நாலு பேரு நாலு விதமா பேசியது….9

இராமர் வெடி

நீங்க என்னப்பா எப்பவுமே ஊரோட ஒத்து வாழ மாட்டீங்கறீங்க? வருசம் பூராவும் இப்படி இருக்கறீங்கனா தீபாவளி அன்னிக்குமா? ஏன் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க மாட்டீங்கறீங்க? என்றபடி வந்தான் நண்பன் கொங்கு குலச் சிங்கம்.… பேச ஆரம்பிக்கும் முன் மறித்து இந்த சுற்றுப்புறச் சூழல் கெட்டுப் போகுது பறவைகள், விலங்குகளுக்கு தொந்தரவா இருக்குது, ஓசோனில் ஒட்டை விழுகுது, அப்படின்னு தேஞ்சு போன ரேக்காடு மாதி திரும்ப. திரும்ப பேசக் கூடாது…

crackers 323சரிடா, நானும் பட்டாசு வெடிக்கிறேன். அதுக்கு முன்னாடி சில சந்தேகங்கள் இருக்கு. தீர்த்து வை என்றவனிடம், ஓ ஆரம்பிச்சுட்டே கேளு சொல்றேன், தெரியலையின்னா வழக்கம் போல நீயே சொல்லிடு என்றான் கொ.கு.சி.

எதுக்கு தீபாவளி கொண்டாடுறீங்க என்ற கேள்விக்கு, இதெல்லாம் என்னடா கேள்வி? நரகாசூரன் அப்படிங்கற கொடிய அரக்கன் செத்துப் போன நாளில் நாமெல்லாம் வெடி வெடிச்சுக் கொண்டாடி மகிழ்கிறோம். அது மட்டுமில்லாமல் சிவகாசியில் உள்ள எத்தனை ஏழைத் தொழிலாளிகள் வீட்டில் அடுப்பெறியுது தெரியுமா?

ஓ...தெரியுமே, அடுப்பு மட்டுமில்லை, பட்டாசு விபத்துகளால் வீடே எரியுது...நீங்க வெடி வெடிக்கறதுக்கு ஏண்டா அவர்களின் ஏழ்மையைக் குறியீடா மாத்தறீங்க?… உடனடியா பதில் தந்தான் கொ.கு.சி. ஓ...அப்படின்னா உங்கள மாதிரி கருப்புச்சட்டைக்காரர்களுக்கு சிவகாசிப் பட்டாசு தொழிலாளிகள் பற்றிக் கவலையில்லை?

போன ஆண்டு நீங்கெல்லாம் போராடினீங்களே? அது என்ன போரட்டம் என்றேன் நண்பனிடம், அட இது தெரியாதா பூரண மதுவிலக்குக் கோரி போராடினாம்.… அப்படின்னா, மது ஆலைகளில் ஏழைத் தொழிலாளர்கள் வேலை செய்யலீங்களா ஆபிசர்? என்றேன்.…அடுத்ததா போன வாரம் ரங்கசாமி அய்யன் இறந்து போனப்ப, அவரு இறுதி ஊர்வலத்தில் பிணத்துக்கு முன்னாடி 1000 வாலா சரவெடி நீதானே வெடிச்ச? அப்ப அவரென்ன நரகாசூரனா?

பார்த்தியா ஆரம்பிச்சுட்ட… உங்கூடெல்லம் பேச முடியாது. நீ பட்டாசு வெடிப்பியா? மாட்டியா? உனக்கு நான் வாங்கித் தரேன், என்ன வெடி வேணும் கேளு என்றான்.…

சரிடா, நீ இவ்வளவு தூரம் சொல்றதாலே நண்பனுக்காக வெடிக்கிறேன்.… எனக்கு 2 பாக்கெட் இராமர் வெடி, கூடவே பத்த வைக்கறதுக்கு அனுமான் மார்க் தீப்பெட்டி வாங்கித்தாடா என்றேன்.…

உனக்கெல்லாம் கொழுப்புடா இராமர் எங்க சாமிடா என்றவனிடம், சரி இருக்கட்டும் இலட்சுமி யாரு அவங்க உங்க சாமியில்லையா? இலட்சுமி படத்தப் போட்டு அது தூள் தூளாகப் போகிற மாதிரி வெடி வைக்கற உங்களுக்கு இராமர் வெடி கேட்டால் மட்டும் மனசு புண்படுதா?

கருப்புச்சட்டை காரர்கள் சார்பில் கேட்கிறேன். அடுத்த வருசம் இராமர் வெடி தயாரிச்சு மார்கெட்டில் வையுங்க.…எப்படி வெடிக்கிறோமுன்னு மட்டும் பாருங்க. இந்தியா முழுக்கக் கேட்கும். எங்க வெடிக்கடைக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னவன் இன்னும் ஆளைக் காணோம்..

சீனா தானா அட்ரஸ் …..

சம்பளம், போனஸ் அப்படின்னு மண்டையைப் பிச்சுட்டுத் திரிகையில் வந்தது அந்த அழைப்பு. கலைக்குழு நாராயணனிடமிருந்து.… ஏங்கீங்க என்றவரிடம், வீட்டில் என்றவுடன் இதோ வந்தாச்சு என் பதிலுக்குக் கூடக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்து விட்டார். சரி ஏதோ முக்கியமான விசயம் போல என்றபடி காத்திருந்தேன். பத்து நிடங்களில் வந்து நின்றார். தேநீர் பருகிய படித் தொடர்ந்தார்.…

எனக்கு ஒரு அட்ரஸ் வேணுங்க. யாரு அட்ரஸ் என்ன விசயம் என்றேன். அன்னிக்கு உங்க வீட்டில் தான் வசூல் ராஜா படத்தோட சிடியை பார்த்தேன். அதனால் உங்கக் கிட்ட தான் கிடைக்குமுன்னு வந்தேன். யாருங்க கமலுதா, இல்லை சரண் முகவரியா என்றேன். அட இல்லீங்க நாராயணன் முடிக்கும் முன், அப்புறம் என்ன சினேகா முகவரியா என்றேன். அவசரப்படாதீங்க. எனக்கு சீனா தானா முகவரி தான் தேவை என்றார். இதென்ன புது ஏழரை என்றபடி நான் முழிக்க நாராயணன் தொடர்ந்தார்.

உங்கள மாதிரி படிப்புக் குறைவான ஆட்களுக்குத் தெளிவா சொல்லோனும், சீனா தானா என்ன சொல்லியிருக்குது தெரியுமா? அது தான் படிப்புக் குறைவு அப்படின்னு சொல்லியாச்சே அதையும் நீங்களே சொல்லிடுங்க என்றேன்.…

விரிவாக விளக்கினார் கலைக்குழு நாராயணன். அதாவதுங்க சீனா தானா என்ன சொல்லியிருக்குதுன்னா, “அர்த்தமில்லா வார்த்தைகளின் அர்த்தங்களை அறியணுமா...அதுக்கு இதுதாண்டா ஸ்கூலு”

ஆக ஆர்த்தமில்லாத வார்த்தை ஒண்ணு இருக்கு. அதுக்கு அர்த்தம் வேணும், சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்னைக் கட்டியது எனக்கு….

கொஞ்சம் புரிகிற மாதிரிச் சொல்லுங்க. தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் என்றேன். ஆமாங்க அப்படித்தான் ஆகிப்போச்சுங்க. மத்தியப்பிரதேசத்துல இருந்து சந்திரசேகர் கவுர் அப்படிங்கிறவர் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் என்னவென கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத் தகவல் உரிமை சட்டத்தில் கடிதம் எழுத, அதற்கு உள்துறை அமைச்சகம், “உங்கள் கடிதம் மத்திய பொதுத் தகவல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என எங்களுக்குத் தெரியவில்லை என பதிலளித்துள்ளது” என்றார்.

அப்படி என்னதான் வார்த்தைங்க அது? அதிர்ச்சியான பதில் வந்தது. இந்துக்களுக்காக போராட, வாதாட, பரிந்துபேச அமைப்புள்ள இந்த நாட்டில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அர்த்தம் தெரியாத அந்த வார்த்தை `இந்து’.... சீனாதானா நீ எங்கிருக்கிறாய்…..

நாலு ஜேசிபி வாங்கி நிறுத்தனும்

டீவியில போன வாரம் ‘நாயகன்’ படம் போட்டாலும் போட்டாங்க... வேலு நாயக்கர் ஸ்டைலில் “நாமும் நாலு ஜேசிபி வாங்கி நிறுத்தறோம்” என்று தொடந்து சொல்லிக் கொண்டிருந்தார் செங்கொடி சிவக்குமார். உங்க ஏரியா சந்து குறுகலா இருக்குது, அதனால் உள்ளே வரமுடியாது என கார்ப்பரேசன் ஆப்பரேட்டர் சொன்னாலும் சொன்னார், பொங்கி எழுந்து விட்டார்….

சரிங்க,… நீங்க உணர்ச்சி வசப்பட்டு சொல்றதெல்லாம் இருக்கட்டும்.. நம்ம சக்திக்கு இதெல்லாம் முடியமா? என ஏரியா பசங்க கேட்க, அடுத்த வாரம் மாரியம்மன் பண்டிகை வருது. அதுல குழந்தைகள் விளையாடுறது வேணுமுன்னா நாலு வாங்கி நிறுத்தலாம் என நாலு பேரு பேச,… நடப்பதை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார் செங்கொடி சிவக்குமார்.…

இப்ப மட்டும் வக்கணையாக் கேள்வி கேட்கத் தெரிஞ்சுதுல்ல? இதை அப்பவே கேட்டிருக்கணும். கண்னை மூடிட்டு இருந்துட்டு, இப்பக் கேட்டா? எனப் பீடிகை போட்டார். தெளிவாகச் சொல்லக் கேட்ட போது அவர் விளக்கினார்.… சொல்லி முடிக்கையில் பாதிப் பேரு எந்திருச்சுப் போயிட்டாங்க…

அப்படி அவர் சொன்ன விசயம் என்னனா? பாஜக ஆட்சிக்கு வந்தா வெளிநாட்டுல இருக்கிற கருப்புப்பணத்தை எல்லாம் மீட்டு வந்து ஒவ்வொருத்தர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக சொன்னார்களே? அதை எப்பப் போடப் போகிறீர்கள் என பிரதமர் அலுவலகத்திடம் மத்திய தகவல் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. சிங்கப்பூரில இருந்து பணம் வருது நாம இளநீ கடை போடுறோம்….. இதை மாத்த எவனாலும் முடியாது.…

இராமராஜனும் இராமராஜ்ஜியமும்

இந்த கருப்புச் சட்டைக்காரர்களுக்கு எப்பப் பார்த்தாலுல் இதே வேலை. பாஜக வை பிற்போக்குத்தனமான கட்சி என விமர்சனம் செய்வதே வேலையாப் போச்சு.… இராமராஜ்ஜியத்தைப் பற்றிப் பேசுனா, சீதையைச் சந்தேகப்பட்டு நெருப்பில் இறங்கச் சொன்ன இராமனின் செயல் நியாயமா என விவாதம் வைப்பாங்க.… அதனால் தான் பாஜக தமிழ்நாட்டில் அதிரடியாக ஒருவரைக் கட்சியில் சேர்த்தியுள்ளது.. அதுவும் இராமரையும் சேர்த்து தீயில் இறங்கச் சொன்னவரை...…

அட...அப்படியா என நீங்க ஆச்சரியப்பட வேண்டாம். அவர் யாரென்றால், “அதென்ன கற்பை நிருபிக்கப் பெண் மட்டும் தீயில் இறங்குவது? ஆணும் சேர்த்து இறங்க வேண்டும். அதாவது சீதை மட்டும் தீயில் இறங்கினால் அது புராணம். இராமனையும் சேர்த்து தீயில் இறக்கி புரட்சி செய்தவர் இப்ப தமிழக பாஜக வில். தன் கரகாட்டக்காரன் படத்தில் கனகாவோடு சேர்த்து இராமராஜனையும் தீயில் இறக்கிய அந்த புரட்சி இயக்குநர் கங்கை அமரனேயன்றி வேறு யார்?.....

ஒட்டிக்க கட்டிக்க

ஆச்சரியாமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது நடிகர் சிவக்குமாரின் அந்தப் பேச்சைக் கேட்டு, ஏற்கனவே கோவையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் அனைவரும் தமிழின் பெருமை பேசிப் பொங்கிக் கொண்டிருந்த வேளையில், பொட்டில் அடித்தாற் போல் கொங்குப் பகுதியில் நிலவும் தீண்டாமை வடிவமான இரட்டைக்குவளை பற்றி மேடையில் போட்டுடைத்தவர் அதன் தொடர்ச்சியாக,

நடிகர் சிவக்குமாருக்கு 75 வயதாகிறது. இதையொட்டி இன்று சென்னையில் அவர் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சிவக்குமார். அப்போது அவர்களிடையே சிவக்குமார் பேசுகையில் உற்சாகத்துடன் காதல் குறித்துப் பேசினார்.

“பல ஜோடிகளை சேர்ப்பதும் நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்), பிரிப்பதும் நீங்கள்தான் . என் பையனுக்குக் கூட நீங்கதான் கல்யாணம் பண்ணி வச்சீங்க (சூர்யா -ஜோதிகாவைச் சொல்கிறார்). கெமிஸ்ட்ரி நல்லாருக்கு, ஜோடிப் பொருத்தம் நல்லாருக்குன்னு எழுதுனீங்க. அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு இப்போ நல்லாருக்காங்க, சந்தோஷமா இருக்காங்க.

இன்னும் பத்து வருஷத்தில் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் அரேன்ஜ்ட் மேரேஜே இருக்காது. எல்லாமே காதல் கல்யாணமாதான் இருக்கும். தாராளமா காதல் கல்யாணம் பண்ணிக்குங்க. பண்ணிட்டு 40-50 வருஷம் சேர்ந்து வாழுங்க. அப்போதுதான் அது காதலுக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும். சேர்ந்து வாழ்வதைப் பொறுத்தே காதலும் வெற்றி அடையும். உங்கள் மூலமாக அனைவரையும், இளைஞர்களை கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து காதல் கல்யணம் பண்ணிக்கங்கப்பா. பண்ணிட்டு நல்லா இருங்கப்பா” என்று கூறினார் சிவக்குமார்.

சிவக்குமாரின் மகாபாரதம், இராமாயணச் சொற்பொழிவுகளைச் சிலாகித்துப் பேசும் கொங்கு மண்டலத்துப் பெருசுகள், இந்தப் பேச்சையும் கவனியுங்கள். சிந்தியுங்கள். ஊர் ஊராய்ப் போய் இராம்ராஜ் காட்டன் வேட்டிக்கடை திறக்கும் சிவக்குமார் சொல்கிறார். இராம்ராஜ் வேட்டியும் சொல்கிறது நாமும் சொல்கிறோம். இது கோடுஅடித்து கட்டும் காலமில்லை, வெல்குரோ காலம்.… ஒட்டிக்கோ கட்டிக்கோ.