செயற்கை நுண்ணறிவு, நம்மால் பரவலாக அறியப்பட்ட ஒரு தகவல் தொழில்நுட்ப சொல்லாடல் என்றே கூறலாம். இது மனிதர்களால் செய்ய முடியாது என்று பொருள் கிடையாது. மனிதர்களால் செய்யக் கூடியதை இயந்திர மொழி உதவியுடன் அதை மிகைப்படுத்தி நேர்த்தியுடன் நமக்காக செய்து கொடுப்பது. மனிதர்களின் அறிவை, சிந்தனையை, மொழியைப் பயன்படுத்தி அதனை இயந்திர மொழியுடன் வலிமையான மென்பொருளை, தகவல் சேமிப்பை உருவாக்கி, பிறகு அதனையே நம் தேவைக்கு ஏற்ப எளிதாகப் பயன்படுத்தும் அளவுக்கு கொடுப்பது.

 முறையே இது மென்பொருள் இயங்கி செயல்படும் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளம், சமூக வலைத்தளங்கள், ரோபோக்கள் (எந்திரன்கள்), கணினி விளையாட்டுகள், அலெக்சா, சிரி போன்ற செவிவழித் தேடல்கள், சிசிடிவி காட்சிகளை ஆராய்ச்சி செய்வது, தானியங்கி ஊர்திகள் (Autonomous Vehicle), மொழிபெயர்ப்பு செயலிகள், வரைபட செயலிகள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதையும் தாண்டி நீங்கள் எதையாவது சிந்திக்கிறீர்களா? ஆம் நமக்காக தேர்வுகளையும் எழுதவிருக்கிறது. அதுமட்டுமா நீங்கள் எழுத்தாளராக அல்லது கவிஞராக வேண்டும் என்று நினைத்தால் அதையும் செய்ய ஆயத்தமாகி விட்டது, செயற்கை நுண்ணறிவு. இனிமேல் நீங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் கவிஞராக மாறலாம், மனுஷ்ய புத்திரன் போல் கவிதைகள் எழுதலாம். நீங்கள் அல்ல, உங்கள் பெயரில் கவிதைகள் எழுதிவிடும் செயற்கை நுண்ணறிவு. மகுடேஷ்வரன் போல தமிழ் பகுப்பாய்வு செய்யலாம், பத்திரிக்கையாளர்? அதையும் செய்யக் காத்திருக்கிறது. எதையாவது செய்தி போல எழுத நினைத்தால் நமக்காக செய்தியையும் எழுதிக் கொடுக்கும். சங்கித்தனத்திற்கு இடமில்லை, ஏனெனில் பொய் செய்திகளை அது எழுதிக் கொடுக்காது.ChatGPTகடந்த 20 ஆண்டுகால தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் மாறாமல் இருப்பது தேடல் இயந்திரத்தின் தேடல் முறை என்றே சொல்லலாம்.‌ இணையதள தேடல் இயந்திரத்தில் நாம் தேடுவது ஏதோ ஒரு இணையதள தொடுதலை நமக்கு பரிந்துரை செய்யும்.‌ இதுவே தான் மாறாமல் இருக்கிறது. தற்போது தேடல் இயந்திரத்தில் செயற்கை நுண்ணறிவு என்ற போட்டி தொடங்கி விட்டது.

‌இணையதள தேடலில் 85% மேலாக கூகுள் நிறுவனத்திடம் இருக்கிறது. மீதமுள்ள பதினைந்து விழுக்காடு மட்டுமே பிற தேடல் நிறுவனத்தில் இருக்கிறது. தேடல் இயந்திரத்தில் அதிகப்படியான நிறுவனங்கள் கிடையாது. மொத்தமாக விரல் விட்டு எண்ணும் அளவுக்கு நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. அதில் பிரபலமான நிறுவனங்கள் இவை:

Google, Microsoft edge and Bing, Duck duck go, Yahoo, Baidu, Ecosia, Wayback Machine, Wolfram Alpha, Safari, Yandex, Ask, Naver, Million Shot.

இணையதள தேடல் இயந்திரத்தின் அடுத்த முயற்சியாக முன்னணி பெரும் தகவல் தொழில்நுட்ப ஆளுமையான மைக்ரோசாப்ட் நிறுவனம் பிப்ரவரி 7, 2023 அன்று தனது Bing தேடு தளத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட செயற்கை ChatGPT மென்பொருள் நுண்ணறிவு பயன்பாட்டை வாசிங்டன் மாநிலத்தில் இருக்கும் தனது முதன்மை அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த புதிய தேடுதளம் நம்மோடு பேசுவது போன்ற "Chatbot Technology" வடிவமைப்பு கொண்டது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் OpenAI என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு புதிய தொடக்க நிறுவனத்துடன் ஓராண்டு காலமாக இணைந்து உருவாக்கிய புதிய நுண்ணறிவு தொழில்நுட்ப தேடு தளத்தை உருவாக்கியது. 2019ல் OpenAI புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து கூட்டாக இந்த முயற்சியை மேற்கொண்டது மைக்ரோசாப்ட்.

