பூமியிலேயே ஆழமான பகுதியான சாக்கடலில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் மேற்குக்கரை, ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய பகுதிகள் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சந்திக்கவிருக்கின்றன. இதுபற்றிய ஆய்வு ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர் Shahrazad Abu Ghazleh மற்றும் அவரது குழுவினரால் நடத்தப் பெற்று வருகிறது. தற்போது நடந்துவரும் சாக்கடல்-செங்கடல், மத்திய தரைக்கடல்- சாக்கடல் இவற்றிற்கிடையேயான கால்வாய்ப் பணிகள் மூலம் சாக்கடலின் நீர்மட்டத்தை முந்தைய அளவிற்கு உயர்த்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மின் உற்பத்திக்காகவும், உப்புத்தன்மையை அகற்றி நன்னீராக மாற்றவும் இந்த கால்வாய் இணைப்புகள் உதவும். சாக்கடலின் நீர்மட்டம் குறைந்துபோனதற்கு புவி வெப்ப மாறுபாடு காரணமல்ல என்பதும், மனிதர்கள் தங்களுடைய தேவைகளுக்காக அதிக நீரை பயன்படுத்தியதும்தான் காரணம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

Dead Seaஜோர்டானிலும், யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன்பாட்டிற்காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேலும் ஜோர்டானும் தங்களுடைய பொட்டாஷ் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை சாக்கடலில் இருந்து எடுத்துள்ளன.

கடந்த முப்பது வருடங்களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது. நீரின் கன அளவு ஆண்டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது. நீர்ப்பரப்பின் அளவும் ஆண்டிற்கு 4 சதுர கிமீ அளவில் குறைந்து வருகிறது என்று இந்தக் குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்போது சாக்கடலை செங்கடலுடனும், மத்தியதரைக்கடலுடனும் இணைக்கும் கால்வாய்கள் வெட்டப்படுவதால் ஆண்டிற்கு 0.9 கன கிமீ அளவிற்கு சாக்கடல் மீட்கபடுமாம். இன்னும் 30 ஆண்டுகளில் சாக்கடல் முன்பிருந்த நிலைக்கு கொண்டுவரப்படும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். சாக்கடலைச்சுற்றி இயங்கும் பொட்டாஷ் தொழிற்சாலைகளும், சுற்றுலா தொழிலும் இன்னும் மேம்பட இந்த ஆய்வுகள் உதவுகின்றன.

முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட சாக்கடல் ஓர் உவர் நீர் ஏரி ஆகும். 330 மீட்டர் ஆழமுடைய சாக்கடல் பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 6 முதல் 8 மடங்கு அதிக உப்புத்தன்மையைக் கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து தற்போது 418 மீட்டர்கள் கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழே இறங்குகிறது. பூமியின் மேல் ஓடுகளின் மீது ஏற்படும் விரிசல்களினால் இந்த நீர் இறக்கம் ஏற்படுவதாக ஒரு கருத்தும் இருக்கிறது.

பல கனிமங்களின் படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படுதல், மாசுபடாத வளி, வளியழுத்தம் அதிகமாக இருத்தல், புற ஊதாக்கதிர்களின் வீச்சு குறைவாக இருத்தல் ஆகியவை உடல் நலத்தை மேம்படுத்தும் காரணிகளாக இருப்பதால் உடல் மற்றும் அழகு சிகிச்சைகளுக்கு சாக்கடல் பகுதி இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இந்த ஆய்வுகள் ஒரு எச்சரிக்கை மணியாகும். நீர்வளத்தை எச்சரிக்கையுடன் கையாளத் தேவையான திட்டங்களை நமது நாடு நடைமுறைப்படுத்த வேண்டும்.

தகவல்: மு.குருமூர்த்தி