91ஆம் அகவையை எட்டியுள்ள கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்க பத்திரிகையாளர்களிலேயே மிகவும் மூத்தவர். மாணவர் பருவத்திலேயே திராவிட இயக்கக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு பத்திரிகையாளராக திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ ஏடுகளிலே பணியாற்றியவர். தலைவர்களோடு நெருங்கிப் பழகியவர்.

ma senguttuvanநாளேடுகள், வார இதழ்கள், இலக்கிய இதழ்கள், எளிய பொதுக் கூட்ட மேடைகள், குடியிருப்புப் பகுதிகளிலேயே உருவாக்கிய படிப்பகங்கள், நாடகம், கலை நிகழ்ச்சிகள், முடிதிருத்தகங்கள், சைக்கிள் கடைகள், தேனீர்க் கடைகள் வழியாக எளிய மக்களிடம் கருத்துகளைப் பரப்பிய பெருமை திராவிடர் இயக்கத்தினருக்கு உண்டு. பிறகு திரைத் துறையிலும் கால் பதித்தது. திராவிட இயக்க இதழ்களை நடத்தியவர்கள் செல்வந்தர்கள் அல்ல; அவர்களின் மூலதனம் கொள்கை வலிமையும் மக்களை கிளர்ந்தெழச் செய்யும் எழுத்துக்களும் தான். கடும் பொருளாதார நெருக்கடிகளோடு மூச்சுத் திணறிக் கொண்டு வந்தன அந்த ஏடுகள். அவை அன்று தமிழினத்தின் சுவாசக் காற்றுகள் என்றே கூறலாம். இந்த ஏடுகளில் பத்திரிகையாளர்களாக பணியாற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைக்கான ஊதியமும் கிடைக்காது. வாழ்க்கைப் போராட்டங்களுக்கிடையே இலட்சிய உணர்வோடு பேனா பிடித்தவர்கள் தான் திராவிட இயக்கத்தின் பத்திரிகையாளர்கள், உடைந்து போன நாற்காலி மேஜைகளில் நாள் முழுதும் எழுதிக் கொண்டும் பிழை திருத்திக் கொண்டும் பத்திரிகை மடித்துக் கொண்டும் பத்திரிகை தயாரிப்புக்கான அத்தனை பணி களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.

பத்திரிகையாளர் பணியும் நிரந்தரமானது அல்ல; தொடங்கப்படுவதும் தொடர முடியாமல் மூடப்படுவதுமாகவே இருந்தன. ஆனாலும் ஏடுகளுக்கு, இதழ்களுக்கு பஞ்சமில்லை; ஒரே நேரத்தில் 70க்கும் மேற்பட்ட ஏடுகள் வெளிவந்த பெருமை - இந்த இயக்கத்துக்கு உண்டு.

கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், அத்தகைய திராவிட இயக்க மரபில் வந்த மூத்த பத்திரிகையாளர்; சிறந்த மரபுக் கவிஞர்; ஓவியர். 1940களில் தொடங்கிய அவரது பயணம் இன்றும் தொடருகிறது. சென்னை அரசுக் குடியிருப்பான பீட்டர்ஸ் காலனியில் உள்ள எளிமையான இல்லத்தில் அவரது அனுபவங்களை ‘நிமிர்வோம்’ இதழ் வழியாக இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடு அவரை சந்தித்தோம். மூன்று மணி நேரம் தனது அனுபவங்களை நினைவிலிருந்து பகிர்ந்து கொண்டார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் இளைஞர்களை சந்தித்தவுடன் அவர் மேலும் உற்சாகமானார். இது “பேட்டி அல்ல; மனம் திறந்த உரையாடல்” என்று நெகிழ்ந்து கூறினார். ‘மா.செ.’வின் பேட்டியிலிருந்து:

இயக்கம் நோக்கி வருவதற்கான காரணங்கள்...

பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கும் திருத்துறைப்பூண்டிக்கும் இடையில் உள்ள திருத்தெங்கூர் கிராமத்தில் பழுத்த சைவ உணர்வுள்ள பெற்றோருக்குப் பிறந்தவன். 1940ஆம் ஆண்டு திருவாரூரில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி மாநாட்டுக்கு எங்கள் ஊரைச் சார்ந்த அக்கட்சியைச் சேர்ந்த கோவிந்தசாமி பிள்ளை என்பவர், பள்ளி மாணவனாகிய என்னை அழைத்துப் போனார். அந்த மாநாட்டில்தான் பெரியாரையும் நீதிக்கட்சித் தலைவர்களையும் முதன்முதலாக நேரில் பார்த்தேன். அந்த மாநாட்டுப் பந்தல் திருவாரூர் தொடர் வண்டி நிலையம் அருகிலேயே அமைக்கப்பட்டு, தலைவர்கள் தொடர்வண்டியிலிருந்து, நேராக மாநாட்டு மேடைக்கு வருவதற்கேற்ப அமைக்கப்பட்டிருந்தது. 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது மன்னார்குடியில் ‘கல்கி’ திரையரங்கில் நடந்த கூட்டத்துக்கு பெரியார் வந்தபோது அவரது பேச்சைக் கேட்டேன். அதற்குப் பிறகு அதே திரையரங்கில் பட்டுக்கோட்டை அழகிரி பேசினார். தி.மு.க.வின் மூத்த தலைவர் மன்னை நாராயணசாமி முன்னின்று நடத்திய அக்கூட்டத்துக்கு நானும், பேராசிரியர் அன்பழகன் தம்பி அறிவழகனும் சென்று பேச்சை கேட்டோம்.

பிறகு, ‘இளந்தாடி நெடுஞ்செழியன்’ (பிற்காலத்தில நாவலர் நெடுஞ்செழியன்) மன்னார்குடியில் எங்கள் மாணவர் விடுதிக்குப் பேச வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு மன்னார்குடியில் அப்போது ‘போர்வாள்’ நாடகம் நடத்திக் கொண்டிருந்த எம்.ஆர். ராதாவும், நாடகத்துக்கு கதை வசனம் எழுதிய சி.பி. சின்னராசுவும் (பிற்காலத்தில் சி.பி. சிற்றரசு - மேலவைத் தலைவராக இருந்தவர்) பார்வையாளர்களாக வந்திருந்தனர். இந்த பேச்சுகள் எல்லாம் என்னை மிகவும் ஈர்த்துவிட்டன. நான் திராவிட இயக்கக் கொள்கையை ஏற்கத் தொடங்கி விட்டேன்.

