கொல்லாமரம் என பேச்சு வழக்கில் அழைக்கப்படும் முந்திரி மரமானது, தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலை பூர்வீகமாகக் கொண்டது. 1560 ஆம் ஆண்டில், போர்த்துக்கீசியரால் இந்தியாவில் உள்ள கோவாவுக்கு எடுத்து வரப்பட்ட மரம் இது.

பொதுவாக வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் இம்மரம் வளரும் தன்மை உடையது.

theri kudiyiruppuதமிழ்நாட்டில் கடலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிக அளவில் வணிக ரீதியாக பயிரிடப்படுகிறது.

Anacardium - அனகார்டியம் என்பது கொல்லாம்பழம் எனப்படும் முந்திரிப்பழத்தின் உருவத்தை விளக்கும் பெயராகும். Ana – என்பதற்கு மேல்நோக்கிய என்று அர்த்தம். Cardium என்பது இதயத்தைக்குறிக்கிறது. தலைகீழான அல்லது மேல்நோக்கிய இதயத்தின் அமைப்புடைய பழம் உள்ள மரம் என்று பொருள் தருகிறது.

கொல்லாம்பழம் ஒரு வகையான போலிப்பழமாகும். இது பச்சைநிற காயாக இருந்து பின்னர் மஞ்சள் மற்றும் சிகப்பு வண்ணங்களில் பழுக்க கூடியது. உண்பதற்கு சுவையானது மற்றும் நீர்ச்சத்து மிகுந்தது.

பல இடங்களில் நட்டு வளர்த்து லாபம் சம்பாதிக்கும் வெறும் வணிகப் பொருளாக மாறிவிட்ட கொல்லாமரம் சாகுபடி. அத்தகைய கொல்லாமரம் இயற்கையாக தேரியில் குடியேறி செழித்து வளர்ந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்தாலும், பாதுகாப்பற்ற முறையில் அழிந்து வரும் இடமாக உள்ளது தேரிக்குடியிருப்பு என்ற கிராமத்தில்தான்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குதிரைமொழி என்ற தேரிக்குடியிருப்பு கிராமம்.

இக்கிராமத்தில் முன்னோர் வழிபாட்டு முறையில் கற்குவேல் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழாவும், பங்குனி உத்திர திருவிழாவும் வெகுஜன உழைக்கும் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது. உழைக்கும் வர்க்க மக்கள் எப்போதுமே தன் முன்னோர்களை நினைவில் வைத்து கொண்டாடுபவர்கள் என்பதற்கு இத்திருவிழாக்களே சாட்சி.

               இக்கிராமத்தின் தனித்துவமான பழக்க வழக்கங்கள் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. பிறந்த குழந்தைகளுக்கு எப்போதும் இக்கிராமத்தில் மக்கள் தொட்டில் கட்டுவது இல்லை.

திருமண நாட்களில் வீடுகளில் நடைபெறும் முகூர்த்த அரிசி அளக்கும் நிகழ்ச்சியில், நாழியில் அளக்கப்படும் அரிசி அங்குள்ள தேரிச்சாமி (தேரி என்ற மணல் பகுதியை சாமியாக வணங்குதல்) கோவிலில் வைத்து சமைத்து ஊர் மக்கள் அனைவருக்கும் சமபந்தி போஜனம் இன்றளவும் நடைபெறுகிறது.

தேரி மணல்தான் தெய்வம் என்று வாழும் மக்கள் உள்ள இக்கிராமத்தில் கொல்லாமரங்களே நிலத்தடி நீரின் சேமிப்பு கலனாக விளங்குகின்றன.

Reserved forest எனப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுததியாக தேரிக்குடியிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள தேரிக்காட்டுப்பகுதி அமைந்துள்ளது.

இங்கு தேரிமணல் பனைமரம் உயரத்திற்கு குவிந்து கிடக்கிறது. இம்மணல் குன்றின் மேல் தக்கிமுக்கி ஏறி உயரத்திலிருந்து சறுக்கினால் அதுவே ஒரு அலாதியான விளையாட்டாக சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மாறிவிடும் தன்மையது. தேரி என்ற மணல் தாய் தன் பிள்ளைகளை எப்போதும் அணைத்துக் கொள்வதால் நம் உடல் சிவப்பாகும், உள்ளம் செம்மையாகும்.

பார்ப்பதற்கு பாலைவனம் போல் தெரிந்தாலும் இது நிலத்தடி நீர் நிறைந்த செம்மண் நிலம் என்பதே உண்மை. இரண்டு தேரிமணல் குன்றுகளின் நடுவில், செழுமையான செம்மண் சமவெளிப்பகுதியும் அமைந்துள்ளது.

இப்பகுதியை பார்க்கும்போது அதன் நிலஅமைப்பு வித்தியாசமாகவும், பனைமர உயர தேரிமணலின் மீது வளர்ந்து நிற்கும் கொல்லாமரம் வியப்பையும் தருகிறது.

உற்ற நண்பன் விராலிச்செடி:

               கொல்லாமரங்கள் நிற்கும் இடமெங்கும் அதன் உற்ற தோழனாக நிலைத்து நிற்பது விராலிச்செடி. இதன் வேர்கள் மிகவும் உறுதியாக தேரிமணலைப் பற்றியிருக்கின்றன. தேரிக்காட்டில் மணல் அரிப்பைத் தடுக்கும் தோழர்கள் கொல்லாமரமும், விராலிச்செடியும் என்று சொன்னால் அது மிகையல்ல.

 சிகப்பு பழம்:

               கொல்லாமரத்தின் பூ காய்க்க ஆரம்பித்தவுடன் முதலில் முந்திக்கொண்டு வருவது (முந்திரிக் கொட்டை போல முந்தாதே என்ற சொல் வழக்கு இந்நேர்வில் நாம் அறிந்து கொள்வது) அதன் விதை ஆகும். இவ்விதை பச்சையாக இருக்கும்போது ‘அண்டி” என அழைக்கின்றனர் இக்கிராம மக்கள். அதன்பிறகு அண்டிக்கும், காம்புக்கும் இடையில் கொல்லாம்பழம் உருவாகிறது. தலைகீழாக தொங்கும் வவ்வாலைப்போல காற்றினில் அழகாக அசைந்தாடும் கொல்லாம்பழத்தை பார்க்க பார்க்க அழகு.

               முதலில் பச்சை நிற காயாக இருந்து பின்னர், மஞ்சள் மற்றும் சிகப்பு வண்ணங்களில், பழமாய் கிடைக்கிறது கொல்லாம்பழம் .

               மஞ்சள் நிற கொல்லாம்பழங்கள் காய்க்கும் மரங்கள் எண்ணிக்கையில் அதிகமாக தேரிப்பகுதியில் உள்ளது.

               ஒரு மஞ்சள் நிற பழத்தை பிழிந்தால், ஒரு டம்ளர் சாறு கிடைக்கும் அளவிற்கு பெரியது இம்மஞ்சள் நிற பழங்கள். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் கோடையை தாக்குப்பிடித்து வளரும் சிகப்பு பழம் காய்க்கும் மரங்கள் அதீத சுவை கொண்ட கொல்லாம்பழங்களை தருகிறது. சிகப்பு என்றாலே மக்களுக்கு அதிகம் நன்மை தரக்கூடியது என்பதற்கு கொல்லாமரங்களும் ஓர் சாட்சி.

               இக்கிராமத்தை முக்கால்வாசி தேரிமணல் சூழ்ந்து கொண்டுள்ளது. தேரிமணலால் சூழப்பட்ட தீபகற்பம் போல் தேரிக்குடியிருப்பு கிராம வரைபடம் உள்ளது. இதன் மத்தியிலே தார் பாலைவனம் போல் பரந்து விரிந்து கிடப்பது தான் பாதுகாக்கப்பட்ட வனப்பரப்பு.

               பெரும்பாலான வீடுகளின் ஒருபக்கம் பாதியளவு தேரிமணலில் மூழ்கிப்போயிருப்பதை நாம் நேரில் காண இயலும். இங்கு இருக்கும் ஒரு மேல்நிலைப் பள்ளியும் தேரிப்பகுதியிலேயே அமைந்துள்ளது.

               தேரிமணலில் வயதானவரும், இளைஞர்களும் குழந்தைகள் போல, தத்தக்கா… பித்தக்கா நடைநடந்து தாழம்போட்டு தான் கடந்துவரஇயலும். மணலின் அடர்த்தியில் இருகால்களும் புதைந்து கொள்ளும்.

               எந்த நிற ஆடை உடுத்தி தேரிமணலில் உலா வந்தாலும், ஆடைகள் அனைத்தும் செம்மையாக சிகப்போடு ஐக்கியமாகி விடுகின்றன.

தற்போதைய நிலை:

               தேரியில் மக்கள் குடியிருந்ததால் தேரிக்குடியிருப்பு என பெயர் பெற்றது இக்கிராமம். தற்போது, மழையின் அளவு குறைந்ததால் தேரிமணலில், நிலத்தடி நீராதாரம் குறைந்து வரும் சூழ்நிலையிலும், இக்கிராமத்தில் சுவையான நிலத்தடி நீர் குறைந்த அளவு குடிநீராக கிடைத்து வருகிறது. ஆனால் அது குடிநீருக்கும், விவசாயத்திற்கும் போதுமானதாக இல்லை.

