கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இரஞ்சித் கூட்டணியில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘காலா’. தோழர் இரஞ்சித் தனது திரைப்படங்களில் சாதி ஒழிப்பு பேசுகிறார் என்றும் ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலிக்கிறார் என்றும் தீவிர அம்பேத்கரிஸ்ட் என்றும் பலரால் நம்பப்பட்டுவருகிறது. சாதி ஒழிப்புத் தளத்தில் தீவிரமாகப் பணியாற்றி வந்த இரு தலைவர்கள் தோழர் பெரியாரும், தோழர் அம்பேத்கரும். இரு தலைவர்களும் சாதி ஒழிப்பில் பல விசயங்களில் ஒத்த கருத்துக்களைக் கொண்டோராகவே திகழ்ந்தனர். இன்னும் கொஞ்சம் சொல்லப்போனால் ஒரு தலைவரைப் படித்தால் மற்றொரு தலைவரைப் படிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் களுடைய கருத்துக்கள் ஒத்துப்போயிருந்தன. சில இடங்களில் அந்தந்த சமூகச்சூழலைப் பொறுத்து இருவரின் கருத்துக்களில் சில மாறுபாடுகள் இருக்கலாமே தவிர மற்றபடி வேறுபாடு என்று சொல்லுவதற்கு இல்லை.

slumஅப்படி இருக்க, இன்று ‘காலா’ திரைப்படம் வெளிவந்ததைத் தொடர்ந்து தோழர் அம்பேத்கரை தோழர் பெரியாருக்கு எதிராக நிறுத்தும் (பார்ப்பனப் போக்கு) முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். ‘காலா’ திரைப்படத்தை ஆதரிப்போர் எல்லாம் ‘காலா’வை நாம் ஆதரிக்கவில்லை என்றால் எங்கு நம்மை ‘தாழ்த்தப்பட்டோருக்கு விரோதி’ என்று நினைத்து விடுவார்களோ என்றும், ‘சாதி வெறியர்’ என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்றும் பயந்து வேறு வழியின்றி துதிபாடும் நிலைக்கு வந்து விட்டனர்.

சிலர் சுயசாதிப் பற்றாளர்கள் என்பது அப்பட்டமான உண்மை. ‘காலா’ படத்தை எதிர்ப்போரை குறிப்பாக பெரியாரியக்கத் தோழர் களை ‘சூத்திர பெரியாரிஸ்ட்’, ‘சூத்திர திராவிடர்கள்’, ‘சாதி வெறியர்’, ‘பிற்படுத்தப்பட்ட மனநிலையாளர்கள்’ என்றும், அதையும் தாண்டி சிலரோ வெளிப்படையாக சாதியைக் குறிப்பிட்டுப் பேச ஆரம்பித்து விட்டனர். இப்படி சக தோழர்களையே சாதியைக் குறிப்பிட்டு விமர்சித்தவர்களில் சில பெரியாரியத் தோழர்களும் அடக்கம்.

விமர்சிப்பது தவறா? இல்லை விமர்சிக்கவே கூடாதா?

விமர்சிப்பதில் பெரியார் ஏதேனும் வரையறை வைத்திருந்தாரா? இவர்களைத்தான் விமர்சிக்க வேண்டும் இவர்களை விமர்சனம் செய்யக்கூடாது என்றாரா? இவர்கள் நமக்கு நட்பானவர்கள் ஆக இவர்களை விமர்சனம் செய்யக் கூடாது என்றாரா? இவர் நட்பு சக்தி என்பதால் செய்யும் தவறுகளை விமர்சனம் செய்யாமல் தவிர்த்துச் சென்றாரா? தாழ்த்தப்பட்ட தலைவர்கள் என்பதால் விமர்சனம் செய்யாமல் விட்டாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

நெருங்கிய நண்பராயிருந்தாலும், மிகப் பெரிய தலைவராயிருந்தாலும், மகாத்மாவாக இருந்தாலும், தொண்டர்கள் ஆனாலும் மக்கள் நலனுக்கு எதிராக எடுக்கும் எந்த முடிவுகள் ஆனாலும் விமர்சனம் செய்துள்ளார். அக்காலத்தில் தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று அழைக்கப்பட்ட பல்வேறு தலைவர்களையும் கண்டித்துள்ளார். ஏன் தோழர் அம்பேத்கரையும் விமர்சிக்காமல் இல்லை. பூனா ஒப்பந்தத்தில் இரட்டை வாக்குரிமை, தனித்தொகுதி முறையைக் கை விட்டதால் தோழர் அம்பேத்கரை பெரியார் இவ்வாறு விமர்சனம் செய்கிறார்.

