1967 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த சமயம். சென்னையை அடுத்து, அச்சிறுப்பாக்கத்திற்கு அருகில் உள்ள பள்ளிப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்கள், தொழுகைக்காக பள்ளிவாசல் எழுப்புவதற்கு உள்ளூர்வாசிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்காக உயிர்பலியாகிறது. தங்கள் உரிமையை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று முனைப்புடன், நோன்பு பெருநாளுக்கு முந்தைய இரவில் அங்கே குழுமியிருக்கும் முஸ்லிம்களுக்கு, நள்ளிரவில், அவர்கள் பதட்டத்தை அதிகரிக்கும் வண்ணம் அந்த குக்கிராமத்தை நோக்கி வாகனப் படையெடுப்பு.

கலவரத்தை எதிர்கொள்ளத் தயாராக கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் மகனான மியாகானின் தலைமையில் கூடியிருந்த அந்த சிறு முஸ்லிம் கூட்டத்தினருக்கு வாகனங்கள் அருகில் வர பெருங் குழப்பம். வந்தவையெல்லாம் நீல நிற காவல்துறை வாகனங்கள். அதிலிருந்து இறங்கிய போலீசார், கீற்றுக் கொட்டகை கட்டுவதற்குத் தேவையானவற்றை இறக்கி விட்டு, காலை பெருநாள் தொழுகைக்கு முன்னர் பள்ளிவாசல் எழுப்பப் பட்டிருக்க வேண்டும் என்று தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாக மியாகானிடம் கூற, கூடியிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. நடந்தது இதுதான்.

anna periyar and karunanidhiமுஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு எதிர்ப்பு, அதுவும் தன் கட்சிக்காரர்களாலேயே என்ற செய்தியை அன்று டெல்லியில் இருந்த காயிதே மில்லத்திடம் இருந்து தெரிந்து கொண்ட முதலமைச்சர் அண்ணா உடனடியாக எடுத்த நடவடிக்கைதான் அது. காவலர் பாதுகாப்புடன் பெருநாள் தொழுகையை மன நிறைவுடன் தொழுது முடித்த முஸ்லிம்களுக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. தொழுது முடித்த மியாகானை சந்திக்க அருகிலுள்ள பயணியர் விடுதியில் முதல்வர் அண்ணா காத்திருக்கிறார் என்ற செய்தி தான் அது. விடுதியில் அண்ணாவுடன் காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, இதற்கு முட்டுக்கட்டையாக இருந்த தன் கட்சி அமைச்சர்கள் இருவரும் இருந்தனர். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் அண்ணா இஸ்லாமியருக்கு ஏற்பட்ட இக்கட்டை களைய நேரடியாக களத்தில் இறங்கியிருந்தார். சில மாதங்களிலேயே பேரறிஞர் அண்ணா இறந்து போனார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இசுலாமியர்களுடனும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அப்போது முதல் நல்லுறவு இருந்து கொண்டுதான் உள்ளது.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவின் அரசியல் மதத்தின் அடிப் படையில் வடிவம் பெறத் தொடங்கியது. அதே வேளையில் சென்னை மாகாணத்திலோ பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் என்ற அடிப்படையில் அரசியல் வடிவம் பெறத் தொடங்கியது. யார் இந்த பார்ப்பனர்கள்? 1920 ஆம் ஆண்டில், திராவிட இயக்கத்தின் தொடக்க காலம் அது, அப்போது சென்னை சட்டசபையில் நடந்த ஒரு விவாதம் இதற்கு வெளிச்சம் தருகிறது. நிர்வாகத்தை இந்திய மயமாக்குவது தொடர்பான விவாதம் அது. காவல்துறையில் ஐரோப்பியர்களுடன் சேர்த்து இந்தியர்களுக்கும் சில பொறுப்புகளை வழங்க வேண்டும் என சி.வி. வெங்கட் ரமண ஐயங்கார் ஒரு கோரிக்கையை வைத்தார். காவல்துறை பதவிகளை பார்ப்பனரல்லாதோருக்கும் வழங்க வேண்டுமென நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் நடேசன் விவாதித்தார். பார்ப்பனரல்லாதோர் என்றால் முகமதியர்கள், இந்திய கிறித்துவர்கள், பார்ப்பனரல்லாத இந்துக்கள், ஜெயினர்கள், பாரசீகர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் என்றும் விளக்கம் அளித்தார். இத்தகைய புரிதலின் அடிப்படையில்தான் இசுலாமியர்களுக்கும், திராவிட இயக்கத்திற்குமான உறவு வடிவமைக்கப் பட்டது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இசுலாம் அரேபிய தீபகற்பத்தில் வேகமாகப் பரவியது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டிற்கும், மேற்கு ஆசியாவிற்கும் இடையில் இருந்த கடல் வழி வர்த்தகத் தொடர்புகள் வழியாக இசுலாம் தமிழ்நாட்டுக் கரையையும் தொட்டது. அவர்கள் செல்வங்களை கொண்டு வந்து மிளகு அல்லது முத்துக்கள் வாங்கிச் சென்றது மட்டுமின்றி தங்களுக்கான ஒரு சிறப்பான இடத்தையும் கண்டறிந்தனர். அதை Mazbar என்றும் அழைத்தனர். இத்தகைய வர்த்தக உறவின் மூலமே தமிழ் முஸ்லிம்கள் உருவாகினர்.