               இங்கே உள்ள பொட்டல்குளத்திற்கு தண்ணீர் வந்தே பலவருடமாகிறது. தேரிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குளங்களும் வாய்க்கால்களும் வானம் பார்த்தபடி ஏங்கிக் கிடக்கின்றன.

               மண் அரிப்பைத் தடுத்து, நிலத்தடி நீருக்கு அரணாய் இருந்த விராலிச் செடிகளும், கொல்லாமரங்களும் பெருமளவில் சமூக விரோதிகளால் அழிக்கப்பட்டு வருவதாலும், அதிலும் குறிப்பாக விராலிச்செடிகள் வேரோடு பிடுங்கப்பட்டு மூலிகை விற்பனை என்ற பெயரில் எடுத்துச் செல்லப்படுவதாலும் இங்குள்ள சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு தேரிக்குடியிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

               வனத்துறையும் தமிழக அரசம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான தேரிக்காட்டை மணல் மாபியாக்களிடமிருந்து பாதுகாக்கவும் ( திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் தேரிமணல் பெருமளவில் தோண்டப்பட்டு தேரிப்பகுதியே கட்டாந்தரையாக மாற்றப்பட்டுள்ளது) மீண்டும் நிறைய கொல்லாமரங்களை நட்டு பராமரித்து, தேரிமணலை நிலைநிறுத்தவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இக்கிராம மக்களின் குரலாய் ஒலிக்கிறது.

               தேரிக்காட்டு கொல்லாம்பழத்திற்கு மணப்பாடு மல்லிகையான மீன்கள் இன்றளவும், பண்டமாற்று முறையில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

               ஏற்கனவே தவறான இடத்தில் அதாவது நீர்பிடிப்பு பகுதியான உடன்குடி தருவைக்குளத்தில் மணலை நிரப்பி அதன் மேற்பரப்பில் அனல்மின்நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், குளத்தை மண்போட்டு மூடிவிட்ட நிலையில் நிலத்தடி நீராதாரம் திருச்செந்தூர் வட்டார கிழக்கு பகுதி கிராமங்களில் இல்லாமலே போய்விட்டது.

               இந்நிலையில் கடற்கரையிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் மேற்கே அமைந்துள்ள தேரிக்குடியிருப்பு போன்ற கிராமங்களிலும் குளங்களில் வறட்சி என்பது, நீர்; மேலாண்மை என்ற ஒன்று ஆளும் அரசுகளால் கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது.

               ஏற்கனவே தூத்துக்குடி கோவை போன்ற நகரங்களில் தண்ணீர் விநியோகத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த ஆளும் அரசாங்கம் கிராமங்களை பாலைவனமாக்காமல் விடமாட்டோம் என கங்கனம் கட்டிக்கொண்டு அழிவுப்பூர்வமான ஆட்சியை நடத்துகிறது.

               தோழர் தமிழ்ச்செல்வனின் ‘ஜிந்தாபாத் ஜிந்தாபாத் “ எனும் புத்தகத்தில் வரும் வரிகள் இந்த தேரிக்காட்டு கொல்லாமரங்களுக்கும் பொருந்தும்.

               "60 ஆண்டு கால இந்திய சுதந்திரம் தொழிலாளிகளுக்கு இந்திய திருநாட்டின் அச்சாணி நாம்தான் என்கிற பெருமித உணர்வை ஏற்படுத்தவில்லை. பிரச்சனை பண்ணாம ஒழுங்கா சட்டப்படி வேலை செய்யாட்டி வேலை போயிடும். குழந்தை குட்டிகள் தெருவிலே நிற்கும் என்கிற அச்ச உணர்வையே இந்திய சுதந்திரம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வாரி வழங்கியிருக்கிறது”.

               அச்ச உணர்வு மனிதனை வேண்டுமானால் எளிதில் பீடித்துக்கொள்ளலாம். ஆனால் மரங்களை அவ்வுணர்வால் ஏதும் செய்ய முடியாது என்றே இக்கிராம மக்களும் நினைத்திருந்தனர். ஆனால் அவர்களின் கண்முன்னே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பத்திரமாக வளர்வதாக நினைத்த, நிலத்தடி நீருக்கு நாம்தான் ஆதாரம் என்று பெருமிதம் கொண்ட கொல்லாமரங்கள் மழையின்றியும், நீரின்றியும் மணல் கொள்ளையாலும் வதங்கிப் போய் நிற்கின்றன.

               ஆம், ஒரு கொல்லாமரம் கொலை செய்யப்படுகிறது நம் கண்முன்னே. அதாவது சுதந்திர இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வளரும் கொல்லாமரம்.

- சுதேசி தோழன்