இந்தியாவின், தமிழகத்தின் சமூக அரசியல் பின்னணியில் தமிழகத்தின் தொன்மையும் வரலாறும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த சூழலில், கீழடி தந்த புத்தொளியால் வெகுமக்கள் மத்தியில் தொல்லியல் மற்றும் அகழ்வாய்வுகள் குறித்த புரிதலும் ஆர்வமும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.

இத்தகைய காலச்சூழலை முழுமையாகப் புரிந்து கொண்டு திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை, தொல்லியல் குறித்த இணைய வழிப் பயிலரங்கிணை ஒருங்கிணைத்திருப்பது பாராட்டுக்கு உரியது. ஏழு நாட்களும் பயிற்றுநர்களாக வருகை புரிந்து சிறப்புரை வழங்கிய அறிஞர் பெருமக்கள் அனைவரும் தமது நீண்ட கால உழைப்பின் ஆழ அகலங்களை நிறைவாக வெளிப்படுத்தினார்கள்.

முதல் நாள் உரையை வழங்கிய ஆர்.பாலகிருஷ்ணன் ஐயா தொல்லியல், வரலாறு குறித்த தெளிவான புரிதலை வழங்கினார்கள். அவரது உரையின் சில முக்கியமான பகுதிகளை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இலக்கியம் என்னும் முதுமக்கள் தாழி

• இலக்கியமும் அகழ்வாராய்ச்சியும் என்ற தலைப்புக்கான உருவகமே இத்தலைப்பு

• சரியான வரலாற்றை உரிய தரவுகளோடு நாம் கட்டமைக்கவில்லை என்றால் அச்சமூகத்தில் கட்டுக்கதைகளே வரலாறுகளாகக் கட்டமைக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு விடும்..

• இலக்கியம் வரலாற்றுக்குத் தரவாகுமா என்றால் 1. தொன்மையான சமூகத்தின் இலக்கியங்கள் வரலாற்றுத் தரவாகும் 2. உண்மையான சமூகத்தின் இலக்கியங்கள் வரலாற்றுத் தரவாகும்.

• வரலாற்றைக் கட்டமைக்க இலக்கியங்கள் வழிகாட்டும், ஒளிகூட்டும்.

• வரலாற்றை எழுதுவதில் வரலாற்று ஆசிரியனின் சார்பும், அரசியலும் தவிர்க்க இயலாத வகையில் இடம்பெற்று இருக்கும்.

• சங்க இலக்கியங்கள் வரலாற்றுத் தரவுகளாக மதிக்கப்படாமைக்குப் பல சமூக அரசியல் காரணங்கள் உள்ளன.

• மனித குல வரலாற்றில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் 99 சதவீதம் என்றால் மீதமுள்ள 1 சதவீதமே வரலாற்றுக் காலம்.

• எழுத்துக்கு முந்தைய வரலாற்றைக் கட்டமைக்கத் துணைபுரிவன தொல்லியல் அகழ்வாய்வுகள்

• இலக்கியங்கள் தாம் எழுதப்பட்ட காலத்தின் தரவுகளை மட்டும் சொல்லாமல் அதற்கு முந்தைய நெடுங்கால மனித சமூகத்தின் வரலாற்றையும் பொதிந்து வைத்துள்ளன.

• வரலாறு சமூகத்திற்கானது, மக்களுக்கானது என்ற புரிதல் வேண்டும்.

• சங்க இலக்கியங்கள் வரலாற்றுக்கு வழிகாட்டும் ஒளிகூட்டும் தரவுகளாகும் என்பதே இந்தப் பேச்சின் நோக்கம்.

தமது உரையின் நிறைவாக “கலம்செய் கோவே” என்ற சங்க இலக்கியப் பாடலுக்கு அவர் தந்த விளக்கமும், கீழடி, லோத்தல் அகழ்வாய்வுகளின் போது கிடைத்த பகடைக்காய்கள் குறித்த விளக்கமும் சிறப்பானவை.

