தமிழ் ஈழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் இந்தியா வருவதற்கு ‘விசா’ அனுமதியை வழங்கிய இந்திய அரசே, அவர்களை சென்னையில் விமானத்திலிருந்து இறங்கவிடாமல், திருப்பி அனுப்பியதற்கு காரணம் என்ன?இந்தியாவின் உளவு நிறுவனமான ‘ரா’, இந்தப் பிரச்சினையிலும் தனது அதிகாரத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு இந்தத் திருவிளையாடல்களை நடத்தியுள்ளதா? உலகத்தின் முன் இந்திய தேசிய ஆட்சி இப்போது கேவலப்பட்டு நிற்கிறது என்பது மட்டும் உண்மை! ஈழத் தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்தின் மீது இந்தியப் பார்ப்பனியம் கொண்டிருந்த வெறுப்பும் பகையும் இன்னும் அடங்கவில்லை என்பதையே இச்சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

தமிழக முதல்வருக்கு தெரியாமலே இது நடந்திருக்கிறது என்று அவரைக் காப்பாற்றுவதற்கு திருமாவளவன், சுப.வீரபாண்டியன்,கி.வீரமணி என்ற முதல்வரின் முன்னோடும் பிள்ளைகள், சமாதானம் கூறக் கிளம்பியிருக்கிறார்கள். அப்படியானால், தமிழக காவல்துறை,விமான நிலையத்தில், பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தது எப்படி என்ற கேள்விக்கு, அவர்களிடம் பதில் கிடையாது. பிரபாகரன் பெற்றோர் தமிழகம் வரத் தடை விதிக்க வேண்டும் என்று 2003 ஆம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதே,காரணமாகக் கூறப்படுகிறது. இதில் ஜெயலலிதாவும் குற்றவாளிதான்! தேர்தல் நேரத்தில் ஈழ விடுதலையைப் பேசிய ஜெயலலிதா, தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஈழப் பிரச்சினையை மூட்டை கட்டிக் கொண்டு, மவுனம் சாதிக்கிறார். வைகோ நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், கட்டுப்பாடாக ஜெயலலிதா பற்றி எவருமே பேசவும் இல்லை. கூட்டணி ‘தர்மம்’ உண்மைகளுக்கு திரையிட்டு விடுகிறது போலும்!

பாலசிங்கம் தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வர முயன்றபோது, இந்து உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்கள் அவரை அனுமதிக்கக் கூடாது என்றே எழுதின. அன்றைக்கு நடந்த ஆட்சியும் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்தது. தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தாலும்,மருந்துகள் அனுப்பி உதவுவதிலும், மருத்துவ சிகிச்சை அளிப்பதிலும்,மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் உலக நாடுகள் பலவும் அனுமதிக்கின்றன. இந்தியப் பார்ப்பனியத்தின் கொடூரமான கோட்பாட்டில் மனித நேயத்துக்கு இடமில்லையே!

நளினியும் அலைபேசியும்

18 ஆண்டுகளாக ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடும் நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு மறுத்த நிலையில் நளினியின் சிறை நடத்தைகளுக்கு, இதுவரை நற்சான்று வழங்கி வந்த சிறை நிர்வாகம்,இப்போது நளினி மீது புகார்களை சுமத்துகிறது. அவர் செல்போனை பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு, ஏதோ சிறையை உடைத்து அவர் வெளியே வர முயன்றதைப்போல ஊதிப்பெருக்கி,ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. சிறைக்குள் நடக்கும் மோசமான முறைகேடுகளை விளக்கி, நளினி தனது வழக்கறிஞர் வழியாக காவல்துறை கூடுதல் இயக்குனருக்கு (சிறைத் துறை) தாக்கீது அனுப்பியதே இதற்குக் காரணம் என்பது வெள்ளிடை மலை.

ஏற்கனவே சிறைச்சாலைக்குள் நடக்கும் முறைகேடுகளை விளக்கி,நளினி எழுதிய மூன்று புகார் கடிதங்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நளினியிடம் செல்பேசி இருந்தது என்பதை சட்டசபையில் விரிவாக விளக்கிப் பேசிய அமைச்சர் துரைமுருகன்கூட, நளினியின் புகார் கடிதங்கள் பற்றி எதுவும் கூறவில்லை. ஆக, அரசு நிர்வாகமே நளினிக்கு எதிராக கூட்டு சதியை அரங்கேற்ற முடிவு செய்துவிட்டது. ச.சிதரூர், அய்.பி.எல் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர், பார்ப்பனர் கேதான் தேசாய் சர்மாவின் ஊழல் என்று காங்கிரசின் ஊழல் நாற்றம் மூக்கைப் பிடிக்க வைக்கிறது. தமிழ்நாட்டு காங்கிரசாரோ நளினியை விடுதலை செய்வதையும், பிரபாகரன் தாய்க்கு சிகிச்சையளிப்பதையும் பெரும் பிரச்சினையாய்ப் பேசிக் கொண்டு, தமிழர்களின் காதில் பூ சுற்றுகிறார்கள்.

வேலூர் சிறைச்சாலைக்குள்ளே பெண் கைதி ஒருவரை சிறை அதிகாரிகள் நிர்வாணமாக்கி, சித்திரவதை செய்ததை எதிர்த்து, மனித உரிமைக்காக உறுதியாகப் போராடினார் நளினி! சிறை அதிகாரிகளால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 19ஆண்டுகாலம் குடும்பத்தை, குழந்தையைப் பிரிந்து சிறையில் வாடும் ஒரு பெண்ணின் மனநிலை பற்றிய உளவியல் பார்வைகூட இவர்களிடம் இல்லை.

அப்படியே செல்போன் அவரிடம் இருந்தது என்பதை ஒப்புக் கொண்டால்கூட அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?கைதிகளுக்கு தொலைபேசியில் பேசும் உரிமை, மின்விசிறி போட்டுக் கொள்ளும் உரிமைகள் எல்லாம் வந்துவிட்டன. கருநாடகத்தில் சிறை நிர்வாகமே சிறைகளுக்குள் தொலைபேசி சேவைகளையே கைதிகளுக்கு வழங்கியிருக்கிறது. செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட கைதிகள் மீது வழக்குகள் ஏதும் போடாத சிறை நிர்வாகம், நளினி மீது மட்டும் நான்கு வழக்குகளை ஏன் போடுகிறது?

நளினியின் பக்கம் திரும்பியுள்ள மக்களின் ஆதரவை சீர்குலைத்து அவர் விடுதலையாகிவிடாமல் சிறைக்குள்ளே வைப்பதற்கும், அதன் வழியாக சோனியா காந்தி குடும்பத்தை மகிழ்விக்கவும் தான் தி.மு.க. அரசு இத்தகைய முற்சிகளில் இறங்கியிருக்கிறது.

-விடுதலை இராசேந்திரன்

Pin It