சரி, பொதுவாக நாம் எதையாவது தேட வேண்டும் என்றால் உடனே கூகுள் அண்ணாச்சியின் உதவியை நாடுவோம். கூகுள் தான் இணையதள தேடல் இயந்திரத்தின் முன்னோடி மற்றும் வலிமையான சந்தையைக் கொண்டது. நாம் தேடும் சொற்களுக்கு ஏற்ப அதனோடு ஒட்டிய இணையதளத்தை நமக்குக் காட்டும். இதை மாற்றி அமைக்கிறது ChatGPT செயற்கை நுண்ணறிவு கொண்ட மைக்ரோசாப்ட் பிங்க்.

எடுத்துக்காட்டாக நீங்கள் மும்பைக்குச் செல்ல வானூர்தி தேடினால் ChatGPT உங்களுக்கு டிக்கெட் itinerary உருவாக்கி அதை சரி பார்க்கச் சொல்லும். (சோழர்கள் வரலாற்று ஆய்வுகள் பற்றி கேட்க நினைத்தால் ஆய்வுகளைத் தேடி வேறு எங்கும் செல்லாமல் அதுவே கொடுத்து விடும்! சோழர்கள் பற்றிய கட்டுரை சுடச்சுட நீங்களே எழுதிவிட முடியும்! இல்லை உங்களுக்காக எழுதி கொடுத்து விடும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் வரக் கூடும்.) பதினைந்தாம் நூற்றாண்டில் புதிய உலகைக் கண்டறிந்த கொலம்பஸ் ஏன் அமெரிக்கா வந்தார்? (அமெரிக்க தொல்குடிகள் தான் கொலம்பஸைக் கண்டு பிடித்தார்கள் என்று ஒரு நகைப்பு கூட உண்டு) என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறது.

உங்களுக்கு மோனாலிசா போன்ற வரையப்பட்ட புகைப்படம் தேவைப்பட்டால் உங்களுக்காக வரைந்து கொடுக்கிறது. ஏற்கனவே இருக்கும் புகைப்படங்களைத் தரவில்லை, மாறாக புதிதாக வரைந்து கொடுக்கும்.

ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல மனுஷ்ய புத்திரன் போல் கவிதைகள் வேண்டும் என்றால் சில நூறு கவிதைகள் அதுவே எழுதிக் கொடுக்கும், கட்டுரைகள் எழுதும். முறையே இது புத்தகங்கள், காணொளிக் காட்சிகள் அடிப்படையில் பயனாளிகளுக்கு எழுத்து வடிவமைப்பில் பதில் அளிப்பது போன்று தான் உருவாக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ பகுதியில் ஆய்வு நிறுவனமாக தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு OpenAI நிறுவனம் 2020ல் GPT-3 என ஒன்றை அறிமுகம் செய்தது. இது பயனாளிகளுக்கு கட்டணம் இல்லாமல் கிடைக்கப் பெற்றது. பின்னர் இதிலிருந்து மேலும் மேம்படுத்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கியது தான் ChatGPT.

பொதுவாகவே அறிவியல் தொழில்நுட்பம் நமது வேலைகளை எளிதாக மாற்றுவது தான் அடிப்படை. அப்படியென்றால் மாணவர்கள் இதை பயன்படுத்த மாட்டார்களா? பயன்படுத்தினார்கள். யாரென்றால் கல்லூரி, பள்ளி மாணவர்கள் வீட்டுப் பாடங்கள் செய்வதற்கும், ஆய்வுகள் செய்து கொடுப்பதற்கும் இதை ஓராண்டு காலமாக பெரிய அளவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குத் தெரியாமல் போகுமா? எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எந்த அளவிற்கு ஆங்கிலச் சொற்கள் தெரியும் என்பது அவர்களது ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவரால் முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவர்கள் போல எப்படி எழுத முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் எழ இதன் பின்னணியில் செயற்கை நுண்ணறிவு அண்ணாச்சி இருப்பது தெரிந்திருக்கிறது. விடுவார்களா பல பள்ளிகள் கல்லூரிகளின் முதல்வர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது என்று கூட்டறிக்கை வெளியிட்டார்கள். "Do not use ChatGPT are any other automated writing tools for school papers. This is cheating and will not be tolerated. If you are caught using ChatGPT are any other automated writing tools for school papers that will be a serious consequences."

