ஆண்டாண்டுக் காலமாகப் புரையோடிப்போன சாதி இறுக்கத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து, விடாப்பிடியான போராட்டத்தை நடத்திய சமூக நீதிப் போராளி தந்தை பெரியார் பிறந்து வளர்ந்த பூமி ஈரோடு நகரமாகும். இங்குதான் 23.3.2010 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலித் பெண்களுக்கான முதல் மாநாடாக தலித் பெண்களின் மண்டல மாநாடு நடைபெற்றது. கொங்கு மண்டலமான நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து சாரை சாரையாக காலை 9 மணி முதல் பெண்கள் வரத் தொடங்கினர். மண்டபத்தினுள் நுழையும் ஒவ்வொரு பெண்மணியும், முகத்தில் அமைதியையும், மனதில் பூகம்பத்தையும் கொண்டு வருகிறார்கள் என்பதை மாநாட்டிற்கான விளம்பரத் தட்டியைக் கிழித்த ஆதிக்க சாதிகளுக்கும், பெரியார் சீடர்களின் காவல்துறைக்கும் தெரிந்திருக்கவில்லை.

தலைமையுரை ஆற்றிய தோழர் பேபி (எ) நர்மதா, தனது கிராமத்தில் அவரும் அவரது கணவரும் ஆதிக்க சாதிகளால் துன்புறுத்தப்பட்டதையும், நேர்ந்த அவமானங் களையும் விவரித்த பாங்கும், உணர்ச்சிக் கொந்தளிப்பும், அதில் உருவான சொல்லாடல்களும் “சேரிகள் கொஞ்சம் சிலிர்த்தால் போதும், சிம்மாசனங்கள் உளுத்துப்போகும்” என்ற பழைய கவிதை வரிகளை நினைவூட்டியது. தலித் பெண்களின் உள்ளத் தகிப்பின் குரலாக அவரது உரை அமைந்தது.

மாநாட்டில் துவக்கவுரையாற்றிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.சம்பத் தனது உரையை தலைமையுரையாற்றிய பேபியின் உரையிலிருந்தே துவங்கினார் பேபிக்கு ஏற்பட்ட பிரச்சனை என்பது அவர் ஊர்ப் பிரச்சனை மட்டுமல்ல, தமிழகத்தின் பிரச்சனை, இந்நாட்டின் பிரச்சனை என்றார் தீண்டாமையையும், சாதீயக் கட்டமைப்பையும் தகர்த்தெறியாமல் இப்பிரச்சனையைத் தீர்க்க இயலாது. தீண்டாமையானாலும், சாதிய மோதல் ஆனாலும் பாதிக்கப்படுவது தலித் பெண்களே. ஆதலால், தலித் பெண்களுக்காக மாநாடுகளை நாம் நடத்தி வருகிறோம் என்றார். உத்தப்புரம் குறித்து அவர் விவரிக்கும்பொழுது காவல்துறை ஆண்களை வேட்டையாடத் துடிக்கும்பொழுது, ஆண்களே இல்லாத அவ்வூரில் மூதாட்டி ஒருவர் மரித்துப்போக, பெண்களே அவரை அடக்கம் செய்த நிகழ்வு பண்பாட்டுத் தளத்தில் தலித் பெண்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் என அவர் முழங்கியபோது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்து போனது.

கோவை பெரியார்நகர் சுவர் உடைப்பு, கல்கேரி, நாமக்கல் கோயில் நுழைவுப் போராட்டங்கள், திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் மயானத்திற்கான போராட்டங் கள், தலித் மக்களின் ஒற்றுமைக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். பிராமணர் மற்றும் அருந்ததியர் தவிர மற்ற அனைத்துச் சாதிகளும் மேல்சாதி மற்றும் கீழ்ச்சாதி என்ற இரண்டு தன்மைகளையும் பெற்றிருக்கிறது. நம்மை ஆளும் நீதிகளின் கருவாய் மனுவே இருக்கிறது என்பதை அவர் உரை உணர்த்தியது. சாதி சுத்தமாக இருக்கவேண்டுமானால் பெண்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிறது ஆதிக்க சாதி. எனவேதான் சாதி மறுப்புத் திருமணத்தை மூர்க்கத் தனமாக எதிர்க்கிறது. பல இடங்களில் கலப்பு மணம் புரிந்தவர்களை உயிரோடு எரிக்கின்றனர். சாதிய மோதலில்கூட தலித் பெண்களே தாக்கப்படுவது தொடர்கிறது என்றார். சாதியப் புற்றுநோய் கிளை விரித்து வேரோடிக் கிடக்கிறது. வேரிலே வெடி வைக்காமல் சாதியை ஒழிக்க இயலாது எனத் தோன்றியது.

