உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத் திற்குத் தலைமையேற்று நடத்திய ஒரே பெண்மணி அன்னை மணியம்மையாரே! உலக மகளிர் நாள் கொண்டாடப்படுகிற மார்ச் மாதத்தில் அவரை நினைவு கூர வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

periyar and maniammaiஅம்மா அவர்கள் 1920 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் திரு.கனகசபை மற்றும் பத்மாவதி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காந்திமதி. பள்ளி இறுதி வகுப்பு வரை (SSLC) படித்த அம்மா அவர்கள் தேர்வு நேரத்தில் உடல்நலக் குறைவால் தேர்வு எழுதவில்லை. வட ஆர்க்காடு மாவட்டம் வேலூரில் செல்வக் குடும்பத்தில் பிறந்த அவரைப் பெரியாரின் தன்மான இயக்கம் மாணவப் பருவத்திலேயே ஈர்த்தது. அவரது தந்தையார் திரு.கனகசபை அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் அணுக்கத் தொண்டர். அய்யா வேலூருக்கு வந்தால் அவர்களது இல்லத்தில் தான் தங்குவார். அய்யாவின் கொள்கை ஈர்ப்பினால் அய்யாவுக்குத் தொண்டு செய்து அதன் மூலம் இயக்கப் பணியும் செய்ய விரும்பினார்.

எனவே, அவரது தந்தையார் 15.05.1943-இல் மறைந்த பின், அதே ஆண்டில் செப்டம்பர் 11-ஆம் நாள் அய்யாவிடம் தொண்டராக வந்து சேர்கிறார். அய்யா அவர் கல்வி கற்று அறிவுத் தேர்ச்சி பெறட்டும் என்று குலசேகரப்பட்டினம் தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பு படிக்க வைத்தார். உடல்நலக் குறைவால் அந்தத் தேர்வையும் அவரால் எழுத முடியவில்லை. அதோடு அவரது கல்வி வாழ்க்கை முடிந்துவிட்டது.

அம்மாவின் தொண்டு

1945ஆம் ஆண்டிலிருந்து பெரியார் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிப் பேரவதிப்பட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அயராது தொண்டாற்றிய பெரியாரை அவரது உடலைக் கெடுப்பவை உணவு பழக்கங்கள் தான் என்று கண்டு, மருத்துவரின் அறிவுரைப்படி அவற்றை அய்யா சாப்பிடாதவாறு கண்டிப்பாகத் தடுத்து வந்தார் அம்மா.

குழந்தையைப் போல் கழகத் தோழர்கள் அன்போடு கொடுப்பதை மறுக்காமல் சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்படும் பெரியாரைத் தீவிரமாகக் கண்காணித்துப் பேணினார். சரியான உணவு எது? உடலுக்கு நன்மை செய்யும் உணவு எது? என்று பார்த்து பார்த்து ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல முப்பது ஆண்டுகள் அய்யாவுக்கு செவிலியராகவும், கொள்கைக்காரராகவும் வாழ்ந்த தியாக வாழ்வு அவருடையது.

அம்மாவின் தொண்டினால் கூடுதலாக முப்பது ஆண்டுகள் அய்யா வாழ்ந்து மக்கள் சாதி, ஏற்றத்தாழ்வின்றி சமத்துவத்துடன் வாழவும், அதிலும் குறிப்பாக பெண்கள் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு, ஆணுக்குச் சமமாக வாழவும், தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடிந்தது. அம்மா பற்றி அய்யா விடுதலையில், 15.10.1962 அன்று,

“மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்குத் தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையாய் இல்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லையில்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்”

என்று எழுதுகிறார். அது மட்டுமல்ல அய்யாவின் திருமணத்தைக் காரணம் காட்டிப் பிரிந்து தனிக் கழகம் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரான பிறகு ஒரு நாள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம், “அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி தொடர்ந்து இருந்தது. மணியம்மையாரின் பத்திய உணவுப் பாதுகாப்பு தான் அய்யாவை அதிலிருந்து விடுவித்தது. அது மட்டுமல்ல, அய்யா அவர்கள் இவ்வளவு நாள் நம்மோடு வாழவும் வைத்திருக்கிறது” என்று கூறுகிறார். இவ்வாறு அண்ணா அவர்களே மனம் திறந்து கூறுகிறார் என்றால் அம்மாவின் தொண்டுக்கு வேறு சான்று தேவையில்லை.

அய்யாவைக் கவனித்துக் கொள்வது மட்டுமே தனது தொண்டாக அம்மா நினைக்கவில்லை. தாயற்ற சேய்களுக்குத் தாயாக விளங்கினார். அனாதைகள் என்று யாரும் இருக்கக் கூடாது என்ற உணர்வுடன் மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தைகளைக் கூட எடுத்து வளர்த்து ஆளாக் கினார்.

போராளி மணியம்மையார்

அய்யாவின் உடல்நிலையைக் கவனித்துக் கொண்டு அதோடு தனது பணி முடிந்தது என்று அம்மா நினைக்கவில்லை. இயக்கப் பணிகளில் அய்யாவிற்கு உறுதுணையாக இருந்தார். அதில் சட்ட எரிப்புப் போராட்டத்தின் போது, அம்மா தலைமையில் நடந்த கிளர்ச்சி மற்றும் அம்மா தலைமையில் நடைபெற்ற இராவண லீலா ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சாதி ஒழிப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தந்தை பெரியாரின் கட்டளையை ஏற்று கழகத் தொண்டர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் சாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளைக் கொளுத்திச் சிறை சென்றனர். சட்ட நகல்களைக் கொளுத்திய தற்காக ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் என மூவாயிரம் பேர் வரை சிறை சென்றனர். அய்யாவும் கைதாகி சிறையிலிருந்தார். மணியம்மையார் அவர்களே வெளியிலிருந்து கழகத்தின் பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என அய்யா அறிவித்தார்.