“பூனா ஒப்பந்தத்தில் உங்கள் தலைவர்கள் காங்கிரஸ்காரர்களுடன் சேர்ந்ததில் கதி என்ன வாயிற்று? அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்ட உங்கள் உயிர் போன்ற நன்மை பறிக்கப் பட்டுவிட்டது. காங்கிரஸ்காரர்களால், மகாத்மாக்களால் கொடுக்கப் பட்ட வாக்குறுதியும், ஒப்பந்தமும் தவறப்பட்டுவிட்டது, காங்கிரஸ்காரரும் காந்தியாரும் “கையை வளையுங்கள் பார்ப்போம்” என்று வீரம் பேசுகிறார்கள். உங்கள் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் இப்போதுதான் புத்தி வந்து தாங்கள் செய்த தவறுத லான காரியத்துக்கு வருந்துகிறார்கள். பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தலைவர்கள் இன்று என்னை கண்டால் வெட்கப் படுகிறார்கள்.

நான் ஐரோப்பாவிலிருந்து தோழர் அம்பேத்கருக்கு“6, 7 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது காந்தியாரின் உயிரை விடக் கேவலமானதல்ல; காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிக்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்து விடாதீர்கள்” என்று தந்தி கொடுத்திருந்தேன். அதை வாங்கி பார்த்துக் கொண்டே மகாத்மாவின் “பொக்கவாய்ச் சிரிப்பில்” மயங்கியும் மாளவியாஜி, ராஜகோபாலாச்சாரியார்ஜி போன்ற பிரகஸ்பதிகளின் ஆசிர்வாதத்திற்கு ஏமாந்தும் கையெழுத்துப் போட்டதும், உங்கள் விடுதலை பாழாகி விட்டது. “கைக்கெட்டியது வாய்க் கெட்டவில்லை” “சாமிகொடுத்ததை பூசாரி மோசம் செய்து விட்டார்” இப்பொழுது புத்திவந்து என்ன பயன் என்பது எனக்கு விளங்கவில்லை.”

02.021935 அன்று மோகனூரில் நடைபெற்ற சேலம் மாவட்டம் நாமக்கல் வட்டபள்ளர் சமூக மாநாடு தேவேந்திரகுல மாநாட்டில் “தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை.

பெரியார் சாதி ஒழிப்பில் எந்த ஒரு சமரசமும் செய்துகொள்ளவில்லை. பொதுவுடமை இயக்க தலைவர்கள், தலித் இயக்கத்தலைவர்கள், தமிழ்த் தேசியவாதிகள், மடாதிபதிகள், பண்டிதர்கள், முதலாளிகள், நிலவுடமையாளர்கள், சங்கராச்சாரியார்கள், சாதிச் சங்கத் தலைவர்கள் போன்றவர் களையும், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற தான் ஆதரித்த அரசியல் தலைவர்களையும் அவர் விமர்சிக்காமல் இல்லை. நாம் விமர்சிப்பவர், தாழ்த்தப்பட்ட தோழரா என்று பார்த்துதான் விமர்சனம் செய்ய வேண்டும் என்பது ஏற்புடைய வாதமாகத் தோன்றவில்லை.

காலா பேசும் அரசியல்

காலா திரைப்படம் ரஜினி தூத்துக்குடியில் பேசிய பேச்சிற்காக மட்டுமே எதிர்ப்பைச் சந்தித்ததே தவிர மற்றபடி எந்தவொரு எதிர்ப்பையும் சந்திக்கவில்லை. காலாவைத் தடை செய்யச் சொல்லி எந்த இந்துத்துவ அமைப்புகளும் போராடவில்லை. தினமலர் மட்டுமே ஒரு விமர்சனத்தை முன் வைத்தது. மற்ற அனைத்துப் பார்ப்பன ஊடகங்களும் காலாவுக்கு ஆதரவாகவே  இருந்தன.