1947ஆம் ஆண்டு சுதந்திர நாளை ‘துக்க நாள்’, “வந்த சுதந்திரம் பார்ப்பனருக்கும் பனியாவுக்கும்தான்; நமக்கு அல்ல” என்று பெரியார் அறிவித்தார். அப்போது மன்னார்குடி ஃபின்லே உயர்நிலைப் பள்ளியில் நான் பதினொன்றாம் வகுப்பு (பழைய எஸ்.எஸ்.எல்.சி.) படித்துக் கொண்டிருந்தேன். பள்ளியில் திராவிட மாணவர் கழகம் உருவாக்கி, அதன் செயலாளராகவும் இருந்தேன். பள்ளியில் சுதந்திர தின விழா கொடியேற்றி கொண்டாடப் பட்டது. நான் கழக மாணவர் களிடம் கருப்புச் சட்டை அணிந்து போக வேண்டும் என்று கூறினேன். பல மாணவர்கள் பயந்து ஒதுங்கிக் கொண்டனர். நானும் சில மாணவர்களும் கருப்புச் சட்டை அணிந்து, சுதந்திர நாள் அணி வகுப்பில் கலந்து கொண் டோம். தலைமை ஆசிரியருக்கு கோபம் வந்துவிட்டது. அவரது அறைக்கு அழைத்து, “உங்க ஈ.வெ.ரா. கருத்தை பள்ளிக் கூடத்தில காட்டாதீங்க” என்று கூறி என்னையும் கருப்புடை அணிந்த மாணவர்களையும் பிரம்பால் கையில் கடுமையாக அடித்தார். அப்போது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுத வேண்டுமானால் பள்ளி நிர்வாகம் ‘செலக்ஷன்’ என்ற ஒரு தேர்வை நடத்தும். அதில் தேர்ச்சி பெற்றால்தான் அரசுத் தேர்வு எழுதலாம். எங்களுக்கு அரசுத் தேர்வு எழுத அனுமதி யில்லை என்று தலைமை யாசிரியர் அறிவித்து விட்டார். பிறகு திருவாரூர் வந்து, அங்கு மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி.யில் சேர்ந்து படித்தேன். அங்கும் திராவிடர் மாணவர் கழகம் தொடங்கி செயலாளராக செயல்பட்டேன். திருவாரூரில் கலைஞர், தென்னவன் (இவர் பழைய தென்னவன்; இப்போ துள்ளவர் அல்ல) போன்றவர் களுடன் இணைந்து கழகப் பணியாற்றினேன்.

அப்போதெல்லாம் கோடை விடுமுறையில் பெரியார் பயிற்சி வகுப்புகள் நடத்தி, பயிற்சி பெற்ற மாணவர்களை ஊர்களுக்கு பிரச்சாரத்துக்கு அனுப்புவார். 1948ஆம் ஆண்டு ஈரோட்டில் நடந்த பயிற்சி வகுப்பில் நான் பங்கேற்க முடியவில்லை. அதில் பயிற்சி பெற்ற மாணவர்களான சென்னை ஜார்ஜ், திருவாரூர் தங்கராசு போன்றவர்களைக் கொண்டு பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் பெரியாரின் நம்பிக்கைக்குரிய தொண்டர் திருவாரூர் யாகூப் பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார். முதல்நாள் கூட்டத்துக்கு மாணவப் பேச்சாளர்கள் வந்து சேராத நிலையில், திருவாரூர் தொடர் வண்டி நிலையத்துக்கு, ஒரு நண்பரை வழியனுப்ப வந்த என்னை யாகூப் பார்த்து விட்டார். உடனே ‘ஆலடிக்கு மூலை’ கிராமத்தில் நடக்கும் கூட்டத்துக்கு நீ பேச வரவேண்டும்; பேச்சாளர்கள் எவரும் வந்து சேரவில்லை. இது எனக்கு செய்யும் உதவியாகக் கருதி வா” என்றார். நான் தயங்கினேன். “உன் வீட்டுக்கு நான் சேதி தெரிவித்து விடுகிறேன். இப்போதே புறப்படு” என்று கூறினார். நானும் சம்மதித்து பயணமானேன். பட்டுக் கோட்டையில் பெரியார் தொண்டர் மாப்பிள்ளையன் என்னை வரவேற்றார். கூட்டத் தில் நான் ஒருவன் மட்டும் எப்படிப் பேசி சமாளிக்க முடியும்? என்று எனக்கு பயம். பட்டுக்கோட்டை சி.என். விசுவநாதன் என்பவரை (பிறகு பெரியார் உதவி யாளராக சில காலம் இருந்தவர்; சிறந்த ‘பேட்மின்டன்’ விளையாட்டு வீரர்-ஆர்) பிறகு பேச்சாள ராக மாப்பிள்ளையன் அழைத்து வந்தார். பட்டுக் கோட்டையிலிருந்து கிளம்பி நடந்தே ஆலடிக்கு மூலை கிராமத்துக்கு சென்றோம். அப்போது வழியில் எதிர்பாராத விதமாக நாகை காளியப்பன், எஸ்.கே. சாமி யும் வந்தனர். (இவர்கள் உறுதியான பெரியார் தொண்டர்கள். நாகை காளியப்பன் பெரியாரோடு மலேசிய பயணம் சென்றவர். குடந்தை எஸ்.கே.சாமி, தி.மு.க. வின் முன்னணி தலைவர்; சிறந்த பேச்சாளர்-ஆர்)

மாப்பிள்ளையன் வேண்டுகோளையேற்று அவர்களும் கூட்டத்துக்கு வர சம்மதித்தனர். அப்போது தான் எனக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அன்று ‘ஆலடிக்கு மூலை’யில் ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்கை வைத்து கூட்டம் நடந்தது. அடுத்த நாள் திருவாரூர் தங்க ராசுவையும் கையோடு அழைத்துக் கொண்டு யாகூப் வந்து சேர்ந்து விட்டார். தற் செயலாக பட்டுக்கோட்டை அழகிரியும் வந்து விட்டார். மூன்று நாட்கள் பட்டுக் கோட்டை அழகிரியோடு பழகவும், அவரது கூட்டங் களில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்தது. இது எனக்குக் கிடைத்த மிகப் பெரும் பெருமை. அந்தக் காலங்களில் திராவிட இயக்கப் பிரச்சாரம் எத்தகைய சூழல்களில் எப்படி யெல்லாம் நடத்தப்பட்டது என்பதை இளைஞர்கள் அறிய வேண்டும் என்பதற் காகவே விரிவாகக் கூறு கிறேன்.

1949ஆம் ஆண்டு திருவாரூர் அருகே உள்ள மாவூர் ஆர்.எஸ். சர்மா மாளிகையில் பயிற்சி வகுப்பு நடந்தது. மாவூர் சர்மா ஒரு பார்ப்பனர். ஆனால் பெரியாரின் உற்ற நண்பர். மாவூர் சர்மா, பார்ப்பனராக இருந்தாலும் பார்ப்பனர் களாலே வெறுக்கப்பட்டவர். பெரிய தோட்டம், மாளிகை, அவருக்கு மாவூரில் இருந்தது. திருமணம் செய்து கொள்ள வில்லை. அவர் தனது மாளிகை வளாகத்தில் கல்கத்தா காளி கோயிலைக் கட்டி, அதன் குட முழுக்கை புதுமையாக நடத்தினார். யாக சாலை, ஓமகுண்டம், புரோகித மந்திரங்கள் இல்லாமல் திருவாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த சர். சி.பி. இராமசாமி அய்யரை அழைத்து வந்து குடமுழுக்குக்குச் செய் தார். தனது வேத புரோகித எதிர்ப்பை வெளிப்படுத்தி னார். அவரிடம் பார்ப்பனர் கள் ஏராளமாக வேலை செய்தாலும், தனது வாரிசாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த சோமசுந்தரம் என்பவரை ‘தத்துப் பிள்iயாக’ வளர்த்து ஆளாக்கி, தனது சொத்துக்களை அறக்கட்டளையாக்கி, அதன் தலைவராகவும் சோமசுந்தரத்தை நியமித்தார். சோமசுந்தரத்தின் திருமணத்தை பல்லாயிரம் மக்களைக் கூட்டி பெரிய விழாவாக நடத்தினார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அந்தத் திருமணத் துக்கு வந்திருந்தார். கலைவாணர் மீது மிகவும் பற்றுள்ளவர். இலட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கலைவாணர் சிறைபட்ட போது அவரது விடுதலைக்கு மிகவும் உதவியவர் சர்மா.

