சோழமண்டலக் கடற்கையில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் அவன் ஒளிந்து வாழ்ந்து வந்தான். அவன் பாண்டிய நாட்டு பிரஜை. பாண்டிய நாட்டில் தற்போது உருவாகி வரும், சுதந்திர தாகம் கொண்ட குழுக்கள் ஒன்றில் அவன் இருந்து வந்தான். அவன் தாய்நாடு

Lovers விடுதலை அடைய வேண்டும் என வேகம் கொண்டவன். பல காலமாக பாண்டியர்கள், சோழர்களின் அடிமையாகவே வாழ்ந்து வந்தனர்.

பாண்டிய மன்னனோ நாடிழந்து காடுகளில் சுற்றி அலைகிறான். பிரஜைகளோ அடிமை சேவகம் புரிந்து வருகின்றனர். தம் மக்கள் படும் துயரத்தை காண சகியாமல் கோபமுற்ற அவனை, விடுதலை வேட்கை குழுவில், ஒரு துறவி சேர்த்து விட்டிருந்தார். அங்கு போர்ப் பயிற்சிகள் செய்து வந்தனர்.அது ஏறக்குறைய ஒரு சாவேற்றுப் படையாகும். சிறு சிறு குழுக்களாக அந்த விடுதலை வேட்கை குழுக்கள் இயங்கி வந்தனர். அவன் அந்த குழு தலைவனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினான். தலைவனின் பதில்கள் திருப்தியை தரவில்லை. குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி ஒரு வணிகர் போல் வேடம் தரித்து சோழ நாட்டிற்கு வந்தான்.

அவன் தலைமறைவாக வாழ்ந்த அந்த வாழ்வை வெறுத்தான். சோழநாடு வளமுடையது என்கிறார்கள். அதனைப் பார்க்கலாம், மேலும், இருண்ட வாழ்விலிருந்து மீண்டு ஒளிமிக்க வாழ்வைக்காண அவன் மனம் ஆவல் கொண்டது. ஏதாவது ஒரு குக்கிராமத்தில் வாழ்வோம். வணிகர் போல் வேடம் தரித்து வாழலாம் என முடிவெடுத்தான்.

அது ஒரு இயற்கை வளமிக்கதொரு கிராமம். காவிரி கரையின் ஓரத்தில் அமைந்திருந்தது. எங்கும் உயர்ந்த தாழ்ந்த பச்சை வண்ணங்கொண்ட இலைகள் நிறைந்த மரங்கள். சிறிய பெரிய நீர்நிலைகள், சிறிய, பெரிய வாய்க்கால்கள். எங்கும் வயல்வெளிகள். பச்சை வண்ணம் கண்களுக்கு இதமளித்தது. அந்தக் குக்கிராமத்தில் அரசியலின் சுவடுகள் வந்து சேரவில்லை. அங்கே தங்கி விடுவது என முடிவெடுத்தான்.

அந்த கிராமத்தின் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நீர்நிலையில் அமர்ந்து அங்கு வருவோர் போவோரை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகிலிருந்தது படித்துறை. ஒரு முதியவர் வந்து தண்ணீர் அருந்திச் சென்றார். பிறகு மாடுகளை மேய்த்த ஒரு வாலிபன் வந்தான். நண்பகலுக்கு முந்திய நேரம் அது. ஒரு இளம்பெண் வந்தாள். அவள் கையில் உள்ள பாத்திரத்தில் நீர் எடுத்துச் செல்ல வந்திருந்தாள். கருப்பான நிறம். உற்சாகத்துடன் காணப்பட்டாள். மிகவும் துடிப்பானவளாகத் தெரிந்தாள். அருகில் அவளது வயல் வெளிகள் இருக்க வேண்டும். அவளின் தாய் தந்தையர் அங்கு வேலை செய்து கொண்டிருக்க வேண்டும், என நினைத்துக் கொண்டாள். அவள் தண்ணீர் எடுத்துக் கொண்டு படியேறினாள்.

---பெண்ணே தண்ணீர் கொஞ்சம் தருவாயா?

