தமிழில் உள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்று சிலப்பதிகாரம். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகப் போற்றப்படும் சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என்ற பெருமையை உடையதாகும்.

‘வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி

ஆரம் படைத்த தமிழ்நாடு’

என்று பாரதியாரும் சிலம்பின் மாண்பைச் சிறப்பித்துப் பாடுவார். சிலப்பதிகாரம் கண்ணகி, கோவலன், மாதவி போன்ற மாந்தர்களின் வாழ்வைச் சொல்வத னூடாக அக்காலத் தமிழ்மக்களின் வாழ்க்கைக் கூறு களையும் விரித்துச் சொல்கிறது. இஃது சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றிப் பாடும் காப்பியம். கண்ணகி சோழநாட்டுப் பெண், வாழ்வில் பல துன்பங்களை ஏற்ற அவள் தன் கணவன் கோவல னோடு பாண்டி நாட்டில் குடிபுகுந்தால். அங்கே அவள் கணவன் கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்படுகிறான். இப்பழிக்கு ஈடாகப் பாண்டியன் தன் இன்னுயிரையே தருகிறான். மன்னன் தவற்றையே தட்டிக் கேட்ட வீரப் பெண் கண்ணகிக்குச் சேர மன்னன் செங்குட்டுவன் சிலை வடித்துச் சிறப்புச் செய்கிறான்.

இக்கதையினூடாக மூவேந்தர்களின் வாழ்நிலையை நாம் இப்படி இணைத்து நோக்கலாம். சிலப்பதி காரத்தின் காண்டங்கள் மூன்று. அவை புகார், மதுரை, வஞ்சி என முறையே சோழர், பாண்டியர், சேரம் என மூவேந்தர்களும் ஆண்ட தலைநகர்களின் பெயர்களாலேயே அமைந்துள்ளன. தமிழை இயல், இசை, நாடகம் என முத்தமிழாகப் போற்றி வரு கிறோம். இம்மூன்றின் கூறுகளும் ஒருங்கே கொண்ட உயர்ந்த நூல் சிலப்பதிகாரம். சைவம் வளர்க்கச் சேக்கிழார் பெரியபுராணம் பாடினார். பௌத்தத்தைச் சிறப்பிக்க எழுதப்பட்ட நூல் சீத்தலை சாத்தனாரின் மணிமேகலை. திருத்தக்க தேவர் சமயத்தைப் பாராட்ட சீவகசிந்தாமணியை இயற்றினார். ஆனால் சிலப்பதி காரத்தில் எல்லாச் சமயக் கருத்துகளும் பொதுவில் அமைந்து பொலிகின்றன.

இறைவனையும், நாடாளுமம் வேந்தனையும் ஏற்றிப் பாடுவதே காப்பியம் என்ற பொதுவான இலக்கணத் திற்குப் புறம்பாக சாதாரண மக்களைக் கதைத் தலை வராக்கிப் பாடியதால் சிலப்பதிகாரம் கூடுதல் சிறப்பைப் பெறுகிறது. மேலும் கோவலன் என்கிற ஆணை விடக் கண்ணகி என்கிற பெண்ணே இக்காப்பியத்தில் முன் நிறுத்தப்படுகிறாள். அவள் அணிந்த காற்சிலம்பின் பெயரே காப்பியத்தின் பெயராகி உள்ளது.

கடவுள் வாழ்த்து இல்லாமல் எந்த இலக்கியமும் பாடப்படுவது இல்லை. ஆனால் கடவுள் வாழ்த்தே இல்லாமல் இயற்கை வாழ்த்தோடு தொடங்குகிறது இக்காப்பியம். திங்கள், ஞாயிறு மா மழை, பூம்புகார் என இயற்கைச் செல்வங்கள் இங்கே வாழ்த்தப் படுகின்றன.

