உலகத்தைச் சுற்றிவிட்டு தனது மாலுமிகளுடன் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றான் கொலம்பஸ். அதன்பிறகு தான் ‘சிபிலிஸ்’ என்ற கொடிய பாலியல் நோய் உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்கா எது நினைத்தாலும் அது உலகமெங்கும் பரவும்!. அந்த வகையில் தான் தற்போது இந்தியாவுக்குள் பரவி வருகிறது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் வகைகள். இதற்கு மத்திய அரசும், குறிப்பாக மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவாரும், பன்னாட்டு விதைக்கம்பெனிகளின் கட்டளைகளை நிறைவேற்ற ஒற்றைக்காலில் தவம் இருக்கின்றனர். இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

அது என்ன மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்வகைகள்? அதனால் என்ன ஆபத்து?

உணவுக்குத் தேவை விதை. விதைகளை கட்டுப்படுத்தினால் உணவு உற்பத்தியை கட்டுப்படுத்தி விட முடியும். பாரம்பரிய விதைகளில் ஏற்படுத்தப்பட்ட ரசாயன மாற்றத்தின் விளைவாக வீரிய ஒட்டு ரக விதைகள் உருவாயின. ஒரே இனத்தைச் சேர்ந்த 2 விதைகளை இணைத்து வீரிய ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டன. பாரம்பரியமான விதைகள் மேம்படுத்தப்பட்டு அதே விதைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு போட்டி அதிகமாக இருந்தது. இந்த போட்டியை குறைக்க விதைகளை காப்புரிமை செய்யும் கம்பெனிகள் யோசனை செய்தன. இதன் பின்னணியில் உருவானது தான் மரபணு மாற்ற விதைகள். அதாவது பி.டி. பயிர் வகைகள். இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விளையும். மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அப்படி என்ன தான் சிறப்பு?

பூச்சிக் கொல்லி சுரக்கக்கூடிய மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். களைக்கொல்லியாக செயல்பட்டு பூச்சிகளை அழிக்கும். அதாவது இது பயிர்களை தாக்கும் வண்ணத்துப்பூச்சி குடும்பத்து பூச்சிகளை அழிக்கும். போசிலஸ் சுருண்சியன்சீஸ் என்ற பாக்டீரியா செலுத்தப்பட்டதால் தான் இந்த விதைகள் பூச்சிகளை அழிக்கும் திறன்கொண்டவையாக இருக்கின்றன. இந்த பாக்டீரியா விஷத்தன்மை கொண்டது. பருத்தி, வெண்டை, கத்தரி என பல்வேறு பயிரினங்கள் தற்போது இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது இந்தியாவில் 98.5 சதவீத பி.டி.பருத்தி பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் நாட்டு பருத்தி விதைகள் எல்.ஆர்.இ., ஸ்ரீவில்லிபுத்து£ர் ரக விதைகள் கிலோ ஒன்றிற்கு ரூ.40 என்ற அளவில் கிடைக்கின்றன. ஆனால் இவற்றின் மூலம் ஏக்கர் ஒன்றிற்கு 10 குவிண்டால் பருத்தி மட்டுமே விளைச்சல் பெற முடியும். ஆனால் மான்டோசாவா போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களின் பி.டி பருத்தி விதை ரகங்கள் ஜாடு, மல்லிகா, மைக்கோ, புல்லட், ஆங்குஷ், பிரம்மா போன்றவை 450 கிராம் ரூ.920க்கு விற்கப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு 450 கிராம் விதை இருந்தாலே போதும். 20 குவிண்டால் அளவிற்கு விளைச்சல் கிடைக்கும். இதன் காரணமாக தான் பெரும்பாலான விவசாயிகள் பி.டி.பருத்தியை விதைக்கின்றனர்.