இரண்டாம் நாள் 13-05-2020 உரையினைத் தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் ஐயா வழங்குவதாகப் பயிலரங்க நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தாலும், தவிர்க்க இயலாத தொழில் நுட்பச் சிக்கல்களால் அவர் தமது உரையை வழங்க இயலவில்லை. இக்கட்டான அந்தச் சூழலில் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆ.பிரபு அவர்கள் தமது தொல்லியல் களஆய்வுப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மூன்றாம் நாள் 14-05-2020 உரையை வழங்கிய சுகவன முருகன் அவர்கள் இந்திய, தமிழகத் தொல்லியல் துறையின் முன்னோடிகளையும் அவர்களின் அரும்பெரும் பணிகளையும் நினைவுகூர்ந்து தமது உரையைத் தொடங்கினார்.

• 'வட தமிழகத்து தொல்லியல் சான்றுகள்' என்னும் தலைப்பில் தொல்லியல் ஆய்வாளர் திரு. சுகவன முருகன் அய்யா அவர்களின் ஆய்வுரை மிகச் சிறப்பாக அமைந்தது.

• தொல்லியலில் மிகச் சிறப்பான பகுதிகளான பாறை ஓவியங்கள், ஈமச் சின்னங்கள், பிராமி எழுத்துகள், நாணயங்கள் என அனைத்துச் சான்றுகளையும் சுட்டிக்காட்டி தெளிவான படங்களுடன் நமது உரையை வழங்கினார்.

• பாறை ஓவியங்கள், நடுகற்கள், கற்திட்டைகள், ஈமப் பேழை, நாணயங்கள், பிராமி எழுத்துக்கள், சுடுமண் பானைகள் மற்றும் பொம்மைகள், வட தமிழக வரலாற்றுத் தடயங்கள் குறித்த சுகவன முருகன் ஐயாவின் உரையில் ஆர்ப்பாட்ட மில்லாத ஆழம் தெரிந்தது. பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கும் மிகத் தெளிவாக விளக்கமளித்து மனநிறைவு கொள்ளும் வகையில் உரையாற்றிய அன்னாருக்கு நன்றிகள் பல.

நான்காம் நாள் 15-05-2020 உரையை வழங்கியவர் மத்திய தொல்லியல் துறையின் ஆய்வறிஞர் அருண்ராஜ் அவர்கள். தமது பரந்துபட்ட களப்பணி அனுபவங்களின் வழியாகத் தமது உரையை வழங்கினார்.

• புகைப்படங்களுடன் கூடிய அவரின் தொல்லியல் களஆய்வு அனுபவ உரை மிகுந்த சுவை பயப்பனவாகவும் ஆர்வமுட்டக் கூடியதாகவும் அமைந்தது.

• தொல்லியல் அறிஞர் அருண்ராஜ் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வான அரிக்கமேடு குறித்து தமது உரையில் அவர் சிறப்பாக எதனையும் பதிவு செய்யாதது வருத்தமாய் இருந்தது.

• வரலாற்றுக் கதையாடல்களின் வழி தொல்லியல் வரைபடம் நீள்கிறது என்ற கருத்தியலோடு தொல்லியலின் மாற்று உரையாடலின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

• புனைகதைகளோடு வரலாற்றுச் சான்றுகளை ஒப்பிட்டுப் பார்த்து கள ஆய்வு மேற்கொள்வது சரி. ஆனால் பக்தி இலக்கியங்களோடு குறிப்பாக இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசக் கதைகளின் உண்மைத் தன்மையைத் தொல்லியல் சான்றுகளோடு நிறுவ முடியும் என்ற அவரின் தொனி கவலை அளித்தது.

• கீழடி போல் ஆயிரக்கணக்கான தொல்லியல் ஆய்வுகள் வடஇந்தியாவிலும் உண்டு என்று போகிற போக்கில் சொல்லிச்சென்ற அருண்ராஜ் அவர்கள் அதற்கான சான்றுகளையும் சுட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

• மத்திய அரசு தொல்லியல் துறையின் அதிகார அரசியல் பார்வை அவரின் பேச்சிலும் வெளிப்பட்டது.

