“பாவா விட்ட கல் நட்டாய் நிற்கும்”

இது 1950-60களில் ஒன்றாய் இருந்த தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர் தாண்டி நாகை எல்லை வரைக்கும் கீவளுர் வட்டாரத்தில் ஒலித்த வரலாற்று வாக்கியம். பாவா என்பது தெலுங்கு குடும்பங்களில் வழங்கும் உறவுச் சொல். மாமன் – மைத்துனரைத் தான் பாவா என்பார்கள்.

அந்தக் காலத்தில் கீழத் தஞ்சை மாவட்டம், ஒடுக்கப்பட்டு கிடந்த விவசாயிகள் புத்தெழுச்சி கண்ட பூமியாய் இருந்தது. மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்பதைப் போல் பொரியார் துவக்கிய திராவிடர் விவசாய சங்கத்திற்கு இரண்டு பக்கமும் இடி. நிலப்பிரபுக்களின் எதிர்ப்பு ஒரு பக்கம். கம்யூனிஸ்டுகளின் காழ்ப்பு மறுபக்கம்.

ஒடுங்கிக் கிடந்த ஏழை விவசாயிகளில் பெரும்பாலோனோர் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு மத்தியில் தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டுகிறபோது திராவிடர் கழகத்துக்காரர்கள் சென்ற அடியாழத்திற்குக் கம்யூனிஸ்டு தலைவர்களால் ஊடுருவ முடியவில்லை. காரணம் – கம்யூனிஸ்டு கட்சியினுடைய விவசாய சங்கத் தலைவர்கள் சிலர் பார்ப்பனர்கள் – சிலர் ஆதிக்க மேல்சாதியினர். அவர்களால் தலித் தோழர்களைக் கொண்டு இயக்கத்தை கட்ட முடிந்ததே தவிர, திராவிடர் கழகத்தவரைப் போல் சாதித் தடைகளைக் கடந்து அவர்கள் வீட்டில் உண்ணுவது – அவர்கள் தோளில் கை போட்டுக் கொள்வது – ஒரே வண்டியில் – சைக்கிளில் பயணம் செய்வது போன்ற அளவுக்கு இறங்கிப் பழக முடியவில்லை. இதுவே அவர்களுடைய வெறுப்புக்கு காரணமாயிற்று. இது விரோதமாக வளர்ந்தது. பல இடங்கில் வெட்டுக்குத்துகளில் போய் நின்றது.

திராவிடர் விவசாய சங்கத்தினுடைய வட்டார நிலைத் தலைவர்களில் பல பேர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள். கம்யூனிஸ்டு கட்சியில் மேல்தட்டில் இருந்தவர்களால் அப்படி பொறுப்பை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அல்லது விரும்பவில்லை. திராவிடர் கழகத்தினுடைய வட்டாரத் தலைவர்களாகவும் – விவசாயத் தலைவர்களாகவும் இருந்த குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் பொரவாச்சேரி உத்திராபதி. அவரை போல் வேறு பலரும் இருந்தார்கள். அவருடைய மகன் தான் 2006 – 2001ல் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராய் இருந்த உ.மதிவாணன். கம்யூனிஸ்டு கட்சியின் செல்வாக்கு பெற்ற தலித் தலைவர் ஏ.கே.சுப்பையா. அவருக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் மேல்சாதி தட்பவெப்ப நிலை ஒப்புக் கொள்ளாமல் தி.மு.க.வுக்கு வந்து விட்டார். அவருடைய மகன் தான் நாகை மாவட்டத்தின் திமுக செயலாளரும் – பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ்.விஜயன்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் கட்டுரையின் துவக்கத்திற்கு வாருங்கள். கீவளுர் வட்டாரத்தில் விவசாய சங்க தளநாயகர் பாவா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன். பலருக்கு – அதிகாரிகள் உட்பட அவர் பெயர் கூடத் தெரியாது.

சற்று குட்டையான உருவம். ஒல்லியான உடல்வாகு. ஏறுமாறாக கட்டிய நாலு முழ வேட்டி. பனியன் போடாமல் காலர் இல்லாத ஜிப்பா. எப்போதும் பொத்தான் போட மாட்டார். ஒரு கண் சற்று மாறு கண்ணாக இருக்கும். இவர் தான் சாதிப் பின்னணி – சமுதாயப் பின்னணி – பட்டுப் பட்டாடைகளோடும் – கம்பீரமான தோற்றத்தோடும் பவனி வந்த கம்யூனிஸ்டு கட்சியினுடைய விவசாய சங்கத்தலைவர்களை – சட்டமன்ற உறுப்பினர்களை – தலைமறைவு இயக்க மாவீரர்களை – எதிர் கொண்டவர் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. பாவா நவநீதகிருஷ்ணனுடைய துணிச்சலுக்கும் – வெற்றிக்கும் பின்னால் இருந்தது இரு பெரும் சக்திகள். ஒன்று மக்கள் சக்தி. இன்னொன்று பெரியார் என்கின்ற மகா சக்தி.

