ஒடுக்கப்படும் பெண்களுக்காக தொடர்ந்து போராடி வருபவர் கவிஞர் மாலதி மைத்ரி. கவிதையை பெண்ணியம் பேச ஒரு வாய்ப்பாகக் கொண்டு இயங்குபவர். பெண்கள் முன்னேற்றத்துக்காக ‘அணங்கு’ சிற்றிதழையும் நடத்தி வருபவர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனும் தன் படைப்புகள் வாயிலாக பெண்களின் பிரச்சனைகளை, பெண் தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களை எடுத்துக் கூறி வருபவர். ஓர் ஆணாயிருந்து பெண்ணியத்துக்காக சிறப்பாக பங்காற்றி வருபவர். இருவரும் இணைந்து சுமங்கலி மற்றும் விடுதி திட்டத்தின் கீழ் திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் குறித்து ஒரு உண்மை அறிக்கையைத் தொகுத்துத் தந்துள்ளனர். இதன் தலைப்பு - கூண்டில் அடைபட்ட பெண் தொழிலாளர்கள்.

இந்தியாவிலேயே அதிக பஞ்சாலைகளும் அதிக ஆயத்த ஆடைத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களும் உள்ள ஒரு நகரம் திருப்பூர். இந்தியாவிற்கு அதிக அந்நியச் செலவாணி ஈட்டும் நகரமும் திருப்பூரே. பொருளாதார அடிப்படையில் வரவேற்கக் கூடியது எனினும் தொழிற்சாலைகள் பெண் மயமாக்கப்பட்டு அடிமைப்படுத்தியிருப்பது வருந்தத்தக்கது. அதையே ஆய்வித்து விவரிக்கிறது இந்நூல்.

பெண்கள் குறித்தான பிரச்சனைகளை பேசுவதற்கு முன் தொழிற்சாலைகள் குறித்த அறிமுகத்துடன் தொடங்குகிறது தொகுப்பு. இரண்டாம் பகுதி திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் குறித்து பேசுகிறது. ‘1982ல் தேசிய அளவில் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்கு 15.7 ஆக இருந்தது. 2000ம் ஆண்டில் அதன் பங்கு 51ஐ எட்டியது. தற்போது(2006-2007) அதன் அளவு ரூ.11,000 கோடியைத் தொட்டுள்ளது’ என வளர்ச்சியைக் கூறியுள்ளது.

‘மாறி வரும் தொழிலாளர் சக்தி’யை எடுத்துக்காட்டுகிறது மூன்றாம் பகுதி. தொழிலாளர் சக்தி பெண் மயமாக்கப்பட்டு வருகிறது என்றும் தொலைதூர மாவட்டங்களிலிருந்தும் கேரளாவிலிருந்தும் இளம் பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் என்கிறது. நலத்திட்டங்கள் ஒரு காரணம் என்றும் கூறுகிறது. இதுவொரு மாயவலையாக உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்படுகின்றனர் என்றும் தங்குமிடமும் தரப்படுகிறது என்றும் சொல்கிறது. எல்லாமே அடிமையாக்கும் முயற்சியே. அடிப்படை கண‌க்கெடுப்பு நடத்தப்பட்ட இரண்டு வட்டங்களைச் சேர்ந்த 1702 தொழிற்சாலைகளில் ஏறத்தாழ 32,645 இளம்பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்’ என்னும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது ஆறுதளிக்கிறது.

"தனி ஒரு தொழிலாளியின் சுதந்திரத்தை முடக்கும் உழைப்பு முகாம் முறை மிகக் கொடுமையான ஒன்று என்பது உலகம் முழுதும் ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது. இது கொத்தடிமை முறைக்கும், சிறை போன்ற உழைப்பு முகாம்களுக்கும் இணையான கொடுமை நிறைந்தது என்பது சில தொழிலாளர் நல ஆய்வாளர்களின் கருத்து’ என்கிறது நான்காம் பாகம். உண்மையே! சுமங்கலி மற்றும் விடுதித் திட்டம் முகாம் தொழிலாளருக்கு நிகழ்ந்த உண்மை சம்பவத்தைச் சொல்கிறது. வரதட்சணைக்குத் தயார் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறது. ஒரு மாதத்திற்கு நான்கு மணி நேரம் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் ஒரு நாளைக்கு பனிரண்டு மணி நேரம் உழைக்கின்றனர் என்றும் கூறுகிறது. விடுதிகள் ஒரு சிறைச் சாலைகளாகவே உள்ளன என்பதும் பெண்கள் கொத்தடிமைகளாகவே உள்ளனர் என்பதும் கொடுமை. நடத்தையைக் கண்காணிப்பதும் தனிநபர் சுதந்திரம் தடைச் செய்யப்படுவதும் கண்டிப்பிற்குரியது. கூலிகள் குறைக்கப்பட்டுள்ளதையும் இளம் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும் வெளிச்சப்படுத்துகிறது.

ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில் சுமங்கலித் திட்டம் செயல்படும் முறையை விரிவாகக் கூறுகிறது பாகம் ஜந்து. மனிதத் தன்மையற்றது மற்றும் சுரண்டல் தன்மையது சுமங்கலித் திட்டம் என்கிறது. இத்திட்டம் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுகிற‌து என்றும் சொல்கிறது. பெண்களுக்கு தொழிலாளர் நலநிதி மற்றும் ஆயுள் காப்புநிதி செலுத்தப்படுவதில்லை எனவும் அறியச் செய்கிறது. பெண்களை பணிக்கு அழைத்து வர தரகர்கள் உள்ளனர் என்றும் அவர்களுக்கு தரகு தரப்படவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. மத்திய ஜவுளி அமைச்சகம் ஆயத்த ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்க உலகத் தரம் வாய்ந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி பூங்கா உருவாக்க அனுமதி அளித்து மந்திய நிதியமைச்சர் திரு.சிதம்பரம் அவர்களால் தொடங்கி வைத்த‌ ‘நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா’வும் விதிவிலக்கல்ல என சுட்டிக் காட்டியுள்ளது ஆறாம் பாகம்.

‘உண்மை நிகழ்வு அறிக்கை’ என்னும் ஏழாம் பாகம் பல இளம் பெண்களின் நிலையை அறிந்து கூறியுள்ளது. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. பல பெண்கள் மன அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர் என்னும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. உடல் ரீதியான பாதிப்பு, ஒப்பத்தம் முடிவடையும்முன்பே வெளியேற்றுதல், பணத்துக்காக போராடுவதை விட தப்பிக்க முயல்வது, போதிய தூக்கமின்மையால் பாதிப்பு அடைவது, பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுதல் என பல உண்மைகளைக் கண்டறிந்து கூறியுள்ளது. உண்மை நிலையை அறியும் போது உள்ளம் உறையவே செய்கிறது.

‘ஒருங்கிணைந்த சமுகப் பொறுப்பும் தொழிலாளர் நிலைமைகளும்’ பகுதி பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை கோர வழிவகை உள்ளது என்ற‌ விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இறுதியாக தீர்வு ஏற்படுவதற்கு ‘பரிந்துரைகள்’ வழங்கியுள்ளது வரவேற்பிற்குரியது. முகாம் தொழிலாளர் முறை நீக்கப்பட வேண்டும். நடத்தை விதி முறைகள் கடைபிடிக்க வேண்டும். தற்போது சிக்கியுள்ள பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கப் பட வேண்டும். பணியில் அமர்த்தும் பெண்களுக்கு வயது 18க்கு மேற்ப்பட்டதாக இருக்க வேண்டும். நடைமுறையிலுள்ள ஒப்பந்தங்கள் கைவிடப்பட‌ வேண்டும். தரகர்களை அமர்த்தக்கூடாது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மக்கள் உரிமை அமைப்புகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பவை பரிந்துரைகள். அரசாங்கத்துக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன, மக்கள் உரிமை அமைப்புகளுக்கும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.

பெண்ணியக் கருத்துக்கள் மேலெழுந்து வரும் இன்றைய காலச்சூழலில் திருப்பூரிலுள்ள பஞ்சாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களின் பிடியில் பெண்கள் சிக்கியிருப்பது கவனிப்பிற்குரியது. கள ஆய்வு செய்து உண்மை நிலையை அறிந்து தொகுத்துத் தந்திருக்கும் கவிஞர் மாலதி மைத்ரி மற்றும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் செயல் பாராட்டத்தக்கது. பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பரிந்துரைகள் கூறியிருப்பது அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது. புள்ளி விவரங்களைத் திரட்டித் தந்து உண்மை நிலையை அறியச் செய்து உள்ளனர். முதலாளிகளுக்கு எதிரானது, பெண்களுக்கு ஆதரவானது, 'கூண்டில் அடைபட்ட பெண் தொழிலாளர்கள்’ என்னும் இத்தொகுப்பு பெண் விடுதலைக்கு வித்திட்டுள்ளது, பெண் உரிமையை நிலைநாட்ட முயற்சித்துள்ளது.

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)