ஆனால் இதை மாணவர்கள் பயன்படுத்தவே கூடாது என்று பள்ளி நிர்வாகமும் கல்லூரி நிர்வாகமும் தெரிவிக்கவில்லை. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்; தெரியாததை தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதையே காப்பி செய்து தன்னுடைய படைப்பாக வெளியிடக்கூடாது. இது மாணவர்களின் கற்பிக்கும் திறனை மழுங்கடிக்கும், புதிய சிந்தனைகளை உருவாக்கவில்லை என்று தெரிவித்திருந்தது நியூயார்க் நகர கல்விக் கூட்டமைப்பு.

ChatGPT செயற்கை நுண்ணறிவு எப்படி இது போல் எழுத முடிகிறது? 90களில் இது தொடங்கப்பட்டபோது வணிகம் சாராத அதாவது லாப நோக்கமற்ற நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. பரவலாக உள்ள அனைத்து புத்தகங்களையும் என்சைக்ளோபீடியா தகவல்களையும் துல்லியமாக சேமித்து வைத்து, அதனை பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப பதில் வழங்கும் படியாக மேம்படுத்தப்பட்டது. பின் நாட்களில் இதன் தேவை அதிகரிக்கவே மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் பணம் முதலீடு செய்ததால் இதன் வலிமை இன்னும் கூடியது. யாரோ ஒருவர் நமக்காக நம் வேலையை எளிதாக செய்து முடிக்கிறார் என்றால், நாம் அதை பயன்படுத்துவோம் தானே? இதையே வணிக நோக்கில் உற்று நோக்கினால் என்னவாகும்? இதைத்தான் மைக்ரோசாப்ட் செய்து வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவறாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி ChatGPT மென்பொருள் அமைப்பிடம் எழுந்தபோது. அவர்கள் இதை நாங்கள் ஊக்குவிக்கவில்லை என்று பதில் அளித்தார்கள். "We don't want chat GPT to misleading purposes in school or anywhere else. So we are already developing mitigation to help anyone identify text generated by that system" - OpenAI கூறியது.

அண்மையில் இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து வைத்த மைக்ரோசாப்டின் முதன்மை அலுவலர் சத்யா நாடல்லா என்ன கூறினார் என்றால் "மென்பொருட்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் நாம் அதை மறுவடிவமைப்பு செய்யவிருக்கிறோம். செயற்கை நுண்ணறிவினை மனிதர்கள் விருப்பப்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு உருவாக்க வேண்டும். இதை ஆய்வகத்தில் செய்யப் போவதில்லை. வெளி உலகில் சென்று செய்ய வேண்டும்"

மைக்ரோசாப்ட் தற்போது இதனை கணினி வடிவமைப்பாக மட்டுமே வெளியிட்டுள்ளது, அதுவும் மைக்ரோசாப்ட் பதிவு செய்த பயனாளர்களுக்கு மட்டும். திறன் பேசியில் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் திறன்பேசி செயலிகள் மூலம் இதன் பயன்பாடு வெளிவரும் என்று அறிவித்திருக்கிறது மைக்ரோசாப்ட்.

இத்தகைய செயற்கை நுண்ணறிவின் புதிய வடிவமைப்பில் காப்புரிமை சிக்கல் எழாமல் இல்லை. புகைப்படங்கள், புத்தகங்கள் என்று உரிமை பெறாமலேயே பயன்படுத்திய வழக்கு இருந்திருக்கிறது.

வழக்கமான தேடுதளத்திற்கும் புதிய ChatGPT மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு மென்பொருள் தேடு தளத்திற்கும் வேறுபாடு என்ன என்று நானே பிங் தேடல் இயந்திரத்தில் "மனுஷ்ய புத்திரன் கவிதைகள்" என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கேட்டேன். தற்போது உலகளவில் ஆளுமைகள் பற்றி தொகுப்பு இல்லை என்று கூறியது. ஆனாலும் என்னிடம் சில கவிதைகள் உங்களுக்காக இருக்கிறது என்று திரையில் காட்டியது பிங்.

"கடலில் தேவை கலைஞர் சிலை

சூரியன் உதித்தது காலை

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை

அதி காலை மணி 5:30"

ஆஹா… இதை நானும் எனது நண்பர்களுக்கு நான் எழுதியது என்று அனுப்ப போகிறேன்.

மைக்ரோசாப்டின் இந்த புதிய முயற்சி கூகுள் அண்ணாச்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இறுதியாக கூகுள் நிறுவனம் தனது கூகுள் தேடலில் செயற்கை நுண்ணறிவை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. அதன் பெயர் பிராட்.

- பாண்டி