காட்டாற்றின் முன்னட்டைக் கரையினிலே கொண்ட

                கதிர்முழக்காம் இராவணலீ லாவைக்கண் ணுற்றேன்

வீட்டுக்குள் நாமென்றும் விருப்பத்தோ டடைந்து

                விளைவெதுவுங் காணாராய் அசைவின்றிக் கிடந்தால்

மூட்டுகின்ற நெருப்பாலே இராவணனை எரித்து

                முழுமூச்சாய்த் தமிழரையே அடிமையாக்கிக் கொள்வார்

நாட்டத்தைத் தோலுரிப்பார் வேகத்தைக் காட்டிக்

                காட்டாறாய் நமையுந்தான் பொங்கிடவே வைக்கும் !

தனித்துவாழத் துணிவுகொள்வோம் பெண்களென அழைக்கும்

                தாராபு ரத்தோழர் பூங்கொடிகட் டுரையால்

எனையுசுப்பிக் கருத்துப்பா எழுதவைத்தார் வணக்க

                மெடுத்துரைப்பேன் வாழ்ந்தொளிர்க அவர்போலும் பெண்காள் !

முனைந்தெழுந்து காட்டாறாய்ப் பொங்கிடவே செய்வீர் !

                முதுபெரியார் மொழிந்ததெலாம் ஈடேறும்; நல்ல

வினையாற்றி ஆதிக்க உணர்வுகளைக் கொல்வீர் !

                விழைந்துவந்து காட்டாறோ டுயர்ந்தேநீர் வெல்வீர் !

முளைவிட்டுக் கருப்பையிருந் தோர்பெண்வெ ளிவந்தால்

                முழுமதியாய் எழுகதிராய் ஒளிர்வாளென் றுசொல்லிற்

கிளைபரப்பும் சோதிடன்பாற் சென்றிடுவார் பெற்றோர்

                கற்பனையில் அவளையெண்ணி மகிழ்ந்தாலும் ஓயா

துழைக்கின்ற பொறியினைப்போ லாக்கிடவே செய்வார்

                உற்றதுணை என்றவளை ஒருவனிடம் சேர்த்தே !

களைப்புற்று விழுந்தாலும் கணவனுக்கும் புகுந்த

                குடும்பத்தி லுள்ளோர்க்கும் பெண்ணடியா ளவளாம்!

முன்னவளாய்ப் படிப்பினிலே விளங்கிடினும் கணவன்

                வீட்டிற்போய் அடுப்பூதப் படிப்பெதற்கா மென்றே

மண்களைபோ லெடுத்தெறிவார் பெற்றோர்தா மென்றால்

                மனத்தெளிவைத் தருகிறதா விக்குமுகா யந்தான் ?

விண்ணுயர ஆண்கள்பற் றாதிக்கந் தானும்

                வெற்றுருவாய்ப் பெண்களையே ஆக்குவதைக் கண்டு

பெண்ணுரிமைக் குழைத்திட்ட பெரியாரைப் பற்றிப்

                பெருமையுடன் காட்டாறு போரிட்டே வெல்லும் !

பார்ப்பனர்தம் வைப்பாட்டி மக்களென்று தீச்சொல்

                போர்த்துவதும் மணவுரிமை சூத்திரர்க்கில் லையெனச்

சேர்த்துரைக்க மநுநூலைத் தேர்ந்தபின்னர் மணநாள்

                தெரிவுசெயச் சோதிடராய் மாறுவதும், மணத்தால்

சீர்த்தியுறும் வாழ்க்கையென மகிழ்ந்திருக்கும் பெண்ணைச்

                சோமன்கந்த தர்வன்அக் னியெனமூவர் உடலாற்

போர்த்துமகிழ்ந் தபின்னர்தான் இவன்மனையா ளானாய்

                பாரென்பார் சடங்குசெயும் மந்திரத்தாற் பார்ப்பார் !

வலதுகாலை எடுத்துவைத்து உள்ளேநீ வா!வா!

                வாணாளில் உனக்கின்பந் தழைக்குமென்பார், ஆணின்

குலப்பெருமை காப்பதற்கு உழைத்துவீழுங் கொடிய

                குலைவினைத்தான் பெண்ணினமே ஏற்கலாமா ?  என்ன

நிலைவரினும் புகுந்தவீட்டின் பெருமைதனைப் பேணி

                நாட்டிடவே சாதிமதக் குக்கல்கள் சொல்வார் !

விலக்கிதற்கு வேண்டாவா ?  வழிசொன்னார் பெரியார்

                வீறுற்றே காட்டாறாய்ப் பொங்கிடுவீர் பெண்காள் !

கருவறைக்குள் பூசாரி காமுறுவான் நாட்டி

                லிருக்கின்ற மடச்சாமி யார்களாதீ னங்கள்

உருவெடுத்தார் பெண்களைத்தான் கற்பழிக்க வென்றே

                உலாவருந்தீச் செய்திகளு மறிகின்றோம் !  கடவுட்

திருவுருவார் ஒருத்தியுடன் வாழ்ந்திடாமல் நாளுந்

                தெருத்தோறுங் காண்கின்ற பெண்களையும் புணர்ந்தார்

மருளுறவே செயுமின்நதச் செய்திகளைக் கேட்டு

                மானமுள்ளார் பற்றுவரோ மதங்கடவுட் கொள்கை ?

