எச்சரிக்கும் போலந்து மாநாடு....!!!

போலாந்தின் கடோவைஸ் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாடு நடைபெற்றது. இதில் பாரிஸ் பருவநிலை மாறுபாடு உடன்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதில் பருவநிலை மாறுபாட்டால் உலகிற்கு பேராபத்து காத்திருப்பதாகவும், இப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணாவிட்டால், உலக நாடுகள் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

globeஇதற்கான மூல காரணம் பூமி வெப்பமயமாதலாகும். இன்றைக்கு உலகம் முழுவதும் வெப்பமயமாதல் பிரச்னை பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்பதை உலக நாடுகள் அனைத்தும் ஓப்புக்கொண்ட உண்மையாகும். அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக கரியமில வாயுவைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பாரிஸில் வலியுறுத்தப்பட்டது.

இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கிப் பங்கேற்ற ஐ.நா.வின் முன்னாள் தலைவ‌ர்கள் 4 பேரின் கலந்துரையாடலில், இந்த பருவநிலைப் பிரச்சனையை கட்டுப்படுத்தாவிட்டால் பாரிஸ் மட்டுமின்றி உலக நாடுகளின் நிலைமை மோசமடையும் என எச்சரித்த‌துடன் அதற்கான
காலக்கெடுவாக அடுத்த இரு ஆண்டுகளில் பருவ‌நிலை மாறுபாடு பிரச்னைக்குத் தீர்வு காணாவிட்டால், உலக நாடுகள் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் இம்மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இப்பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட உலக வங்கி பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு உடனடி தீர்வு காண 14 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளதாம், இது போன்ற பருவநிலை மாற்றம் மற்றும் பூமி வெப்பமயமாதல் பிரச்சனையால் கடந்த சில வருடங்களாக உலகில் பல்வேறு இடங்களில் சுனாமி போன்ற பேராபத்துகளும், புயல்களும், நிலநடுக்கங்களும், காற்று மாசுபாடும் ஏற்பட்டு வருவதாக அண்மையில் சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது இயற்கை வளங்களைக் காத்தல். நாம் வாழும் பூமியை வாழ்வதற்கு ஏற்றதாக அமைத்துக் கொள்ள வேண்டும். இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெருக்கிக் கொள்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால சந்ததிகளின் நலனுக்கு உகந்தாகும்.

நாட்டின் வளங்களில் மூன்றில் ஒரு பங்கு வன வளம் இருக்க வேண்டும். அதாவது 30 லிருந்து 35 சதவீதம் இருக்க வேண்டிய வனங்கள், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தற்போது 14 லிருந்து 19 சதவீதமாக உள்ளது. இதற்கான முழுமுதற் காரணம் மனிதனே ஆகும். மனிதன் தனது சுயலாபத்திற்காக வனங்களை அழித்துகொண்டு வருகின்றான். மரங்களை வெட்டுதல், காடுகளை விளைநிலங்களாக ஆக்கிரமித்தல் போன்ற நடவடிக்கையினால் இயற்கை வளங்களின் பரப்பளவு குறைந்து வருகின்றது..

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்தும் இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நம் அரசுகளும் தொலைநோக்குப் பார்வையுடன், மனித குலத்திற்குப் பயன்படுவதுமான இயற்கை வளங்கள் பற்றிய படிப்பை பரவலாக்க வேண்டும். புவியியல், இயற்கை வளங்கள், காலநிலை, கடல், மனிதப் புவியியல், புவித் தகவல் தொழில்நுட்பம் போன்ற படிப்பு வகைகளை மாணவர்கள் மத்தியில் பரவலாக்கி அவர்களை இக்கல்வி கற்க ஊக்கப்படுத்த வேண்டும்.

தனி மனிதர்களாகிய நாமும் தனியாகவோ அல்லது குழுவாகவோ, தன்னார்வலர்களை இணைத்துக்கொண்டு, மக்களிடையே இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்பதை விளங்கும் வகையில் விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தி இயற்கை வளங்களைக் காத்து பூமி வெப்பமயமாக்கலைத் தடுத்தல் வேண்டும்,

இது நம் அனைவரின் கண் முன்னே நிற்கும் சவாலான பிரச்சனையாகும்...

- அப்சர் சையத்