அப்போது சட்ட எரிப்புப் போராட்டத்தில் கைதான தோழர்கள் பட்டுக்கோட்டை இராமசாமி மற்றும் மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் சிறை அதிகாரிகளின் கொடுமைக்கு ஆளாகி திருச்சி சிறையில் மாண்டனர். அவர்களில் வெள்ளைச்சாமி யின் சடலத்தைத் தர சம்மதித்த சிறை அதிகாரிகள் இராமசாமியின் சடலத்தைத் தர மறுத்தனர். சிறை அதிகாரிகளைச் சந்தித்துக் கேட்டும் சடலத்தைத் தர மறுத்தனர்.

அந்த நேரத்தில் மணியம்மையார் சென்னை சென்று முதலமைச்சர் காமராசர் அவர்களைச் சந்தித்துத் தேவையான கட்டளைகளைச் சிறை அதிகாரிகளுக்குப் பிறப்பிக்குமாறு செய்த பிறகே உடல்களைப் பெற முடிந்தது. தோழர்களின் உடல் திருச்சி பெரியார் மாளிகையில் மக்கள் மரியாதை செலுத்தும் வகையில் பார்வைக்கு வைக்கப்பட்டது. மக்கள் மாளிகை முன் அலை அலையாகச் சேர்ந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போய் விடுமோ என்று அஞ்சி, அருகிலுள்ள இடுகாட்டி லேயே அடக்கம் செய்யுமாறு காவல் துறையினர் வற்புறுத்தினர்.

ஆனால், அம்மா சென்னையிலிருந்து வந்த பிறகு, அவர் தலைமையில் ஊர்வலம் பெரிய கடை வீதி வழியாகச் செல்ல முயன்ற போது காவல் துறை அலுவலர் தடுத்தார். அம்மாவோ ஊர்வலத்தில் அனைவரும் அப்படியே உட்காருங்கள் என்றார். அதைக் கண்டு அஞ்சி ஊர்வலம் தடையில்லாமல் செல்ல காவல் துறையினர் அனுமதித்தனர். இவ்வாறு சட்ட எரிப்புப் போரில் சிறை சென்று மரணம் அடைந்த வீரர்களுக்கு அம்மா மரியாதை செய்தார். இது ஒரு மனித உரிமைப் போராட்டம் ஆகும். இது மணியம்மையாரின் தலைமைப் பண்பையும் இக்கட்டான நிலையைச் சமாளிப்பதால் அவர் எப்படிப்பட்ட வீராங்கனை என்பதையும் உலகறியக் கூடிய வாய்ப்பை வழங்கியது.

இராவணலீலா

தந்தை பெரியார் அவர்கள் 24.12.73 அன்று மறைந்த பிறகு 6.1.74 அன்று திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் அம்மா. தலைமையேற்ற ஓர் ஆண்டிலேயே அய்யாவின் செயல் திட்டங்களில் ஒன்றான இராவண லீலா நிகழ்ச்சியை மய்ய அரசின் முழு எதிர்ப்பையையும் மீறிச் சிறப்பாக நடத்தி முடித்தார்.

அஞ்சலகம் முன் மறியல்

அய்யா அறிவித்த கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னோடி யாக 1976, ஏப்ரல் 3 ஆம் நாள் அஞ்சலகம் முன் சாதி இழிவு ஒழிப்புக் கிளர்ச்சியும் அதைத் தொடர்ந்து கருப்புக் கொடி காட்டுதலும் ஒரு மாத காலம் நடைபெற்றது. 3.5.1974 முதல் 2.7.1974 வரை தமிழகத்தில் எந்த ஊருக்காவது மய்ய அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் வருவதாக இருந்தால் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் என்று அம்மா அறிவித்தார். அதன்படி, 26.5.1974 அன்று சென்னை வந்த அமைச்சர் ஒய்.பி.சவான் அவர்கட்கு அம்மா கருப்புக் கொடி காட்டினார்கள்.

வெள்ளி வாள் பரிசு

8.5.1977 இல் கடலூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 98 வது பிறந்தநாள் விழா திராவிடர் கழக வரலாற்றில் மறக்க முடியாத விழாவாகும். இவ்விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் அன்னையாரைப் பாராட்டி வெள்ளி வீர வாள் ஒன்றினைப் பரிசாக அளித்தார்.

இவ்வாறு சாதாரணத் தொண்டராக அய்யாவிடம் வந்து சேர்ந்த அன்னையார் அவர்கள், அய்யாவின் உடல்நலத்தைப் பேணிக் காத்தது மட்டுமல்லாமல் கழகத்தின் செயல்பாடுகளில் அய்யாவுக்கு உறுதுணையாக இருந்து, அய்யாவின் மறைவுக்குப் பின் அவர் விட்டுச் சென்ற பணியைத் தொய்வின்றி நடத்திப் பெருமை சேர்த்தவர். மணியம்மையாரை முன்மாதிரியாகக் கொண்டு, பொது வாழ்வில் பங்கெடுக்க வேண்டும் என்று பெண்கள் எண்ண வேண்டும்.