(Christopher Clugston என்பவர் அண்மையில் எழுதிய ‘Blip’ எனும் நூலில் இருந்து சில பகுதிகளை https://www.ecologise.in/2019/12/15/blip-humanitys-300-year-self-terminating-experiment-with-industrialism/ எனும் இணையப் பக்கத்தில் காணலாம். அதன் சுருக்கிய மொழியாக்கம் வருமாறு)

தொழில்மயமான குமுகங்களில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் தாம் இப்போது வாழும் 'வசதியான' வாழ்க்கை இயல்பானது, அது என்றைக்கும் தொடரும் என எண்ணுகின்றனர். அதைப் பற்றி எந்த விதமான கேள்விகளோ, ஐயங்களோ அவர்களுக்குள் எழுவதில்லை. இந்தச் சிந்தனை இப்போது நம் 'பண்பாட்டு மரபீனி'யில் இரண்டறக் கலந்துவிட்டது.

இது எவ்வளவு தவறானது என்பதை என் நூல் விளக்குகிறது. அதிலிருந்து சில பகுதிகளை இனிப் பார்க்கலாம்.

மாயை 1: மாந்த குலம் தனிச் சிறப்பு மிக்கது; மேலும், விதி விலக்கானது.

புவியில் வாழும் பல லட்சம் உயிரினங்களில் மாந்த குலம் மட்டும் தனிச் சிறப்பு வாய்ந்தது. அறிவாற்றல், நுண்ணறிவு ஆகிய இரண்டு வகைகளிலும் பிற உயிரினங்களை விட நாம் மேலானவர்கள்.

அதன் விளைவாக நாம் விதி விலக்கானவர்களும் ஆவோம். அதாவது, நம் தொழில்நுட்பம், செயல்திறன், உற்பத்தித் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இயற்கையின் விதிகளை மீறுதல், இயற்கைச் சீற்றங்களைத் தாங்குதல், இயற்கை ஆற்றல்களை நம் நன்மைக்குப் பயன்படுத்துதல் ஆகிய வல்லமைகளைப் பெற்றுவிட்டோம்.

நமக்கு நாமே விதித்துக் கொண்ட அரசியல், பொருளாதார, குமுகவியக் கட்டுப்பாடுகள் மட்டுமே இனி நாம் மீற வேண்டியவை; அப்படிச் செய்தால் மாந்த குலம் வரம்பற்ற செல்வச் செழிப்பில் மிதக்கும்; முன்னேற்றங்களை அடையும்.

உண்மை 1: நாம் தனிச் சிறப்பானவர்கள்; ஆனால், விதி விலக்கானவர்கள் அல்லர்.

பிற உயிரினங்களைப் போலவே, நம் 'வெற்றி'களும் இயற்கை வளங்களால் வரையறுக்கப்பட்டவையே.

அ) இயற்கை வாழிடம்: தத்தம் வாழ்வாதாரங்களைத் தொடர்ந்து மேலாண்மை செய்து கொள்ளும் உயிரினங்களும் உயிரற்றவையும் ஆகிய அனைத்தும் சேர்ந்த இப்புவியின் திணைக்களத்தில் ஒரு பகுதியே நம் வாழிடம். காலஞ் செல்லச் செல்ல அது தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது; இது அவ்வப்போது அல்லது ஒரு சுழற்சியில் நிகழ்கிறது; இயற்கையான உயிரி-நிலவிய-வேதியியல் செயற்பாடுகளின் மூலம் இந்தச் சுழற்சி நடைபெறுகிறது. நீர்நிலைகள், நிலப் பகுதி, வளி மண்டலம் ஆகிய மூன்றும் அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாதவை,

ஆ) புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளங்கள்: வளிமண்டலம், தண்ணீர், மண், இயற்கையாக உருவாகும் உயிரினங்கள் ஆகிய அனைத்தும் சேர்ந்து தான் அனைத்து உயிரினங்களையும் வாழ வைக்கின்றன.

இ) புதுப்பிக்க இயலாத இயற்கை வளங்கள்: (கன்னெயம் - 'பெட்ரோல்', நிலக்கரி உள்ளிட்ட) புதைபடிவ எரிபொருள்கள், மாழைகள் ('உலோகங்கள்'), பிற கனிமங்கள் ஆகியவற்றைப் புதுப்பிப்பதற்கு இயற்கை பல நூறு கோடி ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். ஆனால் இவையே நம் குமுகங்களின் கட்டுமானப் பொருள்களாகவும் ஆற்றல்களாகவும் உள்ளன. இவையே நம்முடைய இப்போதைய வாழ்முறையைச் சாத்தியம் ஆக்குகின்றன.