ஐந்தாம் நாள் 16-05-2020 உரையை வழங்கியவர் தொல்லியல் அறிஞர் காந்திராஜன் 'கதை சொல்லும் பாறைகள் - பயணமும் ஆய்வும்' என்ற தலைப்பிலான சிறப்புரை மிகச் சிறப்பு.

• நூற்றுக்கணக்கான பாறை ஓவியங்களைக் காட்சிப்படுத்தியதோடு அந்த ஓவியத்தின் நுணுக்கத்தையும் அந்த ஓவியங்களை வரைந்த பழங்கால மனிதக் குழுவின் நுட்ப ஆற்றலையும் வெளிப்படுத்தி அவர் வழங்கிய கருத்துரை உண்மையில் பயிற்சியாளர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது.

• ஒரு ஓவியருக்கே உரிய தொழில்நுட்ப அறிவோடு கூடிய அவரின் விளக்கங்கள் அருமை. அவரின் நுட்பமான அவதானிப்பு வியப்பின் உச்சம். பழங்கால ஓவியங்களை இவ்வளவு சிறப்பாக இதுவரை யாரும் விளக்கியதாகத் தெரியவில்லை.

• பாறை ஓவியங்களின் காலத்தைக் கணக்கிடுவதற்கான முறைகளை தமது உரையின் நிறைவுப் பகுதியில் அவர் சுட்டிக் காட்டியது பயனுள்ளதாக அமைந்தது. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் காலக் கணக்கீடு தொடர்பாக அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

• பெரும்பாலும் வேட்டைச் சமூகத்தின் பதிவுகளாகவே இவ்வகை ஓவியங்கள் அமைந்துள்ளன. ஓவியங்களில் இடம்பெற்றுள்ள விலங்குகள், பறவைகள் குறித்த விளக்கங்கள் பயனளிப்பன.

• இனி வரும் காலங்களில் பாறை ஓவியங்கள், குகை ஓவியங்களைத் தேடிப் பயணிக்கவும் பார்க்கும் ஓவியங்களை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கும் காந்திராஜன் ஐயாவின் உரை வழிகாட்டியது என்பது உண்மை.

ஆறாம் நாள் 17-05-2020 உரையை வழங்கியவர் தொல்லியல் முனைவர் க. மோகன்காந்தி. வரலாற்றைப் பாதுகாக்கும் திருப்பத்தூர் மாவட்ட மலைவாழ் மக்கள் என்ற தலைப்பில் அவர் தமது உரையை வழங்கினார்.

• திருப்பத்தூர் மாவட்ட ஏலகிரி மலை, ஜவ்வாது மலை இரண்டு மலைகளையும் அம்மலைகளின் மலைவாழ் மக்களையும் அவர்களது தொன்மைப் பண்பாட்டினையும் அங்கு கிடைக்கும் தொல்லியல் எச்சங்களையும் அவர் முறைப்பட வகுத்தும் தொகுத்தும் வழங்கினார்.

• மலைபடு கடாம் விவரிக்கும் நவிர மலை இன்றைக்குப் பருவத மலை என்றழைக்கப்படும் மலை அன்று என்பதனையும், ஜவ்வாது மலைதான் நவிர மலை என்பதனையும் பல்வேறு சான்றுகளால் குறிப்பாகக் கல்வெட்டுச் சான்றுடன் மோகன் காந்தி நிரூபித்துக் காட்டினார்.

• ஏறுதழுவல் நடுகல்லைக் கண்டுபிடித்தமை குறித்த விளக்கம் நன்று

• திருப்பத்தூர் பெயர் காரணத்தை சிறப்பாக விளக்கியுரைத்தார்.

• புலி குத்திப் பட்டான் நடுகல் குறித்தும் புலி குத்தி சீயன் (தாத்தா) குறித்தும் தெளிவாக விளக்கினார்.

• மலைபடுகடாம் – ஜவ்வாது மலையை விவரிக்கிறது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக மலைபடுகடாம் நூலின் பெயர் கல்வெட்டின் இடம் பெற்றுமை குறித்த சான்று அரிதானது.