சிலம்பு பற்றிய பெரியாரின் பார்வை :

எதையும் சமூகத்திற்கான பயன்நோக்கிலேயே ஆய்வுசெய்யும் பெரியவர் சிலப்பதிகார இலக்கியத்தையும் விட்டுவைக்கவில்லை. கண்ணகி கற்பரசி, பத்தினிப் பெண் என்கிற கருத்தியல் பெரியாரைக் சினங் கொள்ளச் செய்கிறது. பத்தினிக்குக் கோயில் கட்டுவதென்றால் கண்ணகி ஒருத்திக்கு மட்டும் போதுமா? மற்றவர்கள் எல்லாம் யார் என்று கேட்கும் பெரியார் “தமிழர் சரித்திரம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை ஒரே பெண்ணைத்தான் பத்தினியாக - பதிவிர தையாகப் போற்றப்பட வேண்டியவளாகக் கண்டு பிடிக்க முடிந்திருக்கிறது என்றால், இது தமிழ்ப் பெண் சமுதாயத்திற்கு எவ்வளவு இழிவும் பழியும் ஆகும் என்று சிந்தியுங்கள்” என்று தமிழர்களை வேண்டு கிறோம்.

சிலப்பதிகாரத்தின் முதற்காண்டமான புகார்க்காண்டம், மங்கல வாழ்த்துப் பாடலோடு தொடங்குகிறது. அதில் புகார் நகரைப் பற்றிச் சொல்லும் போது,

‘நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு

போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்’

என்பார் இளங்கோவடிகள்.

இதுபற்றி எழுதும் பெரியார், ‘சிலப்பதிகாரத்தின் முதற்காண்டத்தின் முதற் பாடலிலேயே ஆரியச் சிந்த னைகள் தோற்றம் பெற்று விடுகின்றன. புகார் நகரம் நெடிய சுவர்க்கத்துடனும், நாகருலகத்துடனும் ஒத்த போகம் உடையதாகக் கூறப்படும் பகுதி’ ஆரியச் சிந்தனைகளின் தோற்றுவாய் என்பார்.

கண்ணகி, கோவலன் அறிமுகம் :

கண்ணகியை முதலில் அறிமுகப்படுத்தும் இளங்கோ, அவளைப்

‘போதிலார் திருவினாள் புகழுடை வடிவு என்றும்

தீதிலா வடமீனில் திறம் இவள் திறம் என்றும்

மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்

காதலாள்’ என்று கூறுவார்.

‘செந்தாமரை மலரில் உறையும் திருமகளின் புகழு டைய வடிவு இவள் வடிவை ஒக்கும் என்றும், அருந்த தியின் கற்பு இவள் கற்பை நிகர்க்கும் என்றும் அவ்வூர் வியந்து போற்றும் பெருமையுடையவள் கண்ணகி’ என்று இதன்பொருள். இதுபோலவே கோவலனை அறிமுகப்படுத்தும்போது அவனை, ‘செவ்வேள்’ என்று கூறி இளங்கோவடிகள் முருகப்பெருமானோடு ஒப்பு மைப்படுத்துவார். கண்ணகி, கோவலரின் இந்தப் புராண ஒப்புமையைக் கண்டிக்காமல் பெரியார் வே றென்ன செய்வார். மேலும் மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிடத் தீக்குண்டத்தைச் சுற்று வந்துதான் இந்த இருவர்க்கும் திருமணமே நடந்தது என்றால் பெரியாரின் சினத்துக்கு அளவும் உண்டோ?

பெண்ணடிமை இலக்கியம் :

சிலப்பதிகாரத்தில் மாதவி என்பவள் ஆடல், பாடலில் வல்ல கணிகையர் குலத்தில் பிறந்த ஒரு பெண். அரங்கேற்றுக் காதையின் இறுதியில் மாதவி சோழ மன்னனிடம் பெற்ற ஒரு பரிசு மாலையோடு, நகரில் ஆடவர் திரிகின்ற ஒரு நடுத்தெருவில் கூனி என்ற பெண்ணால் நிறுத்தி வைக்கப்படுகிறாள். ஆயிரத் தெட்டு கழஞ்சு பொன்னைக் கொடுத்து எவன் அந்த மாலையை விலைக்கு வாங்குகிறானோ, அவன் மாதவி யின் மனைக்குச் சென்று அவளோடு மகிழ்ந்திருக்கலாம்.

மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்கென

மானமர் நோக்கியோர் கூனிகைக் கொடுத்து

நகர நம்பியர் திரிதரு மறுகில்

பகர்வளர் போல்வதோர் பான்மையின் நிறுத்த

மாமலர் நெடுங்கண் மாதவி மாலை

கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு

மணமனை புக்கு மாதவி தன்னொடு

அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி

(சிலம்பு : அரங்கேற்றக் காதை : 166-173)

தன் இன்ப வேட்கைக்காக, இல்லக் கிழத்தியாகிய கண்ணகிக்கு இரண்டகம் விளைவித்துவிட்டு இன் னொரு பெண்ணோடு குடித்தனம் நடத்தப் போன குற்றத்தைச் செய்தவன் கோவலன். ஆனால், ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட கோவலன் பின் நாளில் மாதவியை வஞ்சக கொள்கை கொண்ட கொடியவள், (சலம்புணர் கொள்கை சலதி) மாயவித்தைகளும் பொய்மையும் நிறைந்த மாயக்காரி (மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்) என்றெல்லாம் பழித்துப் பேசுகிறான். இப்படி மனம் போன போக்கில் நடந்து மதிகெட்டுப் போனவன் கதைத் தலைவன். அவனைக் கண்டித்துத் திருத்த வக்கற்ற கையாலாகப் பெண் கண்ணகி. இன்னொருத்தியின் கணவன் என்பதை அறிந்தும் அவனை ஏற்று இடந்தந்தவள் மாதவி. என்னடா இது இலக்கியம் என்று அலுத்துக் கொண்டார் பெரியார். கண்ணகியைப் பற்றி அவர் சொல்லும் போது,

“இந்த அம்மாளின் கற்பைப் பற்றிச் சொல்வதாயி ருந்தால், தேவடியாள் வீட்டுக்குக் கணவன் போனதை அறிந்த போது, அந்தத் தேவடியாளை ஏதாவது செய்திருக்க வேண்டும். தாசி மாதவி, கோவலன் கண்ணகியின் கணவன் என்று தெரிந்து அவனை அனுபவிக்கிறாள். தேவடியாளுக்கு இதுவா தர்மம்? அப்படிப் பட்டவளுக்குக் கண்ணகி பொருள் கொடுக்க வசதி செய்யலாமா? கோவலன் ஒழுக்கமற்றவன். தாசி ஒழுக்கமற்றவள். கண்ணகி மடப்பெண்” என்று கடிந்து கொள்கிறார். சிலப்பதிகாரத்தின் சிறப்புகளைப் புகழ்ந்திட முனைவோரைப் பார்த்து “இந்தப் பிரச்சார பிரம் மாக்களின் மாப்பிள்ளைமார்கள் தேவடியாள் வீட்டில் போய் இருந்தால் இவர்கள் பெண்கள் தாசி வீட்டிற்குப் பணம் நகை எல்லாம் அனுப்பச் சம்மதிப்பார்களா?” என்று ஒரு போடு போடுகிறார்.

மூடநம்பிக்கை இலக்கியம் :

சிலப்பதிகாரம் தமிழர்க்கான இலக்கியம் என்று சொல்லப்பட்டாலும் அஃது ஆரியச் சார்பையும் பார்ப் பனிய மேலாண்மையை நிலைநிறுத்தும் காப்பியமாக உள்ளது என்பதற்குப் பெரியார் பல்வேறு எடுத்துக் காட்டுகளைக் கூறி விளக்குவார். சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அறிவுக்குப் புறம்பான பல்வேறு அடிமுட்டாள்தனங்களைப் பட்டியல் இடுவார்.