அவளோ குளத்தில் போய் நீயே குடித்துக்கொள், எனக் கூறினாள். சரி, என்று சிரித்தவாறே அதை ஆமோத்தவனாக, உனக்கு சங்கு மாலைகள் வேண்டுமா என, சில சங்கு மாலைகளை காண்பித்தான். அவள் அம்மாலைகளின் மீது ஆர்வம் கொண்டாள். அவைகளை அவன் கொற்கையில் வாங்கியதாகவும், தான் ஒரு நாடோடி வியாபாரி எனவும் கூறினான். அவள் மாலைகளை வாங்குவதில் நோக்கங் கொண்டிருந்தாள். அப்போது தூரமாய் ஒரு மனிதர் ஆவேசமாய் ஓடி வருவதைக் கண்ட அவள், அவனையும் பின்னாள் ஓடி வரும்படி கூறி விரைவாக ஓடினாள். அவனும் ஓடினான். அவளுடைய வயல்களை அவள் அடைந்தாள். ஆவேசமாக வந்த மனிதன் மிகவும் கேவலமான வார்த்தைகளைக் கூறி திட்டியபடி குளத்தின் கரையில் உலவினான். அவளின் அம்மா புலம்பினாள். அவளுடைய அப்பா மிகவும் கோபங்கொண்டிருந்தார். நாடு சீரழிந்து கிடக்கிறது, பேரரசராம், பேரரசர். கோயில் கட்டுகிறாராம். இக்கோயில் அடிமைகளால் கட்டப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட பொன்னும், பொருளும் அல்லவா இதற்கு பயன்படுகிறது என கத்திக்கொண்டிருந்தார். அவளோ தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

அவன் தான் வந்த நேரம் சரியில்லை என உணர்ந்து கொண்டாலும், இளம் பெண்ணையே மனம் சுற்றி வந்தது. சற்று நேரங் கழித்து அம்மாவிடம் தன் மாலை வாங்கும் ஆசையை வெளியிட்டாள். அவர் கோபத்தை அடக்கியவராக, அந்த குளத்திற்கு போகக்கூடாது என எத்தனை முறை கண்டித்திருக்கிறேன். ஏன் வீனாக பிரச்சினைகளை கொண்டு வருகிறாய் என திட்டினார்.

பின்பு மாலைகளை அவனை காண்பிக்கும்படி கூறினார். அம்மாலைகள் மிகுந்த வேலைப்பாடுகள் உடையதாக இருந்தன. அவர்கள் அதனுடைய விலையைக் கேட்டனர். அவனோ தான் ஒரு நாடோடி வியாபாரி எனவும், அவர்களுக்கு சிரமம் இல்லையெனில் அவர்கள் வீட்டில் சில காலம் தங்க அனுமதிக்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டான். 'தான் ஒரு அனாதை', எனவும் அவன் கூறினன். அந்த நடுத்தர வயதுக்காரர் யோசித்தார். ஊர் இருக்கும் நிலையில், அவர்கள் குடும்பம் இருக்கும் நிலையில் அவனை தங்க வைப்பது நல்லது என தோன்றியது. சற்று குழப்பமாகவும் இருந்தது. அந்த இளம்பெண்ணும் அவன் தங்குவதை விரும்பினாள். அந்த வீட்டுப் பெண்மணியோ அதை அவ்வளவாக விரும்பவில்லையெனினும் வெளிப்படையாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

அவர்கள் மதிய உணவு அருந்த அருகிலிருந்த அவர்களது வீட்டிற்கு சென்றனர். தோட்டத்திலேயே வீடிருந்தது. ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாகவே அவர்கள் வீடிருந்தது. அவர்கள் ஒதுங்கியே வாழ்கின்றனர். அந்த இளம்பெண் பெயர் காவேரி.

அவர்கள் இடங்கைபிரிவினர். அவர்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. அவளும், அந்த பெண்மணியும் சேலையை இடப்புறமாக தொங்கும்படி கட்டியிருந்தனர். அவர்கள் ஒதுக்கப்பட்ட சமூகமாக ஆக்கப்பட்டிருந்தனர். அந்த குளக்கரையில் ஆவேசமாக ஓடிவந்தவன் வலங்கைப் பிரிவினன். அவன் ஒரு வீர சைவன், வீர சைவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருவதை அவன் அறிவான். சிதம்பரத்துக்கு அருகில் சில வைணவ குடும்பங்கள் கொளுத்தப்பட்டதை, ஒரு சமண முனிவர் மூலம் அவன் கேள்விப்பட்டிருந்தான். சோழ நாட்டில் சைவர்களின் கொடுமைகள் தாங்க முடியாததாக உள்ளது. சமணர்களை ஏறக்குறைய அழித்தாயிற்று. சைவ, வைணவ போட்டிகள் எங்கும் நடந்து கொண்டிருக்கின்றன. சமூகம் இடங்கை, வலங்கை என பிரிந்து கிடந்தது. அதற்குள்ளும் பல்வேறு பிரிவுகள். வலங்கைப் பிரிவினர், இடங்கைப் பிடிவினரை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தனர்.