• பதியெழு அறியாப் பழங்குடி மன்னன் நன்னன் சேய் நன்னன் பற்றிய விளக்கம் புதுமையாக இருந்தது

• மலைபடு கடாம் – நவிர மலை –நன்னன் மூன்றையும் இலக்கிய கல்வெட்டுச் சான்றுகளால் பொருத்திக் காட்டியமை அருமை.

• ஜவ்வாது மலையில் உள்ள பெருங்கற்கால கல் வீடுகள் கல்திட்டைகள் பற்றிய செய்தி புதுமையானது.

• குவியல் குவியலாக கற்கோடாரிகளைக் கண்டது அரிய காட்சி.

ஏழாம் நாள் 17-05-2020 உரையை வழங்கியவர்கள் மூவர்.

முதல் உரை: தொல்லியல் அறிஞர் முனைவர் ர.பூங்குன்றன் ஐயா – தலைப்பு: தொண்டை மண்டல மாட்டுப் பொருளாதாரம்.

இரண்டாம் உரை: முனைவர் ஆ.பிரபு – தலைப்பு திருப்பத்தூர் வட்டாரத் தொல்லியில் தடயங்கள்.

மூன்றாம் உரை: முனைவர் கி.பார்த்திபராஜா – தலைப்பு: தொல்லியல் அரசியல்.

முதல்உரை – கி.பூங்குன்றன் ஜயா:

பூங்குன்றன் ஜயா முல்லைச் சமூகத்தின் ஊடாகப் பொருளாதாரம் எவ்வாறு வளர்ச்சி பெற்று வளர்ந்தது என்பதனையும், முல்லை நில வாழ்க்கையின் சமூக அரசியல், பொருளியல் பின்னணிகளைத் தொல்லியல் சான்றுகளோடு குறிப்பாக நடுவல் முதலானவற்றோடு தொடர்புபடுத்தி உரையாற்றினார்.

அவர் உரையின் முக்கியமான தரவுகள் பின்வருமாறு:

• தமிழ்ச் சமூகத்தில் முல்லைநில வாழ்க்கையில் முதன்முதலாக வருவாய் ஈட்டல் தொடர்பான வணிக வாழ்க்கை தொடங்கியது. மாடு என்ற சொல் ஆநிரைகளைக் குறித்தது.

• மேற்குத் தொண்டை மண்டலத்தில் வரலாற்றுக் காலம் தொடங்கிப் பல்லவர் காலம் வரை மாட்டுப் பொருளாதாரமே நிலை பெற்றிருந்தது.

• ஆநிரைச் சமூகத்திற்கும் சாம்பல் மேடுகளுக்குமான உறவு கவனிக்கத்தக்கது. சாம்பல் மேடுகளை மிதித்துக் கடப்பதிலிருந்தே தீமிதிச் சடங்குகள் தோற்றம் பெற்றன.

• கிடை என்ற சொல்லில் இருந்தே இடை, இடையர் முதலான வழக்குகள் தோற்றம் பெற்றன.

• முல்லை நிலத்தில்தான் வேளிர்கள் போர் என்பதனைத் தொடங்கினார்கள். வேள்- ஒளியர் ஒப்பு நோக்கத்தக்கன.

• பல்லவர்கள் வேளிர் குலத்தினரே – கால்நடை வளர்ப்புச் சமூகத்திலிருந்தே வேளிர்கள் பல்லவர்கள் எழுச்சி பெற்றனர்.

• முல்லை நில அரண் புறவு எனப்பட்டது. புறவு என்பது கால்நடை மேய்ச்சல் நிலம்.

• வெட்சி, கரந்தைப் போர்கள் மாட்டுப் பொருளாதாரத்தோடு தொடர்புடையது. மழவர் – மறவர் இருவேறு குலங்கள். மழவர்- நிரை கவர்வோர், மறவர் நிரை மீட்போர்.