கண்ணகி மதுரையை எரித்ததைப் பற்றிச் சொல்லும் போது, “இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும் தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி! மார்பைக் கையால் திருகினால் அது வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும் அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரஸ் இருக்குமா? இந்த மூடநம்பிக்கைக் கற்ப னையானது என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூறமுடியுமா?” என்று கேட்கிறார்.

கண்ணகி, கோவலன் ஆகிய தன் கணவனின் ஓர் உயிர் போனமைக்காக மதுரை நகரத்திலுள்ள எல்லா உயிர்களையும் சுட்டெரிக்கிறாள். இந்திராகாந்தி என்னும் ஓர் உயிர் போனமைக்காக பல்லாயிரம் சீக்கியரையும், இராசிவ் காந்தி எனும் ஒரு மனிதன் செத்ததற்காகப் பல இலக்கம் தமிழ் மக்களையும் கொன்றதற்கு இணையான கொடுஞ்செயல் அல்லவா இது? மேலும் கண்ணகி,

“பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்

மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு”

(சிலம்பு. வஞ்சினமாலை 53-54)

மற்றவர்களையெல்லாம் எரிக்கச் சொல்லித் தீக்கடவு ளுக்கு ஆணை இடுகிறாள்.

இதற்குப் பெரியார், “இராமன் பார்ப்பான் - ஆகவே சூத்திரனைக் கொன்றான் என்பது இராமாயணம். பார்ப்பானை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்பது சிலப்பதிகாரம். எவ்வளவு முட்டாள் தனமான கொடுமை செய்தாலும் பார்ப்பனர்களைக் காப்பாற்றினால் அவள் பதிவிரதை ஆகிவிடுவான் என்பது சிலப்பதிகாரம். பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மையின் மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால் கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் வணங்கத்தக்கவள், கற்புக்கரசி தெய்வமான வள். பாண்டியன் குற்றவாளி. இதுதானே சிலப்பதி காரக் கதை. இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம்! என்று சிலப்பதிகாரக் கதையைச் சாடு வார். மேலும் பார்ப்பனர்கள் புனிதம் என வணங்கும் பசுவையும் காப்பாற்ற வேண்டும் என கண்ணகி தீக்கடவுளுக்குக் கட்டளையிடுவது நோக்கத்தக்கது.

ஊழின் வலிமை :

சிலப்பதிகாரக் காப்பியம் எழுதப்படுவதற்கான முதன்மைக் காரணங்கள் மூன்றை இளங்கோவடிகள் தான் எழுதிய பதிகத்தில் சுட்டுவார். அரசியல் தவறி யோர்க்கு அறமே கூற்றாகும். புகழ்மிக் பத்தினியை உயர்ந்தோர் போற்றுவர். முன்செய்த வினை சினந்து வந்து தாக்கும் என்பனவே அந்த மூன்று கருத்து களாம்.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்

உரைகால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

சூழ்வினை சிலம்பு காரண மாகச்

சிலப்பதி காரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்.

(சிலம்பு. பதிகம் 55-60)

சிலம்பில் நிகழ்வுறும் எல்லாச் செயல்களுக்கும் ஊழ்வினைதான் காரணம் என்று உரத்துப் பேசுவார் இளங்கோவடிகள். இஃது மனித முயற்சிகளை மலினப் படுத்தும் கருத்தாகும். ‘ஊழிற் பெருவலி யாவுள?’ என்று வள்ளுவர் ஒரு பக்கம் வினா எழுப்பினாலும்,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

என்றால் மனித முயற்சிக்கு மதிப்பளிக்கும் போக்கை யும் காணலாம். முற்பிறவியில் நம்பிக்கை, வேள்வி செய்தல், பார்ப்பனர்க்கு மட்டும் தானம் செய்யக் சொல்லுதல் போன்ற பல மூடநம்பிக்கைக் கருத்துக்கள் சிலப்பதிகாரத்தில் மண்டிக் கிடக்கின்றன.