முழுக்க முழுக்க ‘தூய்மை இந்தியா’ திட்டத்தையும் மற்றும் இந்துத்துவ அமைப்புகளை விமர்சனம் செய்யும் வகையில் இருக்கும் காலா திரைப்படத்தை எந்த இந்து அமைப்புகளும் தடை செய்யச் சொல்லி ஒரு சிறு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் இரண்டு வசனங்களுக்குப் படத்தைத் தடை செய்யச் சொல்லி பா.ஜ.க. உட்பட அனைத்து இந்துத்துவ அமைப்புகளும் பொங்கி எழுந்தன. மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பு ஏன் காலாவிற்கு எழவில்லை என்பது கேள்விக் குறியாகவும், நெருடலாகவும் உள்ளது.

‘சிவாஜி ராவ் கெயிக்வாட்’ எதற்கு?

படத்தில் மிகப் பெரிய போராட்டம் நடக்கும் காட்சியில் ஒரு காவலர் உடையில் இருப்பவர் போராட்டக் கூட்டத்தில் பேசுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அந்தக் காட்சியில் அவர் கூறுவது, ‘என் பேரு சிவாஜி ராவ் கெயிக்வாட் நானும் சேரியில தான் பொறந்தேன். இப்போ அந்தச் சேரி இல்ல’ என்ற வசனம் இடம் பெற்றிருக்கும். அனைவருக்கும் தெரியும் ‘சிவாஜி ராவ்’ என்பது ரஜினியின் இயற்பெயர் என்று. ஆனால் அந்த ‘கெயிக்வாட்’ என்ற சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டியதின் அவசியம் என்ன? ரஜினியைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்று அடையாளப்படுத்தவா? அப்படி என்றால் தன்னை ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியின் ஆதரவாளராகவும், ஆன்மீக அரசியல்வாதியாகவும் வெளிப்படை யாகவே காட்டிக்கொள்ளும் ஒருவரை எதற்காக தலித்தாக அடையாளப்படுத்த வேண்டும்.

இரஜினி, தான் அரசியலுக்கு வரப்போவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கும் இச்சூழலில் அதிக எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான இத்திரைப்படத்தில் இம்மாதிரியான காட்சிகளும் வசனங்களும் எதற்காக? அவருக்குத் தாழ்த்தப் பட்டோரின் வாக்கு வங்கியைச் சேர்த்துக் கொடுப் பதற்காகவா? என்ற கேள்விகள் எழுகின்றன. காலா ரஜினியின் படம் தான் ரஜினிக்கான படமாகத்தான் தோன்றுகிறது. அது ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு எதிர்வரும் காலங்களில் வாக்குகள் சேர்த்துக் கொடுக்கத்தானோ என்று எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

காலா சாமியும் புத்தர் படமும்

காலா திரைப்படத்தை, சாதி ஒழிப்புத் திரைபடமாகப் பலரும் கொண்டாடுகின்றனர். இரஞ்சித்தை சாதி ஒழிப்பு இயக்குனராகக் கொண்டாடுகின்றனர். ஆனால் சாதியைப் பாதுகாக்கும் குல தெய்வங்களைப் பற்றி நன்றாகப் பேசியுள்ளது ‘காலா’. இரஜினியின் வீட்டிற்கு அருகில் ஒரு குலதெய்வக் கோவில் அது படம் முழுக்கக் காட்சி அளிக்கின்றது. அது பத்தாதென்று ‘காலா நம்ம குல சாமி பேரு’ ‘காலா சாமிக்கு படச்ச கள்ளு’ என்று காலா சாமிக்கு ஒன்றும் குறைச்சலில்லை படத்தில். புத்தரையும் குல சாமியையும் எப்படிப் பொருத்திப்பார்ப்பது என்று புரியவில்லை. குலதெய்வ வழிபாட்டைப் பற்றி தோழர் அம்பேத்கரின் கருத்தைப் பார்ப்போம்.

புத்த மதத்தின் அழிவுக்கு காரணம் குல தெய்வ வழிபாடுகளே!

