திருந்தினர். அழுக்கேறிய கந்தலாடையை ‘சிதாஅர்’ என்றனர்.

கடவுளர் உடை

திருமுருகாற்றுப்படையில், முருகனைப் போற்றும் நக்கீரர், முருகன் ‘நலம்பெறு கலிங்கம்’ எனும் ஆடையை அணிந்திருந்ததாகக் குறிப்பிடுகின்றார். இதனால் அக்காலத்தே ‘நலம் நல்கும் நன்நோக்கிற்கே ஆடை அணியப்பட்டது’ எனும் கருத்தினைப் பெறலாம்.

முனிவர் உடை

திருவாவினன் குடியில் முருகனை வழிபட்ட முனிவர் மரப்பட்டை கொண்டு செய்யப்பட்ட உடையை உடுத்திருந்தனர். இசைவாணர்கள், அழுக்கேற்ற தூய உடையினை அணிந்திருந்தனர்.

அர்ச்சகர் உடை

ஆகம வழிபாடுகளை நெறியுடன் கடைப்பிடிக்கும் ஆலய அர்ச்சகர்கள், ‘புலராக் காழகம்’ உடுத்தி, இறைவனை வழிபட்டனர். காழகம் என்பது அரையில் கட்டப்பெறும் ஆடை. இதனை நீராடியபின் நனைத்து உடுத்தனர்.

அரசர் உடை

அரசன் கஞ்சியிட்டுச் சலவை செய்யப்பட்ட துகிலை அணிந்திருந்தான். பேகன் தான் குளிருக்காகப் போர்த்தியிருந்த ‘கலிங்கம்’ எனும் மெல்லிய போர்வையை மயிலுக்குப் போர்த்தி மகிழ்ந்தான்.

துகில், அறுவை, கலிங்கம் போன்ற உயர்ந்த மெல்லிய பூ வேலைப்பாடுடன் கூடிய ஆடை வகைகளைச் செல்வந்தர்களும் அரசரும் அணிந்தனர்.

(நன்றி: மூலிகை மணி)