மற்ற உயர் சாதிப் பெண்கள் போல் அல்லாமல், தலித் பெண்கள் அனைவரும் வேலைக்குச் சென்று உழைப்பவர்களாக உள்ளனர். பெண் வருமானம் இன்றிக் குடும்பம் உயிர்வாழ இயலாது. இவர்களின் வறுமையைப் பயன்படுத்தி பாலியல் தொந்தரவுகளையும், கேலியும், கிண்டலும் செய்கிறது ஆதிக்க சாதி. வன்கொடுமைச் சட்டங்கள் அமலாவதில்லை. மாறாக காவல்துறை “அமைதியை நிலைநாட்டுகிறோம்” என்ற பெயரில் தலித் பெண்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது. கொடியங்குளம், நாலுமூலைக்கிணறு, சங்கரலிங்கபுரம், காங்கயனூர் ஆகிய ஊர்களில் நடந்த நிகழ்ச்சிகளே சான்றுகளாகும். இதில் தலித் பெண் சட்டமன்ற உறுப்பினர்கூட தப்பிக்க இயலவில்லை. இப்படிப்பட்ட நிலைமைகளை எதிர்த்து, மக்களைத் திரட்டி வீரம் செறிந்த போராட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றார். “வறுமையே வரலாறாகி, நொந்தவன் கணக்கே இல்லை. நூறு நூறு ஆண்டாய் இங்கு வெந்தவன் கண்ணீருக்கு விடைகளே கிடைக்கவில்லை” என்ற கவிஞனின் சீற்றம் இவர் உரையில் எதிரொலித்தது. இவற்றை வெல்ல இயலும் என்ற நம்பிக்கையை ஆழமாகத் தனது உரையில் விதைத்தார்.

பெண், வருமானம் சம்பாதிக்கும் குடும்பத்தில்கூட ஆணாதிக்கம் நிலைபெற்று இருக்கிறது. இது தலித் குடும்பங்களுக்கும் பொருந்தும் என்றார். எனவே, “தலித்துகளிலும், தலித்துகளாக” தலித் பெண்கள் இருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். துப்புரவுத் தொழில் செய்யும் பெண்கள், தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப இயலாதது குறித்தும், அதனாலேயே தலித் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, இதற்கேற்ப கோரிக்கைகளை உருவாக்கி, தொடர்ந்து போராடி வருவதைத்தவிர மாற்றுவழி ஒன்றுமில்லை என வலியுறுத்தினார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த மூன்று வருடங்களாகத் தலித் பெண்கள் உட்பட அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் ஒருங் கிணைத்து, தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை நடத்தி பல வெற்றிகளையும் பெற்றுள்ளது. இது தலித்துகளின் பிரச்சனை அல்ல. ஒரு தேசத்தின் பிரச்சனை, ஜனநாயக இயக்கங்களின் பிரச்சனை. உத்தப்புரத்தில் 2000 பேர்கள் கலந்துகொண்டனர். இதில் சரிபாதி உயர்சாதியினர் ஆகும். கோவை பெரியார்நகர் தீண்டாமைச் சுவர் இடிப்பிலும் இதர சாதி மக்களும் கலந்துகொண்டனர். இந்தியாவில் எந்தக் கட்சியும் செய்ய முன்வராதபோது, நாம்தான் வாலிபர் சங்கம், மாதர் சங்கம், இதர உழைப்பாளி மக்களையும் திரட்டி, ஒன்றுபடுத்தி போராடி வெற்றி பெற்றுள்ளோம். அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றுதிரட்டிப் போராடுவதற்கு சாதிப் பிரிவினை, தீண்டாமை ஆகியவை தடையாக உள்ளன. இதை முறியடித்து சமூக நீதிக்கான போராட்டத்தை முன்கையெடுத்துப் போராடுவோம், வெற்றி பெறுவோம்-என முடித்தார்.

7 மாவட்டங்களிலிருந்து 179 தலித் பெண்கள் இம்மாநாடாடில் கலந்து கொண்டனர். அவர்களில் 21 பெண்கள் தங்களின் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சாதிகளின் வேரில் தங்களது கனன்றெழுந்த வார்த்தைகளை வீசினர். “குலத்திலே விலக்கி, கல்விக் கூடத்திலே விலக்கி, கோயில் தலத்திலே விலக்கி, ஊரில் தனிமையில் விலக்கி, புதைக்கும் நிலத்திலே விலக்கி, உண்ணும் நீரிலே விலக்கி, தங்களின் பலத்தையெல்லாம் விலைக்கு வாங்கிச் செறித்த ஆதிக்க சக்திகளின் கயமைத் தனத்தை தோலுரித்துக் காட்டினார்கள். கலப்பு மணம் செய்துகொண்ட தனது தந்தை ஒரு டி.வி. மெக்கானிக் என்றும், இவர் டி.வி. ரிப்பேர் செய்யச் செல்லும் ஒவ்வொரு வீடுகளிலும் இவரை வீட்டினுள் விடாமல், டி.வி. பெட்டியை வெளியே கொண்டு வந்து ரிப்பேர் செய்யச் சொல்வதும், வேலை முடிந்து அவர் வந்ததும், அவர் அமர்ந்திருந்த இடத்தைத் தண்ணீர் கொண்டு கழுவும் ஆதிக்க சாதிகள் குறித்து திருப்பூர் ஜான்சிராணி பேசி அழுதபொழுது, அரங்கம் முழுவதும் அமைதியானது.