சர்மாவின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த பார்ப் பனர்கள், அவர் மீது அவதூறுகளை பரப்பினர். ஆத்திரமடைந்த சர்மா, திருவாரூரில் ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்டி தன்னிலை விளக்கமளித்தார். அவதூறு பரப்பிய பார்ப்பனர்களுக்கு சாட்டையடி தந்தார். பெரியாரிடம் மேலும் நெருக்கம் காட்டி பழகத் தொடங்கினார். தனது மாளிகைக்கு பெரியாரை விருந்தினராக அழைத்தார். அப்போது மாணவர் பயிற்சி முகாமை அங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்று பெரியார் கேட்டபோது சர்மாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. 1949 ஜூன் முதல் நாள் சர்மா மாளிகையில் பயிற்சி முகாம் தொடங்கிப் பத்து நாட்கள் நடந்தன. அதில் நான் பயிற்சி பெற்றேன். அந்த 10 நாட்களும் அறுசுவை விருந்தளித்தார் சர்மா.

கேள்வி : பயிற்சி வகுப்புகள் எல்லாம் எப்படி நடக்கும்? யார் பயிற்சி எடுத்தார்கள்?

anna and ma senguttuvanஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்குப் பயிற்சி வகுப்பு தொடங்கும். சர்மா கட்டிய காளிகோயில் வளாகத்தில் காளி சிலை இருக்கும் கருவறைக்குப் பின்புறம் உள்ள ‘பிரகாரத்தை’ (கோயிலைச் சுற்றிய பகுதி) யொட்டிஅமைக்கப்பட்டிருந்த துணிக் கூடாரத்தில்தான் பயிற்சி வகுப்பு நடந்தது.

பெரியார் காலை 9 மணிக்கு முன்னதாகவே மாணவர்கள் வருவதற்கு முன்பே வந்து அமர்ந்திருப்பார். மணியம்மையாரும் அப்போது எங்களோடு பயிற்சி பெற்றார். குடந்தை கல்லூரியில் முதன்முதலாக திராவிடர் மாணவர் கழகத்தை உருவாக்கிய தவமணிராசன், பின்னர் கிறிஸ்தவக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் வி. கலைமணி, பழனி அ. தமிழரசு ஆகியோரும் எங்களுடன் பயிற்சி பெற்றனர். திருவாரூர் செயல்வீரர் வி.எஸ்.வி. யாகூப் உடனிருந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பேராசிரியர் சி. இலக்குவனார், திருச்சி தி.பொ. வேதாசலம், என்.வி.நடராசன் ஆகியோர் இடையிடையே பயிற்சி எடுப்பார்கள்.

பெரியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் நடத்துவது போலவே பயிற்சி வகுப்புகளை நடத்தினார். முதலில் சில கருத்து களையும் புள்ளி விவரங்களையும் கூறுவார். அவற்றைக் குறித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒவ்வொருவராக எழுந்து அந்தக் குறிப்புகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு தலைப்பில் பேச வேண்டும். இடையிடையே பெரியார் கேள்வி கேட்பார். அதற்கு விடையளித்தல் வேண்டும். 1949 ஜூன் திங்கள் முதல் நாள் - பயிற்சி வகுப்பு தொடங்கிய நாளில் ஆலத்தம்பாடி எனும் கிராமத்தில் ‘வகுப்புவாரி உரிமை’யை முதன்முதலாக அறிமுகப்படுத்திய முத்தையா முதலியார் முன்னிலையில் என் அண்ணன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் நான் மாவூர் பயிற்சிக்கு புறப்பட்டு வந்தேன். பயிற்சி முகாம் நிறைவில் பங்கேற்றோருக்கு பேச்சுப் போட்டி நடந்தது. தவமணிராசன் நடுவராக இருந்து நடத்தினார். நான் முதலாவ தாகவும், ஈரோடு அப்பாவு இரண்டாவதாகவும், பழனி அ.தமிழரசு மூன்றாவதாகவும் தேர்ந் தெடுக்கப்பட்டோம்.

கேள்வி : அந்த காலத்தில் திராவிட இயக்கத்துக்கு நேர் எதிராக காங்கிரஸ் இருந்தது. திராவிட இயக்கம் காங்கிரசுக்கிடையே நிலவிய முரண்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

திராவிட இயக்கம் அப்போது பார்ப் பனரை எதிர்த்து, பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளை பரப்புவதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தன. நிலவுடைமை, பண பலம் படைத்த காங்கிரசின் பார்ப்பனர்கள், முன்னேறிய ஜாதியினரின் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்த்த பார்ப்பனரல்லாதார் சிலரும் மத்திய தரப் பிரிவினரும் பெரும்பான்மையாக விளிம்பு நிலையில் இருந்த அடித்தட்டு மக்களும் திராவிட இயக்கத்தில் இருந்தனர். காங்கிரசின் பெரும் பண்ணையார்கள் திராவிட இயக்கத்துக்கு எதிராக தங்கள் அடியாட்களை ஏவி விடுவார்கள். அப்படி அடியாட்களாக வந்தவர்கள், நமது சமுதாய மக்கள்தான். திராவிட இயக்கக் கொள்கையை விரும்பு கிறவர்கள்கூட வெளிக்காட்டாமல் அச்சத்தில் தயங்கி நிற்பார்கள். அனைத்தையும் எதிர்த்து தான் திராவிட இயக்கம் செயல்பட்டது.

1948இல் நான் மாணவராக இருந்தபோது திருவாரூரில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடத்தினோம். பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரசார் அதே இடத்தில் பிறகு இந்தி ஆதரவு பொதுக் கூட்டம் நடத்தினார்கள். பிரபல காங்கிரஸ் பண்ணையார், மிகப் பெரும் நில உடைமையாளர் வடபாதி மங்கலம் வி.எ.ஸ். தியாகராஜ முதலியார், ஆதரவில்தான் அந்தக் கூட்டம் நடந்தது. இந்தி ஆதரவாளர்கள் என்ற பெயரில் பண்ணையாரின் ஏற்பாட்டில் சுமார் ஆயிரம் பேர் கையில் தடியைக் கொடுத்து, திருவாரூரைச் சுற்றி ஊர்வலம் நடத்தினார்கள். அவர்கள் எல்லாம் பண்ணையாரின் ஆட்கள். ஆனாலும் இந்த மிரட்டல்களை துணிவோடு எதிர்கொண்ட பெரியார் தொண்டர்கள் இருந்தனர். அவர்களிடம் இருந்தது உயிருக்கு அஞ்சாத துணிவு. அப்படிப்பட்ட ஒருவர் தான் தண்டவாளம் அரங்கராசு. எதற்கும் அஞ்சாத அவரது துணிவுக்காக தண்டவாளம் என்று அழைக்கப்பட்டார். இந்தி ஆதரவுக் கூட்டம் நடந்தபோது திராவிடர் மாணவர் கழகத் தோழர்களாகிய நாங்களும், திராவிடர் கழகத்தினரும், கூட்டம் கேட்க வந்தவர்போல் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டோம். கூட்டத்தில் சேலம் சுப்ரமணியம் என்பவர் பேசும்போது, அவர் “இந்தி என்று சொல்லு வேன்; கூட்டத்திலிருந்து ஆதரிப்போம் என்று சொல்ல வேண்டும்” என்று ஆதரவாளர் களிடம் கூறி ஏற்பாடு செய்திருந்தனர். அவர் ‘இந்தி’ என்று கூறியவுடன் திராவிடர் மாணவர் கழகத்தினர் ‘எதிர்ப்போம்’ என்று பலமாகக் குரல் கொடுக்கவே, கூட்டத்தில் குழப்பம் உருவாகி, ‘தேசத் துரோகிகளை அடியுங்கள்’ என்று சுப்ரமணியம் கூச்சலிட, அடியாட்கள் எங்களையெல்லாம் அடிக்கத் தொடங் கினார்கள். ‘இந்தி ஒழிக; தமிழ் வாழ்க’ என்று முழக்கமிட்டு நாங்கள் கலைய ஆரம்பித்தோம். மேடையில் கற்கள் வந்து விழவே பாதியிலே நின்றுபோனது கூட்டம்.

தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் மற்றொரு தூணாக விளங்கிய சிங்கராயர் வீட்டை பண்ணையாரின் அடியாட்கள் தாக்க வந்தனர்; சிங்கராயர் வீட்டில் இல்லை; அவரது உதவியாளர் தேவன், அரிவாளுடன் வீட்டிலிருந்து வெளியே வந்து, ‘வாங்கடா பார்ப்போம்’ என்று சவால் விட்டவுடன் கூட்டம் நழுவியது. திராவிட இயக்கம் சைவர்களால் சைவர் நலனுக்காக தொடங்கப்பட்டதாக சில ஆய்வாளர்கள் எழுதுவது வரலாற்றுக்கு நேர் மாறானது. பண்ணையார்களாக இருந்த பார்ப்பனரல்லாத உயர்சாதியினரின் எதிர்ப்புக்கிடையேதான் இயக்கம் வளர்ந்தது.

எங்கள் ஊரில் நடக்கும் 22 நாள் கோயில் திருவிழாவில் புரோகிதப் பார்ப்பனரும் ‘சாமி’ யும் பவனிவரும் இரதத்தை கோயில் நிலங்களில் குடியிருப்பவர்கள் தூக்க வேண்டும் என்பது மரபு. கோயில் நிலங்களில் தான் எங்கள் ஊர் மக்கள் அதிகம் குடியிருந்தார்கள். பார்ப்பனரை வைத்துத் தூக்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து, ஊர் மக்கள் சாமி இரதத்தைத் தூக்க விடாமல் தடுத்தோம். பிறகு அடுத்த கிராமத்தி லிருந்து ஆட்களை வரவழைத்துதான் தூக்கினார்கள்.

என்னுடைய திருமணம்கூட அப்படித் தான் நடந்தது. நான் சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததால், பலரும் பெண் தருவதற்கு முன்வரவில்லை. கடைசியாக என்னோடு படித்த ஒரு வகுப்புத் தோழர். என் கொள்கையைப் புரிந்தவர் என்பதால் தனது தங்கையைத் திருமணம் செய்து வைக்க முன் வந்தார். 1959ஆம் ஆண்டு தஞ்சைக்கு அருகே உள்ள திருவேதி குடி எனும் சிற்றூரில் என் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு அண்ணா, கலைஞர் வருவதற்கு தயாராக இருந்தார்கள். ஆனால், நான் அவர்களைத் தவிர்த்துவிட்டு பேராசிரியர் அன்பழகன் தலைமையில் திருமணம் செய்து கொண்டேன். காரணம், சுயமரியாதை திருமணமே நடக்கக் கூடாது என்று உறவினர்கள் ஊர்க்காரர்கள் எதிர்த்ததுதான். ‘அன்பழகன் வேண்டுமானால் வரட்டும்; அவர் நம்ம ஜாதிக்காரர்’ என்று சம்மதித்ததால் பேராசிரியரை அழைத்து நான் சுயமரியாதை திருமணம் செய்ய வேண்டிய தாயிற்று. இதை அண்ணாவிடமே நான் கூறினேன். அன்றைய சமூக நிலை அப்படித்தான் இருந்தது.

அந்த காலத்தில் விபூதி வீரமுத்து, அணுக்குண்டு அய்யாவு என்று இரண்டு காங்கிரஸ் பேச்சாளர்கள் இருந்தார்கள். திராவிட இயக்கத்தையும் தலைவர் களையும் மேடையில் நான்காம் தர வசவு மொழி களில் பேசுவதற்காகவே இவர்களை காங்கிரஸ் கட்சி காசு கொடுத்து களம் இறக்கி விட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சார்ந்த இராணுவத்தில் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்ற வீரமுத்து என்பவர்தான் ‘விபூதி வீர முத்து சுவாமி’ என்ற பெயரில் மேடைகளில் வலம் வந்தார். காங்கிரசுக்கு கடுமையான பேச்சாளர் பஞ்சம். ஆள் கிடைத்தால் போதும். காசு கொடுத்து திராவிட இயக்கத்தைத் தாக்கச் சொல் வார்கள். விபூதி வீரமுத்து, பெரியார் படத்தையும் அண்ணா படத்தையும் கையிலே வைத்துக் கொண்டு, “இதோ கண்ணைக் குத்தி பிடுங்குகிறேன் பார்” என்று கூறி படத்தில் உள்ள பெரியாரின் கண்களைக் குத்துவார். அண்ணாவின் படத்தில் முகத்தில் குத்துவார். “கறுப்புக்கு மறுப்பு” என்று கேவலமான நடையில் வசைமொழிகளால் ஒரு நூலை அச்சிட்டு தாம் பேசுகிற கூட்டங்களில் எல்லாம் விற்றுக் கொண்டிருந்தார். இவரின் அருவறுப்பான பேச்சு மக்களை வெறுப்படையச் செய்தது. கடைசியில் பேச்சைக் கேட்கவே ஆளில்லாமல் காணாமல் போய்விட்டார்.

அணுக்குண்டு அய்யாவு என்பவர் மதுரையைச் சேர்ந்தவர். கூலிக்கு அடியாளாகப் போய்க் கொண்டிருந்தவர். பிறகு காங்கிரசின் கூலிப் பேச்சாளரானார். 1946ஆம் ஆண்டு மதுரையில் நடந்த கருஞ்சட்டைப் படை மாநாட்டுப் பந்தலுக்கு மதுரை வைத்தியநாத அய்யரின் தூண்டுதலில் தீ வைத்துக் கொளுத்தியக் கூட்டத்தில் இவர் முன்னணியில் இருந்தார். கூட்டத்தினர் அலறியடித்து வெளியேறினர். ஓடியவர்களை ஒரு கலவரக் கும்பல் தாக்கியது. மாநாட்டுக்கு வந்த நடிகவேள் எம்.ஆர். இராதா, வீட்டைச் சூழ்ந்துக் கொண்டு ஒரு கும்பல் தாக்கியபோது, நடிகவேள் துணிச்சலுடன் வெளியே வந்து காலிக் கும்பலைத் துப்பாக்கியை நீட்டி எதிர்கொண்டு விரட்டி அடித்தார். மாநாடு பாதியில் நிறுத்தப்பட்டது.அதே அணுகுண்டு அய்யாவு கடைசி காலத்தில் காங்கிரசாரால் கைவிடப்பட்டு, பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டார்.

தேனியில், நாவலர் நெடுஞ்செழியன் பேசிய கூட்டத்தில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு ஒருவன் கொல்ல முயன்றான். தக்க நேரத்தில் கழகத் தோழர்கள் காப்பாற்றினர். புதுச்சேரியில் பாரதிதாசன் முன்னின்று நடத்திய திராவிடர் கழக மாநாட்டில் காங்கிரசார் கலவரம் செய்து கலைஞரைக் கடுமையாகத் தாக்கினார். சேலத்தில் தந்தை பெரியாரும், நாவலர் நெடுஞ்செழியனும் காரில் அமர்ந்து வர, ஊர்வலமாகச் சென்றபோது பெரியார் மீது சோடா புட்டி வீசப்பட்டது. குறி தவறியதால் பெரியார் மீது அது படாமல் பக்கத்தில் வந்து ஒரு கழகத் தோழர் மீது பட்டு அவர் ஒரு கண்ணையே இழக்க நேரிட்டது. இவையெல்லாம் அந்தக் காலத்தில் அன்றாடம் நடக்கும் செய்திகள்.