“புத்த மத இலக்கியங்களை நான் படித்துப் பார்த்த போது, புத்தரின் சீடர்களில் 90 சதம் பேர் பிராமணர்கள் என்று கண்டேன். பிராமணர்கள் புத்தரிடம் விவாதம் நடத்தவும் வாதம் புரியவும் வந்தனர். அவர்கள் வாதத்தில் தோற்றபோது புத்தருக்கு ஆதரவாளர்களாக மாறினர். இறுதியில் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். புத்த மத இலக்கியங்கள் இத்தகைய பல சம்பவங்களை நமக்கு எடுத்துச் சொல்கின்றன.

இவ்வாறாக, பிராமணர்கள் பெரும்பாலாரின் மத்தியிலே தழைத்துச் செழித்திருந்த புத்த மதம் எப்படி பிராமணர் களாலேயே அழிக்கப்பட்டது என்பது புரியவில்லை. இதற்குப் பிரதானமான காரணம் குல தெய்வ வழிபாடுதான் என்று நான் கருதுகிறேன். இந்தியாவில் கிராம தெய்வம், தேசிய தெய்வம், ஆகியவை தவிர, குடும்ப தெய்வங்கள் இருக்கின்றன. பிராமணர்கள் மூலம் இந்தத் தெய்வ வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த தெய்வங்களுக்குப் பூசை செய்வதற்காகச் செல்கின்ற பூசாரிகள் இராணிகளின் மூலமாக அரசாங்க விஷயங்களில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினர்.”

-இலங்கை கொழும்புவில் 1950 ஆம் ஆண்டு மே25  முதல் ஜுன் 6 வரை நடைபெற்ற பெளத்தர் களின் உலகத்தோழமை மாநாட்டில் ஜூன் 6 இல் தோழர் அம்பேத்கர் ஆற்றிய உரைகளின் சுருக்கம்.

புத்த மத அழிவுக்குக் காரணம் குலதெய்வ வழிபாடுகள்தான், என்று தோழர் அம்பேத்கர் கூறகிறார். ஆனால் குலதெய்வங்களையும் புத்தரையும் ஒன்றாகக் காட்டுவது சாதியைப் பாதுகாக்கவா? சாதியை ஒழிக்கவா? என்று புரிய வில்லை. தோழர் பெரியார் குலதெய்வ வழிபாடு களுக்கு எதிராக எழுதியும், பேசியும், மூட நம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரங்களையும் எண்ணற்றவற்றை நடத்தியுள்ளார்.

சாதி சார்ந்த திருமணமுறைகளையும், உறவு முறைகளையும் குலதெய்வ வழிபாடுகளே கட்டிக் காக்கின்றன. எனவே குலதெய்வ வழிபாடு என்பது சாதியை மிகத் தீவிரமாகப் பாதுகாக்கும் அயோக்கியத் தனமான ஒன்று என்பதால் அதை ஒரு துளி அளவு கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அதை ஏற்றுக்கொண்டு சாதி ஒழிப்புப் பேசுவதென்பது நேர்மையான காரியமா? வெறும் தலைவர்களின் புகைப்படங்களை காட்டி, கைதட்டல் பெறுவது என்பது மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்க விரும்புபவர்கள் செய்யும் காரியம். இன்று அது போன்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தலைவர்களின் பட அரசியலைக் கவனிக்காமல் பாட அரசியலைக் கவனிக்க வேண்டும்.

சேரி வாழ்வும், நில உரிமையும், மனுதர்ம சாஸ்த்திரமும்

காலா திரைப்படத்தில் முதற்காட்சியில், நிலத்தைப் பறிக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராகத் துணி துவைத்துக் கொண்டு நடக்கும் ஒரு போராட்டம். அதில் ‘எங்க உரிமை எங்களுக்கு’ ‘எங்க வேலை எங்களுக்கு’ ‘தரமாட்டோம் உங்களுக்கு’ என்ற முழக்கங்கள். இந்த முழக்கங்கள் மனுதர்மத்தின் வரிகளை நினைவு படுத்துகின்றன. எங்க தொழில் எங்களுக்கு என்பது என் சாதித் தொழிலை நான் தான் செய்வேன் என்பது போல உள்ளது. துணிதுவைப்பவர் துணி துவைக்கத்தான் வேண்டும் என்பதைப் போலத்தான் உள்ளது.