உடனே, தனது தோழி பொற்கொடி வீட்டிற்குச் சென்றபொழுது, தனது தோழியின் தாயார் “அவளோடு சேராதே” எனக் கூறியபொழுது, “இவள் என் தோழி, சேர்ந்துதான் இருப்பேன்” என பொற்கொடி தாயாருக்கு எதிராகக் குரலெழுப்பியதைக் குறிப்பிட்டபொழுது கைதட்டலால் அரங்கமே அதிர்ந்துபோனது. வளரும் தலைமுறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. விவாதத்தில் பங்குகொண்ட தலித் பெண்மணி கள், தாங்கள் அனுபவித்த தீண்டாமைக் கொடுமைகள் அனைத்தும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது ஆய்வின் மூலம் வெளிப்படுத்திய தீண்டாமையின் பல்வேறு வடிவங்களாகும்.

தீண்டாமைச் சுவர், ஆலயத்தில் நுழைய தடை, இரட்டை டம்ளர், மலத்தைத் தலையில் சுமத்தல், சுடுகாடு இல்லாமை, தண்ணீர் விநியோகத் தீண்டாமை- என விவாதத்தில் அவர்கள் காட்சிப்படுத்திய விதம் நெஞ்சை உலுக்கியது. வன்புணர்ச்சிக்கு தலிப் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்த ஆதிக்க சாதி இளைஞர்கள் மீண்டும் இன்று வரை ஊருக்குள் வராதவாறு செய்த மார்க்சிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளை சத்தியமங்கலம் மல்லிகா எடுத்துரைத்தபோது இவர்களின் அடிமனதில் நம்பிக்கையின் ஊற்றாக மார்க்சிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும்தான் உள்ளது என்பது புரிந்தது. தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அனைத்துப் பெண்களின் மனதில் நம்பிக்கை மட்டுமல்ல, இவற்றைத் தொடர்ந்து எதிர்த்துப் போராடும் மன உறுதியும் வெளிப்பட்டது.

இம்மாநாட்டின் தீர்மானங்களை விளக்கிப்பேசிய பொன்னுத்தாயி, தலித்துகளின் கையில் நிலம் இல்லாத தால், வேலைப் பாதுகாப்புக்காக இதர சாதியினரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. உத்தப்புரத்தில் தலித்து களிடம் சிறிது நிலம் இருந்தததால் ஆதிக்க சாதியினருக்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக நின்று வெற்றிபெற முடிந்தது. எனவே அரசு அறிவித்த 2 ஏக்கர் நிலம் உடனே வழங்கப்பட வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் நடைமுறை உறுதிசெய்யப்பட வேண்டும், தலித் மக்கள் சிறப்பு உட்கூறு திட்டத்தில் கொண்டுவரும் நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும், தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், பள்ளிகளில் உள்ள தீண்டாமை நீக்கப்பட வேண்டும், தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும், நூறுநாள் வேலைத் திட்டத்தில் நாட்களையும், கூலியையும் உயர்த்தித்தர வேண்டும், நகர்ப்புறத்திற்குப் புலம்பெயரும் தலித் குடும்பங்களுக்கும் குடும்ப அட்டை வழங்க வேண்டும், துப்புரவுத் துறையில் பெண்களுக்கு காலைநேரப் பணி கொடுப்பதை நிறுத்த வேண்டும், மனித மலத்தை மனிதனே அள்ளும் மனிதநேயமற்ற பணிகளை உடனடியாக நிறுத்தவும் மற்ற வேலைவாய்ப்பை உறுதிசெய்யவும் வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிந்து, விளக்கமாக எடுத்துரைத்தார்.

“தும்முவதற்கெல்லாம்

பொது நலவழக்கு

சில பொறம்போக்குகளின்

பொழுதுபோக்கு

தொலையட்டும் விடு

பீ அள்ளும் தொழிலை

எல்லா சாதியும் பங்கிட்டுக்கொள்ள

போடமுடியுமா உன்னால்

ஒரு பொதுமல வழக்கு”

என்ற கவிஞர் வெண்புறாவின் தகிப்பு, தோழர் பொன்னுத்தாயின் உரையில் தெறித்தது. வாழ்த்துரை வழங்க வந்த, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் அமிர்தம், கொங்கு மண்டலங்களில் தலித் மக்களை அவள், இவள் என்றும், அவன், இவன் என்றும் பேசும் ஆதிக்க சாதிகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும், தலித் பெண்களின் தொடர் போராட்டங்களுக்கு மாதர் சங்கமும் துணைபுரிந்து நிற்கும் என்றும் சொன்னார்.

