Egyptபண்டைய எகிப்து ஜாடிகளில் ஆல்கஹால் பானங்களுடன் மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு எகிப்து பகுதியில் உள்ள ஜீபெல் அட்டா என்னும் பகுதியில் கி.பி 300 க்கும் கி.பி 500 க்கும் இடைப்பட்ட காலத்தைச்சேர்ந்த ஒரு பழமையான ஒயின் ஜாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாடியின் உட்புற படிவுகளை வேதியியல் பகுப்பாய்வு செய்தபோது ரோஸ்மேரி மற்றும் பைன் மரத்தின் பிசின் படிவுகள் காணப்பட்டன. தற்காலத்தில் நாம் மருந்துடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுப்பதுபோல் பழங்கால எகிப்தியர்கள் சர்க்கரைக்குப் பதிலாக ஒயின் சேர்த்திருப்பதை அறிய முடிகிறது.

Proceedings of the National Academy of Sciences தன்னுடைய ஏப்ரல் 13 ஆம் தேதியிட்ட இதழில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கி.மு.1850 ஐச்சேர்ந்த எகிப்திய காகித சுவடிகளில் பல்வேறு நோய்களுக்கு மூலிகைகளுடன் ஒயின் கலக்கப்பட்டு கொடுக்கப்பட்டதாக இலக்கியச்சான்றுகள் உள்ளன. ஆனால் அந்த ஆரோக்கிய பானத்தின் சிறுதுளிகூட இதுவரை கிடைக்கப்பெறாமல் இருந்துவந்தது.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆய்வாளர்கள் இது ஒரு அரிய கண்டுபிடிப்பு என்கின்றனர். இந்த ஆய்வில் இரண்டு புராதனமான ஜாடிகள் ஆராயப்பட்டன. முதல் ஜாடி கி..மு.3150 ஐச்சேர்ந்தது. எகிப்தின் மேற்குப்பகுதியில் உள்ள அபிடோஸ் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாவது ஜாடி கி.பி. நான்காவது நூற்றாண்டிற்கும் ஆறாவது நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தைச்சேர்ந்தது. தெற்கு எகிப்தின் ஜீபெல் அட்டா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்தியர்களின் முந்தைய மற்றும் பிந்தைய கலாச்சாரத்தை சோதித்தறிய இந்த மாதிரிகள் உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஜாடிகளில் ஒயின் இருந்ததை நிரூபிக்க liquid chromatography tandem mass spectrometry என்னும் தொழில் நுட்பத்தை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். இதன்மூலம் ஜாடிகளின் உட்புறத்தின் படிவுகளை ஆராயமுடியும். ஆய்வின் முடிவில் ஒயின் இருந்ததற்கு ஆதாரமாக டார்டாரிக் அமிலத்தின் சுவடுகள் தெரியவந்தன. அடுத்ததாக solid phase microextraction என்னும் தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி ஆராய்ந்தபோது ஜாடியில் இருந்த படிவுகளில் மூலிகைகளின் சேர்மங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அபிடோஸ் ஜாடியில் கொத்துமல்லி, புதினா, sage, பைன் மரப்பிசின் ஆகியவை காணப்பட்டன. ஜீபெல் அட்டாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஜாடியில் பைன் மரப்பிசினும் ரோஸ்மேரியின் படிவுகளும் காணப்பட்டன.

இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகளை செய்யும்போது இந்த மூலிகைகளைப் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்கிறார் இந்த திட்டத்தின் ஆய்வாளர் பேராசிரியர் மெக் காவர்ன்.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி