babri masjid400 ஆண்டுகளுக்கு மேலாக ‘பாப்ரி மஸ்ஜீத்’ இருந்த இடத்தை இராமன் கோயில் கட்டுவதற்கு சட்ட அங்கீகாரம் அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவர் ‘ஸ்ரீராமன்’, ‘குழந்தை இராமனாக’ (ராம்லல்லா) தன்னையும் ஒரு மனுதாரராக்கி வழக்கில் இணைந்தான். தனக்காக ஒரு வழக்கறிஞரையும் நியமித்துக் கொண்டான். ‘மஸ்ஜீத் இருந்த இடத்தில்தான் நான் அவதரித்தேன்’ என்று வழக்கறிஞர் மூலமாக வாதாடினான். அயோத்தி வழக்கு முதலில் தொடரப்பட்டது. 1954இல் ‘ஸ்ரீ ராமபிரான்’ தன்னை வழக்கில் இணைத்துக் கொண்டது. 1989இல் வழக்கின் நடுவிலே வந்த ஸ்ரீராமபிரானுக்கு நீதிமன்றமும் ‘ஸ்ரீராம ஜெயம்’ எழுதி வழக்கை முடித்து விட்டது.

இந்த வழக்கில் மட்டுமல்ல; கடந்த காலங்களிலும் மதவெறி கட்டமைத்த உணர்வுகளே சட்டத்தை மிரட்டிப் பணிந்து போகச் செய்திருக்கிறது. 1949இல் நள்ளிரவில் மசூதியின் நடுப் பகுதியை இடித்து, மய்ய மண்டபத்தில் இராமன், சீதை சிலைகளைப் போட்டபோது ‘அத்துமீறல்’ குற்றங்களை புறந்தள்ளி அவதார நம்பிக்கையே வெற்றி பெற்றது. தொடர்ந்து மசூதி சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காட்டி பூட்டப்பட்டது. 1989இல் மீண்டும் திறக்கப்பட்டதற்குக் காரணமும் மதவெறியின் மிரட்டல்தான். 1992இல் மசூதி இடிக்கப்பட்டது. இடிப்புக்கு நியாயம் கேட்ட இந்த வழக்கிலும் ‘இராமன்’ நம்பிக்கையே சட்டத்தைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்று விட்டது.

அரசியல் சட்ட முன்வரைவை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியபோது அம்பேத்கர் வெளிப்படுத்திய அச்சம் இப்போது உண்மையாகி விட்டது (அந்த உரையை இந்த இதழில் பதிவு செய்துள்ளோம்). சங்பரிவாரங்கள் கடந்த காலங்களில் என்ன கூறினார்கள்? ராமன் அவதரித்த இடம் பாப்ரி மஸ்ஜீத் கட்டப்பட்ட இடம் தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை; நீதிமன்றம் தலையிட முடியாது என்றே சங்பரிபாரங்கள் 1980களிலிருந்து பேசினார்கள்; அதில் தீர்மானம் போட்டார்கள். ஆட்சி அதிகாரம் அவர்களிடம் கை மாறிய பிறகு, தங்களின் மத நம்பிக்கையை நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையாக வெகு எளிதில் அவர்களால் மாற்றிக் கொள்ள முடிந்தது. “உச்ச மன்றத் தீர்ப்பை தலைவணங்கி ஏற்க வேண்டும்” என்று தீர்ப்பு வருவதற்கு முன் ‘சட்டம் ஒழுங்கு காவலர்களாகப்’ பேசத் தொடங்கினார்கள்.

“இந்தத் தீர்ப்பை நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் வழங்கவில்லை” என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. இது அவர்களின் குற்ற உணர்வின் வெளிப்பாடோ என்று தான் கருத வேண்டியிருக்கிறது.

மஸ்ஜீத்தை மூன்று பங்குகளாக பங்கீட்டு 2010இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தந்த தீர்ப்பை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அதற்கான காரணமாக எதைக் கூறுகிறது? அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்புச் சட்டத்துக்கு புறம்பானது என்று கூறவில்லை. மாறாக, “நாட்டில் நீடித்த அமைதியை உருவாக்காது” என்றே கூறுகிறது.

ஆக, நாட்டில் அமைதியையும் நல்லிணக்கமும் தரக் கூடிய ஒரு தீர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம். ஆட்சி அதிகாரம் ஏற்கும் தீர்ப்பாக ‘பெரும்பான்மை மிரட்டலுக்கு’ பணியும் தீர்ப்பாகவே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கும் உச்ச நீதிமன்றம் வந்திருக்கிறது.

நீதிமன்றங்கள் என்பவை வழக்கு மன்றங்கள்தான்; நீதி வழங்குபவை அல்ல என்றார், பெரியார். இப்போது வழக்கு மன்றமும் மத நம்பிக்கைகளின் மன்றமாக மாறி நிற்கிறது.

சரிந்து வரும் தனி நபர் வருமானம்; பொருளாதார நெருக்கடி; வேலை இல்லா திண்டாட்டம்; சிறு, குறுந் தொழிற்சாலைகள் முடக்கம், ஜி.எஸ்.டி. வரிச் சுமை என்ற மக்கள் பிரச்சினைகள் புறந்தள்ளப்பட்டு விட்டன. ‘ஸ்ரீராமபிரான்’ அயோத்தியில் குடியேறி விட்டால் இவை எல்லாவற்றையும் தீர்த்து வைத்து விடுவான் என்று மக்களை நம்பச் சொல்கிறார்களா?

பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிறோம் என்கிறார்கள். அதே பெரும்பான்மை ‘இந்து’ மக்கள் சந்திக்கும் பொருளியல் வாழ்க்கை நெருக்கடிப் பற்றி கவலைப்படத் தயாராக இல்லை. இதற்கான காரணம் தெளிவானது தான். பெரும்பான்மை ‘சூத்திர - பஞ்சம’ இந்துக்களை தங்களது ‘ஜாதி - வேத மதப்’ பிடிக்குள் திணித்து வைக்கத் துடிப்பவர்கள் ‘சிறுபான்மை’ பார்ப்பனர்கள். அந்த சிறுபான்மையின் சமூக அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்துவதே பா.ஜ.க.வும் சங்பரிவாரங்களும் பேசும் பெரும்பான்மைக்குள் புதைந்து கிடக்கும் கசப்பான உண்மை!