‘தங்கல்’ படம் நீங்களெல்லாம் பார்த்திருப் பீர்கள். அந்தப் படத்தின் நாயகனான அமீர்கான் தன் மகள்கள் மூவரையும் ஆண்களைப் போல் வளர்த்து, மல்யுத்தப் போட்டிக்கும் தயார் செய்திருப்பார். என்னப்பா இது திரை விமர்சனமான்னு யோசிக் காதீங்க, கதை சொல்லவில்லை. அந்தப் பெண்களில் ஒருவராக நடித்த ‘சனா பாத்திமா சேக்’ என்கிற நடிகை ரமலான் மாதத்தில் உள்ளாடையுடன் இருந்த படம் சமூக வலைத் தளங்களில் வந்தது.

அதை எதிர்த்து இஸ்லாமிய பிற்போக்கு மத வாதிகள் குரல் கொடுத்தனர். அதெப்படி ஒரு இஸ்லா மியப் பெண் ரமலான் மாதத்தில் இந்த மாதிரி ஆபாச மாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம் (மத்த மாசத்தில இதே மாதிரி இருந்தால் கூப்பிட்டு பாராட்டுகிற மாதிரி) என்று பிரச்சனையக் கிளப்ப ஆரம்பித்தார்கள். இது சம்பந்தமாக ஒரு தொலைக் காட்சியின் நேரடி விவாத நிகழ்ச்சியில் நடந்தது தான் மிகவும் அருவருப்பானது.

மிரர் நவ் (MIRROR NOW) தொலைக்காட்சியில் (இந்தத் தொலைக்காட்சி முமுக்க பெண்களாலேயே நடத்தப்படுகிறது. வாய்ப்புள்ளவர்கள் பார்க்கவும்). நெறியாளர் ஃப்யா டிசோசா (Fiye Disoza) தலைமையில் (Urban Debate) விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மெளலானா யாசீப் அப்பாஸ் அவர்கள் நடிகை சனா குறைவான உடையணிந்திருந்ததை வன்மையாகக் கண்டித்துப் பேசினார். மறுத்துப் பேசிய பெண் நெறியாளரையும் பெண்கள், ஆண்களுக்குச் சமம் என்று நிருபிக்க உள்ளாடையோடு வந்து இந்நிகழ்ச்சியை நடத்துங் கள் என்று கூறினார். நெறியாளர் உள்பட அனை வருமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

நெறியாளர் ஃப்யா டிசோசா பேனலில் இருந்த அனைவரையும் அமைதி காக்கும்படி கூறிவிட்டு பார்வையாளர்களை நோக்கித் திரும்பி, திரு மெளலானா அவர்கள் என்னை வெறுப்பேற்றுவதன் மூலம் நான் நிதானத்தை இழந்து கூச்சல் போட்டு வேலையை மறந்து விடுவேன் என எண்ணுகிறார். நான் புனிதமாக எண்ணிப் பணிபுரியும் என்னுடைய அலுவலகத் திலேயே வந்து அமர்ந்து கொண்டு என்னை உள்ளாடையோடு வந்து நிகழ்ச்சியை நடத்தச் சொல்கிறார்.

“திரு மெளலானா ஜி இது எனக்குப் புதிதல்ல, நான் உங்களைக் கண்டு அஞ்ச மாட்டேன், நீங்கள் என்னை மிரட்ட முடியாது. நீங்கள் எங்களைப் (பெண்களை) பின்வாங்கச் செய்ய முடியாது” சனா பாத்திமா அவர்கள் வேலை (நடிப்பு) செய்யும் போதும், சானியா மிஸ்ரா விளையாடும் போதும் உடை குறித்தான விமர்சனத்தை முன்வைத்துத் துரத்துவதன் மூலம் திரும்பவும் நாங்கள் வீட்டுக்குள், சமையலறைக்குள் முடங்குவோம் என எண்ணுகிறீர்கள். நான் உங்களுக்கு ஒரு செய்தி வைத்திருக்கிறேன். நாங்கள் எங்கும் ஓடப் போவதில்லை. ஆண்களாகிய நீங்களே உலகத்தை ஆளட்டும் என்று விட்டு விடுவோம் என நினைக்கா தீர்கள். உடை என்பது எனது உரிமை, அதில் தலை யிடும் உரிமை உங்களுக்குக் கிடையாது என்பதை ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கிறேன்”

என்று பொட்டிலடித்தாற் போல பதில் கூறினார். இதே கருத்தைத்தான் தோழர் பெரியார் 50 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார்.