தொழிற்புரட்சி தொடங்கி ஏறக்குறைய 250 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தக் காலக்கட்டத்தில் இயற்கை வளங்களை நம் குறுகிய நோக்கில் மட்டுமே பார்க்கப் பழகி விட்டோம். புவியில் வாழும் பிற உயிரினங்கள் மட்டுமின்றி இயற்கையையும் மீறியவர்களாக நம்மை நாமே நினைக்கிறோம். இயற்கை வளங்களின் வரம்பு, கட்டுப்பாடுகள் ஆகியவற்றை ஒரு பொருட்டாக நாம் கருதுவதில்லை.

மேற்கண்ட மூன்று வகைப்பட்ட வளங்களையும் நாம் அழித்து வருகிறோம்; இது நிலைத்த வாழ்க்கைக்கு எதிரானது. நாம் என்ன செய்தாலும் இவற்றைப் புதுப்பிக்கவோ வரம்புகளை மேன்மேலும் நகர்த்தவோ முடியாது.

மாயை 2: மாந்த குலத்தின் ஆலைமயமான வாழ்முறை 'இயல்பானது'. பொருளாதார உற்பத்தி, மக்கள் தொகை ஆகியவற்றை அதிகரித்தல், பொருள் நுகர்வின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை நாம் தொடர்ந்து செயல்படுத்த முடியாது.

உண்மை 2: நம்முடைய இப்போதைய வாழ்முறை வரலாற்றில் எப்போதும் இருந்திராத வகையில் பிறழ்ச்சியானது. தொழில்மயமாகாத மாந்த குல வாழ்க்கை ஏறக்குறைய முப்பது லட்சம் ஆண்டுகள் தொடர்ந்தது. இது சுமார் 1,20,000 மனிதத் தலைமுறைகளுக்குச் சமம். தொழிற்புரட்சிக்குப் பின்னர் நாம் வெறும் முந்நூறு ஆண்டுகளை மட்டுமே கடந்திருக்கிறோம்; இது வெறும் பன்னிரண்டு தலைமுறைகளுக்கு நிகரானது.

இற்றைக்கு முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி 2015-ஆம் ஆண்டு முடிய மாந்த குலம் எத்தகைய இயற்கை வளங்களைப் பயன்படுத்தித் தழைத்தது என்பதைப் பின்வரும் படம் காட்டுகிறது.

nature resuources utilizationபுதுப்பிக்க இயலாத இயற்கை வளங்களின் பயன்பாட்டுக்கும் தற்காலப் பொருளாதார 'வளர்ச்சி'க்கும் உள்ள நெருங்கிய தொடர்புக்கு மிகத் தெளிவான எடுத்துக்காட்டு ஒன்றிய அமெரிக்க மாநிலங்கள் (The United States of America). 1800-2015 காலகட்டத்தில் அமெரிக்கா புதுப்பிக்க இயலாத வளங்களைப் பயன்படுத்திய அளவு 2006 மடங்கு அதிகரித்தது. அந்தக் கால இடைவெளியில் அமெரிக்கப் பொருளாதார உற்பத்தி 2050 மடங்கு வளர்ந்தது.

மாயை 3: நம்முடைய இப்போதைய வாழ்முறையை எக்காலத்துக்கும் தொடர முடியும். புவியின் வளங்களை விழிப்புடன் பயன்படுத்துவதன் மூலம் 'நிலைத்த மேம்பாடு', 'நிலைத்த வளர்ச்சி' ஆகியன சாத்தியப்படும்; அனைத்து மக்களும் அனைத்து வசதிகளுடன் வாழ முடியும்.

உண்மை 3: இப்போதைய வாழ்முறையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது; கடந்த சுமார் 250 ஆண்டுகளில் நிகழ்ந்த 'மேம்பாடு' புவியின் மிக நீண்ட வரலாற்றில் மிக அரிதாக, மின்னல் கீற்றுப் போல வேகமாக வந்த ஒரு நிகழ்வு. வர வர அதிக வேகத்தில் நாம் இயற்கை வளங்களைப் பயன்படுத்துகிறோம். ஆலை மயமான இந்த வாழ்முறையில் 'தொடர்ச்சியான, என்றைக்கும் நிலைக்கக்கூடிய' வளர்ச்சி, மேம்பாடு ஆகியன வெறும் கற்பனையே!

இந்த வாழ்முறையைத் தலை கீழாக மாற்றி, இயற்கை வளங்களை மிகக் குறைவாகப் பயன்படுத்தும் எளிமையான வாழ்முறைக்கு மாந்த குலம் மாறியாக வேண்டும். இல்லையேல் வருங்காலத்தில் நாம் மிகக் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.

- பரிதி