“இவர்கள் அனைவரும் பட்டணத்திற்கும் ஊருக்கும் வெளியில், மரத்தடி, தோப்பு, சுடுகாட்டிற்குச் சமீபமான இடத்தில் இவர்களது தொழில் இன்னதென்று பிறருக்குத் தெரியும்படி, தொழிலைச் செய்துகொண்டு வாழ வேண்டும்.”

-மனுசாஸ்திரம், அத்தியாயம் 10, ஸ்லோகம் 49

நிலம் நமது உரிமை என்பது மறுப்பதற் கில்லை. ஆனால் சேரியை விட்டு வெளியேறக் கூடாது என்றும் இங்கு இருந்துதான் (சேரியில்) புரட்சி பேசவேண்டும். இங்கு (சேரியில்) இருந்துதான்  சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்பது ஏற்கக்கூடிய கருத்து அல்ல.

குலத்தொழிலை விட்டு, இழிவான தொழிலை விட்டு சமூகத்தில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெற வேண்டும் அதை விட்டுவிட்டு எங்க ‘தொழில் எங்களுக்கு’ என்று கத்துவது மனுசாஸ்திரத்தைக் காப்பாற்றத் துடிப்பவர்கள் செய்யவேண்டிய செயல். அதை ஒரு சாதிஒழிப்பாளர் என்று அறியப்படும் இயக்குநர் செய்வது சரியா? சாதித் தொழிலை விட்டு சாதி அடையாளத்தை விட்டு ஒரு பொதுவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் பெரியாரியக்கத் தோழர்களின் நிலைபாடு. தோழர் பெரியார் வாழ்விடங்களை எப்படிப் பார்த்தார்.

“தாழ்த்தப்பட்டவர்களை அக்ரஹாரத்தில் குடி இருக்க செய்ய வேண்டும். தாழ்த்தப் பட்டவர்களுக்கென்று தனியாகச் ‘சேரி’ இருப்பதை ஒழிக்க வேண்டும்”

-( விடுதலை, 10.01.1947)

மேலும் தி.மு.க ஆட்சியின் போது 1972 ஜூன் 23ம் நாள் நொய்யலில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசியது,

“இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு, அரசாங்கம் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகின்றேன் என்றுக் கூறி ஊருக்கு வெளியே, ஒதுக்குப் புறத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றார்கள். முன்பு ஊருக்கு வெளியே சேரியில் குடி இருக்கின்றதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். தாழ்த்தப்பட்ட மக்களைப் புதிய சேரியில் தனியாகக்  ஏற்றுவதாகத்தானே ஆகின்றது. அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுவசதி செய்து கொடுக்க வேண்டும், மற்ற மக்களோடு கலந்து வாழச் செய்ய வேண்டும்.”

ஒரு பொதுஇடத்தில் அனைத்து வசதியுடன் கூடிய ஒரு மாற்று இடத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் நாங்கள் செல்லத் தயார் என்று கூறுவது சாதிஒழிப்புக்குப் பயன்படுமா?. இல்லை பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடம் (ஊர், சேரி, கிராமம் உட்பட எதுவாகட்டும்) என்று விட்டுச் செல்லாமல் இருப்பது சாதி ஒழிப்புக்குப் பயன்படுமா? அப்படி சேரி இழிவை விட்டு விலகிச் செல்வோரை எதிரியாகச் சித்தரிப்பது எந்த வகையில் சாதி ஒழிப்புக்குப் பயன்படும்?

சேரிகளை விட்டு வெளியேறி பொது இடத்தில் வாழ தொடங்க வெண்டும். முடிந்த அளவு அரசாங்கத்தைக்கூட எதிர்பார்க்காமால், தன் சொந்த முயற்சியில்கூட தாழ்த்தப்பட்ட மக்கள் சேரியில் இருந்து வெளியேறி, தங்கள் இழிவைப் போக்கிக்கொள்ள வேண்டும். அரசாங்கம் முறை யான வசதிகளுடன் கூடிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் விட்டுச் சென்றிட வேண்டும். பரம்பரை, பாரம்பரியம் பேசுவது இழிவை நாமே தூக்கிச் சுமக்கும் வேலை ஆகும்.

உடமையா? உரிமையா?