“16 முழத்தில் புடவைகளை உடல் முழுவதும் சுற்றிச் சுற்றிக் கட்டுவது என்பது பெண்களுக்கு வசதிக் குறைவு. ஒரு அவசர நேரத்தில் தப்பிப் பிழைக்க, வேகமாக வெளியேறிட இது தடையாக இருக்கிறது. பெண்கள் ஆண்களைப்போல உடை உடுத்த வேண்டும். ஆண் - பெண் வித்தியாசம் காட்டத் தேவையில்லை; பெயரை வைத்தேகூட ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ளக் கூடாது” –- தோழர் பெரியார்.

ஆண்கள் கோலோச்சி வந்த பத்திரிகைத் துறையில் முதல் பெண் புகைப்பட நிருபராக ஹோமாய் வியார்வாலா (Homai vyarawalla) 1952 ஆம் ஆண்டில் நுழைந்தார். ஏறத்தாழ 65 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது தான் பெண்கள் பெருமளவில் பங்கு கொள்கின்றனர். உலகளவில் பாதுகாப்பான பணி என்று நம்பப்படும் ஊடகத்துறை இந்தியாவில் மட்டும் தன் நம்பகத்தன்மை இழந்திருக்கிறது என்பதையே பின்வரும் புள்ளிவிபரம் நமக்கு உணர்த்துகிறது .

International Womens Media Foundation (IWMF

ஊடகங்களில் பணிபுரியும் ஏறத்தாழ 977 பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் கொலை மிரட்டல் மற்றும் பாலியல் சீண்டல் களுக்கு உள்ளாவதாகவும், சர்வதேச ஊடகப் பெண்கள் அமைப்பு International Womens Media Foundation (IWMF) தெரிவிக்கிறது. கணக்கில் வந்த விபரம் இது. (வெளியே சொன்னால் வேலையை விட்டு விட நேருமோ? வாழ்வாதாரம் பறிபோகுமோ என்கிற பயத்தில் கணக்கில் விடுபட்டது எத்தனையோ)

இக்குழுவின் கணக்கெடுப்புப்படி ஆசியாவில் ஊடகத்துறையில் உயர் மட்டக்குழுக்களில் வெறும் 13% பெண்களே அங்கம் வகிப்பதாகவும் அதே சமயம் தெற்கு ஆப்பிரிக்காவில் 79.5% பெண்கள் உயர் அதிகாரிகளாக இருப்பதாகவும் தெரிவித்தது. பத்திரிகைச் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டால் 180 நாடுகளில் இந்தியா சென்ற வருடத்தைக் காட்டிலும் மூன்று இடங்கள் பின்னோக்கி நகர்ந்து 136 வது இடத்தில் இருக்கிறது.

செய்திகளில் உடன்பாடில்லை என்றால் உடனே தேசிய விரோதிகள், இந்து விரோதிகள் என்று கூறுவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் பெண்களாக இருந்தால் பாலியல் சீண்டல்கள், அச்சுறுத்தல் தருவது, நடத்தை சார்ந்த அவதூறுகளை (Character Assassination) சமூக வலைதளங்களில் பரப்பும் போக்கும் இப் பின்னடைவுக்கான காரணியாக இருக்கக்கூடும்.

மாற்றுக்கருத்துக் கொண்ட பெண்களைக் கொச்சைப்படுத்தும் பா.ஜ.க ட்ராலிங் டீம்

எடுத்துக்காட்டுக்காக இந்தியாவில் அரங் கேறிய ஒன்றிரண்டு சம்பவங்கள் உங்கள் கவனத்துக்கு வைக்கிறேன். சமீபத்தில் பிரதமர் மோடி அவர்களுடனான சந்திப்பில் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் அணிந்திருந்த உடை யையும், அவர் கால் மேல் கால் போடு உட்கார்ந்திருந் ததையும் கண்டித்து தொடர்ச்சியாக சமூக வலை தளங்களில் ட்ராலிங் செய்யப்பட்டார்.

புகழ்பெற்ற CNN – IBN தொலைக்காட்சியின் முதன்மைச் செய்தி வாசிப்பாளர் மற்றும் முன்னணிப் பத்திரிகை ஒன்றில் தொடர்ச்சியாக எழுதி வருபவர் சங்காரிகா கோஸ் (Sangaraika ghose). இவரை டிவிட்டரில் ஏறத்தாழ 1,77,000 பேர் பின்தொடர்கின்றனர். ஆனால் தற்போது இவர் டிவிட்டரில் எழுதுவதையே கைவிட்டுவிட்டார். ஆபாசமான வசவுகளைப் பொது வெளியில் பதிவிடுவது மிகுந்த துயரத்தைத் தருகிறது வேறு என்ன செய்ய முடியும் என்றார் சங்காரிகா கோஸ்.