ஆனால், இந்த பி.டி ரக விதைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் விவசாயிகள் அடுத்த தலைமுறைக்கு விதைகளை பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு முறையும் விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து தான் விதையை வாங்க வேண்டும். பாரம்பரிய விதைகளை எடுத்து வைத்து பயன்படுத்துவது போன்று பயன்படுத்த முடியாது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் பி.டி ரக பயிர் வகைகளுக்கு வேளாண் விஞ்ஞானிகளிடம் இருந்தும், இயற்கை விவசாயிகளிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. உண்மை நிலவரத்தை ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வுக்குழுவும் மரபணு மாற்றப்பயிர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாய கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரசலு£ர் இரா.செல்வம் நம்மிடம், "மரபணு மாற்றம் குறித்த புரிதல் நம்முடைய விஞ்ஞானிகளுக்கு குறைவு. 50 வருடத்திற்கு முன்பு தான் மரபணு பற்றிய விவரம் நமக்கு தெரியும். 1954ல் மரபணு கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஒரு மரபணு ஒரு புரதத்தை உருவாக்கும் என்பது தான் அந்த கோட்பாடு. மாறிவரும் -------இயற்கை நிலையில் அறிவியல் கோட்பாடுகளை தொழில்நுட்பங்கள் மாற்றத் தொடங்கின. பி.டி பருத்தி குறித்து மான்டாசோவா என்ற பன்னாட்டு நிறுவனம் ஆய்வு நடத்தி தந்த விளக்கத்தை தான் அனைவரும் ஏற்றுள்ளனர். இது தவறானது. மரபணு குறித்த விவாதம் 2002ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கியது. 2001ம் ஆண்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பி.டி. பருத்தியை பிடுங்கி போட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியது. அதன்பின்னர் படிப்படியாக பி.டி.பயிர் வகைகள் நுழைந்து விட்டன. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நல்லதா? கெட்டதா? என்று முடிவு செய்து அறிக்கை கொடுப்பது சம்பந்தப்பட்ட பன்னாட்டு விதை நிறுவனம் தான். முதன்முதலாக பி.டி.கத்திரிகாய் என உள்ளே நுழைந்து இப்போது 54 வகையான பி.டி.பயிர்கள் இந்தியாவினுள் வந்துவிட்டன.

இந்த நிலையில் தான் அருணா ரோட்ரிகேஸ் என்பவர் உச்சநீதி மன்றத்தில் பி.டி பயிர்களுக்கு எதிராக வழக்கு போட்டார். அப்பேது வேளாண் அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ், இதுபற்றி ஆய்வு செய்ய பாராளுமன்ற நிலைக்குழுவை உருவாக்கினார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த பசுதேவ் ஆச்சர்யா எம்.பி., தலைமையில் 28 எம்.பி.,க்கள் கொண்ட குழு ஆய்வு செய்தது. இதில் காங்கிரஸ் எம்.பி.க்களும் இடம் பெற்றிருந்தனர். பி.டி.பயிர் வகைகள் இந்தியாவுக்கு ஏற்றதா? இதனால் ஏற்படும் சாதகம் என்ன? பாதகம் என்ன--? என்பனவற்றை மக்களிடம் இருந்தும், வேளாண் விஞ்ஞானிகளிடம் இருந்தும் ஆய்வு செய்து மேற்கண்ட குழு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

பாராளுமன்ற நிலைக்குழு நடத்திய ஆய்வின் படி பி.டி.பயிர் ரகங்கள் இந்தியாவுக்கு ஏற்றதல்ல. அது விதை சுதந்திரத்தை அழித்து விடும் என்று அறிக்கை கொடுத்தது. ஆனால், இந்த அறிக்கையை தற்போதைய வேளாண் அமைச்சர் சரத் பவார் ஏற்க மறுக்கிறார். மேலும், வேளாண் விஞ்ஞானிகள், பி.டி.பயிர் வகைகளுக்கு அனுமதி கொடுப்பதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என்றும் கூறினர். மேலும், கம்பெனிகள் கொடுக்கும் ஆராய்ச்சி முடிவுகளை சரியானது என்று ஏற்க முடியாது எனவும், பி.டி. பருத்திக்கு கொடுத்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். ஆனால், இந்த அறிக்கையையும் மத்திய அரசு ஏற்கவில்லை. மாறாக பிரதம மந்திரியின் அறிவியல் ஆலோசனைக்குழு, உணவு உத்திரவாதத்திற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அவசியமானவை என்று முடிவெடுத்துள்ளது.