சில மாதங்கள் வயவெளிகளில் வேலை செய்து, அக்குடும்பத்தினரின் நன்மதிப்பை பெற்றான். அவர்களை சிறு சிறு பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றினான். அவன் மேல் காவேரிக்கு காதல் ஏற்பட்டுவிட்டது எனக் கூறலாம். அவனுக்கும் அப்படியே. சிறு கீதமாய், சிறு இசையாய் காதல் அவர்கள் மனங்களில் பரவியும், இசைத்தும் கிடந்தது. ஆனால் அவர்களை சுற்றி பயங்கரம் விழித்திருந்தது.

ஊரில் உள்ள வீர சைவர்கள், வலங்கைப் பிரிவினர்க்கு இவன் மேல் ஒரு கண் விழுந்தது. யாரிவன்? எங்கிருந்து வந்தான்? நமது செயல்களுக்கு இடையூறாக அல்லவா இருக்கிறான்? அப்பகுதி சிதம்பரத்தில் உள்ள அரச பிரிதிநிதியின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள் அவனைப்பற்றி சிதம்பரத்துக்கு முறையீடு செய்ய முடிவெடுத்தனர்.

காவேரியும், பாண்டி நாட்டானும் காதல் கொண்டது பற்றிய செய்திகள் காற்றெங்கும் கலந்து சென்றன. காவேரியின் தாய் கிலேசமடைந்தாள். தந்தையோ இதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. அவர், அவரை போல் உள்ள பல இடங்கை பிரிவினரின் குடும்பங்களின் பாதுகாப்பு, அவர்களின் நெருக்கடி பற்றி அதிகம் கவனம் கொண்டிருந்தார்.

கணக்காயர்கள் மிக அதிக அளவில் வரி வசூலித்தனர். விளைச்சலில் பெரும்பகுதி வரியாகவே போய்விடிகிறது. அதுவும் இடங்கை பிரிவனருக்கே அதிக வரி. துயரங்களை சொல்ல முடியாமலும், துப்ப முடியாமலும் அசைத்துக் கொண்டிருந்தனர். வரி வசூலிக்கும் முறைகள் கொடுமையாக இருந்தன. வரிபோக சாபாட்டிற்கே வழியில்லாமால் தவித்தனர். வரி வசூலிக்க வந்தவர்களுடன் இடங்கை பிரிவை சேர்ந்த மல்லன் சண்டையிட்டான். வாய்ச்சண்டையிலிருந்து லேசான கைகலப்பு வரைபோய்விட்டது. 'சோணாடு சோறுடைத்து', என்பதற்கு பதிலாக 'சோணாடு சோற்றுப் பானைகளை உடைத்து', எனலாம் என அவன் கத்தினான்.

காவேரியின் தந்தையோ மிகவும் கலவரமடைந்திருந்தார். அந்தக் கொடியவர்கள் யாது செய்வார்களோ? தீமைகள் ஒன்றுடன் ஒன்று இனைந்து வலுப்பெற்றுக் கொண்டேதான் இருக்கும். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், மல்லனையும் கடிந்து கொண்டார்.

அதிகாலையில் காவேரி கதறிக் கொண்டே ஓடிவந்தாள். 'அய்யோ, அய்யோ', என வேறு சில பெண்களின் கூக்குரல்கள். மல்லனின் வயல்கள், மற்றும் சிலரின் வயல்கள் முற்றிலும் எரிந்து போய், புகை எங்கும் எழும்பிக் கொண்டிருந்தது. மல்லன் இடிந்து போனான். இடங்கை பிரிவினரின் குடும்பங்கள் அழுது தீர்த்தன.

ஊரின் கோயிலின் முன் பெரிய மைதானத்தில் கூட்டம் கூடியிருந்தது. தலைநகரிலிருந்து சில அடிமைகளும், தேவரடியார்களூம், சதுர்வேதிமங்கலத்துக்கு தானமாக கொண்டு வந்து இறக்கப்பட்டனர். தேவரடியார்களூக்கு ஏகப்பட்ட வரவேற்பு. அடிமைகள் ஏறக்குறைய விலங்குகளைப் போல நடத்தப்பட்டனர். அவர்கள் இலங்கை, கடாரம், கலிங்கம், போன்ற பல நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தனர். அடிமைகளின் கண்களில் ஏளனமும், கோபமும், வெறியும், கசிந்து கொண்டிருந்தது. இனிமேல் அடிமைகளை வைத்து ஊரில் உள்ள இடங்கைப் பிரிவினரை அடக்கி ஆள்வார்கள். தேவரடியார்களுடன் உல்லாசமாக பொழுது போக்கி திரிவார்கள். அடிமைகளின் தேசமின்றி இது வேறல்ல என பாண்டி நாட்டான் நினைத்துக் கொண்டான்.