இவ்வாறே மும்பையைச் சேர்ந்த பெண்ணியச் செயல்பாட்டாளர் கவிதா கிருஷ்ணன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கவிதா முரளிதரன், சமூகச் செயல்பாட்டாளர் லீனா மணிமேகலை, தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த சுகிதா, இணையஊடகத்தின் தான்யா என்று ஒரு நீளமான பட்டியல் உள்ளது.

இவர்கள் உணவு, உடை குறித்தோ, ஊடகத்திற்கு எதிராகவோ, அரசுக்கு எதிராகவோ, மதவாதிகளுக்கு எதிராகவோ, சில அரசியல் கட்சிகளுக்கு எதிராகவோ - நேரடியாகவும், சமூக வலை தளங்களிலும் தங்கள் கருத்துக்களைக் கூறினால், உடனடியாகச் சமூக வலைதளங்களில் ட்ராலிங் செய்யப்படுகின்றனர். இம்மாதிரி மோசமான இணைய வசவுகளுக்கு ஆளான ஒருவர் தான் டெல்லியைச் சேர்ந்த மூத்த புலனாய்வுப் பத்திரிகையாளர் சுவாதி சதுர்வேதி.

பா.ஜ.க.வின் மதவாத அரசியலை விமர்சித்த தையடுத்து ட்ராலிங் செய்யப்பட்டார். மேலே சொன்ன அனைத்துப் பெண்களும் காவல்துறையில் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை என்று அமைதியாகி விட்டனர் ஆனால் அடிப் படையிலேயே புலனாய்வுப் பத்திரிகையாளரான சுவாதி சதுர்வேதிக்கு மட்டும், “அவரவர் வேலையையே கவனிக்க முடியாத இந்த அவசர காலத்தில், ஒரு சிலரால் மட்டும் எப்படி வலை தளங்களில் ஓயாமல் இயங்க முடிகிறது” என்ற கேள்வி தொக்கி நின்றது. கேள்விக்கான விடையைத் தேடி இரண்டு ஆண்டுகள் புலனாய்வு செய்து கண்டுபிடித்த உண்மைகளை ‘ ஐ ஆம் எ ட்ரால்’ என்கிற புத்தகமாக வெளியிட்டார்.

புத்தகத்தில் அவர் கூறிய விசயங்கள் அத்தனையும் திடுக்கிடும் ரகம். நாம் எந்தமாதிரியான அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறோம் என்று பீதியையும், வேதனையையும் ஒருங்கே தருகிறது. சமூக வலைதளங்களில் பா.ஜ.க. வின் மதவாத அரசியலை விமர்சிப்பவர்களை ட்ராலிங் செய்த தற்குப் பின்னால் ஒரு தனிநபர் இருக்கிறார் என்ற எண்ணத்தை முற்றிலும் தவிடுபொடியாக்கி விட்டதையும், பா.ஜ.க.வின் செய்திப்பிரிவில் ட்ராலிங் செய்வதற்கென்றே ஆயிரக்கணக்கான முழுநேர ஊழியர்கள் பணி அமர்த்தப் பட்டிருக் கிறார்கள் என்ற விசயத்தையும் சுவாதி சதுர்வேதி புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

துணிவுடன் எதிர்கொண்ட தோழர் ஜோதிமணி

அகில இந்திய இளைஞர் காங்கிரசின் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய தோழர் ஜோதிமணி அவர்கள் பணமதிப்பு நீக்கம் மற்றும் காஷ்மீர் தாக்குதல் என மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததையடுத்து போன் மூலமாகவும், சமூக வலைதளங்களில் அவரை ஆபாசமாக விமர்சித்தும், அவரது தனிப்பட்ட எண்ணை வாட்ச்அப் குழுவில் இணைத்தும் ஆபாச, வக்கிரப்பதிவுகளை பி.ஜே.பி.யைச் சேர்ந்த நபர்கள் முன்னெடுத்ததையும் - கண்டித்து காவல்துறையில் புகார் அளித்ததோடு நில்லாமல், பொதுவெளியிலும் இப்பிரச்சனையை தைரியமாகக்கூறி எதிர்கொண்டு வெளிவந்ததும் நம் கண்முன் நிழலாடுகிறது.

