ஏறக்குறைய அர்த்த ராத்திரியில் வராக நதிக் கரையிலிருந்து புறப்பட்ட மாமல்லரும் தளபதி பரஞ்சோதியும் காஞ்சி மாநகரை நோக்கி விரைந்து சென்றார்கள். வழியில் இரண்டு காத தூரத்துக்கு ஒன்றாக ஏற்பட்டிருந்த இராஜாங்க விடுதிகளில் அவர்களுக்காக மாற்றுக் குதிரைகள் ஆயத்தமாயிருந்தன. உணவும் சிரம பரிகாரம் செய்து கொள்ள வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இவ்வளவுடன் ஒவ்வொரு விடுதியிலும், நூறு குதிரை வீரர்கள் அணிவகுத்து ஆயத்தமாக நின்றார்கள். மாமல்லருடன் வந்த வீரர்களை ஆங்காங்கே தங்கி வரும்படி நிறுத்திவிட்டுப் புதிய துணை வீரர்களுடன் செல்வது பிரயாணத்தின் விரைவுக்கு அனுகூலமாயிருந்தது.

இந்த முன்னேற்பாடெல்லாம் மாமல்லருக்கு மிக்க வியப்பளித்தது. அதே வழியில் முன்னால் சென்ற தம் தந்தை தான் அந்த ஏற்பாடுகளெல்லாம் செய்துவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று ஊகித்து மாமல்லர் அளவற்ற இறும்பூது அடைந்தார். பரஞ்சோதியிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

அதற்குப் பரஞ்சோதி, "ஆஹா! இதை ஒரு பிரமாதமாகச் சொல்லப் போகிறீர்களே? சமுத்திரத்தின் ஆழத்தையாவது கண்டுபிடிக்கலாம். சத்துருமல்லரான மகேந்திரரின் முன் ஜாக்கிரதைக்கு ஆழம் கண்டுபிடிக்க முடியாது. இதையெல்லாம் எட்டு மாத காலம் அவருடன் கூட இருந்து நேரிலேயே பார்த்தேன். அதனாலேதான், சக்கரவர்த்தி எது சொன்னாலும் அதற்கு மாறாக என் மனத்தில் நினைப்பது கூட இல்லை" என்றார்.

வடபெண்ணை ஆற்றங்கரையில் பல்லவ சைனியத்தோடு எட்டு மாதம் தங்கி, வாதாபி சைனியத்தை மேலே வரவொட்டாமல் தடுப்பதற்குச் சக்கரவர்த்தி கையாண்ட அதிசயமான யுக்திகளையும் தந்திரங்களையும் பற்றி பரஞ்சோதி பிரஸ்தாபித்தார். இது மாமல்லருக்கு அவ்வளவு உற்சாகம் அளிக்கவில்லை.

"தளபதி! நீங்கள் என்னதான் சொல்லுங்கள், எதிராளியை நிறுத்திவைப்பது, ஏமாற்றுவது, பின்வாங்கித் தப்பித்துக்கொண்டு வருவது இதிலெல்லாம் ஒருவிதப் பெருமையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே!" என்றார் மாமல்லர்.

அப்போது பரஞ்சோதி, "யுத்தத்தில் பின்வாங்க வேண்டிய சமயமும் உண்டு; எதிர்த்துத் தாக்க வேண்டிய சமயமும் உண்டு. ஒன்று கவனித்தீர்களா? துர்விநீதனைத் துரத்திக்கொண்டு தென்பெண்ணைக்கு அப்பால் தாங்கள் போகவேண்டாமென்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார். அதற்காகத் தாங்கள் வருத்தப்பட்டீர்கள்...ஆனால் துர்விநீதன் தப்பித்துக்கொண்டு விட்டானா? இல்லையே? சக்கரவர்த்தி அதற்கும் ஏற்பாடு செய்திருந்தார் அல்லவா? தென்பெண்ணைக்கு அக்கரையில் திருக்கோவலூர் கோட்டத் தலைவன் ஆனந்தன் மழவராயனை ஆயத்தமாயிருக்கும்படி செய்திருந்தார் அல்லவா? துர்விநீதன் சமணப் பள்ளியில் ஒளிந்து கொள்ள முயன்றும் தப்பமுடியவில்லையே? இப்போது அவன் மழவராயன் கோட்டையில் சிறைப்பட்டிருக்கிறானல்லவா? பிரபு! பிரம்மாண்ட சைனியங்களை வைத்துக் கொண்டு யுத்தத்தில் ஜயித்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு. ஆனால், நமது சக்கரவர்த்தியைப் போல் சொற்ப சைனியத்தை வைத்துக்கொண்டு மகத்தான எதிரிகளின் மேல் ஜயம் அடைந்தவர்கள் யாரும் இல்லை!" என்றார்.

