கலைஞர்களை கவுரவப்படுத்த ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கிவரும் கலைமாமணி விருதில் பரவிக்கிடக்கும் அரசியல் அந்த விருதை கல்லமிட்டாய் கலைமாமணி என்று விமர்சிக்கப்படுமளவிற்கு தரம் கெட்டுவருகிறது. குறிப்பாக, அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமாக இருக்கும் கலைஞர்களுக்கே அது மிக இயல்பாக கிடைக்கும் விருதாகியிருக்கிறது. அதுவும் சினிமா கலைஞர்கள் பட்டியல் அறிவிப்பில் அப்பிக்கிடக்கும் அரசியல் அந்த விருதின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கி வருகிறது. 1958லிருந்து தமிழ் திரையுலகில் நடித்துவரும் சரோஜா தேவிக்கு 51 வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் கலைமாமணி விருது வழங்கப்பட்டிருகிறது. அதுவும் ஆளும் வர்க்கத்தின் வாரிசின் படத்தில் நடித்திற்குப் பிறகுதான் 72 வயது நடிகைக்கு இந்த விருது கிடைத்திருக்கின்றது, என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதுதான் இப்படி என்றால் மத்திய அரசு வழங்கும் சிறந்த கலைஞர்களுக்கான விருதுக்கான தேர்வில் பிராந்திய அரசியல் கொட்டிக் கிடக்கிறது. ஒரு மாநிலத்திலிருந்து எத்தனை பேர் தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருப்பதைப் பொறுத்தே அந்த மாநிலப் படங்களுக்கு விருதுகள் கிடைக்கும் என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள். ஒரு மாநிலம், தேசம் என்ற வரையறைக்குள் வழங்கப்படும் இந்த விருதுகளுக்கான தேர்விலேயே அரசியல் இப்படி இருக்கும் போதும் 5 கோடி மதிப்பு கொண்ட நோபல் பரிசில் இருக்கும் உலக அரசியல் எளிதில் சொல்லிவிட முடியாது. 1895ல் ஆல்பிரட் நோபல் என்ற வேதியியல் அறிஞரால் தொடங்கப்பட்ட இந்த விருது 1901லிருந்து வழங்கப்பட்டுவருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல், பொருளியல் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் இப்பரிசு தற்பொழுது வழங்கப்படுகிறது.

தொடக்கத்தில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு மேற்கத்திய நாட்டின் மாபெரும் இலக்கியவாதிகளாக திகழ்ந்த எமிலி ஸோலா அல்லது லியோடால் ஸ்டாய் ஆகியோருக்கு வழங்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மரணத்தை தழுவும் வரை இவர்களின் பெயர் அறிவிக்கப்படவே இல்லை. அதேபோல் ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வெறு வளரும் நாடுகளைச் சார்ந்த தலைசிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகளின் பெயர்கள் நோபல் பரிசிற்கு பரிசீலிக்கப்படாமலேயே போயிருக்கிறது. இந்தியாவிலிருந்து மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோருக்கு நோபல் பரிசு தரப்படாமல் இருப்பதற்கு அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் இன்றும் விவாதம் இருக்கிறது.

நோபல் பரிசு என்பது வளர்ந்த நாடுகளுக்கு ஒரு அங்கீகாரம். ஆனால் இந்தியாவை போன்ற வளரும் நாடுகளுக்கு அது ஒரு கனவு என்ற மோசமான சிந்தனை இங்கு விதைக்கப் பட்டிருக்கிறது. இது உலக அரசியலுக்கு நன்றாகவே உதவிவருகிறது. வளர்ந்த நாடுகளின் அரசியலுக்கு பயன் பட்டுவரும் நோபல் பரிசு எப்போதேல்லாம் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப் படுகிறதோ அப்போதெல்லாம் சர்ச்சை உண்டாகா மல் இருப்பதில்லை. அதில் அரசியலும் இல்லாமல் இருப்பதில்லை.

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் சீனாவின் உள்நாட்டு அமைதியை குலைத்திருக்கிறது. அந்நாட்டின் சிறையிலிருக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் லியூ ஷியாபோவுக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் அடிப்படை மனித உரிமைகளுக்காக நடத்தப்பட்டு வரும் இயக்கத்துக்கு அவர் ஒரு முதன்மையான குறீயிடாக விளங்குகிறார் என்று நோபல் பரிசுக் குழு கூறியிருக்கிறது.

ஆனால் லியு ஷியாபோ ஒரு கிரிமினல் குற்றவாளி, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது நோபல் அமைதிப் பரிசின் கொள்கைகளை மீறும் செயல் என்று சீனா கண்டித்திருக்கிறது. ஒன்றுபட்ட சோவியத் யூனியன் சிதறுண்டதைப் போல சீனாவும் சிதற வேண்டும் என்ற நோக்கம் இந்த அறிவிப்பில் இருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவை அடுத்து வேகமாக வளர்ந்து வரும் சீனாவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே இந்த விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது என்ற கருத்து மேலேங்குகிறது.

கார்பன் அணுக்களை எளிய முறையில் இணைக்கும் முறையைக் கண்டறிந்ததற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹெக் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஐஇசி நெகிஷி,அகிரா சுஸ§கி ஆகிய மூவரும் வேதியியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்டுள்ளதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் மருத்துவத்திற் கான நோபெல் பரிசு செயற்கை கருவுறுதல் மூலமாக சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாக காரணமான முன்னோடி களில் ஒருவரான பிரிட்டன் விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ்க்கு வழங்கப்பட உள்ளது. புதுமையான மின்னணு பொருட்கள் தயாரிப்புக்கும், வருங்காலத் தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தவும் என்று வர்ணிக்கப்படுகிற கிராபீன்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக பிரிட்டனைச் சேர்ந்த நோவோசெலோவ் என்ற விஞ்ஞானியும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஆந்த்ரே கெய்ம் என்ற விஞ்ஞானியும் இரு விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெரு நாட்டை சேர்ந்த எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்து உள்ளது. இவர் ஸ்பானிஷ் மொழி பேசும் உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். 74 வயதான இவர் தனி மனித போராட்டம், தோல்வி ஆகியவற்றை மிக அற்புதமாக வாசகர்கள் மனதில் பதிய வைக்கக்கூடிய வித்தகர் என்று நோபல் பரிசுக்குழு பாராட்டி உள்ளது.

கடின உழைப்பு, பயனுள்ள கண்டுபிடிப்புகள், அறிவியல் முயற்ச்சிகள் ஆகியவற்றினை அங்கீகரிக்க விருதுகளும், பராட்டுக்களும் அவசியம். ஆனால் அதில் அரசியல் இருத்தலோ, சீர்குலைக்கும் எண்ணமோ இருத்தல் கூடாது. மேலை நாட்டுத் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதை போல இருக்கும் நோபல் பரிசு எல்லை தாண்டி அனைத்து நாட்டினருக்குமானதாக மாறவேண்டும் அப்போதுதான் அது உண்மையாலுமே நோபல் பரிசாக மாறும்.

Pin It