பெண் என்பதால், அதுவும் கருப்பான பெண் என்பதால், பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுப் பொறுப் பாளர் தமிழிசை அவர்கள்கூட, பல திராவிடர் இயக்க மற்றும் திராவிட இயக்கத் தோழர்களால்கூட மிகக் கேவலமாகச் கொச்சைப்படுத்தப்படுகிறார். பா.ஜ.க.வின் கொள்கைகள், செயல்பாடுகள் காரணமாக தமிழிசை அவர்களை விமர்சிப்பதும், எதிர்ப்பதும் கட்டாயத் தேவைதான். ஆனால், பாலினத்தை வைத்தும், உருவத்தை வைத்தும் ட்ரால் செய்வது, மீம்ஸ் போடுவது என்பதைத் திராவிடர் இயக்கத்தினரே செய்வது மிகவும் தவறு.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் [India’s Information Technology (IT) Act] 66 A வின் படி இணையத்தில் பெண்கள் மீது ஏவப்படும் வக்கிரச் செய்திகளைப் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை இருந்தும், பெரும்பாலும் ஒரு பயனும் இல்லை. ஏனென்றால் புகார் கொடுக்கச் செல்லும் பெண்களின் புகார்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல், சமூக வலைத்தளங்களில் பெண்கள் தேவையற்ற கருத்துக்களைக் கூற வேண்டாம் என்று காவல்துறை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது.பெண்களுக்கான சட்டங்கள், உரிமைகள், சமத்துவத்தை நிலை நாட்டத் தொடங்கப்பட்ட தேசிய மகளிர் ஆணையகம், 25 ஆண்டுகள் நிறைவடைந்து, இந்தமாதம் வெள்ளி விழாக் கொண்டாடப்பட்டது, ஆனால் மகளிருக் கான சமத்துவமும் மட்டும் இன்னமும் எட்டிய பாடில்லை.

ஊடகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்காக கேரள அச்சுக் கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் கருத்தரங்கில் உரையாற்றிய பெண் பத்திரிகை யாளர் கல்பனா சர்மா, ஊடகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு வெளியிலிருந்து வரும் அச்சுறுத் தல்கள் ஒருபுறம். பணிபுரியும் இடத்தில் உயரதிகாரி களால் உண்டாகும் பாலியல் தொந்தரவுகள், பாலியல் சீண்டல்கள் மறுபுறம் என்று தொடர்வது விரக்தியை உண்டாக்கி வேலையை விடும் சூழ்நிலைக்குப் பெண்களைத் தள்ளுவதாகத் தெரிவித்தார். (பாலியல் தொந்தர வுகள் அற்ற, சமத்துவ மான பணிச்சூழல் பெண்களுக்குக் கனவில் தான் சாத்தியப்படும் போல)

கிளிப்பிள்ளைகளாக வாழ வேண்டாம்

“உலகுக்கு உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம்” எனப் பீற்றிக்கொள்ளும் ஊடகங்கள், பெண்கள் மீது மட்டும் தன் இருண்ட பக்கத்தையே காட்டும் இந்நிலை மாற வேண்டும். அழகுக்கலை, சமையல், வீட்டுக்குறிப்புகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளைப் பெண்கள் தொகுத்து வழங்கச் செய்வதும், நேரடி அனல் பறக்கும் விவாத நிகழ்ச்சிகளை பெரும்பாலும் ஆண்களே நடத்தும் நிலையும் மாற வேண்டும்.

குறிப்பாக, தமிழ்நாட்டுத் தனியார் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பெண்கள், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்ற சிறு வட்டத்திற்குள்ளேயே பறந்து கொண்டிருப்பது போதாது. தனியாக, நிகழ்ச்சிகளை வழங்குவது, விவாதங்களை முன்னின்று நடத்துவது, தலைமை ஆசிரியர்களாக உயர்வது என்ற இலக்குகளை நிர்ணயித்துப் போராட வேண்டும்.

வடமாநிலங்களில் உள்ள இந்தி மற்றும் ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் பார்ப்பன மற்றும் உயர்ஜாதிகளைச் சேர்ந்தவர்களும், கேரளப் பெண்களும் தங்களது திறமையாலும் உயர்ந்து வருகி றார்கள். அதேசமயம், இந்தியா முழுவதும் உள்ள பார்ப்பனரல்லாத பெண் ஊடகவியலாளர்கள் வெறும் அழகுப் பதுமைகளாகவோ, சொல்வதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாகவோ மட்டுமே வலம் வருகின்றனர். கிளிப்பிள்ளைகளாக நாம் இருக்கும் வரை நம்மைச்சுற்றி எதுவும் மாறாது.