வல்லுறவுக் காளாகும் மகளிர்தம் வாழ்வு

                வேர்கொண்டு தழைத்திடுமா ?  வாழ்க்கைதனை வேண்டார்

சொல்லரிய துன்பத்தால் தற்கொலைக்கே முயல்வார்

                சொந்தமுள யாவருமே வெறுக்கின்ற நிலையில்

நல்லரிய வாய்ப்புக்கள் தருகிறதா நாடும் ?

                நவில்பரத்தைச் சொல்லுக்காய் வருந்துவது முண்டா ?

வெல்லரிய வாழ்வுக்கே வித்திடுநம் பெரியார்

                விழைந்தோதும் பாதையினைப் பெண்காள்நீர் தேர்வீர் !

எத்தனைதான் இழிஞரெனத் தாழ்த்திடுனும் கோயில்

                எழுப்புவிப்பார் புனைகடவுட் சிற்பங்கள் செய்வார்

வித்தகராய் ! ஆனாலுங் குடமுழுக்கு தனைச்செய்

                வினைஞரெனப் பார்ப்பனரே தேர்வாவர் !  அவரும்

புத்தெழுச்சி கற்கடவுள் பெறுகவென நீரிற்

                குளிப்பித்துப் புத்தாடை யணிவிப்பார் !  கடவுட்

பித்தேறித் தொழுவாரை ஈர்ப்பதற்கு நெற்றிப்

                பட்டைபொட்டு நாமமெலாஞ் சிலைகளின்மே லிடுவார் !

நீர்த்தழிந்தா ரெனநம்மை நீட்டிக்கை காட்டி

                நஞ்சுளத்துப் பார்ப்பனர்தாம் நவில்வதைநாம் கேட்டும்

சூத்திரராய் அவர்காலிற் சுருண்டுகிடப் பதனால்

                சுட்டெரிக்கக் கிடைத்தவிற கென்றுநமைக் கொண்டார்

போர்த்திறத்தார் நாமாகப் புதுநோக்கம் பெரியார்

                புகன்றதிற்றா னுள்ளதெனப் புரியவைக்கும் பாங்கிற்

கூர்த்தமதிக் காட்டாறுங் கருத்துரைகள் பரப்புங்

                கதிரொளியாய் நம்முன்னே நிற்பதனைக் காண்பீர் !

பெண்கல்வி வேலைவாய்ப்பு பேதமில்லா வாழ்க்கை

                பேணுகின்ற சமவுரிமை நாட்டிலெங்கும் வேண்டி

முன்னெழுந்து முழங்கிடவே பெண்களெழ வேண்டும் !

                முற்போக்குச் சிந்தனைகள் மனதேற்றி வாழ்ந்தே

இன்னல்செய் விழிவெல்லாம் நீங்கிடவே எழுவீர் !

                எழுச்சிதனை உளந்தேக்கிப் புதுப்பாதை வகுப்பீர் !

மண்ணிலுயர் வாழ்வினிக்க மானமிகு பெரியார்

                மலர்விக்குஞ் சுடரொளியைப் பூங்கொடிபோல் தேர்வீர் !

சிந்தைகவர் செயலொன்றைச் சந்தைச்சுற் றுலாவாய்

                செந்தமிழ்நற் காட்டாறு காட்டியுடன் தோன்றி

முந்துமொரு கொள்கையுற வுதனைவளர்த் தெடுக்கும்

                முனைவழிக்குப் பெண்டிரெலாம் முன்வருதல் வேண்டும் !

இந்திமொழித் திரைப்‘பிங்கி’ காட்டுதற்போற் பெண்கள்

                இனியேனும் நிமிர்ந்தெழுவ ரென்பதுமெய் மெய்யே !

வந்துயரும் காட்டாற்று வெள்ளத்தால் மேன்மேல்

                விளைபுதுமை யுண்டென்றே வாழ்த்துகிறோம் நன்றே !

துஞ்சாது நினைவுகொள்வோம் பெரியாரை…!

மலரினியன்

எம்மை திருத்திட

செம்மை செய்திட

உம்மை வருத்திட்டீர்…

பொய்மை ஒழிந்திட

வாய்மை வென்றிட

தாய்மை ஏற்றிட்டீர்…

சாத்திரப்பொய் போக்கிட

கோத்திரகுலம் நீக்கிட

மூத்திரப்பை சுமந்திட்டீர்…

இந்துத்துவ வேரழுகிட

முந்துதிராவிடம் நிமிர்ந்திட

சிந்தனைப் பரப்பிட்டீர்…

வஞ்சம்நிறை பார்ப்பனின்

நஞ்சுசேர் சூழ்ச்சிதனை

விஞ்சிநீர் வென்றிட்டீர்...

சாதிக்குப்பை போக்கிட

மோதிநீர் போராடி

வேதியனை விரட்டிட்டீர்…

பெண்டாளும் போகமாய்

கண்டிருந்த மாதர்தமை

விண்ணாள வைத்திட்டீர்…

கொஞ்ச நஞ்சமல்ல

விஞ்சும் உம்தொண்டு

துஞ்சாது நினைவுகொள்வோம்…

நம்கொள்கை வென்றிட

உம்வழியைப் பின்பற்றி

சமைத்திடுவோம் நம்மினத்தை…!