இறுதியாக சிறப்புரை ஆற்றிய அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் உ.வாசுகி, மற்ற பெண்களை விட தலித் பெண்கள் அதிக பிரச்சனைகளையும், அவமானங் களையும் சந்திக்கின்றனர். அருந்ததியப் பெண்கள் இன்னும் கூடுதலாக அனுபவிக்கின்றனர். இவர்கள் சுரண்டலில் அடிமை, சாதிகளில் அடிமை, பெண் அடிமை என மூன்று தளங்களிலும் அடிமைகளாக உள்ளனர். அன்றாட வாழ்க்கையே போராட்டம்தான். அனைவருக் கும் உள்ள உரிமைகூட இவர்களுக்கு இல்லை. “குடி மக்கள்” என்ற தகுதிகூட கிடையாது என்று கூறினார்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு மனு, சண்டாளர்கள் தலித்துகள் எப்படி வாழ வேண்டும் என்பதை வரையறை செய்தது, நடைமுறையில் அமல்படுத்தப்படுகிறது என்பது அவர் உரையில் வெளிப்பட்டது.  “சண்டாளர் ஊருக்கு வெளியே வாழ்க. உலோக ஏனம் பயன்படுத்தக்கூடாது. இவர் தொட்ட பாத்திரம் துலக்கினும் தூயதாகாது. இரும்பும் பித்தளையுமே இவர் நகை. சண்டாளர் உடைந்த சட்டியிலிலேயே உணவு உண்க. பிணத்தின் மீதிடும் ஆடைதான் இவர்களுக்கு உடை. சண்டாளர் தம் சாதியிலேயே பெண் கொள்ளுதலும், கொடுப்பதும் செய்க. நாய், கழுதை வளர்க்கலாம். மாடு வளர்க்கலாகாது (மனு தர்மம்) தமிழ்நாடன் பக் 154) “குடி மக்கள்” என்ற தகுதியை வழங்காத மனு தர்மம் இன்னும் தொடர்கிறது.

சத்துணவுக் கூடத்தில் சமையல் வேலை செய்ய இயலாது. பள்ளியில் தலித் குழந்தைகளுடன் தமது குழந்தை சாப்பிடுவதை தடைசெய்வது என்ற தீண்டாமை யின் வடிவங்களை பட்டியலிட்டார். ஆதிக்க சாதிகள், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தும் பொழுது முதலில் தலித்துகளின் பொருட் களையே சேதப்படுத்துகிறார்கள். மேலும் தலித் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் தாக்குதலின்போது தலித்துகளின் வீடுகளை உடைத்தனர். பின்பு தாயையும், மகளையும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனர். அவர்களது பிறப்புறுப்புகளை அரிவாளால் கொத்திக் கொலை செய்தனர். உத்தப்புரத்தில் வீட்டின் கதவுகளையும், கண்ணாடிகளையும் உடைத்து நொறுக் கினர். மாட்டுக் கொம்புகளை உடைத்தனர். தலித் மக்களின் வீட்டில் உள்ள பீரோ, இரு சக்கர வாகனங்கள் போன்ற பொருட்களை உடைத்து நாசமாக்கினர். ஒருபுறம் பொருளாதாரத்தில் தலித்துகளின் வளர்ச்சியை முடக்குவது மறுபுறம் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவது. இது தலித்துகளின் பிரச்சனையல்ல; ஒட்டுமொத்த உழைப்பாளர்களின் பிரச்சனை. இதை எதிர்த்து அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றிணைத்து விடாப்பிடியாகப் போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றார்.

இந்திய நாட்டின் அரசியல், பொருளியல் ஆளுமைகள் பெரு முதலாளிகள் மற்றும் நிலவுடைமையாளர்களின் கையில் உள்ளது. பண்பாட்டுத் தளம் என்பது இன்றுவரை மனுவின் பிடியிலேயேதான் இருக்கிறது. நம்மை ஆளும் கருத்துக்களின் கருவாய், அடி நாதமாய் இருப்பதும் மனுவேயாகும். அரசியல் மற்றும் பொருளா தாரப் போராட்டத்துடன் பண்பாட்டுப் போராட்டத்தையும் இணைப்பதின் வாயிலாகவே, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை தலித் பெண்களின் கொங்கு மண்டல மாநாடு நமக்கு உணர்த்துகிறது.

-ஈரோடு தங்கவேல்

Pin It