தொல்லியல் குறித்த முனைவர் கி. பார்த்திபராஜாவின் உரையில் தொல்லியல் குறித்த விழிப்புணர்வின் தேவை குறித்து ஆக்கப்பூர்வமான உரையினை வழங்கினார். அவர் உரையின் சில முக்கியமான பதிவுகள் பின்வருமாறு...

• ஓர் இலக்கிய வரலாற்று மாணவனாகத் தொல்லியலை நாம் எவ்வாறு பார்த்தல் வேண்டும் என்பது மிக முக்கியமான வினா.

• பண்டைய காலப் பெருமை பேசுவதற்காக மட்டுமே தொல்லியல் பயன்பட வேண்டுமா? பண்டைய பெருமைகளிலிருந்து நாம் உத்வேகம் பெறுவது தேவைதான், தவறில்லை. ஆனால் அதிலேயே நாம் தேங்கிவிடக் கூடாது.

• வரலாறு கடந்த காலத்தை மட்டும் பேசவில்லை. அது சமகாலத்தையும் பேசுகிறது. சமகால அரசியலை சமகால வரலாறுகளே பதிவு செய்கின்றன.

• காலந்தோறும் தமிழ்ச் சமூகம் வரலாற்று உணர்வற்று இருந்து வந்துள்ளமையை நாம் கவலையோடு பார்க்க வேண்டி உள்ளது.

• தமிழர்களுக்குள்ள வரலாற்று குருட்டுணர்வு கவலையளிக்கிறது.

• தொல்லியல் சான்றுகளின் வழியாக சமூக நிறுவனங்களின் வரலாறு மற்றும் வளர்ச்சி மாற்றம் இவற்றைப் பார்க்க வேண்டி உள்ளது.

• வடவர்களின் அதிகார அரசியலை எதிர்கொள்ள நமக்குத் தொடர்முயற்சி தேவை. அறிவியல் பார்வையோடு கூடிய களப்பணிகள் மூலம் உண்மையைத் தொடர்ந்து உரத்துப் பேசவேண்டும்.

நிறைவாக உரை வழங்கிய முனைவர் ஆ.பிரபு அவர்கள் இரண்டாம் உரையின் போது அவர் விரித்துரைத்த களஆய்வுப் பயண அனுபவங்களுக்கான சான்றுகளைக் காட்சிப்படுத்தி தம் உரையை நிறைவு செய்தார்.

• குறிப்பாக அவர் களஆய்வு செய்த குண்டு ரெட்டி ஊரில் கிடைத்த (ஏலகிரியின் பின்புறமுள்ள மலைச்சரிவு) சுடுமணி குழாய்கள், கருப்பு சிவப்பு பானையோடுகள், புதிய கற்காலக் கற்கோடாரிகள், வட்டச் சில்லுகள், சுடுமண் பொம்மையின் பகுதிகள், இரும்பாலான அம்பின் ஒரு துண்டு, எழுத்துக் கீறல்களோடு கூடிய சிவப்பு கருப்பு பானை ஓடுகள், சுடுமணி சிவப்பு மணி, மலைக்குகை முகப்பில் காணப்படும் பிராமி எழுத்து போன்ற கீறல்கள், தந்த ஆபரணத்தின் ஒரு பகுதி, எலும்புத் துண்டுகள், சுடுமண் கெண்டி குழிழி போன்ற பகுதிகள், இரும்புத் தாதுத் துண்டுகள் போன்ற தொல்லியல் பொருட்களைக் காட்சிப் படுத்தினார்.

• மேலும் செங்குன்றம் பகுதியில் களஆய்வு செய்தபோது கண்டெடுத்த, பதிவு செய்த கற்பதுக்கை, கல்திட்டை, சதிக்கல், மூதேவி கழுமரம் ஏறிய அரசன் புடைப்புச் சிற்பம் முதலான அரிய சான்றுகளைக் காட்சிப்படுத்தினார்.

- முனைவர் நா.இளங்கோ,
தமிழ்த் துறைத் தலைவர்,
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி,
புதுச்சேரி-8