நீங்கள் அனைவரும் ஒரு முக்கியமான கருத்தரங்கிற்காக, ஒரு மிகப்பெரிய அரங்கிற்குள் நுழைகிறீர்கள். அங்கு கருத்தரங்க பேச்சாளர் தன்னுடைய உரையை நிகழ்த்த உள்ளார். அரங்கில் கும் இருட்டு; விளக்குகள் எரியவில்லை; மின்விசிறிகள் ஓடவில்லை; ஒலிப்பெருக்கி இயங்கவில்லை; அருகே இருப்பவர் முகம் கூட தெரியவில்லை; அரங்கு முழுவதும் முனுமுனு சப்தம் கேட்க முடிகிறது

அப்போது கருத்தரங்கு பேச்சாளர், அரங்கில் இருக்கும் உங்களுக்கு தெரியாத மொழியில் எதையோ பேசுகிறார்; ஆனால் உங்களுக்கு அது புலப்பட வில்லை; அப்போது என்ன செய்வீர்கள்??" கண்ணைக் கட்டி காட்டில் விட்டது" போல இருக்கும்தானே?!

அரங்கில் ஒரு நபர் எழுந்து உங்கள் முகம் எங்களுக்கு தெரியவில்லை என்று மிகுந்த கோபத்தில் உரக்க கத்துகிறார்; உடனே விளக்குகள் எரிய ஆரம்பித்தன.

மற்றொருவர் இங்கே ஒரு ஒரே புழுக்கமாக உள்ளது உட்கார முடியவில்லை என்றார் ; உடனே மின்விசிறிகள் இயக்கப்பட்டன.

Signs Of Autismமற்ற ஒரு நபர் உங்களின் பேச்சு எங்களுக்கு கேட்கவில்லை என்கிறார்; இப்போது ஒலிபெருக்கியில் கருத்தரங்கு பேச்சாளரின் சப்தம் ஒலித்தது .இன்னொருவர் இப்போது நீங்க பேசுவது கேட்கிறது…. ஆனால் எங்களுக்கு புரியுமாறு பேசுங்கள் என்றார்; பேச்சாளர் தன் உரையை மற்றவர்களுக்குப் புரியுமாறு பேச ஆரம்பித்தார். இதை ஏன் முன்கூட்டியே செய்யவில்லை என்று கேட்டதற்கு, அப்படியென்றால்"ஆட்டிசம்"என்ற மன நிலையை நீங்கள் அனைவரும் உணர்ந்திருக்க முடியாது என்றார்.

இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? ஆம் விளக்கு எரியாமல், மின்விசிறி ஓடாமல், ஒலிபெருக்கி இயங்காமல், மொழி தெரியாமல், ...... நீங்கள் இந்த அரங்கிற்குள் சற்று முன்பு எப்படி இருந்தீர்களோ, அதே மனநிலையில்தான் ஆட்டிச குழந்தைகளும் எப்போதும் இருக்கின்றனர்.

பார்க்க முடிகிறது; அது என்ன என்று புரியவில்லை.

கேட்க முடிகிறது; எதைக் கேட்கிறோம் என்று தெரியவில்லை.

உடல் வியர்க்கிறது; உட்கார இயலவில்லை

மொழி இருக்கிறது; எதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை

இதுதான் ஆட்டிசக் குழந்தைகளின் உண்மையான நிலை .

இதோ ஆட்டிசத்தை உணர்வதற்கு மற்றுமொரு வாய்ப்பு

நீங்கள் ஒரு தேர்வுக்காக, பாடத்தில் உள்ள அனைத்துக் கேள்வி பதில்களையும் முட்டி மோதி தெளிவாக படித்து செல்கிறீர்கள், தேர்வில் எழுதும்போது இந்த கேள்விக்கு இந்த பதில் தானா என்ற சந்தேகம் வருமல்லவா? ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் படித்து வைத்திருப்பதில் இருந்து வடிகட்டி அதற்கான பதிலை தேர்வு செய்து எழுத வேண்டும் அல்லவா? அவ்வளவு நன்றாக தெளிவாக படித்த உங்களுக்கு ஏன் அங்கு கேள்விக்கான பதிலை தேர்வு செய்ய குழப்பம், சந்தேகம் எழுகிறது கேள்வியையும் பதிலையும் சரியாக பொருத்தி எழுதினால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும்; மாற்றி எழுதினால் கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விடும். அதுபோல்தான் ஆட்டிசக் குறைபாடு உடையவருக்கு எல்லா வார்த்தைகளும், செய்கைகளும் புரிதல்களும் அவர்களுக்குள் இருக்கும். ஆனால் அதை எப்போது எந்த இடத்தில் பயன்படுத்துவது என்று பொருத்த தெரியாமலும், வார்த்தைகளை பயன்படுத்த தெரியாமலும் இருக்கின்றனர். இப்பொழுது நீங்கள் "ஆட்டிசம்" என்பதை நன்றாகவே உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் சரி ஆட்டிசம்என்றால் என்ன? இதை எப்படி கண்டறிவது? இதன் அறிகுறிகள் என்னென்ன? யார் யாருக்கு வரும்? என்ற கேள்விக் கணைகள் உங்கள் உள்ளத்தில் ஓடுவது எனக்கு புரிகிறது.