தமிழரசுக் கழகம் என்ற பெயரில் ம.பொ.சி. ஒரு பேச்சாளர் படையையே வைத்திருந்தார். அவர்களை பேச்சாளர்கள் என்று கூடச் சொல்ல முடியாது. ஏச்சாளர் என்றுதான் சொல்லுதல் வேண்டும். திராவிட இயக்கத்தைத் திட்டித் தீர்ப்பதே இவர்களின் வேலை. தமிழரசுக் கழகம் என்ற பெயரில் காங்கிரசுக்காரர்களே பணம் கொடுத்து கூட்டங்களை நடத்தச் சொல்வார்கள். சின்ன அண்ணாமலை, கா.மு.ஷெரீப், ஜி. உமாபதி, வவ்வாலடி சம்சுதீன், டி.என்.அனந்தநாயகி, ந. சஞ்சீவி, கு.மா. பாலசுப்பிரமணியம், கு.சா. கிருஷ்ணமூர்த்தி, கலிவரதன் போன்றவர்கள் தமிழரசுக் கழகத்தின் மேடைப் பேச்சாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு என்ற பெயரால் மாநாடுகளை ம.பொ.சி. நடத்தினார். கடைசி காலத்தில் காங்கிரஸ்காரர்கள் இவர்களையும் கைவிட்டனர். எந்த திராவிட இயக்கத்தை ம.பொ.சி. மூர்க்கமாகத் தொடர்ந்து தாக்கி வந்தாரோ, அதே திராவிட இயக்கத்தில் சரணாகதி அடைந்தார். அண்ணா பெருந்தன்மையோடு மயிலாப்பூரில் உதயசூரியன் சின்னத்திலேயே அவரை போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தார். கலைஞர் தயவால் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், மேலவைத் துணைத் தலைவராகவும் பதவிகளைப் பெற்றார். பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த பிறகு, அவரது ஆதரவாளராக மாறி, எம்.ஜி.ஆர். தயவால் மேலவைத் தலைவர் பதவியைப் பெற்றவர்தான் இந்த திராவிட இயக்க எதிர்ப்பு வீரர்.

கேள்வி : தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடுகளில் அதன் தொடக்கக் காலத்திலிருந்து பொறுப்பாசிரியராக பணியாற்றி யிருக்கிறீர்கள். அதன் வழியாக உங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைக் கூறுங்கள்.

1945க்குப் பிறகு திராவிட இயக்கத்துக்காக ஏராளமான இதழ்கள் வெளிவரத் தொடங்கின. நான் சென்னைக்கு வந்து எனது அண்ணன் வீட்டில் தங்கி வேலை வாய்ப்புகளைத் தேடி வந்தேன்.

டாக்டர் கிருஷ்ணசாமி (உலகப் புகழ்பெற்ற ஆற்காடு இரட்டையர்களான ஆற்காடு டாக்டர் இராமசாமி முதலியர் மகன்) ‘லிபரேட்டர்’ என்ற ஆங்கில நாளேட்டையும் ‘எங்கள் நாடு’ என்ற தமிழ் நாளேட்டையும் திராவிட இயக்க ஆதரவு ஏடுகளாக நடத்தி வந்தார். அதில் பணியாற்ற முயற்சித்தேன்; இதழ் நெருக்கடியில் நின்றுபோக இருந்ததை அறிந்து வரவில்லை. திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ‘மாலைமணி’ நாளிதழ் தொடங்கப்பட்டது. டி.எம்.பார்த்த சாரதி (தி.மு.க. வரலாற்றை எழுதியவர்) தொடங்கிய அப்பத்திரிகை யின் ஆசிரியர் பொறுப்பை அண்ணா ஏற்றார். எனக்கு அண்ணா பரிந்துரைத்த நிலையிலும், அங்கே வேலை கிடைக்கவில்லை. நான் சென்னையிலிருந்து ஊருக்கு திரும்பி விட்டேன்.

மாயூரத்தில் (இப்போது மயிலாடுதுறை) உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக இருந்த எனது மாமா வீட்டில் தங்கி, அங்கே தி.மு.கழக வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டேன். மாயூரம் கிட்டப்பா தீவிர சுயமரியாதை உணர்வுடையவர். 1952இல் அவர் மயிலாடுதுறை தி.மு.க. செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டப் பிறகு தீவிரமாக பணியாற்றினார். தமிழக அரசின் செய்தித் துறையில் பிறகு துணை இயக்குனரான கவிஞர் கருணானந்தம் (பெரியார் வரலாறு எழுதியவர்) - அப்போது மாயூரம் அஞ்சல் துறையில் (ஆர்.எம்.எஸ்.) பணியாற்றி வந்தார். பெரியார், அண்ணா, கலைஞரிடம் நெருங்கிப் பழகியவர். மதுரையில் நடந்த திராவிடர் கழக கருஞ் சட்டைப் படை மாநாடு தொண்டர் படையில் இடம் பெற்றவர். ஈரோட்டில் கலைஞர் ‘குடிஅரசு’ அலுவல கத்தில் இருந்தபோது கருணானந்தமும் ஈரோட்டில் இருந்தார்.கருணானந்தம் ஆலோசனையோடு நானும் கிட்டப்பாவும் ‘எழுச்சி’ என்ற மாதம் இருமுறை இதழைத் தொடங்கினோம். நான் ஆசிரியர், கிட்டப்பா துணை ஆசிரியர். ஏட்டுக்கு பெயர் வைத்தது கவிஞர் கருணானந்தம். இதழுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மயிலாடு துறையில் ‘ராகவன் பிரஸ்’ என்ற அச்சகத்தில் பத்திரிகையை அடித்தோம். அவர் காங்கிரசுக்காரர். பத்திரிகையில் வந்த கருத்துகளைக் கண்டு பயந்து ஒரு கட்டத்தில் அச்சிட மறுத்துவிட்டார்.

குத்தூசி குருசாமி ‘விடுதலை’யின் ஆசிரியராக இருந்தபோது, ‘விடுதலை’யில் பணியாற்றும் வாய்ப்பு - குத்தூசி குருசாமியின் நெருக்கமான நண்பரான அமிர்தகணேசன் வழியாகக் கிடைத்தது. அப்போது தி.மு.க.வை - திராவிடர் கழகம் தீவிரமாக எதிர்த்துக் கொண் டிருந்த காலம். நான் ‘தி.மு.க.’ என்று தெரிந்தும், குத்தூசி குருசாமி வேலையில் சேர்த் துக் கொண்டார். அப்போது தி.மு.க.வை ‘கண்ணீர்த் துளிகள்’ என்று தான் ‘விடுதலை’ எழுதும். ‘விடுதலை’ இதழ் வரலாற் றிலேயே முதன்முதலாக தந்தை பெரியாருக்கு பிறந்த நாள் மலர் வெளியிடப் பட்டது. 1955ஆம் ஆண்டில் அப்படி ஒரு மலர் வெளியிட லாம் என்ற யோசனையை நான் குத்தூசி குருசாமி அவர்களிடம் கூறினேன். ‘அய்யா’ (பெரியார்) ஏற்க மாட்டாரே என்று குத்தூசி முதலில் தயங்கினார். பிறகு குத்தூசி அய்யாவிடம் கேட்ட போது அய்யா, இரண்டு நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டார். ஒன்று மலர் ஆடம்பரமாக இருத்தல் கூடாது; எளிமையாக இருக்க வேண்டும். விலை எட்டணா வுக்கு (50 காசு) மேல் இருக்கக் கூடாது என்றார் அய்யா.