காலனிய ஆட்சி வளர்ந்து வந்த சமயத்திலும்கூட நூற்றுக் கணக்கான திராவிட இசுலாமிய கட்டடக் கலை பாணியிலான மசூதிகள் உருவாகின. அந்த கால கட்டத்தில் வெளியான இசுலாமியர்களின் கணிசமான இலக்கிய வெளியீடுகளும் தமிழ்ச் சமூகத்தில் அவர்களின் இருப்பிடத்தை உறுதியாக்கியது. இத்தகைய சூழலில்தான் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிட இயக்கம் வடிவம் பெற்றது. அதன் ஒருங்கிணைந்த ஓர் அங்கமாக இசுலாமியர்களும் இருந்தனர்.

நீதிக் கட்சியாக இருந்த போதிலிருந்தே திராவிட இயக்கத்தின் அரசியல் வெளிப்பாடு என்பது சமூக நீதியைக் காக்கப் போராடுவதாக இருந்தது. காந்தியின் தலைமையில் காங்கிரஸ் இருந்தபோது, ஒட்டோமான் மன்னரிடமிருந்து கிலாபத்தை பாதுகாப்பதற்கான அலி சகோதரர்கள் தலைமையிலான இயக்கத்திற்கு ஆதரவு அளித்தது. நீதிக் கட்சியும் *கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவளித்தது.

இதற்கிடையில் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை நீதிக் கட்சி ஏற்ற போது, இசுலாமியர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப் படுத்தியது மட்டுமின்றி, பல்வேறு அலுவலகங்களிலும் அவர்களுக்கான இடத்தை உறுதிப் படுத்தியது. சமூக தேவைகளையும் கவனத்தில் கொண்டது. காங்கிரசும், அலி சகோதரர்களும் பிரிந்த சிறிது காலத்தில் கிலாபத் இயக்கமும் குழப்பத்தில் முடிந்தது. காங்கிரசுக்காரராக இருந்தபோது தீண்டாமையை எதிர்த்துப் பேசி வந்த பெரியார், கட்சியில் இருந்த உயர்ஜாதி தன்மையைக் கண்டு அதிருப்தியடைந்தார். அதனால் காங்கிரசில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டு, பின்னர் நீதிக் கட்சியில் இணைந்தார். 1944 ஆம் ஆண்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக பெயர் மாற்றினார்.

பெரியார் ஒரு நாத்திகராக இருந்தபோதும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு மாற்று மருந்தாக இசுலாத்தை ஆதரித்தார். பெரியாரின் எழுத்துக்களும், பொதுக் கூட்ட மேடைப் பேச்சுக்களும் ஒடுக்கப் பட்டவர்கள் இசுலாமை ஏற்றுக் கொள்ள ஊக்குவித்தன. அதே வேளையில் பெரியார் இசுலாமிற்கு அளித்த ஆதரவு என்பது நிபந்தனையற்றது அல்ல. இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் பரப்புரை செய்ததைப்போல இசுலாமில் உள்ள மூட நம்பிக்கைகளையும் கடுமையாகக் கண்டித்தார். மொகரம் பண்டிகையின்போது பின்பற்றப்படும் தீமிதி விழா அல்லது சந்தனக்கூடு விழா ஆகியவை இந்துக்கள் கோயில் பண்டிகையின் போது பின்பற்றும் மூடநம்பிக்கைகளைப் போலவே உள்ளது என பெரியார் கண்டித்தார். தாவூத் ஷா போன்ற முசுலிம்களுக்கே இது பிடிக்கவில்லை. இவர் தமிழ் முசுலிம் சமூகத்தின் சீர்திருத்தவாதிகளில் ஒருவராகக் கருதப்பட்டார் என்பதும் முரண்பட்ட ஒன்று.