முதலில் "ஆட்டிசம்" என்றால் என்ன என்ற கேள்விக்கு விடைகளை தேடுவோம்

"ஆட்டோஸ்" மற்றும் "இஸ்மாஸ்" ஆகிய இரண்டு கிரேக்க மொழி சொற்களின் கூட்டமைப்பே ஆட்டிசம் என்றாயிற்று. "ஆட்டோ" என்றால் "சுய", "இஸ்மா" என்றால் "அதே நிலையில் இருத்தல்" என்று பொருள். அதாவது இரண்டு வார்த்தைகளையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால், "தன்னால் ஈர்க்கப்பட்ட நிலையில் இருத்தல்" என்று பொருள் படும். தொடக்க காலத்தில் அதாவது 1938இல் "ஹேன்ஸ் அஸ்பர்ஜர்" என்ற மருத்துவ அறிஞர் அதிக ஆட்டிசத் தன்மை உடையவர்களை "அஸ்பர்சர்ஸ் சின்றோம் என்று வகைப்படுத்தினார். மீண்டும் 1943இல் டாக்டர் லியோ கண்ணர் என்பவர் "ஆட்டிசம் ஒருவிதமான மன வளர்ச்சி குறைபாடு" என்று உறுதிப்படுத்தினார். இவர் இக்குறைபாடுள்ள குழந்தைகளை "டீஃப்ராஸ்ட் செய்யப்படாத குறைபாடுள்ள பிரிட்ஜில் இருந்து வெளிவந்த அழகான பொருட்களை போன்றவர்கள்" என்று குறிப்பிடுகிறார்.

அடுத்த கேள்வியாக ஆட்டிசம் குறைபாட்டை எப்படி கண்டறிவது? இதன் அறிகுறிகள் என்னென்ன?

பல உளவியல் ஆய்வாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆட்டிசம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களின் கருத்துகளின்படி…….

இவ்வாறு ஒரு குழந்தை 18 மாதங்களில் இருந்து செய்யும் செயல்களை பார்த்து அல்லது கவனித்து ஆரம்ப காலகட்டத்திலேயே, மனநல மருத்துவரிடம் சென்று, குழந்தையை ஆட்டிசம் பரிசோதனைக்கு உட்படுத்தி, உறுதிப்படுத்தியதற்கு பிறகே, ஆரம்பகால இடையிட்டு பயிற்சி கொடுப்பது மிகச் சிறந்தது.

ஆட்டிசம் யார் யாருக்கு வரும்?

இதுவரை "ஆட்டிசம் ஏன், எதனால் வருகிறது" என்பதை எந்த ஆராய்ச்சியிலும் சொல்லப்படவில்லை. ஒரு புரியாத புதிராகத்தான் உள்ளது.பொதுவாக அனைத்து குறைபாடுகளுக்கும் (பார்வைத்திறன் கேட்கும் திறன், மன வளர்ச்சி குறைபாடு மற்றும் உடல் குறைபாடு) காரணங்களாகக் கருதப்படுபவைகளே, இக்குறைபாட்டிற்கும் காரணங்களாக அமையலாம்; இவையே முக்கிய காரணம் என்றும் கூறிவிட முடியாது. இதற்கான காரணங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  1. குழந்தை பிறப்பதற்கு முன்பு
  2. குழந்தை பிறக்கும்போது
  3. குழந்தை பிறந்த பிறகு

1. குழந்தை பிறப்பதற்கு முன்பு

கர்ப்பகாலத்தின் போது தாயின்

2. குழந்தை பிறக்கும்போது

இந்த காரணங்களினாலும் ஆட்டிசம் குறைபாடு வருவதற்கு சாத்தியம் உள்ளது.