மலருக்கு அய்யாவின் ஒப்புதல் கிடைத்ததில் எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. குத்தூசியாரும் துணை ஆசிரியர்களாகிய நாங்களும் சேர்ந்து சுமார் 2000 ரூபாய்க்கு விளம்பரங் களை சேகரித்தோம். அய்யா, அவ்வப்போது மலர் வேலைகள் பற்றி கேட்டறி வார். குத்தூசி குருசாமி அய்யாவைவிட மிகவும் சிக்கனக்காரர். மலர் சிறப்புக்கு பல யோசனைகளைக் கூறு வார். ஆனால் செலவு மட்டும் கூடாது என்பார். அவரே ஒரு ஓவியரைப் பிடித்து இலவச மாக ஓவியங்களை வரையச் செய்து வாங்கி வந்தார். மலரில் அய்யாவின் அட்டைப் படமாவது வண்ணத்தில் இருக்க வேண்டாமா என்று கேட்டேன். வண்ணப்பட ஆடம்பரங்கள் வேண்டாம் என்று பெரியார் கூறி விட்டார். “இரண்டு வண்ணத் தில் தான் அட்டைப்படம் போட வேண்டுமானால் ஒரு யோசனை கூறுகிறேன். வெள்ளை பேப்பருக்கு பதிலாக கலர் பேப்பர் வாங்கி, அதில் ஒரு வண்ணத்திலே படத்தை அச்சிட்டால் இரண்டு வண்ணமாகி விடுமே” என்று பெரியார் ஆலோசனை கூறினார். நாங்கள் வாய்விட்டே சிரித்து விட்டோம். அப்படித் தான் மலரின் அட்டையில் அய்யா வின் வண்ணப்படமும் வந்தது. மஞ்சள் நிற காகிதத்தை வாங்கி கறுப்பு நிறத்தில் படத்தை அச்சிட்டு ‘இரு வண்ண முகப்புடன் மலர் வெளி வருகிறது’ என்று விளம்பரமும் செய்தோம்.

மலரைப் பார்த்ததும் அய்யாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. பாராட்டினார். அப்போது அய்யா பிறந்த நாளை விடுதலை அலுவலகத்தில் கொண்டாட வேண்டும் என்று அய்யாவிடம் கேட்டுக் கொண்டோம். அய்யா சம்மதித்தார். ஆனால் விழா வுக்கு நீங்கள்தான் செலவு செய்ய வேண்டும் என்றார் அய்யா. அலுவலகத்தில் அனைவரும் பணம் சேர்த்து விழா எடுத்தோம். மணி யம்மையாரும் கலந்து கொண் டார். ஆசிரியர் குருசாமியும் நானும் அய்யாவின் தொண் டின் பெருமைகளைப் பேசி னோம். அலுவலக நண்பர்கள் அனைவரும் அய்யாவோடு புகைப்படம் எடுத்துக் கொண் டோம். அய்யா, வெள்ளை சட்டையிலே இருக்கும் அபூர்வமான படம் அது. அன்று மாலை, சிந்தாதிரிப் பேட்டை மீரான் சாகிபு தெரு விலுள்ள தனது வீட்டுக்கு பெரியார் எங்களை அழைத் தார். அன்னை மணியம்மை யார் அனைவருக்கும் உணவு பரிமாறினார். அன்னை நாகம்மையார் கையால் படைக்கப்பட்ட உணவை உண்ணாத அந்தக் காலத்து அரசியல் தலைவர்களே இல்லை என்று கூறுவார்கள். அந்தப் பேற்றினைப் பெறாத நாங்கள், பெரியார் இல்லத் தில் அன்னை மணியம்மையார் அளித்த உணவை உண்ணும் வாய்ப்பைப் பெற்றது பெருமைக்குரிய நினைவு. அப்போது திராவிடர் கழகம் கடுமையாக எதிர்த்து வந்த தி.மு.க.வின் ஆதரவாளர் நான். ‘விடுதலை’ அலுவலகத் தில் ஒரு ‘கண்ணீர்த் துளி’ இருக்கிறானே என்று பெரியாரிடமே சுவரெழுத்து சுப்பையா கேட்டார். ‘அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ போ’ என்று பெரியார் அவரிடம் கூறிவிட்டார். பெரியார் என்னிடம் கேட்டார். பரவாயில்லை; பணியைத் தொடருங்கள் என்று அய்யா கூறி விட்டார். கருத்து மாறுபாடுகளை அங்கீ கரிக்கும் பண்பு அய்யாவிடம் இருந்தது. ஆனாலும் தேர்தல் பிரச்சாரத்துக்கு தி.மு.க.வுக்கு எதிராகப் பேசுவதற்கு சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தைச் சார்ந்த டி.எம்.சண்முகம், என்னை கட்டாயப்படுத்தினார். நான் விரும்பாததால் ‘விடுதலை’ யிலிருந்து விலகிவிட்டேன்.

periyar and maniammai dk cadres

ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நான் பணியாற்றிய ஏடுகளில் எல்லோருமே என்னை விரும்பினார்கள். என்னை எவரும் வெளியேற்றி யதில்லை. நான்தான் விலகி வந்திருக்கிறேன். ‘விடுதலை’ யில் பத்திரிகையாளராக பணி செய்தபோதே உவமைக் கவிஞர் சுரதா தொடங்கிய ‘காவியம்’ என்னும் கவிதை வார இதழில் பகுதி நேர உதவி ஆசிரியராகப் பணியாற்றினேன். விளம்பரங்கள்கூட அந்த இதழில் கவிதையாகவே வரும். 1955- பெரியார் பிறந்த நாளில் முதல் இதழ் புரட்சிக்கவிஞர் படத்தைத் தாங்கி வெளி வந்தது.

நான் முதன்முதலாக சேர்ந்த பத்திரிகை ‘மாலைமணி’. 1949 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அண்ணா பிறந்த செப்.15ஆம் தேதி பணியில் சேர்ந்தேன். அடுத்த நாளில் தி.மு.க. தொடங்கியது. அண்ணா ஆசிரியராக இருந்தார். அவருக்குக் கீழே பணியாற்றும் பெருமை பெற்றேன். இடையில் இம்பீரியல் வங்கியில் (ஸ்டேட் வங்கி) கிடைத்த வேலையையும் உதறினேன். டி.எம்.பார்த்தசாரதியின் அந்த பத்திரிகை, பொருளாதார நெருக்கடியில் ஓராண்டு காலத்தில் நின்று போனது.

1953ஆம் ஆண்டிலிருந்து தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக ‘நம்நாடு’ தின ஏடு வெளி வரத் தொடங்கியது. அண்ணா ஆசிரியர். இராயபுரத்தில் தி.மு.க.வுக்கு சொந்தமான தலைமைக்கழகக் கட்டிடத்திலிருந்து வெளி வந்தது. எனக்கு ‘நம்நாடு’ நாளேட்டில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. 1.8.1957இல் பணியில் சேர்ந்தேன். 1972இல் ‘நம்நாடு’ நிறுத்தப்படும்வரை அதில்தான் பணியாற்றினேன். ஏட்டில் அத்தனை பொறுப்புகளையும் நான்தான் ஏற்க வேண்டியிருந்தது. எனக்கு சுருக்கெழுத்து தெரியாது. அண்ணாவின் புகழ்பெற்ற பேச்சுக்களைக் குறிப்பெடுத்து முழுமையாக வெளியிட்டேன். கூட்டங்களில் அவரது பேச்சை குறிப்பு எடுக்க நான்தான் வரவேண்டும் என்றே அண்ணா விரும்புவார். பதிவுக் கருவிகள் (டேப் ரெக்கார்டர்) அப்போது இல்லை. முதன்முதலாக ‘நம்நாடு’ இதழுக்காக அண்ணாவின் பேச்சு பதிவுக் கருவியில் பதிவுசெய்யும் முதல் முயற்சி 30.8.1957இல் சென்னை கடற்கரையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வந்திருந்த இராம. அரங்கண்ணல், ‘நீ குறிப்பு எடுக்க வேண்டாம்; அதுதான் கருவி வந்துவிட்டதே’ என்றார். நான் அண்ணாவின் பேச்சைக் கேட்கத் தொடங்கி விட்டேன். கடைசியில் அந்தக் கருவியில் பேச்சு பதிவாகவே இல்லை. அண்ணாவுக்கு அதிர்ச்சி. அடுத்த நாள் கவலையுடன் ‘நம்நாடு’ அலுவலகத்தில் எனது வருகைக்காகக் காத்திருந்தார் அண்ணா. நான் வந்தவுடன், ‘குறிப்பெடுத்தாயா’ என்று கேட்டபோது, ‘அரங்கண்ணல் ஆலோசனைப்படி குறிப்பெடுக்க வில்லை’ என்று கூறினேன். ‘கவலைப்படாதீர்கள், எனது நினைவிலிருந்தே எழுதுகிறேன்’ என்று அண்ணாவிடம் உறுதி கூறி, அவரது உரையை அவர் பயன்படுத்திய அதே சொற்களைத் தவறவிடாமல் அப்படியே எழுதி காட்டியபோது அண்ணா வியந்து பாராட்டினார்.

அண்ணாவின் பல புகழ் பெற்ற உரைகளைக் குறிப்பெடுத்து, ‘நம்நாடு’ இதழில் வெளியிட்டவன் நான். 1972இல் ‘நம்நாடு’ நின்று போனது. அப்போது எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து விலகிய நேரம். 1974இல் கழகத்தின் அதிகாரபூர்வ வார ஏடாக ‘கழகக் குரல்’ தொடங்கியபோது மீண்டும் எனக்கு அதில் பொறுப்பாசிரியர் பதவி. 1975இல் இந்திராகாந்தி ‘அவசரநிலை’ அறிவித்து பத்திரிகைகளை முன் தணிக்கைக்கு உட்படுத்திய போது, ‘கழகக் குரல்’ கடும் அடக்குமுறைகளை சந்தித்தது. சவுமி நாராயணன் என்ற பார்ப்பனர்தான் தணிக்கை அதிகாரி (‘விடுதலை’ நாளேட்டுக்கும் இவர்தான் அப்போது தணிக்கை அதிகாரி-ஆர்). கலைஞர் கட்டுரை, பேச்சு என்றால், வெளியிட அனுமதிக்க மாட்டார். 1972இல் ‘நம்நாடு’ நின்று போன நிலையில் பம்பாயி லிருந்து வெளிவந்த ‘தமிழின் ஓசை’ பி.எஸ்.இளங்கோ நடத்திய ‘மாலைமணி’ போன்ற ஏடுகளில் சிலகாலம் பணி. இதற்கிடையே 1979இல் ‘கவிக்கொண்டல்’ என்ற கவிதை திங்கள் இதழை நானே தொடங்கி, இடையில் நிறுத்தி, மீண்டும் 1991இல் தொடங்கி இதுவரை இதழைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். என்னதான் கொள்கை உணர்வோடு பத்திரிகைகளில் பணியாற்றி னாலும் அது வெளியே தெரிவதில்லை. களப்பணியில் இருந்தால்தான் செல்வாக்கு வெளிச்சம் கிடைக்கிறது. இதனால் நான் எந்தப் பதவிக்கும் நெருங்க முடியாதவனாகவே இருந்தேன். பத்திரிகையாளராக செயல்படவே நான் விரும்பியதால் களப்பணிக்கு வரவில்லை. இது தவறான முடிவு என்பதை பிறகு உணர்ந்தேன். எம்.ஜி.ஆர். பிரிந்த போது என்னை அழைத் தார்கள். மாநிலங்களவை உறுப்பினராக்கு வதாகக் கூறினார்கள். நான் உறுதியாக மறுத்து விட்டேன். கொள்கை அடையாளத்தோடு வாழ்வதில் உறுதியாகவே இருந்தேன்.

1949இல் தி.மு.க. தொடங்கப் பட்ட நாளில் உறுப்பினராக கையெழுத்திட்ட முதல் 5 பேர்களில் நானும் ஒருவன். அப்போது உறுப் பினராகி உயிரோடு இருப்பது நான் மட்டுமே; கலைஞர் அந்தக் கூட்டத்துக்கு தாமதமாகவே வந்தார். கையெழுத்திடவில்லை.

கேள்வி : 1976ஆம் ஆண்டு இந்திராகாந்தி அவசர நிலையை பிரகடனம் செய்த போது சந்தித்த அடக்கு முறைகள் பற்றி கூறுங்கள்.

எத்தனையோ அடக்கு முறைகள் ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். 1976ஆம் ஆண்டு அவசரநிலை காலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவை கவிஞர் சுரதாவோடு இணைந்து நடத்தினோம். அண்ணாசாலையில் உள்ள பாவாணர் நூலகக் கட்டிட அரங்கில் காவல்துறை அனுமதியோடு நடத்த இருந்தபோது நிகழ்ச்சியன்று காவல் துறை அரங்கை மூடி நிகழ்ச்சியை நடத்த அனுமதி மறுத்து விட்டது. அடுத்த நாள் பெரியார் திடலில் முழுநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்து கலைஞர், நாவலர், பேராசிரியர், ம.பொ.சி. போன்றவர் களை பேச ஏற்பாடு செய்தோம். கலைஞரே அழைத்து, ‘என்னையும் போடுங்கள்; வந்து பேசுகிறேன். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்’ என்றார். காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. அதற்குக் கூறப்பட்ட காரணம், பெரியார் திடலுக்குள் வருவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரு வழி மட்டுமே இருக்கிறது. கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால் ஏதேனும் விபரீதங்கள் நிகழ்ந்து விட்டால் கட்டுப்படுத்த முடியாது. எனவே அனுமதி மறுக்கப்படுகிறது என்று ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து கூறினார்கள். அதற்குப் பிறகுதான் பெரியார் திடலில் போக வர இரண்டு வழிகள் திறக்கப்பட்டன. (இதே காலத்தில் பெரியார் திடலில் பெரியார் விழா நாள் கூட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டு அன்னை மணியம்மையார், புலவர் இமயவரம்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். - ஆர்)

கேள்வி : திராவிட இயக்க ஏடுகளில் நீண்ட காலம் பணியாற்றி பேச்சாளராகவும் களப்பணி யாளரும் செயல்பட்டு அதே உணர் வுடன் இப்போதும் இருக்கிறீர்கள். திராவிட இயக்கம் தான் தமிழ் நாட்டை சீர்குலைத்தது என்ற குரல் இப்போது கேட்கத் தொடங்கி யிருக்கிறதே.

அப்படி கூறுகிறவர்களை ‘பிழைப்பு வாதிகள்’ என்ற கடுமை யான சொற்களைத்தான் நான் பயன்படுத்துவேன். திராவிடம் என்றாலே தமிழ்தான் மொழிவழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு பெரியார் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை முன் வைத்தார். அண்ணா கேட்ட திராவிட நாடும் தென்னகத்தில் மொழி வழியான மாநிலங்கள் ஒரு கூட்டமைப்பாக இயங்கி, விரும்பினால் பிரிந்து செல்லும் கொள்கையை உள்ளடக்கிய திராவிட நாடு தானே தவிர, தென்னக மாநிலங்களை ஒரே குடையின் கீழ் உள்ளடக்கும் திராவிட நாட்டை அண்ணா கேட்கவில்லை.