ஜின்னாவையும், அவரது தனிநாடு கோரிக்கையையும் பெரியார் ஆதரித்தே வந்தார். 1948 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி ‘விடுதலை’ நாளேட்டில் பெரம்பூர் (மாயவரம்) கூட்டத்தின் தீர்மானம் இடம் பெற்றுள்ளது. அதில், “முஸ்லிம்கள் எங்களை ஆதரித்தாலோ அல்லது எதிர்த்தாலோ எது நடந்தாலும், நாளை திராவிட நாடு சுயராஜ்யத்தை அடையும் போது அதனால் உங்களுக்குப் பாதிப்பு வராது என உறுதியளிக்கிறேன். ஏனெனில் இசுலாமியர்களும் திராவிடர்களே என திராவிடர் கழகம் உறுதியாக நம்புகிறது” என்று பெரியார் கூறியுள்ளார்.

அப்போது சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் திராவிட இயக்கம் இல்லாத குறையை இஸ்மாயில் சாகிப் ஓரளவு நிவர்த்தி செய்தார். இட ஒதுக்கீட்டின் தேவை குறித்து முகமது இஸ்மாயில் சாகிப் தொடர்ந்து வலியுறுத்தினார். இந்தியை தேசிய மொழியாக்க முயற்சித்ததை கண்டித்தும், தாய்மொழியான தமிழை வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் பேசினார்.

பாகிஸ்தான் பிரிவினையின் போது நாட்டில் ஏற்பட்ட கலவரங்களால் முஸ்லிம் தலைவர்கள் தங்களது கட்சியை கலைக்கவும், அலுவலகங்களை மூடவும் முடிவு செய்தனர். ஆனால் அந்த சூழலிலும் தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் தலைவர்கள் சென்னை மாகாண அரசினர் தோட்ட விருந்தினர் மாளிகையில் தங்களது எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெரியார், ராஜாஜி இருவருமே இவர்கள் கட்சியை கலைத்து விடுவர் என்றே எண்ணினர். ஆனால் பிரிவினைக்குப் பிந்தைய முஸ்லிம்களின் நிலையைப் பார்த்த முகமது இஸ்மாயில் சாகிப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்காக தொடர்வது என முடிவு செய்தார்.

கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைய இஸ்மாயில் சாகிப்பிற்கு ஜவஹர்லால் நேரு அழுத்தம் கொடுத்ததாக அவரது பேரனும், காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் தாளாளருமான தாவூத் மியா கான் கூறுகிறார். அத்தகைய கடினமான சூழலிலும் சென்னை மாகாணத்தில் மட்டுமே முஸ்லிம் லீக்கால் செயல்பட முடிந்தது. அதற்கு அடிப்படையில் திராவிட இயக்கம் காரணமாக இருந்தது. முஸ்லிம்களின் பிரச்னைகளுக்காக திராவிட இயக்கம் எப்போதும் அனுசரணையுடன் இருந்தது. இந்த உறவுதான் பிரிவினைக்குப் பிறகு நாடு முழுவதும் முஸ்லிம்கள் ஓரங்கப்பட்ட போதும், சென்னை மாகாணமாக இருந்த போதும், பின்னர் தமிழ்நாடாக மாறிய பின்பும் முஸ்லிம்கள் புயலாக செயல்படக் காரணமாக அமைந்தது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையும், காந்தி படுகொலையிலும் அவர்களுடைய நோக்கம் சென்னை மாகாணத்தில் வீழ்ச்சியில்தான் முடிந்தது. காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் திருவண்ணாமலை, ஈரோடு மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் முசுலிம்களைக் குறிவைத்து பெரும் கலவரங்களும், திட்டமிட்ட தீ விபத்துகளும் நடந்தேறின. சுமார் 100 முசுலிம் வீடுகள் தீ வைத்து எரிக்கப் பட்டன. 50 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்பட்ட இழப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டது. சமூக மற்றும் நாடக ஆர்வலரான பிரளயன் திருவண்ணாமலையில் நடந்த கலவரம் குறித்து கூறுகையில், “கலவரம் நடந்த பிறகு சில திடீர் பணக்காரர்கள் உருவாகினர். கலவரத்தில் கொள்ளையடித்த பணத்தின் மூலம் அவர்கள் பணக்காரர்களாக உருமாறினர். அவர்களை அப்பகுதியில் காந்தி பணக்காரர் என்றே அடையாளப் படுத்தினர்” என்கிறார். அப்போது கடலூரில் சில இடங்களில் கலவரம் நடந்தபோது திராவிடர் கழகம் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது என நினைவு கூர்கிறார் முஸ்தபா மரைக்காயர். இவர் பிறகு சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்து விட்டார்.

