வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திலுள்ள குரும்பேரி கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே கிராமத்தில் வேளாளக் கவுண்டர்கள், செட்டியார்கள், வன்னியர்கள் என 1500க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்டோர் குடும்பங்களும் உள்ளன. காலம் காலமாக இத் தலித் மக்கள் ஆதிக்க ஜாதிகளின் நிலங்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்துள்ளனர். சமீப காலமாகத் தான் இவர்களில் ஒரு சிலர் படித்து நகரங்களுக்கு வேலைக்கு சென்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கின்றனர்.

குரும்பேரி தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமைகள்: கால வரிசைப்படி

ஜனவரி 1: ஆதிக்க சாதியைச் சேர்ந்த கொங்குநாடு மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் தனது எருது மாட்டை வேண்டு மென்றே அவிழ்த்துவிட அது தலித் மக்கள் நிலத்தில் மேய்கிறது. மாட்டை அடித்து விரட்டுகின்றனர் தலித் மக்கள். மாட்டை தாழ்த்தப்பட்டவர்கள் தொட்டு விட்டதால் தீட்டாகிவிட்டது என்று சொல்லி மாட்டின் மீது தண்ணீர் தெளித்து தீட்டுக் கழிக்கின்றார் வெங்கடேசனும் அவனது கூட்டாளிகளும்.

ஜனவரி 6 இரவு: வெங்கடேசனின் தூண்டுதலின் பேரில் தலித் மக்கள் பயன்படுத்தும் பொதுக் கிணற்றில் விஷம் கலக்கப்படுகிறது. கிணற்றில் உள்ள மீன்கள், மீன்களை உண்ட கொக்குகள் ஆகியன கிணற்றிலேயெ இறந்து கிடக்க, அதனைப் பார்த்த தலித் மக்கள் அந்தத் தண்ணீரைக் குடிக்கவில்லை. இல்லையெனில் ஒரு தலித் கிராமமே அன்று மடிந்திருக்கும்! சாதிய வெறியர்களின் வன்மத்தால் படுகொலைசெய்யப்பட்டிருக்கும்.

ஜனவர 16: பொங்கல் திருவிழா அன்று சாமி ஊர்வலமாக வருகையில் சாதிய இந்துக்களில் ஒருவன் வெங்கடேசனின் தூண்டுதலில் அண்ணல் அம்பேத்கரின் சிலை மீது பீர் பாட்டிலை வீச அது சிலை மீது உடைந்து, தெறித்துச் சிதறுகிறது. ஒரு மாபெரும் புரட்சியாளரை திட்டமிட்டு இழிவு படுத்தப்படுகின்றார்.

ஜனவரி 17: இதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் அண்ணல் சிலை முன்பு அமர்ந்து  முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாக அரசு அதிகாரிகள் இருதரப்பையும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கின்றனர். சார் ஆட்சியர் உட்பட, அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இருதரப்பும் சமாதான மாகி கைகுலுக்கி செல்கின்றனர்.

ஜனவரி 18: வேலை நிமித்தமாக ஆதிக்க சாதியினரின் வசிக்கும் பொதுத்தெரு வழியாகச் சென்ற அரி என்பரைப் பிடித்துச் சராமாரியாகத் தாக்கி அவரின் இருசக்கர வாகனத்தைக் கொளுத்துகின்றனர் சாதிய இந்துக்கள். அதனைக் கேள்விப்பட்டு அங்கு வந்த அரியின் சித்தப்பா அன்பரசு (விசிக தொண்டரணி பொறுப்பாளர்) என்பரையும் அக்கூட்டம் சரமாரியாகத் தாக்கி அவரது மண்டையையும் உடைக்கின்றனர்.