"ஆமாம், அதில் என்ன சந்தேகம்? பல்லவ வீரன் ஒவ்வொருவனும் சளுக்க வீரன் பத்துப் பேருக்கு இணையானவன் அல்லவா? புள்ளலூரிலேதான் பார்த்தோமே?" என்றார் மாமல்லர்.

மகேந்திர சக்கரவர்த்தி சுத்த வீரத்தைக் கைக்கொள்ளாமல் இராஜதந்திரத்தைக் கையாண்டு ஜயிக்கிறார் என்ற எண்ணம் குமார சக்கரவர்த்திக்கு வேம்பாயிருந்தது. அதை அவரால் ஒப்புக் கொள்ளவோ, பாராட்டவோ முடியவில்லை.

பாதி இரவும் ஒரு பகலும் அந்த அபூர்வ சிநேகிதர்கள் இடைவிடாமல் பிரயாணம் செய்து சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் காஞ்சி மாநகரின் தெற்கு வாசலை அணுகினார்கள்.

அதே தெற்கு வாசலை, ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அஸ்தமன நேரத்தில் நாகநந்தி பிக்ஷுவுடன் கூடத் தான் அணுகியது பரஞ்சோதிக்கு நினைவு வந்தது. அன்று கோட்டைக் கதவின் உள் துவாரத்தின் வழியாக நகருக்குள் பரஞ்சோதி பிரவேசித்தார். இன்றைக்கு அவ்விதம் பிரவேசிக்க வேண்டி இருக்கவில்லை.

மாமல்லரும் பரஞ்சோதியும் துணையாக வந்த வீரர்களுடன், கோட்டை வாசலை நெருங்கியதும், கோட்டை வாசலின் மேல் மச்சு மண்டபத்தில் ஜயபேரிகைகள் முழங்கின; வெற்றிச் சங்குகள் ஒலித்தன; கொம்புகள் கோஷித்தன. கோட்டைக்கு உட்புறத்திலிருந்து ஒரே கோலாகலச் சத்தம் எழுந்தது.

கோட்டைக் கதவுகள் 'படார்' என்று திறந்தன. உள்ளே பார்த்தால், நகரம் கண்கொள்ளாக் காட்சி அளித்தது. விசாலமான வீதிகளின் நடுவில் கண்ணுக்கெட்டிய தூரம் பல்லவ வீரர்கள் அணிவகுத்து நின்றார்கள். வீதியின் இரு புறங்களிலும் நகரமாந்தர்கள் நெருங்கி நின்றார்கள். இருபுறத்து வீடுகளின் உப்பரிகை மாடங்களில் திவ்யாலங்கார பூஷிதைகளான இளம் பெண்கள் நின்றார்கள். அவர்கள் பக்கத்தில் மல்லிகை முல்லை கொன்றை முதலிய மலர்கள் கும்பல் கும்பலாகக் கிடந்தன. இரண்டு கை நிறையப் புஷ்பங்களை எடுத்து அவர்கள் சித்தமாய் வைத்துக்கொண்டிருந்தார்கள். எதற்காகவென்று சொல்ல வேண்டுமா? வெற்றி வீரராகத் திரும்பி வரும் குமார சக்கரவர்த்தியின் மீது மலர் மாரி பொழிவதற்காகத்தான்.

