பழையன கழிதலும், புதியன புகுதலும் காலந்தோறும் நடைபெற்று வரும் நிகழ்வுகளாகவே உள்ளன. ஒரு காலத்தில் சரியயன்று ஏற்கப்பட்டது, மறுகாலத்தில் பொருத்தமற்றுப் போகலாம். பொருத்தமான மாற்றங்களைச் செய்ய வேண்டிய கடமை அரசுக்கும் மக்களுக்கும் உண்டு. இருப்பினும், அத்தகைய மாற்றங்கள் எளிமையாய் வந்து விடுவதில்லை. பல நேரங்களில் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். தடை பல தாண்டி, ஆற்ற வேண்டிய மாற்றங்களை ஆற்றுதலே சரியானது.

மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரைத் தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்று 1955 ஆம் ஆண்டே தந்தை பெரியார் கேட்டுக் கொண்டார். ‘ஆந்திரா நம்மை விட்டுப் போய்விட்டது. கர்நாடகமும், கேரளாவும் சீக்கிரம் போய்விட்டால் தேவலாம் போல் இருக்கிறது. இந்த நிலையில், இன்னும் நாம் நம் நாட்டை மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கவேண்டுமா? இந்த இழிவை உங்களில் யார் சகித்துக் கொண்டாலும், என்னால் சகிக்க முடியவில்லை’ என்றார் பெரியார்.

1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை முன்வைத்து பட்டினிப் போராட்டம் நடத்தி, தன் உயிரையே கொடுத்தார் தியாகி சங்கரலிங்கனார். எனினும் 1968 ஆம் ஆண்டுதான், முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா நம் நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிந்தது. அப்போதும் வெங்கட்ராமன் போன்ற ஒருசிலர் எதிர்ப்பைக் காட்டவே செய்தனர். எதிர்ப்புகள் அனைத்தையும் மீறி தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழர் தன்மானம் மீட்கப்பட்டது.

அவ்வாறே, செகரட்டேரியட், தலைமைச் செயலகமானது. சத்தியமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும் என மாற்றப்பட்டது.

இப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில், தமிழக அரசின் இலச்சினையில் ஒரு மாற்றத்தை, விடுதலைச் சிறுத்தைகளின் சட்ட மன்ற உறுப்பினர் இரவிக்குமார் முன்மொழிந்துள்ளார். தமிழக அரசின் இலச்சினையில் திருவில்லிபுத்தூர்க் கோயில் கோபுரம் இடம் பெற்றுள்ளது. பல்வேறு மதத்தினர் வாழும் மதச்சார்பற்ற நாட்டினுடைய அரசு சின்னத்தில், ஒரு குறிப்பிட்ட மதத்தின் சின்னம் இடம் பெறுவது எவ்வகையிலும் சரியானதன்று என்பது அவரது வாதம். மேலும் அக்கோபுரம், தமிழர் கட்டிடக் கலையின் தனித்துவம் எதையும் குறிக்கவில்லை என்றும் கட்டிடக்கலை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்நேரத்தில் திடீரென்று ராமகோபாலன் குழுவினர் துணைமுதல்வரைச் சந்தித்திருப்பது இதுதொடர்பாகவே இருக்கக் கூடும் என ஊகிக்க இடமுள்ளது.தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மூழ்கிக் கொண்டிருக்கிற கப்பலாய் ஆகிவிட்ட பா.ஜ.க.வும், இந்து முன்னணியும் இதனை அரசியலாக்க முற்படக்கூடும். ஆனாலும் அவர்களின் குறுக்கீடு எடுபடாது என்பதை நாம் அறிவோம்.

எனவே, மதச்சார்பற்ற தமிழக அரசின் போக்கிற்கு முரண்பாடு இல்லாத வகையில், உடனடியாக அக்கோயில் கோபுரச் சின்னத்தை நீக்க வேண்டுமென்றும், அதற்குப் பதிலாகப் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் குறள் வரியினைக் கொண்ட திருவள்ளுவர் சிலை உருவத்தை இலச்சினையாக அமைத்திட வேண்டுமென்றும் தமிழக அரசை வேண்டிக் கொள்கிறோம்.

- சுப.வீரபாண்டியன்

Pin It