உலகில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. கடந்த மார்ச் வரை 14,157 MW  வரை முழு நிறை கருவி கல அமைவு ( Installation )  நிறைவடைந்துள்ளது. இதில் தமிழகத்தில் 5,900 MW  அளவு வரை மின் உற்பத்தி செய்ய கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதில் சுமார் 3,400 MW  வரையே மின் உற்பத்தி கடந்த ஜூன் மாதம் கிடைத்தது.

ஒரே இடத்தில் இருந்து காற்றாலை மூலம் பெறப்படும் மின்அளவில்  நாகர்கோவிலுக்கு பக்கத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ஆசியாவிலே  முதல்  இடத்தில் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 2500 MWக்கு மின் உற்பத்தி  செய்யப்படுகிறது.  மேலும்  தமிழகத்தில் உடுமலைபேட்டை, தாழையூத்து, கயத்தார் மற்றும் தேனி பகுதிகளில் இருந்தும் நாம் காற்றாலைகளை  பயன்படுத்துகிறோம். இது தவிர நாற்பத்தி ஒன்று இடங்களை ஆற்றல்  உள்ள இடங்களாக கணித்துள்ளனர்.  தமிழகம் இந்தியாவிற்கு ஊழலில்  மட்டும் அல்ல காற்றாலை மின் உற்பத்தியிலும்  முதல் மாநிலமாக  திகழ்கிறது .
 
உலகின் முண்ணனி நிறுவனங்களான வெஸ்டாஸ், கமேசா முதலிய  நிறுவனங்கள் இந்தியாவில் சென்னையில்தான் தங்கள் தலைமை அலுவலகம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவையும் கொண்டுள்ளனர்.  இது தவிர RRB,  லேட்டினர் ஸ்ரீராம், வின் வின்ட், ரீஜென் போன்ற முண்ணனி நிறுவனங்களும் சென்னையில் தான் உள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் சுசலோனின் தலைமை அலுவலகம் புனேவில் உள்ளது. முதலில் NEPC என்ற நிறுவனம்தான் இந்த காற்றாலை தயாரிப்பதில் தீவிரம் காட்டியது. பெரும்பாலும் தமிழகத்தில் பத்து வருடங்களுக்கு முன் இவர்கள் தான் அதிக அளவில்   காற்றாலைகளை பிறருக்கு தயாரித்து கொடுத்தனர். தமிழகத்தில்  பெரிய நிறுவனங்கள் (உம் : மெட்ராஸ் சிமெண்ட்ஸ், அசோக் லேய்லாந்து, முதலியன)  மட்டுமல்லாது நடுத்தர நிறுவனங்களும் தங்களுக்கு சொந்தமாக காற்றாலைகளை வைத்துள்ளனர் .
முதலில் 250 KW எந்திரம் செய்து கொண்டிருந்த நிறுவனங்கள் இப்போது 2000  KW  எந்திரம் தயாரிக்கத் தொடங்கிவிட்டன.   இவை பல்லிணையகம் மற்றும் பல்லிணையகமற்ற தொழிற்நுட்பம் கொண்டவை.  பல்லிணையகத்தில் நீராற்றலால் அலகை சரி செய்தல் ( HYDRAULIC PITCH )  மற்றும் மின் ஆற்றலால் சரி செய்தல் (ELECTRIC PITCH) என இரு வகைகள் உள்ளன.  பல்லிணையகம் தயாரிக்கும் முண்ணனி நிறுவனங்களான ஹான்சென்  கோவையிலும்  விநேர்ஜி சென்னையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரு வருடம் முன்பு தமிழக மின் வாரியம் இதில் இருந்த தயாரிக்கப்படும் மின்சாரத்தின் ஒரு யூனிட்டிற்கு Rs. 3.39 / -  தந்தனர். ஒரு காற்றாலை அமைக்க ஒரு KW க்கு ஐந்து லட்சம் ருபாய் வரை செலவாகும்.    அலகு ( blade ), குவியம் (HUB), NACELLE போன்றவை ஒரு காற்றாலையின் முக்கிய பாகங்கள். தமிழகத்தில் ஆண்டு சராசரி காற்று  சக்தியின் அடர்த்தி  ஆரல்வாய்மொழியில் உள்ள முப்பந்தல் என்ற இடத்தில் அதிகமாக 406 w /m2  ( 20 /25 m இல் அளக்கப்பட்டது) என்ற அளவில் உள்ளது.
காற்றாலை நிறுவனங்கள் தயாரித்த மின்சாரத்தை பெற்றுக் கொண்ட தமிழக மின் வாரியம் கடந்த ஏப்ரல் மாதம் வரை ரூ.1200 கோடி வரை பணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால் இவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களில் ( கர்நாடக மற்றும் மகாராஷ்டிராவில் தமிழகத்தை விட ஒரு யுனிடிற்கு அதிகமாக மின் வாரியம் பணம் தருகிறது). தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காற்றாலைகள் ஏற்கனவே நிறுவப்பட்டு முடிந்து விட்டதால்  இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் அதிக அளவில் காற்றாலைகள் அமைக்க முடிவு செய்துள்ளன.