பின்னர் 400க்கும் மேற்பட்டோர் கூடி தலித் மக்களின் குடியிருப்புக்குச் சென்று, திட்டமிட்ட வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். வீடுகளைக் கொளுத்து கின்றர். 7 வாகனங்களைச் சேதப்படுத்துகின்றனர். அதில் 3 முற்றிலுமாகக் கொளுத்தப்படுகிறது. செங்கல்வராயன் என்ற இளைஞனை வீட்டிலில் நுழைந்து தாக்குகின்றனர். பெண்களை மானபங்கம் செய்து அடித்து உதைக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். அதிர்ச்சியில் ஒரு சில இளம்பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு அது கூடத் தெரியாமல் வழிநெடுக ரத்தம் கசிந்தவாறே ஓடியுள்ளனர். இவை அனைத்தும் பாதுகாப்புக்கு இருந்த காவல் துறையினர் முன்னிலையிலே நடந்தது என்பது தான் வேதனைக்குரியது.

இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் அரங்கேறும் போது ஆழமாக விசாரணை ஏதும் செய்யாமல் இரு தரப்பினரையும் ஒரே தராசில் சமமாகப் பாவித்து இரு தரப்பினரின் மீது வழக்குகளைப் போட்டு, குறிப்பாக பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது கொலை முயற்சி மற்றும் பொதுச் சொத்துக் களைச் சேதப்படுத்தியது போன்ற பிரிவுகளில் வழக்கை பதிவு செய்வது காவல் துறைக்கு வழக்க மாகிவிட்டது. தீண்டாமையை வேரறுப்பதற்கான எந்தத் தீவிர முயற்சியையும் அவர்கள் எடுப்பதில்லை.

குரும்பேரி சம்பவத்திலும் காவல்துறை இவ்வாறே வழக்கைப் பதிவு செய்துள்ளது என்பதனை அறிந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்களுடன்,  காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் இணைந்து களத்திற்குச் சென்று மக்களிடம் நிலவரத்தைக் கேட்டறிந்து, ஆறுதல் கூறிய பின் திருப்பத்தூர் டிஎஸ்.பி தேசுராஜை சந்தித்துப் பேசினோம்.

இந்த சாதிய வெறியாட்டத்திற்கு காரணமான கொங்கு மக்கள் கட்சியைச் சேர்ந்த வெங்கடேசன், ஈஸ்வரன், குலோத்துங்கன் போன்றோரை உடனடியாகக் கைது செய்யக் கோரினோம்.  பாதிக்கப்பட்ட மக்கள் மீது சம்மந்தமின்றி போடப்பட்டுள்ள வழக்கை, அல்லது சில பிரிவுகளையாவது திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினோம்.

அவரின் பதில் திருப்தி அளிக்காத காரணத்தால் வேலூர் மாவட்ட டிஐ.ஜி-யைச் சந்திக்க முடிவு செய்து, பாதிக்கப்பட்ட மக்களை வேலூருக்கு அழைத்து சென்றோம். பெருந்திரளாக மக்கள் அதிகாரியைச் சந்திக்கச் செல்வதை அறிந்து மாவட்டக் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் காட்பாடி காவல் நிலையத்தில் வைத்து மக்களின் பிரதிநிதிகளாகச் சென்ற எங்களைச் சந்தித்தார்.

மக்களின் பிரதிநிதிகளாக வி.சி.க மாநில அமைப்பாளர் தோழர் நீலசந்திரகுமார், மாவட்டச் செயலாளர் தோழர் சுபாஷ் சந்திரபோஸ்,  மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேசு, திவிக தோழர் சிவா, குறும்பட இயக்குநர் மற்றும் சமூக செயற்பாட்டார் தோழர் பாலு, ஆகியோர் சந்தித்து உண்மை நிலையை எடுத்துரைத்தோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும், அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பபெறவும், இந்த சாதி வெறியாட்டத்தை நடத்திய அனைவரையும் கைது செய்யவேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்தோம். அவரும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். காவல்நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள 9 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். காவல்துறை உறுதி அளித்ததன் பெயரில் மீண்டும் மக்களை ஊருக்கு அனுப்பிவைத்துள்ளோம்.

21 ஆம் நூற்றாண்டிலும் நிலவும் இத்தகைய சாதிய வன்மம் மிகுந்த தாக்குதல்களை முறியடிக்க முற்போக்கு சக்திகள் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என விழைகின்றோம்.