இப்படியெல்லாம் இருந்தாலும் சிலப்பதிகாரத்தை யோ மற்ற இலக்கியச் செல்வங்களையோ நாம் பகுத்தறிவுக்குப் புறம்பானவை என்று தள்ளிவிட முடியாது. கற்பரசி கண்ணகி என்ற கருத்தியலில் நாம் உடன்பட மறுக்கலாம். ஆனால் கொடுமைக்கு எதிராகக் கொற்றவனையே எதிர்த்துக் கேட்ட குடிமகளில் ஒருத்தி என்ற பெருமையை நாம் கண்ணகிக்கு ஏன் கொடுக்கக் கூடாது? மேலும் கண்ணகி என்பவள் தமிழினத்தின அடையாளம்.

செயலலிதா முன்பு முதல்வராக இருந்த போது சென்னை மெரினா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை யாருக்கும் தெரியாமல் ஒரே இரவில் அப்புறப்படுத்திவிட்டார். அவர் அன்றாடம் கோட் டைக்குச் செல்லும் வழியில் ‘ஓர் அமலங்கலக் குறியீடாக’ அச்சிலை உள்ளது. அச்சிலை உடனே அகற்றப்படா மல் விட்டால் அவருக்குக் கேடு சூழும் என எவனோ ஒரு முட்டாள் சொன்னானாம். அவன் அப்படிச் சொன்னது உண்மையோ இல்லையோ, அந்த இடத்தில் இருந்த கண்ணகி சிலை அகற்றப்பட்டது உண்மை.

தி.மு.க.வினரும் தமிழ்த் தேசிய உணர்வாளர் களும் செயலலிதாவின் அந்த அடாத செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கிளர்ந்தெழுந்தார்கள். மீண்டும் அங்கே சிலை வைக்கப்படும் வரை தொடர் போராட் டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்தாலும் அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவிய செயல் பாராட்டுக்குரியது.

கண்ணகி கோட்டம் :

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக கேரள எல்லையோரத்தில் கண்ணகி கோட்டம் அமைந்துள்ளது. அங்கே இடிந்து பாழடைந்த நிலை யில் கண்ணகி கோயிலும், சிதைந்த நிலையில் கண்ணகி சிலையும் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை முழுமதி நாளில் தமிழகத்திலிருந்து பலரும் தற்போது சென்று வருகின்றனர். கரடுமுரடான பாதை செப்பனிடப்பட வேண்டும். எளிதில் சென்றுவரும் வண்ணம் போக்கு வரத்து ஏந்துகளை இரு அரசுகளும் செய்துதர வேண்டும். எல்லாம் சரி.

ஆனால் தற்போது கண்ணகி கோட்டத்திற்கு சென்று வரும் சிலர் அங்குச் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ‘விரதம்’ இருக்கத் தொடங்கி விடுகிறார்கள். கண்ணகி கோட்டத்திற்குப் புறப்படும் போது, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களைப் போல் மஞ்சள், பச்சை என வெவ்வேறு வண்ண உடை களை அணிந்து கொள்கிறார்கள். அங்குப்போய் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். கண்ணகி வழி பாடு நடத்துகிறார்கள். இஃது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று. தமிழ்த் தேசிய உணர்வை வளர்க்கிறோம் என்ற பெயரில் அறிவுக்குப் புறம்பான இச்செயல்களில் ஈடுபடுவதை உடனே கைவிட வேண்டும்.