மற்ற கட்சிகளினுடைய தொழிற்சங்கத் தலைவர்களைப் போல் பாவா சங்கத்தையே தொழிலாகக் கொண்டவர் அல்ல. சம்பளம் பெற்றுக் கொண்ட முழு நேர ஊழியரும் அல்ல. அவருடைய வாழ்வு ஆதாரத்திற்கு என்று தனியே தொழில் வைத்திருந்தார். மிகப் பெரிய வணிக வளாகமோ – ஆலையோ அல்ல. தஞ்சை மாவட்டத்தில் ஏழை விவசாயத் தொழிலாளிகளுடைய நொறுக்குத் தீனி, புறை என்று சொல்லப்படுகின்ற வரிக்கி. வட்ட வடிவில் மொறுமொறுவென்று இருக்கும். அதை தேநீரில் நனைத்து சாப்பிட்டு இளம்பசி ஆற்றிக் கொள்வார்கள். இது போன்ற கிராமத்து சிறு கடைகளின் மலிவு விலை பண்டங்களான பன் – குச்சி ரொட்டி – இனிப்பு ரொட்டி இவைகளைத் தயாரிக்கின்ற ஒரு சிறு அடுமனை (பேக்கரி) தான் பாவாவினுடைய தொழில் கூடம். இந்த வருவாயில் தான் அவர் வாழ்ந்தார்.

பாவா சிறந்த பேச்சாளர் அல்ல. அழகுத் தமிழ் அவருக்குத் தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் ஏழை விவசாயிகளுக்குப் புரியும் எளிய மொழி தான். திராவிடர் கழக மேடைகளில் பேசுகிறபோது மாத்திரம் அவருடைய பேச்சு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

விவசாயப் பிரச்சனைகளுக்காக – போராட்டங்களுக்காக – பாவா கூட்டுகிற கூட்டங்கள் ஆணும் – பெண்ணுமாய் கூடி பிரம்மாண்டமாய் இருக்குமாம். அந்தக் கூட்டங்களில் பாவா கொடுக்கிற அறிவிப்புகள் இராணுவத் தலைவனுடைய ஆணையைப் போல் தான் இருக்குமாம். பாவா தன்னுடைய பேச்சு முடிவில் அல்லது இடையிடையே பயன்படுத்துகிற அன்பு கலந்த ஆணை – ஓங்கிய குரலில் “பாவா சொன்னா...” என்று நிறுத்தி இடைவெளி கொடுப்பாராம். மொத்த கூட்டமும் “பாவா சொன்னா சொன்னது தான்” என்று வழிமொழிவார்களாம்.

கீழத் தஞ்சை மாவட்டத்து விவசாயிகளைப் பெரியாரின் தொண்டன் பாவா வெறும் திராவிடர் கழக கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட விவசாய சங்க உறுப்பினர்களாக மாத்திரம் வைத்திருக்கவில்லை. அவர்களை திராவிடர் கழக கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டர்களாக ஆக்கி இருந்தார்.

தீபாவளி திராவிடர் திருநாள் அல்ல. அதைத் தமிழர்கள் கொண்டாடக் கூடாது. நரகாசுரன் என்ற தமிழன் செத்த நாள். அது தமிழனுக்கு துக்க நாள். அதை பெரியார் தொண்டர்கள் கருஞ்சட்டை அணிந்து கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்த காலம் ஒன்று உண்டு. அதை அப்படியே கடைப்பிடிக்க கீழத்தஞ்சை மாவட்ட விவசாயிகளை உருவாக்கியத்தில் பாவா நவநீதகிருஷ்ணனுடைய பங்களிப்பு மறக்க முடியாது என்று இன்னமும் சொல்வார்கள். அந்த நாளில் வழக்கமாக கறி – மீன் – குழம்பு – இட்லி என்று சாப்பிடும் வசதி பெற்ற நடுத்தர குடும்பங்களில் கூட மூன்று நேரமும் சமைக்காமல் பழைய பிடிவாதக்காரர்கள் இந்த பகுதியில் இருந்ததை நான் (செல்வேந்திரன்) கேட்டிருக்கிறேன். சூரனூர் என்ற ஊரில் பார்த்திருக்கிறேன்.

பாவா விட்ட கல் நட்டமாய் நிற்கும் என்ற சொல்வடை எப்படி வந்தது என்று கேட்டேன். நண்பர்கள் வேடிக்கையாகச் சொன்னார்கள். கல்லை உயரே தூக்கி எறிந்து விட்டு கீவளுர்காரர்கள் எல்லாம் உணர்வோடு அடிவயிற்றிலிருந்து “பாவா.......பாவா.......” என்று எழுப்புகிற ஓசையில் அந்த கல் அப்படியே நிற்கும் என்றார்கள் வேடிக்கையாய்!

சீன விவசாய இயக்கத்தின் தந்தை மா.சே.துங். கீழத்தஞ்சை மாவட்டத்து மா.சே.துங் பெரியாரின் தொண்டன் பாவா நவநீதகிருஷ்ணன் தான். இதை குன்றேறி நின்று கூவலாம்.

பாவா மா.சே.துங் போல் கவிதைகள் படைத்தவன் அல்ல. சரித்திரம் படித்தவன் அல்ல. ஆனால் அவனே கவிதையாய் நின்றவன். சரித்திரமாய் வென்றவன்.

(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)

சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை