இந்துமத வேதங்களுக்குக்கும், சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும் எதிரானவை என்று கூறப்படும் நாட்டார் தெய்வக் கோவில்களில் இன்றும் தாழ்த்தப்பட்டோர் வழிபடுவதற்கு உரிமை இல்லை. ஆரிய ஆகமங்களுக்கு எதிரானவை என்று புனிதப் படுத்தப்படும் இந்த நாட்டார் சிறுதெய்வக் கோவில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகப் பல வகையான தீண்டாமைக்கொடுமைகள் கடைபிடிக்கப் படுகின்றன. அவை கடவுளின் வாக்காகக் காலங்காலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளன. தாழ்த்தப் பட்டோரும் அந்த அடிமைப் பண்பாடுகளை கடவுளின் வாக்காகவே பின்பற்றி வருகின்றனர்.

நிறுவனமயப்படுத்தப்பட்ட பெரிய கோவில்கள் வர்ண தர்மத்தையும், மனுநீதியையும் நிலை நிறுத்தவும் - மக்களுக்கு அவற்றை பயிற்றுவிக்கவும் ஒரு களமாக இயங்கு கின்றன. நாட்டார் தெய்வங்களும், சிறு தெய்வங்களும், கிராமப் பொதுத்(?)தெய்வங்களும் அதே பணியைத்தான் செய்கின்றன.  பார்ப்பனக் கடவுள்கள், பார்ப்பனரல்லாத தெய்வங்கள் இரண்டு வகையின் நோக்கங்களும் இலக்குகளும் இந்துராஷ்ட்ரம் ஒன்றேதான்.  

திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் எங்கள் சக்திக்கு உட்பட்டு நாங்கள் நடத்திய கள ஆய்வில் கிடைத்த தகவல்கள் இவை.  இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் உள்ள அனைத்துப் பொதுக்கோவில்கள், நாட்டார் தெய்வக் கோவில்கள், சிறுதெய்வக்கோவில்கள் என்று அழைக்கப்படும் அனைத்திற்கும் ஒரு பொதுவான பண்பாடு உள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை வழிபட அனுமதிக்காதது - தாழ்த்தப் பட்டவர்களைக் கோவில்களில் அடிமைப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது.

ஆரியப் பார்ப்பனர்களுக்கு எதிரான வழிபாட்டுமுறை என்று சில அறிவுஜீவிகளால் முன்னெடுக்கப்படும் இந்த நாட்டார் தெய்வ வழிபாட்டில் தீண்டாமை, பார்ப்பனீய நடைமுறைகள், பார்ப்பன ஆதிக்கம் இவையெல்லாம் இந்தக் களஆய்வு நடத்தப்பட்ட திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மட்டும் தான் உள்ளது என்று எவரும் கருதிவிட வேண்டாம். தமிழ்நாட்டின் அனைத்துக் கிராமங்களிலும் இவை ஆழமாக ஊடுருவியுள்ளன.

மிக மிகக் கேவலமான ஒரு தகவல் என்னவென்றால், தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக நன்கு வளர்ச்சி பெற்றுள்ளவை கோவை, திருப்பூர் மாநகரங்கள். அந்த மாநகரங்களுக்கு உள்ளேயே இருக்கும் நாட்டார், சிறுதெய்வக் கோவில்களில்கூட கடுமையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின்றன.

நாங்கள் பட்டியலிட்டுள்ள சில கோவில்கள் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களாகும். எந்த அரசானாலும், எந்தத் தெய்வமானாலும் அவை பார்ப்பனத்துறையின் ஆதிக்கத்திலேதான் இருந்தன. இருக்கின்றன என்பதை எமது களஆய்வு உறுதிப்படுத்துகிறது. மறுப்பவர்கள் மேற்கண்ட கோவில்களுக்கு நேரில் வந்து பார்க்கலாம். 

1. கரடிவாவி மாரியம்மன் கோவில்

கோவில் பூச்சாட்டு விழாவில் அருந்ததிய இளைஞர்களைக் கொட்டடிக்கும் சம்பிரதாயத்தில் ஈடுபடுத்துகின்றனர். மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியில் காலையில் கவுண்டர் சமூகத்தினரும், மதியம் அருந்ததிய சமூகத்தினரும் எடுக்க வேண்டும் என்பது ஊர்க் கட்டுப்பாடு.

கோவிலின் உள்ளே சென்று வழிபட கவுண்டர் சமூகத்தினருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் அனுமதி உண்டு. ஆனால் அருந்ததிய சமூகத்தினருக்கு உள்ளே சென்று வழிபட அனுமதி இல்லை. கோவில் கொடி கம்பம் தாண்டிச் செல்ல அனுமதி இல்லை. அங்கேயே நின்று வழிபட வேண்டும். அருந்ததிய சமுகத்திற்கு வரி என்பது கட்டாயமில்லை.

2. சித்தநாயக்கன்பாளையம்  மாகாளியம்மன் கோவில்

ஊர்ப்பொதுக் கோவிலாக மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை ஐந்து கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் வணங்குகின்றனர். அவை. சித்தநாயக்கன் பாளையம், செலக்கரிச்சல், இலட்சுமண நாயக்கன்பாளையம், வீரனப்பூசாரி பாளையம், திம்மநாயக்கன் பாளையம் ஆகியவை ஆகும்.

நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் தலைமுறை தலைமுறையாக நிர்வாகம் நடந்து வருகிறது. இக்கோவிலில் அருந்ததிய சமூகமக்கள் கோவில் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்வது, செடிகளை வெட்டுவது, தூய்மை செய்வது போன்ற வேலைகளைச் செய்து வருகின்றனர். இக்கோவிலில் வைகாசி மாதம் தேர் இழுக்கும் திருவிழா நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் அனைத்து சாதியினரும் கலந்து கொண்டு தேர் இழுக்கலாம். அந்தத் தேர் அங்கு வாழும் உயர் சாதியினர் பகுதிகளுக்கு மட்டும் இழுத்துச் செல்லப்படும். அருந்ததிய சமூகம் வாழும் பகுதிக்குத் தேர் வராது. கோவிலுக்குள் அருந்ததியச் சமூகத்தினரைத் தவிர அனைத்து சாதியனரும் உள்ளே சென்று வழிபடலாம். அருந்ததியச் சமூகத்திற்கு மட்டும் அனுமதி இல்லை.

மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியில் மாவிளக்கை கோவிலுக்கு வெளியே வைத்துத்தான் வழிபட்டுக் கொள்ள வேண்டும் என்பது கட்டுப்பாடாக உள்ளது. அருந்ததியச் சமூகத்திடம் வரி கேட்பதும் இல்லை, வரி வாங்குவதும் இல்லை. அருந்ததியச் சமூகமே கொட்டடிக்க வேண்டும் அதற்கு ஊதியம் எதுவும் இல்லை. அவர்கள் விருப்பப்பட்டுக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளவேண்டும்.

3. அய்யம்பாளையம் (கரடிவாவி) மாரியம்மன் கோவில்

இங்கு உள்ள மாரியம்மன் கோவில் அனைத்துச் சாதியினரும் வழிபடும் கோவிலாக உள்ளது. ஆனால் அது சிலகுறிப்பிட்ட கட்டுப்பாடுகளையும், பழக்க வழக்கங் களையும் கொண்டுள்ளது. அது இன்றளவும் நடைமுறையிலும் உள்ளது. பறையடிக்க பறையர் சமூகத்தினரையும், தீப்பந்தம் எடுக்க வண்ணான் சமூகத்தினரையும், சடங்குகள் செய்யப் பயன்படுத்துகின்றனர். அனைத்துச் சாதியினரும் கோவிலுக்குள்ளே செல்லலாம் வழிபடலாம். ஆனால் அருந்ததிய சமூகத்தினருக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தாண்டி அதாவது கோவில் கம்பத்தைத் தாண்டி மாவிளக்கு எடுத்துச் செல்லக்கூடாது.

2002 ஆம் ஆண்டு நடந்த திருவிழாவில் மாவிளக்கு எடுத்துக்கொண்டு அருந்ததிய சமூகத்தினர் சென்றனர். ஆனால் அவர்கள் அந்தக் குறிப்பிட்ட இடத்தைத் தாண்டி மாவிளக்கு எடுத்துச் செல்ல முயலும்போது  அருந்ததிய சமூகத்தினருக்கும், கவுண்டர் சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இரு பிரிவினருக்கிடையே பெரிய கலவரம் ஏற்பட்டது. அங்கு வாழும் அருந்ததிய மக்கள் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் கவுண்டர் சமுகத்தினரையே நம்பியிருந்தனர்.

மேலும் பலர் பண்ணை வேலைக்கோ இதர வேலைகளுக்கோ கவுண்டர் சமூகத்தினரிடமே செல்ல வேண்டி இருந்தது. அச்சமயத்தில் அவர்களிடம் வேலைக்குச் செல்வதை நிறுத்தி விட்டார்கள். அதனால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் பெரியார் இயக்கங்களும், அம்பேத்கர் இயக்கங்களும் மற்றும் பல அமைப்புகளும் நிதி திரட்டி ஊர் மக்களுக்கு உதவினர்.

இந்த சம்பவத்தை அடுத்து அருந்ததிய சமூக மக்கள் கொட்டடிப்பதை நிறுத்திவிட்டனர். அதனால் பக்கத்து ஊர்களில் இருந்து கொட்டடிக்க அருந்ததிய சமூக மக்களை வரவழைத்துக் கொட்டடிக்க வைக்கின்றனர். இப்பொழுது அவர்களே (பிற்படுத்தப்பட்ட சமூகம்) இன்றும் அடித்து வருகின்றனர். இறப்புச் செய்தி சொல்வது இறப்பு வீடுகளில் அனைத்து வேலைகளைச் செய்வது போன்றவற்றை நிறுத்திவிட்டனர்.

கவுண்டர் சமூகத்தவர்கள் இறந்தால் குழி தோண்டும் வேலையைக் காலம் காலமாக அவர்கள் சமூகத்தை சார்ந்தவர்களே குழிதோண்டிப் புதைத்துக் கொள்வார்கள் என்று அந்த ஊரைச் சார்ந்த முதியவர் கூறுகிறார். இன்றும் அருந்ததிய சமூக மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அம்மக்களும் அக்கோவிலுக்குச் செல்லுவதில்லை.

4. பொன்நகர் தேவாத்தாள் கோவில் - அல்லாலபுரம்- திருப்பூர்

தேவாத்தாள் கோவில் அந்த ஊரின் பொதுக்கோவிலாக உள்ளது. இந்தக் கோவில் கவுண்டர் சமூகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் திருவிழாவில் முதல்நாள் கவுண்டர் சமூகத்தினரும் அடுத்த நாள் அருந்ததிய சமூகத்தினர் மாவிளக்கு எடுக்க வேண்டும் என்று கோவில் கட்டுபாடாக உள்ளது. மேலும் அருந்ததிய சமூகத்தினர் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.

அது மட்டுமில்லாமல் வீட்டுக்கொருவர் கட்டாயம் கொட்டடிக்கவேண்டும். அதை மீறினால் அவர் எச்சரிக்கப்படுவார். வரி போன்றவை அருந்ததிய சமூகத்தினருக்குக் கட்டாயம் இல்லை. அங்கு வாழும் அருந்ததிய மக்கள் அவர்கள் பிள்ளைகளிடம் கவுண்டர் சமூகத்தினரை எதிர்க்கக்கூடாது என்றும் நம்க்கு விதிக்கப்பட்டுள்ள கோவிலின் விதிகளை மீறக்கூடாது என்றும் சொல்லி வளர்க்கின்றனர்.

மஞ்சள் நீராட்டு விழாவில் அந்தந்த சாதியினர் அந்தந்த சாதியினருக்குள்ளேயே விளையாடிக் கொள்ள  வேண்டும். வேறு எந்த சாதியினருக்குடனும் விளையாட மாட்டார்கள். இந்த வருடம் 2017 மே மாதம் 11 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைக் காண தெற்குப்பாளையத்தைச் சேர்ந்த அருந்ததிய சமூக இளைஞர்கள் 10 பேர் சென்றனர். நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் காரின் மீது சாய்ந்து கொண்டு, அருந்ததிய சமூக இளைஞர் ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட காரின் உரிமையாளரான கவுண்டர் சமூகத்தை சார்ந்தவர் அந்த இளைஞரைத் தாக்கியுள்ளார். இதன் காரணமாக அங்கு மோதல் ஏற்பட்டது.