3. குழந்தை பிறந்த பிறகு

ஆட்டிசம் குறைபாட்டை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா?

இந்த வினாவும் ஒரு புரியாத புதிராகத்தான் உள்ளது. உங்களுக்கு புரியுமாறு கூற வேண்டுமென்றால், ஒரு பார்வையற்றவருக்கு மருந்து அல்லது மாத்திரை உட்கொண்டால் பார்வை வருமென்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?, அதேபோல் ஒரு கேட்கும் திறன் அற்றவருக்கு ஏதாவது பயிற்சியோ மருந்துகளோ பின்பற்றுவதன் மூலம் அவருக்கு காது நன்றாக கேட்கிறது என்றும் கூறினால் நம்பத் தகுந்ததாக உள்ளதா? கை கால் இழந்தவருக்கு, மருந்து மாத்திரையின் மகிமையால் இழந்த பாகங்கள் மீண்டும் தானாக உருவாகுமா அல்லது வேலை செய்யுமா?? இழந்த பாகங்களிற்கு பதிலாக செயற்கை பாகங்கள் பொறுத்தி வேலை செய்யலாம்.

இதற்கு என்னதான் தீர்வு?

இவர்களின் அதீத சுறுசுறு சுறுசுறுப்பை குறைப்பதற்காகவும், கவனத்தை அதிகப்படுத்துவதற்காக ஒரு சில மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் இது முற்றிலுமாக ஆட்டிசம் குறைபாட்டை குணப்படுத்தும் என்பது எந்த ஆராய்ச்சியிலும் தெளிவாக கூறப்படவில்லை. எனவே பார்வையற்றவர் எவ்வாறு பார்வைத் திறனுக்கு பதிலாக மற்ற திறன்களை அதிகமாக பயன்படுத்துகின்றனரோ, அதேபோல் கேட்கும் திறன் அற்றவர்களும் கேட்பது மற்றும் பேசுவதற்கு பதிலாக மற்ற திறன்களை அல்லது சைகைகளை பயன்படுத்தி தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனரோ, அதே போல் தான் ஆட்டிசம் குறைபாடுடையவர்களுக்கும் சில தெரப்பிகள் மூலமாக, அவர்களுக்கு தேவையானவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவும், அவர்களுடைய செயல்களை அவர்களே செய்வதற்கு பயிற்சிகள் மட்டுமே அளிக்க முடியும். இந்த பயிற்சிகள் ஆனது அவர்களை மற்ற திறன்களை பயன்படுத்துவதற்கும் இருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கு மட்டுமே என்பதில் ஐயமில்லை.

ஆட்டிசம் பாதிக்கப்பட்டோர் சிலர் பேசுகின்றனர்… சிலர் பேசாமல் இருக்கின்றனர்…

இவர்கள் எவ்வகையில் பிரிக்கப்படுகின்றனர் என்ற சந்தேகம் உங்கள் மனதில் எழுகிறதா? இதோ இதற்கான பதில்

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை ஐந்து பிரிவினர்களாகப் பிரிக்கலாம் .

1. கிளாசிக்கல் ஆட்டிசம் Classical Autism

கிளாசிக்கல் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டோர் லேசான(Mild), மிதமான(moderate), கடுமையான (severe) மற்றும் ஆழமான (profound)) குறைபாடுகளான இவற்றில் ஏதாவது ஒரு நிலையில் இருப்பர். ஆதலால் இவர்களில் சிலர் கல்வி கற்க முடியும்; சிலர் கல்வி சாராத செயலை செய்ய முடியும்; சிலர் மற்றவர்களை சார்ந்து இருக்க முடியும்.

2. ஏஸ்பர்சர் சின்றோம் Asperser’s Syndrome

ஏஸ்பர்சர் சின்றோமால் பாதிக்கப்பட்டோர், லேசான (Mild) குறைபாடு உடையவர்கள். இவர்கள் கல்வி கற்கவும் முடியும்; சாதாரண குழந்தைகள் போல் வாழ்வில் வலம் வரமுடியும்.