இதனிடையே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சராலினி என்பவர் நீண்ட கால ஆய்வு ஒன்றை எலியின் வாயிலாக மேற்கொண்டார். 300 நாட்கள் நடந்த அந்த ஆய்வு பெரும் அதிர்ச்சி தகவல்களை தந்துள்ளன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்வகைகளை சாப்பிடுவதால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்றும், உள்ளுறுப்பில் புண்கள் ஏற்படுகின்றன என்றும் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.

இது இப்படி இருக்க, பி.டி.பருத்தி குறித்து வெளித் தேடல் ஆய்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இந்த ஆய்வுக்கு தடை விதித்தன. தங்கள் மாநிலங்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்படக்கூடாது என்று கூறின. ஆனால், உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் மட்டும் பி.டி.பருத்தி வெளிப்புற ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளார். நம்முடைய உணவு, நம்முடைய விவசாயங்கள் எல்லாம் விலைபோகும் விஞ்ஞானிகளிடம் மாட்டிக் கொண்டுள்ளன. இது எல்லோருக்குமான பிரச்னை.

பி.டி.பருத்தியில் அதிகமாக விளைச்சலும், லாபமும் கிடைக்கிறது என்று கூறுவது தவறானது. நாட்டுரக பருத்திக்கு ரூ.25 ஆயிரம் லாபம் கிடைத்தால், பி.டி.பருத்திக்கு ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. பி.டி.பருத்தி பயிரிட நிறைய தண்ணீர் தேவைப்படும். மானாவாரி நிலங்களில் பயிரிட்டால் விளைச்சல் குறைவாக தான் வரும். இந்த பி.டி.பருத்தியை பயிரிட்டதால் தான் விதர்பாவில் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நாட்டு பருத்தி பயிரிட்டால் விதையை மறுமுறை பயன்படுத்தலாம். மண் கெட்டுப்போகாது. ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தான் பருத்தி விளைச்சல் அதிக அளவில் இருந்தது. ஆனால் தற்போது குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடி ஏற்படுத்தித் தந்த நீர்பாசன வசதிகளினால் அதிக அளவில் பருத்தி பயிரிடப்படுகிறது. தண்ணீர் பஞ்சமாக உள்ள மகாராஷ்டிராவில் தற்போது பி.டி. பருத்தியின் விளைச்சல் குறைந்துள்ளது.

ஆந்திராவில் 35 லட்சம் எக்டேரில் தற்போது இயற்கை விவசாயம் நடக்கிறது. அங்கு எந்த பூச்சிக்கொல்லியும் இல்லை. விவசாயம் சிறப்பாகவே நடக்கிறது. பாரம்பரிய விதைகளை வைத்து நிறைய பயிர்களை விளைவிக்க முடியும். எந்த வகை மரபணு மாற்றமும் தேவையில்லை. இந்திய விவசாயத்தை பன்னாட்டு விதைக்கம்பெனிகளின் சொத்தாக மாற்றும் முயற்சியே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை மூலம் விவசாயம் செய்தால் செலவை குறைக்கலாம். தஞ்சாவூரில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்ற காரணத்தினால் 13க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், அங்கு ஒரு சில இடங்களில் பாரம்பரிய விதைகளை பயிரிட்டு தண்ணீர் பஞ்சமாக உள்ள இந்த நேரத்திலும் நல்ல அறுவடையை செய்து வருகின்றனர்" என்றார்.

கத்தரிக்காயில் தொடங்கிய மரபணு மாற்றம், பருத்தி, வெண்டைக்காய் என ஊடுருவி தற்போது மக்காச்சோளத்திற்கும் பரவியுள்ளது. ஒரு நாட்டை அழிக்க வேண்டுமானால், அணுகுண்டு போடவேண்டாம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை பயிரிட்டால் போதும் என்கிறார்கள் வேளாண் விஞ்ஞானிகள்.

இந்தியாவுக்கு தேவை அழிவா? ஆக்கமா?