தாக்கப்பட்ட அருந்ததிய சமூக இளைஞர்கள் பல்லடம் காவல் நிலையத்தில் வன்கொடுமை பிரிவில் வழக்குக் கொடுத்தனர். ஆனால் கவுண்டர் சமூகத்திற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளர் குண்டு பரமசிவம் என்பவர் வந்தார். பேச்சுவார்த்தை என்ற பெயரால் அருந்ததியர்களை மிரட்டி, வழக்கைத் திரும்பப்பெறச்செய்தார்.

5.செங்கத்துறை மாரியம்மன் கோவில் (சூலூர்)

இங்கு அருந்ததியர் சமூகத்திற்கான மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலின் ஒரு நிகழ்ச்சியாக மாரியம்மனை நீராட நொய்யல் ஆற்றுக்கு எடுத்துச் செல்வார்கள். அவ்வழியில் ஓதாளக் கவுண்டர் என்ற சமூகத்தினரின் குலதெய்வக்கோயில் ஒன்று உள்ளது. சென்ற ஆண்டு அக்கோவிலைச் சுற்றி கம்பிவேலியை அமைத்துவிட்டனர் அச்சமூகத்தினர். அதனால் மாரியம்மனை அவ்வழியில் எடுத்துச் செல்ல முடியவில்லை.

அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு சாமிவந்து (அருள்வந்து) மாரியம்மனை ஆற்றுக்கு எடுத்துச் செல்லத் தடையாக இருந்த அந்த கம்பிவேலியை பெயர்த்து வீசி சென்றுள்ளார். அதன் காரணமாக அவ்வூரில் 2017 மே 10, 11, 12 ஆகிய தேதியில் கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க காவலர்களைப் பாதுகாப்பிற்காகப் போடப்பட்டனர். மேலும் அவ்வூரில் பொதுக்கோவிலில் அருந்ததிய சமூகத்தினர் உள்ளே செல்லக்கூடாது.

அக்கோவில் கவுண்டர் சமூகத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அருந்ததிய சமூக மக்கள் தொழில் ரீதியாக அங்குள்ள கவுண்டர் சமூகத்தினரையே நம்பியுள்ளனர். அருந்ததிய சமூகத்திற்கான மாரியம்மன் கோவிலின் வரி மற்றும் செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்கின்றனர்.

6. தெற்குப்பாளையம் மாரியம்மன் கோவில் (பல்லடம்)

அந்த ஊர் மாரியம்மன் கோவிலை ஆறு ஊர்களைச் சார்ந்த பொதுமக்கள் வணங்குகின்றனர். அவை, மாணிக்காபுரம், இராசக்கவுண்டம்பாளையம், கல்லம்பாளையம், நாரணாபுரம், அம்மாபாளையம், தெற்குப்பாளையம்

கோவிலின் நிர்வாகம் கவுண்டர் சமூகத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. 13 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் 2017 வைகாசி மாதம் திரும்ப நடைபெற்றது. அவ்வூரில் திருவிழாவில் 13 வருடங்களுக்கு முன்பு பந்தம் எடுப்பதற்கு வண்ணார் சமூகத்தையும், கொட்டடிக்க அருந்ததிய சமூகத்தையும், சடங்குகளைச் செய்ய பயன்படுத்தினர்.

பொங்கல் வைப்பது, மாவிளக்கு எடுப்பது போன்ற நிகழ்ச்சியை முதல் நாள் கவுண்டர் சமூகத்தினர் செய்வார்கள். அடுத்தநாள்தான் அருந்ததிய சமூகத்தினர் பொங்கல் வைப்பது, மாவிளக்கு எடுப்பது போன்ற நிகழ்ச்சிகளைச் செய்து வந்தனர். ஆனால் இந்த வருடம் நடைபெற்ற விழாவில் அருந்ததிய சமூகத்தினரைப் பொங்கல் வைக்க வேண்டாம் என்றும் மாவிளக்கு எடுக்க வேண்டாம் என்றும் கவுண்டர் சமூகத்தினர் உத்தரவிட்டனர். சாமி கும்பிடச் சென்றாலும் கம்பத்தின் அருகே நின்றுதான் கும்பிடவேண்டும். உள்ளே சென்று கும்பிடக்கூடாது என்ற கட்டுப்பாட்டையும் விதித்தனர். எனவே அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த பாதிப்பேர் கோவிலுக்குச் செல்லவில்லை. திருவிழாவில் பங்கேற்கவில்லை.

7.ப.வடுகபாளையம் (பல்லடம்)

இந்த ஊரில் 3 கோவில்கள் உள்ளன.

1.மாகாளியம்மன் கோவில் உள்ளது.அது நாயக்கர் சமூகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

2.முனீஸ்வரன் கோவில் இது இந்த ஊரின் பொதுக்கோவிலாக உள்ளது. அது போயர் சமூகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

3.அண்ணமார் கோவில் இது அருந்ததிய சமூகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

8.மாகாளி அம்மன் கோவில்

மாகாளியம்மன் கோவில் அனைத்து சாதியினரும் சென்று வழிபட அனுமதி உள்ளது. ஆனால் அருந்ததிய சமூகத்தினருக்கு மட்டும் அனுமதி இல்லை. 30 வருடங்களுக்கு முன்னாள் பஞ்சாயத்துத் தொலைக்காட்சி இருந்தது. அப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைக் காண அருந்ததிய சமூகத்திற்கு அப்பொழுது அனுமதி இருந்தது. அந்த்த் தொலைக்காட்சியை எடுத்த பிறகு மெதுவாக பிற்காலத்தில் அனுமதியும், உரிமைகளும் மறுக்கப்பட்டது.

அந்தக் கோவில் நாயக்கர் சமூகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. கோவில் உள்ளே அனுமதிக்காத காரணத்தால் அருந்ததிய சமூக மக்கள் அக்கோவிலுக்குச் சென்று வழிபடுவதை நிறுத்திவிட்டனர்.

9.முனீஸ்வரன் கோவில்

போயர் சமூகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோவில் அனைத்து வகையான சாதியினருக்கும் பொதுக்கோவிலாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கோவிலில் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் பன்றி குத்துதல், கிடா வெட்டுதல், கோழி அறுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். பறையர் சமூகத்தினரே கொட்டடிக்கின்றனர். கோவிலுக்குப் பன்றிகளை நேந்துவிடுவது, ஒரு குறிப்பிட்ட சில சாதிகள் மட்டும் நேர்ந்துவிடுவார். கவுண்டர், நாயக்கர் போன்ற சாதியினர் கோவிலுக்கு நேர்ந்து விடுவதில்லை.

கோவிலுக்கு நேர்ந்துவிடும் பன்றிகளை வளர்ப்பதும், நேர்ந்துவிடுவதும் போயர், அருந்ததியர், குறவர் போன்ற சாதியினர்களே. பன்றிகளைக் குத்தும் பூசாரி போயர் சமூகத்தைச் சார்ந்தவரே. கொல்லப்பட்ட பன்றிகளைச் சுத்தம் செய்வதும், கறியை விற்பனை செய்வதும் குறவர் சாதியினரே ஆவார்.

மஞ்சள்நீராட்டு விழாவில் அந்தந்த சாதியினருக்குள்ளேயே விளையாடிக்கொள்ள வேண்டும். மஞ்சள்நீராட்டு விழாவில் ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி போயர் சமூகத்தின் பகுதியிலே நடைபெறும். இந்தக் கோவிலின் வரியும், நிர்வாகமும் போயர் சமூகத்தினரே செய்து வருகின்றனர்.

10.அண்ணமார் கோவில்

இக்கோவில் நிர்வாகம் கட்டுப்பாடு அருந்ததிய சமூகத்தினரிடையே தான் உள்ளது. அருந்ததிய சமூகத்தைத் தவிர வேறு எந்த சாதியினரும் வழிபட வருவதில்லை. இக்கோவில் பூசாரி அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த ஒருவர் தான் உள்ளார். அவர்களின் வாரிசே அடுத்து பூசாரியாக நியமிக்கப் படுவார்கள்.

கோவில் நிதி பெரிய வசதி உடைய சாதியினரிடம் பெற்றுக்கொள்வார்கள். கோவில் வரியை அருந்ததிய சமூகத்தினர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை கட்டாயம் கொடுக்க வேண்டும். இந்த வரிப்பணத்தில்தான் கோவிலுக்கான பன்றிகளும் மற்றும் ஆடுகளும் வாங்குவார்கள். அந்த பன்றியை அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த ஒருவர்தான் குத்துவார். அதேபோல் ஆடுகளையும் நியமிக்கப்பட்ட பூசாரி ஒருவர்தான் வெட்டுவார். கொல்லப்பட்ட பன்றிகளைச் சுத்தம் செய்து பல கூறுகளாகப் பிரித்து வைப்பார்கள். இக்கூறுகள் வரி கொடுத்தவ்ர்களின் வீடுகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

கொல்லப்பட்ட பன்றிகளை சுத்தம் செய்வதும், விற்பனை செய்வதும் குறவர் சாதியினர் ஆவார்கள். கடவுள் சிலைகளை மண்பாண்டங்கள் செய்யும் குயவர் சமூகத்தினரிடம் வாங்கி வருவார்கள். மற்ற கோவில்களைப்போல பறை அடிக்க ஒரு சாதி, பந்தம் பிடிக்க ஒரு சாதி இல்லை. கொட்டடிப்பதும், பந்தம் பிடிப்பதும் அருந்ததிய சமூகத்தினரே செய்து கொள்வார்கள். இவ்விழாவை அருந்ததிய சமூகத்தினர் மட்டுமே கொண்டாடுவார்கள் வேறு எந்த சாதியினரும் கொண்டாடுவதில்லை.

மேற்கூறிய அனைத்துக் கோவில்களிலும் திருவிழாவிற்கான தேதி குறிப்பதும், நல்ல நேரம் பார்ப்பதும், குடமுழுக்கு செய்வதற்கு ஐயரிடமே (பார்ப்பனர்) செல்கின்றனர்கள். ஐயரிடம் (பார்ப்பனர்) கேட்காமல் எந்த நிகழ்ச்சியும் கோவில்களில் செய்வதில்லை. ஐயரிடம் (பார்ப்பனர்) கேட்காமல் எந்த விழாவும் யாரும் செய்யமாட்டார்கள்.

தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காத நாட்டார் தெய்வ, சிறுதெய்வக் கோவில்கள்

பல்லடம் வட்டம்

1.சுக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில்

இந்தக் கோவிலில் உள்ள மேலும் சில தீண்டாமை வகை:

மதுவிற்காகத் தாழ்த்தப்பட்டோர்களைப் பறை அடிக்கச் சொல்லுதல்.

கோயிலுக்கு வெளியே உள்ள திண்ணையில் பிற்படுத்தப்பட்ட(கவுண்டர்) சமூகத்தினர் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்தல். தாழ்த்தப்பட்டோர்கள் நின்ற படியோ, கீழே உட்கார்ந்தப் படியோ (பந்தலுக்கு வெளியே) தான் பார்க்க வேண்டும்.

தேர், மாவிளக்கு இரு பகுதிகளில் இருந்தும் எடுத்து வருவார்கள். அது தலித்துகள் மட்டும் வெளியே நின்று கும்பிட்டு செல்ல வேண்டும். இதுபோன்று பல தீண்டாமைக் கொடுமைகள் உள்ளன.

தமிழர் திருநாளான தைத்திருநாளில் அனைத்து சாதியினரும் ஒன்றாக சென்று பூப்பறிக்கும் விழாவில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பதில்லை.

2. செம்மிபாளையம் மாரியம்மன் கோவில்

3. இலட்சுமி மில்ஸ் (கே.என். புரம்), மாரியம்மன் கோவில்

4. சாமிக்கவுண்டன்பாளையம் மாரியம்மன் கோவில்

5. கோடங்கிபாளையம் மாரியம்மன் கோவில்

6. கல்லம்பாளையம் முனியப்பன் கோவில்

பொங்கலூர் வட்டம்

7. பொங்கலூர் கண்டியம்மன் கோவில்

திருப்பூர் மாநகரம்

8. கரியகாளியம்மன் கோயில், 15 வேலம்பாளையம்

இந்தக் கோவிலில் உள்ள மேலும் சில தீண்டாமை வகை:

மத்தளம், மைக் செட், பந்தம் வைத்தல் ,தனியாக உட்காரவைத்தல் போன்றவை.  

9. சிறுபூலுவப்பட்டி பட்டதரசி அம்மன் (அம்மன் கலையரங்கம்)

10. சிறுபூலுவப்பட்டி விநாயகர் கோவில்

11. காவிரிபாளையம் மாரியம்மன் கோவில்

12. சாமுண்டிபுரம் மாரியம்மன் கோவில்

13. அணைப்பாளையம் மாகாளியம்மன் கோவில் (கொங்கு கலையரங்கம்)

14. வளையங்காடு, மாகாளியம்மன் கோவில்

15. மாஸ்கோ நகர் மாரியம்மன் கோவில்

16. மரக்கடை விநாயகர் கோவில்

17. டி.என்.மேட்டுப்பாளையம் வெக்காளியம்மன் கோவில்

18. குமாரசாமி நகர் மாரியம்மன் கோவில்

19. தாராபுரம் ரோடு, உஷா தியேட்டர் அருகிலுள்ள கோட்டை மாரியம்மன் கோவில்

20. இடுவாய் பாரதிபுரம் கோட்டைமாரியம்மன் கோவில்

21. இடுவாய் பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் கோவில்

22. இடுவம்பாளையம் காமாட்சியம்மன் கோவில்

உடுமலை வட்டம், குடிமங்கலம்  ஒன்றியம்

23. கொட்டையம்பாளையம் மாரியம்மன் கோவில்

கோவை மாநகராட்சி

24. அவிநாசி மெயின் ரோடு, ஏ.ஜி.புதூர், மாரியம்மன் கோவில்

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி:

25. காமாட்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்

இந்தக்கோவில் தேவர் சமூகத்தினர் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு 4 வருடத்திற்கு முன்பு வந்தது. இப்போது அர்ச்சகரால் கோவில் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு வந்தும் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே சென்று வணங்க அனுமதியில்லை. மற்ற அனைத்து சமூகத்தினரும் வணங்குகிறார்கள்.

கோவை மாவட்டம், சூலூர் வட்டம்

26. இராவத்தூர் மாரியம்மன் கோவில்

12 ஆண்டுகளுக்கு இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற கோவில். இந்தக் கோவிலுக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அனைவரும் வணங்கலாம் என்ற உத்தரவு இருந்தும் அவர்கள் உள்ளே சென்று வணங்குவதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம், காலம்காலமாக வெளியே நின்று வணங்கிப் பழகி விட்டோம். உள்ளே சென்று வணங்க, அச்சமாக இருக்கிறது.

27. கண்ணம்பாளையம் கண்ணமையம்மன் கோவில்,

28. கண்ணம்பாளையம் மாகாளியம்மன் கோவில்.

இரண்டு கோவில்களும் ஊர்க்கவுண்டர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. கண்ணமையம்மன் கோவிலில் உள்ளே சென்று வணங்க அனுமதியில்லை. மாகாளியம்மன் கோயில் வருடாவருடம் ஆடிமாதத்தில் தேர்த்திருவிழா ஊர்பவனி வரும். இதில் தாழ்த்தப் பட்டவர்கள் தேர் இழுக்க அனுமதியில்லை.

29 சூலூர் - அரசூர் சாலையில் உள்ள முத்துகவுண்டன்புதூர் அங்காத்தாள் கோவில்

சுத்துப்பட்டி ஆறுகிராம மக்களுக்கான கோவிலாக வணங்கப்பட்டு வரும் இக்கோவிலில் ஆறுகிராம தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்கு உள்ளே சென்று வணங்க அனுமதியில்லை. இந்த கோவிலுக்கு அருகில் சுவாமி விவேகானந்த பவுண்டேஷன் என்ற பெயரில் ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக வருடாவருடம் 1008  விளக்கு பூஜை விவேகானந்த பவுண்டேஷன் சார்பாக நடத்தப்படுகிறது. இதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல் தீக்குண்ட வழிபாடும் வருடாவருடம் நடக்கும். இதில் பிற்படுத்தப்பட்டோர் முதலில் இறங்க வேண்டும். பிறகு தான் இதர சாதியினர் இறங்க வேண்டும். 

- பல்லடம் தீபா, நாராயணமூர்த்தி, வடிவேல், விமல்ராஜ், மதன், திருப்பூர் பிரசாத், கிருஸ்ணவேணி