சிலப்பதிகாரத்தில் மட்டுமல்ல சங்க இலக்கியங்கள் எனப் போற்றப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களிலும் கூட ஆரியப் பார்ப்பனியக் கருத்துகள் உண்டு. ஆனால் அவை அளவில் மிகமிகக் குறை வானவையே. உலகின் எந்த மொழி இலக்கியங் களிலும் கற்பனையும் புனைந்துரையும் கடவுட் கோட்பாடும் இல்லாமல் இருக்க வழியில்லை. எனவே பெரியார் பார்வையில் சிலப்பதிகாரத்தை முற்றாக விலக்கிவிட முடியாது.

பெரியாரின் பாசறையில் வந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் அந்தப் பார்வையோடுதான் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’, ‘மணிமேகலை வெண்பா’ என்கிற இரண்டு புத்திலக்கியங்களைப் படைத்தார்.

சிலப்பதிகாரக் காலத்திற்கு முன்பே பெண் ஆணுக்கு அடிமையாக்கப்பட்ட சமூகச் சூழல் நிலவியது. திருக் குறளிலேயே பல இடங்களில் இந்நிலையைப் பார்க்க முடிகிறது. எனவே கண்ணகி காலத்தில் அவள் அந்தச் சூழ்நிலையில்தான் வாழ்ந்திருக்க முடியும். அதுபோல வே மாதவியும் நம் இரக்கத்துக்கு உரியவளே. கணி கையர் குலத்தில் பிறந்தும் கோவலனை ஏற்றுக் கொண்டபின் அந்த ஒருவனோடு மட்டுமே வாழ்ந்தாள். கோவலன் மாதவியைப் பிரிந்து சென்றபின் தான் துறவுக் கோலம் பூண்டதோடு தன் ஒரே மகள் மணி மேகலையையும் துறவுக்கோலம் பூணச் செய்து மாபெரும் சமுதாயப் புரட்சியை நிகழ்த்திக் காட்டினாள். இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’ யில் “அவள் என்மகள் அல்லள். மாபெரும் பத்தினி யாகிய கண்ணகியின் மகள் மணிமேகலை. கணிகை யாகிய என் வயிற்றில் பிறந்த குற்றம் அவளைச் சாராது. அரிய தவத்துறைக்கு அல்லாமல் குற்றமான கணிகைத் தொழிலுக்கு மணிமேகலை வரமாட்டாள்” என உறுதிப்படக் கூறினார்,

மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை

அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்

திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்.

(மணிமேகலை ஊரலர் 55-57)

தமிழ்த்தேசியம் பற்றிய கருத்தாக்கம் இன்று தமிழ்நாட்டில் வலிமை பெற்று வருகிறது. ‘தமிழ்நாடு’ பற்றிய தேசியச் சிந்தனையை சிலப்பதிகாரக் காப்பியத் துள்ளும் நாம் காணுகிறோம்.

வஞ்சிக் காண்டத்தில் அமைச்சன் வில்லவன் கோதை சேரன் செங்குட்டுவனிடம் நீ தமிழ்நாட்டை உருவாக்க விரும்பினால் அதைச் செய்யலாம் என்ற பொருள்படப் பேசுகிறான்.

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய

இதுநீ கருதினை ஆயின்”

(வஞ்சிக்காண்டம், காட்சிக் காதை 165, 166)

என்பது அந்த இடம்.

ஆக, சிலப்பதிகாரம் பற்றிய பெரியாரின் கருத்துகளையே முடிந்த முடிபாகக் கொள்ளாமல், இன்றைய தமிழ்த் தேசிய சிந்தனைப் போக்கிற்கேற்ப அவற்றை வளர்த்தெடுப்பது பெரியார் தொண்டர்களின் கடமை யாகும்.

பெரியார் கலை இலக்கியங்களை நேசித்தார். அவை சமூகப் புரட்சிக்குக் கைகொடுத்த போது, பெரியார் சமுதாயத்தைப் பின்னுக்கு இழுத்த கலை இலக்கியங்களைப் புறக்கணித்தார். இதுவே அவரு டைய கலை இலக்கியப் பார்வை என்பதில் முரண்பாடு இல்லை.

Pin It