இசுலாமியர்கள் அனுபவித்து வந்த பல உரிமைகள் மற்றும் சலுகைகள் இந்திய விடுதலைக்குப் பிறகு காங்கிரசு ஆட்சியில் பறிக்கப்பட்டது. அரசு முகம்மது கல்லூரியில் முசுலிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. பொது மகளிர் கல்லூரியாகவும் மாற்றம் செய்யப்பட்டது. இதே போல் நீதிக் கட்சியின் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட யுனானி மருத்துவத்திற்கான பள்ளியும் மூடப்பட்டது. ஆற்காடு இளவரசர் மற்றும் தலைமை காஜியின் குடியிருப்புகளில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப் பட்டது. காவல்துறை பட்டாலியன் அமைப்புக்குள் முசுலிம்கள் வருவதை அரசு தடை செய்ததையும் மிக மோசமான முடிவுகளாக அப்போது பார்க்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோபால் ரெட்டி சென்னை மாகாண நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர்தான் இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இத்தகைய சிக்கலான காலங்களில் பெரியார் இசுலாத்தை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளார். அப்போது பெரியாரிடம் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா கண்டிருந்த நிலையில் அவரும் முசுலிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். திராவிடர் கழகத்தைப் போல நாத்திகத்தை வலியுறுத்தாமல், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திராவிட முன்னேற்ற கழகம் தனது கொள்கையை முன்வைத்ததால் அந்தக் கொள்கையும் தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டுமென்ற திட்டமும் முசுலிம்களிடையே தி.மு.க.விடம் நெருக்கத்தை அதிகரித்தது.

காங்கிரசு ஆட்சியில் முசுலிம்களுக்கு இழைக்கப்பட்ட பல்வேறு அநீதிகளை அண்ணா சுட்டிக் காட்டினார். குறிப்பாக, பிரபலமான முசுலிம்கள் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் அவர்களுக்கு அமைச்சரவையில் இழைக்கப்பட்ட அநீதியை அண்ணா சுட்டிக் காட்டினார். 1946 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை காங்கிரசு ஆட்சியில் ஒரு முசுலிம் கூட அமைச்சராக நியமிக்கப்படவில்லை. 1962 ஆம் ஆண்டில் காமராஜர் தலைமையிலான காங்கிரசு அரசு அமைந்த போதுதான் அப்துல் மஜீத் அமைச்சராக நியமிக்கப் பட்டார். இந்த காலகட்டத்தில் காங்கிரசு எந்த ஒரு முசுலிமையும் சட்டமன்ற வேட்பாளராக நியமிக்கவில்லை. ஆனால் திமுக அணியில் இந்திய யூனியன் முசுலிம் லீக்கைச் சேர்ந்த திருச்சி அப்துல் வாஹப் ஜானி 1962 ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராக இருந்தார். 1980 வரையில் மேலும் 2 முறையும் திமுக ஆதரவுடன் அவர் சட்டசபை உறுப்பினராக தேர்வானார்.

1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு தமிழ் முசுலிம் பங்கேற்பில் மீண்டும் ஒரு எழுச்சி காணப் பட்டது. திமுகவில் சிறு பான்மையினர் பிரிவு தொடங்க வேண்டுமென பொதுக் குழு கூட்டத்தில் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் இருக்கும் வரை திமுகவில் சிறுபான்மையினர் பிரிவு தொடங்கத் தேவையில்லை என அண்ணா மறுத்து விட்டார். 1967 ஆம் ஆண்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்தே திமுக சட்டமன்றத் தேர்தலை எதிர் கொண்டது. அண்ணாவைத் தொடர்ந்து அதே மரபை கலைஞர் கருணாநிதியும் பின்பற்றினார்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மிலாது நபிக்கு அரசு விடுமுறை அளித்தார் கலைஞர். இசுலாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து அவர்களுக்கான இடஒதுக்கீட்டையும் கலைஞர் உறுதி செய்தார். யுனானி மருத்துவ முறையை மீண்டும் அறிமுகப் படுத்தினார். காங்கிரசு ஆட்சிக் காலத்தில் அரசால் கையகப் படுத்தப்பட்டு பெண்கள் கல்லூரி என பெயர் மாற்றப்பட்ட முகம்மது கல்லூரிக்கு காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி எனப் பெயர் சூட்டினார் கலைஞர் கருணாநிதி. அதுமட்டுமின்றி சென்னை புறநகரில் புதிய கல்லூரி ஒன்றை கட்டுவதற்கும் இலவசமாக நிலம் ஒதுக்கினார். அந்த இடத்தில்தான் தற்போது காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி இயங்கி வருகிறது.

