ஆன்ற தமிழ்ச் சான்றோரே

தொல்காப்பியம்

பத்துப்பாட்டு

எட்டுத்தொகை

சிலப்பதிகாரம்

மணிமேகலை

சீவகசிந்தாமணி

வளையாபதி

குண்டலகேசி

கம்பராமாயணம்

பெரிய புராணம்

மறந்துவிட்டேன்

திருக்குறள்

எல்லாவற்றாலும் சுட்டப்பட்டவள் நான்

தாய்மொழி -தமிழ்

பெயர் -மருதாயி

தொழில் பரத்தை

என்னைக் கடமைகள் எனலாம்

மதுரையைக் கொளுத்திய

கற்பரசியே

தலையாய கற்பினள் அல்லன்

உங்கள் முத்தமிழ் அளவுகோலில்

கற்புத் தோன்றிய அன்றே

நானும் தோன்றி விட்டேன்

ஐயா

ஆன்ற தமிழ்ச் சான்றோரே

என்னிடம் முதலில் வந்தவன்

உங்கள் கொள்ளுப்பாட்டன்

இப்போது வந்துபோனவன்

கொள்ளுப் பேரன்

என்றாலும்

பாட்டன் எதிர்பார்த்தான் பாட்டியிடம்

‘பெய்யெனப் பெய்ய’

தன் சடலம் எரியும்போது

உடல் வேக

பாட்டி ஒருபோதும்

பாட்டனிடம் கேட்கவில்லை

பெய்யெனச் சொல்க

உடல் வேக

இருக்கையிலே சில சமயங்களிலும்

போகையிலே சிலசமயங்களிலும்

பாட்டி

தன் தங்கையைத் தாரமாக்குபவள்

இல்லாவிடினும் இவன் மேய்வான்

பத்தினியைப் பறிகொடுத்த பாட்டனுக்கு

மச்சினியை கைப்பிடித்த ஆறுதல்

இல்லத்தரசி இருக்க என்னிட ம்

வந்தவனுக்கும்

மனைவி இருக்க மச்சினி யைப்

பிடித்தவனுக்கும்

ஒரு கீறலும் இல்லை கற்பில்

தமிழ்க் குடும்பம் புனிதமானது

தமிழ்ச் சமுதாயம் காலகாலமாய்க்

கற்புடையது

விரும்பியவனைச் சேர்வது

கற்பாகாது

கட்டியவணை ஒப்புவதுதான் கற்பாகும்

கட்டியவன் முகமன்றி

வேறுமுகம் கூடாது

காண

கட்டியவனின் நிழலின்றி

வேறு நிழலில்லை.

அய்யா! ஆன்ற தமிழ்ச் சான்றோரே

கற்பரசி நினையா விடினும்

கண்டவன் அவளை நினைத்தால்

அவள் கற்புக்கரசி ஆகமாட்டாள்

கற்புடைய பெண்டிர் பிறர்நெஞ்சு புகார்

தமிழ்நாட்டுக் குரங்கும் மீனும்

கற்புடையவைதாம்

கைம்மை உய்யா காமர் மந்தி

ஓங்கு மலை அடுக்கத்துப்

பாய்ந்து

உயிர் செகுக்கும்

தன் கணவன் மீது அல்லாத

வேறு ஆண் மீனைத் தொடநேர்ந்த

மனைவி மீனை

வெட்கம் புடுங்கித் தின்னும்

தற்கொலை செய்ததோ என்னவோ

தண்ணீரில்

உடன்கட்டை ஏறிய பத்தினிப் பெண்ணை

பாராட்டாத

தமிழ் எழுத்தில்லை

பெரியார் எழுத்தைத் தவிர

பாவாடையும் சேலையுந்தான்

தமிழ்ப் பண்பாடு

சுடிதாரும் பேண்ட்டும்

கவர்ச்சிக் கன்றாவி

மொபெட் ஓட்ட பேண்ட்டுதான் வசதியா

மொபெட் ஓட்டாதே

படை நடை பயிலாதே

தமிழ்ப் பெண் அடக்கமானவள்

ஆறடிக் கூந்தல் இன்னுமோர் அடையாளம்

கூந்தல்வார நேரமில்லையா

மூக்கடைப்பு நோய்த் தொல்லையா

கூந்தலைக் குறைக்காதே

தமிழ் குறைந்து போய்விடும்

ஒருவனுக்கு உண்மையாய்

இருப்பதே தமிழ்க் கற்பு

அவன் கல்லானாலும் மண்ணானாலும்

கட்டியவள் ஏற்கனவே கன்னிதானே

என்று எதிர்பார்ப்பதே

தமிழ் மரபு நியாயம்

தமிழர் அனைவரும் உறுதி கொள்ளவும்

இங்கிலாந்து நடத்திய

கன்னிமைச் சோதனையை

இல்லறம் தொடங்குவோன்

நடத்திப் பார்க்கலாம்

தேறினால் மட்டும்தான்

பண்பாடுதோறும்

தமிழ்க் குடும்பம் புனிதமானது

அய்யாஆன்ற தமிழ்ச் சான்றோரே

உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த

காலகாலமாய் நானும் நடக்கிறேன்

கற்புத் தோன்றிய அன்றைக்கே

நானும் தோன்றிவிட்டேன்

தாய்மொழி தமிழ்

பெயர்: மருதாயி

தொழில் : பரத்தை