3. பெர்வேசிவ் டெவலப்மண்டல் டிஸார்டர் (PDD) Pervasive Developmental Disorder

பெர்வேசிவ் டெவலப்மண்டல் டிஸார்டரால் பாதிக்கப்பட்டோர் லேசான(Mild) மற்றும் மிதமான (moderate) குறைபாடுடையோர். இவர்களில் சிலர் கல்வி மற்றும் கல்வி சாராத கலைகளையும் கற்க முடியும்.

4. ரெட் சின்றோம் Rett’s Syndrome

ரெட் சின்றோமால் பாதிக்கப்படுவது குறிப்பாக பெண் குழந்தைகளே!அதாவது பெண் குழந்தைகளிடம் ஆட்டிசம் குறைபாடு இருந்தால் "ரெட் சின்ட்ரோம்" என்று கூறலாம். இவர்கள் மிதமான, கடுமையான மற்றும் ஆழமான குறைபாடுடையோர் .ஆதலால் இவர்கள் கல்வி சாராத திறன்களைக் கற்கவும் மற்றவர்களின் உதவியை நாடியே இருப்பர்..

5. சைல்டுஹுடு டிஸ் இன்டகிரேட்டிவ் டிஸார்டர் (CDD) Childhood disintegrative disorder

சைல்டுஹுடு டிஸ் இன்டகிரேட்டிவ் டிஸார்டர் ஆல் பாதிக்கப்பட்டோர் மிதமான(moderate), கடுமையான (severe) மற்றும் ஆழமான(profound) குறைபாடுடையோர் இவர்கள் கல்வி சாராத துளிர்களை தொழில் கலை கற்க முடியும் ஒரு சில மற்றவரின் உதவியுடன் தான் உலகில் வலம் வர முடியும்.

பாதிப்பின் தன்மையைப் பொருத்து, ஆட்டிசம் குறைபாடுடையோரின் வகைப்பாடு, கீழே உள்ள அட்டவணையில் பகிரப்பட்டுள்ளது

ஆட்டிசம் வகைகள்

கிளாசிக்கல் ஆட்டிசம்

ஏஸ்பர்ஜர் சின்ட்ரோம்

பெர்வேசிவ் டெவலப்மண்டல் டிஸார்டர்(PDD)

ரெட் சின்ட்ரோம்

சைல்டுஹுடு டிஸ் இன்டகிரேட்டிவ் டிஸார்டர்(CDD)

லேசான (Mild)

X

X

மிதமான (moderate)

X

கடுமையான (severe)

X

X

ஆழமான (profound)

X

X

பாதிப்பின் தன்மையைப் பொருத்து, ஆட்டிசம் குறைபாடுடையோரின் வகைப்பாடு

அதென்ன லேசான……மிதமான…. கடுமையான…… ஆழமான…… குழப்பம் தேவையில்லை.

பார்ப்போம் இங்கு ...

பாதிப்பின் தன்மையைப் பொறுத்து ஒவ்வொரு ஆட்டிச வகையும் பிரிக்கப்பட்டுள்ளது.

1. லேசான (Mild) - அடிப்படைக் கல்வி கற்க முடியும் (Educable)

2. மிதமான (moderate) - அடிப்படைக் கல்வி கற்க முடியும்(Educable)

3. கடுமையான (severe) - கல்விசாரா செயல்களை கற்க முடியும்(Trainable) (வீட்டு வேலை செய்தல், நீச்சல், நடனம், விளையாட்டு) மற்றும்

4. ஆழமான (profound) - தினசரி செய்யும் செயல்களுக்கு(பல் துலக்குதல், சாப்பிடுதல், குளித்தல், கழிப்பறை பயன்படுத்துதல், ... போன்ற செயல்கள்) மற்றவர்களை சார்ந்திருப்பவர்கள்(Treatable)

இவர்களில் லேசான மற்றும் மிதமான குறைபாடு உடையவர்கள், சாதாரண குழந்தைகள் போல் பயிற்சி அளித்து மேம்படுத்த முடியும். ஆனால் கடுமையான மற்றும் ஆழமான குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், தினசரி வாழ்வில் செய்யக்கூடிய செயல்களுக்கு மற்றவர்களை சார்ந்திருப்பவர்கள்.