காஞ்சி நகரம் அன்று அப்படிக் கோலாகலமாய் இருந்ததற்குக் காரணங்கள் இரண்டு இருந்தன. முதலாவது, வடக்குப் போர்க்களத்திலிருந்து பல்லவ சைனியம் சேனாதிபதி கலிப்பகையின் தலைமையில் காஞ்சிக்குத் திரும்பி வந்து சேர்ந்திருந்தது. சென்ற சில நாளாக ஜனங்கள் நகரைவிட்டு போய்க் கொண்டிருந்தபடியால் பாழடைந்ததுபோல் இருந்த நகரம் ஓர் இலட்சம் போர் வீரர்களின் வரவினால் கலகலப்பை அடைந்திருந்தது. அத்தோடு புள்ளலூர்ச் சண்டையில் மாமல்லரின் மகத்தான வெற்றியைப் பற்றிய செய்தியானது அனைவருக்கும் உற்சாகத்தை உண்டுபண்ணியிருந்தது. இத்தகைய உற்சாகத்துக்குக் காரண புருஷரான குமார சக்கரவர்த்தி மாமல்லர் அன்று நகருக்குத் திரும்பி வருகிறார், அவரை நேரிலேயே பார்க்கப் போகிறோம் என்று தெரிந்த பிறகு, மகா ஜனங்களின் குதூகலத்தைக் கேட்க வேண்டுமா?

தூக்கி நிறுத்தியிருந்த பாலம் அகழியின்மேல் விடப்பட்டதும் மாமல்லர் அதன் வழியாகக் கோட்டைக்குள் பிரவேசித்தார். பரஞ்சோதியும் மற்ற வீரர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். திறந்த கோட்டைக் கதவுகள் மறுபடி சாத்திக் கொண்டன.

கோட்டை வாசலைத் தாண்டி மாமல்லர் நகர வீதியில் பிரவேசித்ததும், ஏக காலத்தில் ஆயிரக்கணக்கான ரிஷபக் கொடிகள் தெருவெல்லாம் உயர்ந்தன. வீதியில் அணிவகுத்து நின்ற வீரர்கள் அதுவரை அக்கொடிகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மாமல்லர் உள்ளே பிரவேசித்ததும் கொடிகள் மளமளவென்று உயர்ந்து காற்றில் சடசடவென்று அடித்துக்கொண்ட காட்சி ஏதோ ஓர் இந்திரஜாலக் காட்சி மாதிரி தோன்றியது. அதிலிருந்து குமார சக்கரவர்த்தி நகருக்குள் பிரவேசித்துவிட்டார் என்பதை நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் நெருங்கி நின்ற ஜனத் திரள்கள் தெரிந்துகொண்டன. அவ்வளவு ஜனங்களும் ஒருவரோடொருவர் அந்தச் செய்தியைக் கூறி மகிழ்ந்துகொண்டபோது எழுந்த சத்தமானது ஏழு சமுத்திரங்களும் ஒரேயடியாகப் பொங்கி வந்தது போன்ற பேரொலியை ஒத்திருந்தது.

மாமல்லரை வரவேற்பதற்காகக் கோட்டை வாசலுக்கருகில் அமைச்சர் குழுவினர், மந்திரி மண்டலத்தார் இவர்களுடன் சேனாதிபதி கலிப்பகையாரும் காத்திருந்தார். மாமல்லரும் பரஞ்சோதியும் குதிரைகள் மீதிருந்து இறங்கினார்கள். தங்க நிறமான கொன்றைப் பூக்களை அழகாகத் தொடுத்திருந்த பெரியதொரு மாலையை மாமல்லரின் கழுத்தில் முதல் அமைச்சர் சூட்ட, சேனாதிபதி கலிப்பகையார், "வாழ்க! வாழ்க! புள்ளலூர்ப் போர்க்களத்தில் கங்கநாட்டு மன்னனைப் புறங்கண்ட வீராதி வீர மாமல்லர் வாழ்க! வாழ்க!" என்று கோஷித்ததும், "வாழ்க! வாழ்க!", "ஜய விஜயீ பவ!" என்ற கோஷங்கள் ஆயிரம் பதினாயிரம் கண்டங்களிலிருந்தும் ஏக காலத்தில் எழுந்து வானளாவி முழங்கின.

இந்த வரவேற்பு வைபவங்களினால் எல்லாம் மாமல்லருடைய முகத்தில் நியாயமாகத் தோன்றியிருக்கவேண்டிய மலர்ச்சி காணப்படவில்லை. அவருடைய உள்ளத்தில் இன்னதென்று தெரியாத ஏதோ ஒரு குறை உறுத்திக்கொண்டிருந்தது. தந்தை மகேந்திர சக்கரவர்த்தி முன்னதாக நகருக்கு வந்து இந்த வரவேற்பு வைபவத்தையெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார் போலும்! பல்லவ இராஜ்யத்தின் மகத்தான எதிரியின் படைகள் காஞ்சியை நெருங்கி வந்து கொண்டிருக்கும்போது, இந்த வெற்றி முழக்கங்கள் எல்லாம் எதற்காக?

