உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி 2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின்பு பலமுறை வலியுறுத்தியும் இன்று வரை தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்தியா விடுதலையடைந்து ஒன்றரை ஆண்டுகளில் இராஜஸ்தான் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது. தொடர்ந்து உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது.

2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின்பு 2015இல் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழு உயர்நீதிமன்ற மொழியாக, அந்தந்த மானில மொழிகளை ஆக்குவதற்கு நீதித்துறையிடம் ஆலோசனை கேட்கத் தேவையில்லை எனத் தீர்மானித்த பின்னரும், உச்சநீதிமன்ற மறுப்பைக் காரணம் காட்டி நடுவண் அரசு நமது மொழி உரிமையை மறுத்து வருகிறது.

மதுரையை மையப்படுத்தி பல முறை வழக்கறிஞர்கள் போராடி வந்தனர். டெல்லியில் இதே கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் போராட்டம் நடத்தி வழக்கறிஞர் கு.ஞா.பகவத்சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். இயக்கங்களின் பங்களிப்போடு உயர்நீதிமன்றத்தில் தமிழ் - மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. வணிகர் சங்கப் பேரவை சார்ர்பில் 2016 சனவரி 1 அன்று ஒரு நாள் மதுரையில் அடையாளப் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் தமிழ்- மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பில் மதுரையில் 2017 கடந்த மார்ச் மாதம் ஒரு நாள் மதுரையில் அடையாளப் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்தரவு பெற்று காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்த உள்ளோம். இக் கோரிக்கையில் உடன்பாடுள்ள இயக்கத் தலைவர்களாகிய தாங்கள் சூலை 27 முதல் - 31ஆம் நாளுக்குள் போராட்டக் களத்திற்கு வருகை தந்து தங்கள் ஆதரவை நேரில் வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------

சூலை - 27, 2017 மதுரை, காளவாசல், காலை 9 மணி, முதல்


காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்போர்:

வழக்கறிஞர் கு.ஞா.பகவத்சிங்,
மூத்த வழக்கறிஞர் வே.முருகன்,
வழக்கறிஞர் வேல்முருகன்,
வழக்கறிஞர் எழிலரசு,
வழக்கறிஞர் திசையேந்திரன்,
வழக்கறிஞர் செல்வகுமார்
மெய்யப்பன்,
முத்துப்பாண்டி,
மதுக்கூர் மொய்தீன்

இந்திய அரசே! உச்சநீதிமன்றமே!

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவதற்கான 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்திற்கு உடனே குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுக் கொடு! என வலியுறுத்துவோம். வாரீர்!

தமிழ் மொழி உரிமைக்காக, சனநாயக உரிமைக்காகப் போராடும் முற்போக்கு, சனநாயக அமைப்புகளின் தலைவர்களே! தோழர்களே! ஆர்வலர்களே! வாரீர்!

தமிழ்நாட்டின் நீதித் துறையினரே!
வழக்கறிஞர் பெருமக்களே! வாரீர்!
மாணவர்களே! இளைஞர்களே!
பங்கேற்பீர்! போராட்டத்திற்கு துணை நிற்பீர்!

நமது மொழி! நமது உரிமை!
வாருங்கள் தோழர்களே!
போராட்டத்தைப் பலப்படுத்துவோம்!
போராட்டத்திற்குத் துணை நிற்போம்!

- மீ.த.பாண்டியன், ஒருங்கிணைப்பாளர், உயர்நீதிமன்றத்தில் தமிழ் - மக்கள் இயக்கம்