பேசும் குழந்தை பேசா குழந்தை என்றும் இவர்களை வகைப்படுத்தலாம். பேசும் குழந்தைகள் பேச்சு பயிற்சி மற்றும் தொடர்பு கொள்ளும் பயிற்சி அளிக்கும்போது ஒத்துழைப்பு கொடுத்து, சொல்வதை திரும்ப கூறி. அவர்களுடைய தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால் பேசாக் குழந்தைகள் எவ்வளவு சிறந்த பேச்சுப்பயிற்சி மற்றும்தொடர்பு கொள்ளும் பயிற்சி கொடுத்தாலும், அவர்களின் பேச்சிலோ தொடர்பு கொள்ளும் திறனிலோ, முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமல்லாது அவர்களை கட்டாயப்படுத்தி பேச வைக்க பயிற்சி அளிக்கும் படும்போது, அவர்களிடம் எதிர்மறையான குணாதிசயங்கள் அல்லது நடவடிக்கைகளை வெளிப்படுத்துவர் இவர்கள் தேவையின் போது மட்டுமே தங்களின் பேசும் திறனை வெளிப்படுத்துவர் மற்ற சமயங்களில் படங்களை காண்பித்தோ, உரக்க கத்தியோ, அழுதும் தங்களுடைய விருப்பங்களையும் கோபங்களையும் வெளிப்படுத்துவர்.

இவர்களுக்கு உரிய சிகிச்சைகள் தான் என்ன?

தற்போதைய காலகட்டத்தில் சிறந்த தெரப்பிஸ்ட் யார் என்றால் "ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயே!"எந்த ஒரு சிறப்பு பயிற்சி மையம் அல்லது சிறப்பு பள்ளியில் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறதோ, மையம் அல்லது பள்ளி சிறந்ததாக கருதலாம்.தெரப்பிகள் பலவிதம்; பலவகைகளில் கொடுக்கப்படுகின்றன.

இவர்களுக்கான தெரப்பிகளை பின்வருமாறு பட்டியலிடலாம்

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டோர் ஒவ்வொருவரும் தனித்துவமானவர். ஒருவருக்கு கொடுக்கப்படும் தெரப்பி, மற்றவர்களுக்கு பொருந்தும் என்று கூற முடியாது ஆதலால் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும், மனநல மருத்துவரின் ஆலோசனையின் படி, சிறப்பு பயிற்சி எடுத்து, தொடர்ந்து இடையீட்டு பயிற்சி கொடுக்கும் பொருட்டு, இந்த தெரப்பிகளின் பயனை உணர முடியும். பொறுமையும், விடாமுயற்சியும், இடைவிடாது பயிற்சியை தொடர்ந்து செய்யும் திறனும், ஒரு தாயிக்கு இருந்தால், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்பதை கட்டுரையின் வாயிலாக உணரவைத்து நிறைவு செய்கிறேன்.

உணருங்கள் ஆட்டிசத்தை! உணரச் செய்யுங்கள் ஆட்டிசத்தை!

உணர்வோம் ஆட்டிசத்தை!

References:

1. Exposure to gadgets may cause ‘virtual autism’ among children, Dhritiman Ray / TNN / Nov 24, 2017, 09:19 IST,  http://timesofindia.indiatimes.com/articleshow/61776660.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
2. Davidovitch M, Shrem M, Golovaty N, Assaf N, Koren G. The role of cellular phone usage by parents in the increase in ASD occurrence: A hypothetical framework. Med Hypotheses. 2018 Aug; 117:33-36. doi: 10.1016/j.mehy.2018.06.007. Epub 2018 Jun 7. PMID: 30077193.
3. A Technology Safety Guide for Parents of Children With AutismBy: Sheena Harris Freelance Writer, May 5th, 2020, addiction, assistive technology, communication, cyberbullying, safety, social interaction, social skills, technology
4. “Cell phones can be a health risk during pregnancy”, January 9, 2019, The Indian Express, Dr N S Kanimozhi, Gynaecologist and Obstetrician, Cloudnine Group of Hospitals, Chennai.),
5. “Tips for parents who have kids with autism”, April 3, 2022, The Indian Express, Dr. Sarang Goel, MBBS PGDCM FID MBAHH, Ayu Health Hospital
6. Which Therapies Can Help With Autism?, Medically Reviewed by Neha Pathak, MD on September 28, 2021
7. https://www.cdc.gov/

- கி.மஞ்சுளா, ஆராய்ச்சி மாணவி, சிறப்புக்கல்வி துறை, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம், கோயம்புத்தூர்-641043

&

முனைவர் டி.கீதா, பேராசிரியர், சிறப்புக்கல்வி துறை, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம், கோயம்புத்தூர்-641043