அந்தக் கணமே தந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மாமல்லரின் உள்ளத்தில் பொங்கிற்று. உடனே அவரும் பரஞ்சோதியும் தத்தம் குதிரைகள் மேல் ஏறிக்கொண்டு அரண்மனையை நோக்கி விரைந்து செலுத்தினார்கள். அரண்மனையை அடைந்து முன்வாசலையும் நிலாமுற்றத்தையும் தாண்டி உள்ளே சென்றதும், அந்தப்புரத்து வாசலில் புவன மகாதேவியார் சேடியார் புடைசூழக் காத்திருப்பதைக் கண்டார். போர்க்களத்திலிருந்து வெற்றி மாலை சூடித் திரும்பி வந்த வீரப் புதல்வனுக்கு அன்னை ஆரத்தியெடுத்து, திருஷ்டி கழித்த பிறகு "குழந்தாய்! உன் வீரச் செயல்களைப்பற்றிக் கேட்டு என் தோள்கள் பூரித்திருக்கின்றன. நகர மாந்தர் எல்லாம் சொல்ல முடியாத ஆனந்தத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால், உன் முகம் ஏன் வாடிச் சிணுங்கியிருக்கிறது? நெடுந்தூரம் பிரயாணம் செய்த அலுப்பினாலோ?" என்று சக்கரவர்த்தினி கேட்டாள்.

"ஆம், அம்மா! அதுவும் ஒரு காரணந்தான். ஆனால், அது மட்டும் அல்ல. இந்த வரவேற்பு வைபவம் ஒன்றும் எனக்குப் பிடிக்கவில்லை. புள்ளலூர்ச் சண்டையில் அடைந்த வெற்றி ஒரு பெரிய வெற்றியா? வாதாபி சைனியம் ஒரு பெரிய சமுத்திரம் என்றால், கங்கர் சைனியம் ஒரு சிறு குட்டைக்குச் சமானம். அந்தச் சிறு படையை முறியடித்ததற்கும் நானே முழுக்காரணம் அல்ல. புள்ளலூர்ச் சண்டையில் நமது வெற்றிக்குக் காரணமானவர் உண்மையில் என் தந்தைதான்! அது போகட்டும், அம்மா! சக்கரவர்த்தி எங்கே?" என்று மாமல்லர் கேட்டார்.

அப்போது புவனமகா தேவியின் முகத்தில் ஆச்சரியக் குறி தென்பட்டது. "இது என்ன குழந்தாய்? அந்தக் கேள்வியை உன்னிடத்தில் கேட்க வேண்டும் என்றல்லவா நினைத்தேன்? என்னை நீ கேட்கிறாயே? அப்பா எங்கே? நீ பார்க்கவில்லையா? உன்னோடு அவர் வரவில்லையா?" என்றாள் புவனமாதேவி.

அப்போதுதான் மகேந்திர சக்கரவர்த்தி காஞ்சிக்கு இன்னும் வந்து சேரவில்லையென்பது மாமல்லருக்குத் தெரிய வந்தது. தமக்கு முன்னாலேயே புறப்பட்டவர் ஏன் இன்னும் வந்து சேரவில்லை? வழியில் ஏதேனும் அபாயம் நேர்ந்திருக்குமோ? வாதாபிப் படைகள் கோட்டையைச் சூழ்வதற்குள் சக்கரவர்த்தி வந்து சேராவிட்டால் என்ன செய்வது? இராஜ்யப் பொறுப்பும் யுத்தம் நடத்தும் பொறுப்பும் தம்மையல்லவா சாரும்? இத்தகைய பல எண்ணங்கள் மாமல்லரின் உள்ளத்தில் பொங்கி எழுந்தன.

புவனமாதேவி கூறிய செய்தியானது மாமல்லருக்கு எவ்வளவு வியப்பை அளித்ததோ, அவ்வளவு பரஞ்சோதிக்கு அளித்ததாகத் தெரியவில்லை. அவர் இதை எதிர்பார்த்ததாகவே தோன்றியது.

முந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்
Pin It