1980களில் தமிழ்நாட்டில் இருந்து பல முஸ்லிம்கள் மேற்கு ஆசிய நாடுகளுக்கு எண்ணெய் உற்பத்தி வேலைகளுக்காக சென்றனர். அரபு நாடுகளில் அவர்களுக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகளும் கிடைத்தன. அந்த சமயத்தில் தான் மீனாட்சிபுரம் கிராமத்தில் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களும் இசுலாத்திற்கு மதம் மாறினர். எம்ஜிஆர் தனது மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாக மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றதும், ராமர் கோயில் கட்டுவதற்காக கரசேவைக்கு ஜெயலலிதா தொண்டர்களை அனுப்பியதும் தமிழகத்தில் அடிப்படைவாதம் வளர்வதற்கு அடித்தளமாக அமைந்தன.

திமுக பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்த நிலையில் எண்ணற்ற இளைஞர்கள், நாட்டிலும் வெளியிலும் அரசியலில் இருந்து துண்டிக்கப்பட்டு இருப்பதாக இசுலாமிய இளைஞர்களும் உணர்ந்தனர். புதிதாக உருவாகி வந்த வஹாபி அல்லது சலாஃபி போன்ற மிகவும் கண்டிப்பான அமைப்புகள் அவர்களின் பூரண தேர்வாக இருந்தன. மற்ற இளைஞர்களைப் போலல்லாமல், முசுலிம் இளைஞர்கள் கலை, பொழுதுபோக்கு போன்றவற்றில் நேரம் ஒதுக்குவதையும் தவிர்த்தனர். இது ஒடுக்குமுறைக்கு உள்ளான முஸ்லிம்களை மைய நீரோட்டத்தில் இருந்து மேலும் விலக்கியது. ஏனெனில் புதிதாக உருவான அந்த கண்டிப்பான முசுலிம் இயக்கங்கள் கலை, இலக்கியம், சினிமா, இசை போன்றவை இசுலாத்தில் ஹராம் (தடை) செய்யப் பட்டவை என கூறின. இதுவே மைய நீரோட்டத்தில் இருந்து அவர்கள் விலகவும் காரணமாக இருந்தது. அவர்களின் வேர்களை அவர்களே வெட்டிக் கொண்டது போல அமைந்தது.

ஆனால் அப்படிப்பட்ட காலகட்டத்திலும் கூட 1995ஆம் ஆண்டில் பெரம்பலூரைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் இளைஞர் அப்துல் ரவூஃப் ஈழத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஈழத் தமிழர் பிரச்னைக்காக தமிழகத்தில் நடந்த முதல் தீக்குளிப்புச் சம்பவமும் அதுவே.

அப்போது முதல் இப்போது வரை இசுலாமிய அமைப்புகள் திராவிட அமைப்புகளுடனும், அரசியல் கட்சிகளும் இணைந்தே பயணித்து வருகின்றன. மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் தமிழ்நாட்டில் மதக் கலவரம் என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையை ஏற்படுத்தியதற்கு நூறாண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த உறவே காரணமாய் அமைந்துள்ளது. இப்போதும் கூட அயோத்தியில் இசுலாமியர்களுக்கு உச்ச நீதிமன்றம் இழைத்த அநீதியான தீர்ப்பை எதிர்த்து உரக்கக் குரல் கொடுக்கும் மண்ணாக தமிழகம் மட்டுமே இருக்கிறது. அயோத்தி தீர்ப்பைக் கண்டித்து இசுலாமிய அமைப்புகள் மட்டுமன்றி பெரியாரிய அமைப்புகளும், பல்வேறு முற்போக்கு அமைப்புகளும் போராட்டக் களங்களை கண்டு வருகின்றன.

கடவுள் மறுப்பு என்பது பெரியார் இயக்கத்தின் கொள்கையாய் இருந்தாலும், இந்து மத இழிவில் இருந்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும், இசுலாமியர்களின் மீது பார்ப்பனர்கள் காட்டிய வன்மையான ஒடுக்குமுறைகளுமே இசுலாமியர்களுக்கும் திராவிட இயக்கத்திற்கும் ஒரு ஆழமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

(டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகம் 2018இல் நடத்திய திராவிட இயக்கம் குறித்த ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி.)

- எஸ்.அன்வர்

தமிழில் : ர. பிரகாசு