நில உரிமை மீட்பை சாதி ஒழிப்பில் மிகப் பெரிய விஷயமாகப் பார்க்கின்றனர். ஆனால் உடமை அற்ற உரிமை என்பது வீண். இதைப் பற்றி தோழர் பெரியார் கூறுவதை பார்ப்போம்.

“பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது வுடமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம் தான் போய்ச் சேர்ந்துகொண்டே இருக்கும் என்பது பொதுவுடமைத் தத்துவத்திற்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

இன்றுள்ள கோயில், குளம், உற்சவம், சடங்கு, பண்டிகை, சுபகாரியம், அசுபகாரியம், என்பவைகள் எல்லாம் பிறவி காரணமாகவே சிலருக்கு அதிக உரிமை இருப்பதாலும்–சிலர் சுரண்டுகிறவர்களாய் இருப்ப தாலும் ஏற்பட்டு இருந்து வருபவைகளே ஒழிய-அவர் களுக்காகவே இருந்து வருபவைகளே ஒழிய இவற்றிற்கு வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆகவே, சுரண்டப்படும் சாதியாரிடத்தில் உள்ள சாதி இழிவை, மடமையை ஒழிக்க சுரண்டும்சாதியார் முயற்சிப் பார்களா? அல்லது ஒழியத்தான் சம்மதிப்பார்களா?

.- தோழர் பெரியார் ‘குடிஅரசு’- 25-3-1944

நில உரிமை என்பது கிடைத்தாலும் அதை தக்கவைத்துகொள்ளவாவது மடமை நீங்க வேண்டும். இன்று பல பஞ்சமி நிலங்களை எப்படித் தக்கவைத்துக் கொள்வதென்று தெரியாமல் பலர் நிலங்களை இழந்துள்ளனர். மக்களை அறிவுடைய வராக ஆக்காமல், உரிமை உடையவராக ஆக்காமல் என்ன உடமை கிடைத்தாலும் ஒரு பயனும் இல்லை.

கடவுள், கோவில், விழாக்கள், சடங்குகள் போன்றவற்றில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் எவ்வாறு பொருளாதார மேம்பாடு அடைய முடியும்? உடமைகளைப் பாதுகாக்க முடியும். உரிமை அற்ற உடமை என்பது கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் கொழுப்பவர்களுக்கே போய்ச் சேரும் என்பதில்  எந்த ஒரு ஐயமும் இல்லை.

பண்பாட்டு மாற்றம் என்பது அவசியம். பார்ப்பனியப் பண்பாட்டை எதிர்க்காமல் வெறும் நில மீட்பு ஒரு துளி கூடப் பயன்படாது. மீண்டும் உயர் சாதி அந்தஸ்தை பெற்றவர்களுக்கே தானே போய்ச் சேர்ந்து விடும். சாதி ஒழிப்பில் இவ்வளவு முரண்பாடுகளைக் கொண்ட திரைப்படத்தை எப்படி சாதி ஒழிப்புத் திரைப்படம் என்று ஒப்புக் கொள்வது?

அதையும் மீறி சமுதாயத்தில் இருப்பதைக் கூறியுள்ளார் என்று சமாதானம் கூறினால் முத்தையா போன்ற இயக்குனர்களும் இருப்பதை எடுக்கிறார்கள் என்று சமாதானம் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இந்து மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு போன்றவை இல்லாத ஒன்றை சாதி ஒழிப்பு என்று ஒத்துக்கொள்ள முடியாது.

இரஞ்சித் நமது தோழமை சக்தி. அவரைக் கடுமையாக விமர்சித்தால் அவர் ஆர்.எஸ்.எஸ். பக்கம் போய்விடுவார். எதிரிகள் பக்கத்திற்கு நாமே அவரை விரட்டி விடுவதா? என்று பல கருஞ்சட்டைத் தோழர்கள் எச்சரிக்கின்றனர்.

நான் விமர்சித்தால் இரஞ்சித் ஆர்.எஸ்.எஸ். பக்கம்போய் விடுவார் என்றால், அவர் எப்படி எனக்குத் தோழமை சக்தி ஆவார்? என்பது புரியவில்லை. நான் இரஞ்சித்தைத் தோழராகவே பார்க்கிறேன். அதனால் மட்டுமே எதிர்த்து விமர்சிக்கிறேன்.