கழகங்களின் பெயரில் ‘திராவிட’ என்ற பெயர் இடம் பெற்றிருப்பது வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளம். பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்ட கட்சிக்கு காங்கிரஸ் என்று பெயர் வைத்தது பிரிட்டிஷ்காரன்தான். சுதந்திரத்துக்குப் பிறகும் அந்த கட்சிக்கு அதே பெயர் தான் தொடருகிறது. ‘திராவிட’ என்பது அது தொடங்கப்பட்ட காலத்தின் பெயர்; அந்த வரலாற்றுத் தொடர்ச்சியின் குறியீடு. ‘திராவிட’ இயக்கத்தை எதிர்ப்பவர்கள் ‘காங்கிரசை’ நோக்கி ஏன் பிரிட்டிஷ்காரன் வைத்த பெயரை மாற்றவில்லை என்று கேட்கிறார்களா? ஏன் கேட்கவில்லை? தமிழில் ‘ழ’கரம் உச்சரிப்பு தமிழ் தெரியாதவர்களுக்கு வருவதில்லை. ‘மணிப் பவழ நடை’ என்பதை உச்சரிக்க முடியாததால் தான் ‘மணிப்பிரவள நடை’ என்று உச்சரிக்கத் தொடங்கினார்கள். அதேபோல ‘தமிழம்’ என்பதிலிருந்து பிறழ்ந்து வந்த சொல்தான் ‘திராவிடம்’. திராவிட இயக்கம்தான் வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியது. தமிழ் மொழிக்கு மறுமலர்ச்சியை உருவாக்கியது. இத்தகைய போலி எதிர்ப்புகள் ஒருபோதும் வெற்றி பெறப் போவது இல்லை.

கேள்வி : திராவிட இயக்கக் கொள்கை களின் சமுதாயத் தாக்கத்தை எப்படி மதிப்பிடு கிறீர்கள். அது வெற்றி பெற்றிருக்கிறதா? அதற்கான தேவை இருக்கிறதா?

திராவிட இயக்கத்தின்கொள்கைகள் முன் எப்போதையும்விட இப்போது தேவை என்பதே எனது கருத்து. அதன் வரலாற்றுத் தேவையை இந்த இயக்கத்தின் வெளியே இருப்பவர்களே பேசுகிறார்கள். பெரியார் இயக்கத்திலிருந்து தி.மு.க. பிரிந்து அரசியல் கட்சியாகியபோது, நான் தி.மு.க.வைத்தான் ஆதரித்தேன். இப்போது நான் கூறுகிறேன். அப்படி தேர்தல் அரசியலுக்கு போனதால்தான் தி.மு.க. திராவிட இயக்கக் கொள்கைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் கொள்கையில் நீர்த்துப் போய் விட்டது. அரசுத் திட்டங்கள் வழியாக தமிழ்நாடு பெயர் சூட்டல், சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட வடிவம், இரு மொழிக் கொள்கைப் போன்ற சட்டங்கள் வந்தன என்றாலும், அரசியலுக்கு போனதால் கட்சி கொள்கையில் ஊன்றி நிற்க முடியாமல் கொள்கை அடை யாளங்கள் நீர்த்துப் போய்விட்டன என்பதே என் கருத்து. தி.மு.க. அரசியலுக்குப் போயிருக்கக் கூடாது. திராவிடர் இயக்கத்தின் இலட்சியங் களுக்காக இப்போது போராடி வருவது பெரியார் இயக்கங்கள் மட்டும்தான். இந்த இயக்கங்கள் ஒன்றுபட்டு வலிமையோடு செயல்பட வேண்டும். இதை இந்த பேட்டி வழி யாக எனது வேண்டுகோளாக முன் வைக்கிறேன்.

கேள்வி : இதழியல் பணியில் உங்களின் சாதனைகளாக நீங்கள் எதைக் குறிப்பிடுவீர்கள்?

மயிலாடுதுறையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக பல ஆண்டுகாலம் பணியாற்றிய சுயமரியாதைக்கொள்கையில் தீவிர ஈடுபாடு கொண்ட கிட்டப்பா அவர்கள், ‘மாயூரம்’ என்ற வடமொழிப் பெயரை ‘மயிலாடுதுறை’ என்று மாற்றுவதற்காகத் தொடர்ந்து சட்டமன்றத்தில் வினாக்களை எழுப்பிய போதும், ‘மயிலாடுதுறை’ பெயரில் ஒரு சிறப்பு மலர் வெளியிட்ட போதும் தொடர்ந்து உடனிருந்து செயல்பட்டேன். சட்டமன்றத்தில் அதிக கேள்விகள் கேட்ட உறுப்பினர் என்ற பெருமை கிட்டப்பாவுக்குக் கிடைத்தது. அவருக்கு கேள்விகள் தயாரித்து தந்தவன் நான். ‘நம்நாடு’ இதழில் பணியாற்றியபோது ‘அபேட்சகர்’ என்ற அந்த சொல்லுக்கு ‘வேட்பாளர்’ என்ற சொல்லை முதலில் உருவாக்கி, ‘நம்நாடு’ பயன்படுத்தியது அந்த சொல்லை. ஏட்டில் பயன்படுத்தியது நான்தான். சென்னை கார்ப்பரேசனை சென்னை நகரசபை, சென்னை நகரமன்றம் என்று அவரவர் ஒரு பெயரில் குறிப்பிட்டார்கள். ‘நம்நாடு’கூட ‘சென்னை பேரூராட்சி’ என்று எழுதியது. ‘மாநகராட்சி’ என்ற சொல்லை முதலில் உருவாக்கி ‘நம்நாடு’ இதழில் நான்தான் அறிமுகப்படுத்தினேன்.

‘மவுன்ட்ரோடு போஸ்ட் ஆபீஸ்’ என்றிருந்த பெயர்ப் பலகையை ‘நம்நாடு’ இதழில் கண்டித்து எழுதி, ‘அண்ணா சாலை அஞ்சலகம்’ என்று பெயர் மாற்ற வைத்தேன். அஞ்சலக தலைமை மேலாளரே என்னிடம் தொடர்பு கொண்டு ஏன் பத்திரிகையில் எழுதினீர்கள்? சொல்லியிருந்தால் நானே மாற்றியிருப்பேனே என்று கூறி, பிறகு அஞ்சலகம் என்று பெயரை மாற்றினார். செர்மனியில் ஒரு மாத சுற்றுப்பயணத்தின் போது அங்கே தமிழர் வாழ்ந்த பகுதியில் தமிழ் நூல்களே இல்லை என்பதை அறிந்து எனது சொந்த முயற்சியில் 10,000 தமிழ் நூல்களைத் திரட்டி கப்பலில் அனுப்பி வைத்தேன். எனது பெயர் பதிவோடு அந்நூல்களைப் ‘டோக்மென்ட்’ நகரில் தமிழர்கள் இப்போதும் பாதுகாத்து வருகிறார்கள். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்பதில் எனக்கு உறுதியான ஈடுபாடு உண்டு. அதில் மிகவும் கண்டிப்பு காட்டுவேன். திராவிடர் இயக்கத்தின் கொள்கையையும் தமிழ் உணர்வையும் எனது குடும்பத்தினர் பின்பற்றி வருவதால் அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார்கள். ஒரு நல்ல குடும்பமாக வாழ்கிறோம் திராவிட இயக்கக் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும்” என்று உணர்ச்சி மேலிட கூறினார் கவிக்கொண்டல்.

சந்திப்பு-தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்