படைமான்ய தலைவரின் பிரிதிநிதி, கணக்காயர், கோயில் அதுகாரி, வலங்கைப் பிரிவினர் சிலர், ஆகியோர் அதிகாரம் செலுத்தும் ஊரவையிடம் இடங்கைப் பிரிவினர் முறையிட்டனர். வரிகளை குறைக்க வேண்டும் இல்லையேல் பட்டினி கிடந்துசாவதுதான் எங்கள் விதி, என வேண்டினார். ஊரவை ஏளனம் பேசியது. 'வரிகளை குறைக்க முடியாது'. மேலும் இதுபோல் தைரியமாக வந்து முறையிட்டதற்காக மல்லனையும், பாண்டி நாட்டானையும் பிடித்து அரசாங்க போர்வீரர்களிடம் ஒப்படைத்தனர். மக்கள் வெளிரி ஓடிப்போயினர்.

மல்லனும், பாண்டி நாட்டானும் போர் வீரர்களால் இழுத்து செல்லப்பட்டனர். இராஜங்க குற்றங்களை சுமத்தி அடிமைகளாக விற்று விட முடிவு செய்திருந்தது ஊரவை. இவைகளை கேள்விப்பட்ட காவேரி அதிர்ச்சி அடைந்தாள். இடங்கைப் பிரிவினர் அடங்கி வேலைகளை செய்ய ஆரம்பித்தனர்.

காவேரிதான் தந்தையிடம் அழுது அரற்றினாள். ஏறக்குறைய பைத்தியம் பிடித்தவள் போல் கொண்டாள். காவேரியின் தந்தை கையொடிந்தவரானார். இடங்கைப் பிரிவின் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர் ஓடிப்பபோய்விட்டனர். மல்லனும், புதியவனும் (பாண்டி நாட்டான்) சாளுக்கிய தேசத்தில் அடிமைகளாக விற்கப்பட்டனர் என்று கேள்விப்பட்டார். எஞ்சிய சிலரும் மாடுகளாகி உழைக்க ஆரம்பித்தனர். அது மட்டுமே அவர்களை உயிர் பிழைக்கச் செய்யும் வழி.

காவேரி ஊரில் உள்ள சிவன் கோயிலுக்குள் நுழைய முற்பட்டு, வெளியில் அரசாங்க அடிமைகளால் விரட்டப்பட்டாளாம், என காவேரியின் தாய், தந்தையிடம் கூறி அழுதாள். நாம் அனைவரும் வேறெங்காவது பஞ்சம் பிழைக்க போய்விடுவோம், என அவர் முடிவெடுத்தார். இன்று இரவோடு இரவாக ஊரை விட்டுப் போவது என முடிவெடுத்தார்.

அதிகாலையில் அவர்கள் மிச்சமிருந்த ஆடு, மாடுகள், பொருட்களுடன் வெளியேறி திக்கு தெரியாமல் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். நன்றாக விடிந்தபின்தான், 'காவேரி அவர்களுடன் இல்லை', என உணர்ந்தனர். அதிர்ச்சி அடைந்தனர். திரும்பவும் போய் தேட முடியாது. காவேரி எங்கே சென்றாளோ? தாய் கதறி அழ முடியாமல் கண்ணீர் விட்டழுதாள். காதலன் போன இடத்துக்கு தானும் போவதாக காவேரி கூறிகொண்டிருந்ததாக அவளின் தோழி கூறினாள். பலவாறு யோசித்தும் வழி ஏதும் புலனாகவில்லை. பயணத்தை தொடர்வதைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.

சில வாரங்களுக்குப் பிறகு நாகப்பட்டணத்தைச் சார்ந்த ஒரு பெளத்த துறவி ஒரு செய்தியைக் கூறினார். தலைநகரில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பிரமாண்டமான கோயிலின் பாதி கட்டி முடிந்த கோபுரத்திலிருந்து ஒரு இளம் பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டாளாம். அதிகாலையில் இது நடந்தேறியுள்ளது. ஒரு கட்டிடத் தொழிலாளி மட்டுமே இதனை பார்த்துள்ளான். அவள் கையில் காவேரி என பச்சை குத்தியிருந்ததாம்.

- ம.ஜோசப்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It