1990களில் அம்பேத்கர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதன் விளைவாக பட்டியலின மக்களின் கலை, இலக்கிய அரசியலில் புதிய நகர்வு உண்டானது. மேற்கத்திய புரட்சிகள் கலை இலக்கியங்களில் புதிய பரிணாமத்தை தோற்றுவித்தது போல அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாட்டம் இந்திய ஒன்றியத்தின் கலை இலக்கியங்களில் புதிய பரிமாணத்தைத் தோற்றுவித்தது. இந்திய ஒன்றியத்தில் பட்டியலின மக்களின் அறிவுச் செயல்பாடு பன்னெடுங்காலமாக இருந்து வருவதே என்ற போதிலும் 1990களுக்குப் பிறகான செயல்பாடுகள் சமகால கலை, இலக்கிய, அரசியல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத வேகம் கொண்டதாக இருந்தன.

iyyappan book on dalit novelsஇன்றைக்கு அரசியலில் பட்டியலின மக்களின் ஒருங்கிணைவு கூடி வரும் நிலையில் இலக்கியங்களில் அவர்தம் பங்களிப்பும் காத்திரமானது. பட்டியலின படைப்பாளிகள் தம் படைப்புகளை ‘தலித் இலக்கியம்’ என முன்வைத்தபோது எல்லாவற்றையும் தமிழ் இலக்கியமாகவே பார்த்து பழகியவர்களிடமிருந்து எதிர்க்குரல்கள் வெளிப்பட்டன. இலக்கியத்தை சாதி அடையாளத்தோடு அணுகக் கூடாது என்ற அவர்களின் வாதங்களை பட்டியலின படைப்பாளிகள் தர்க்க நியாத்தோடு எதிர்கொண்டனர்; வெற்றி பெற்றனர்.

அம்பேத்கர் நூற்றாண்டு விழா காலகட்டத்தில் உலகமயமாக்கலும் இந்திய ஒன்றியத்திற்கு அறிமுகமாகி இருந்ததன் விளைவாக ஐரோப்பிய கலை இலக்கியத் தத்துவங்கள் பேசு பொருளாயின. அதை உள்வாங்கிய பரிசோதனை முயற்சிகளை அறிவுஜீவிகள் செய்துபார்த்தார்கள். அதையொட்டி வெளியான பட்டியலின படைப்பாளிகளின் படைப்புகளில் கலகக் குரல் நிறம்பியிருந்தது. ‘எதார்த்தம்’ என்ற மாயையை உடைத்து, கற்பிதங்களை நிர்மூலமாக்கி, எல்லோருக்குமான நியாயத்தை முன்வைத்த பட்டியலின படைப்பாளர்களின் படைப்புகள் அதுவரை இருந்திராத வீச்சோடு வெளிப்பட்டது. குறிப்பாக, ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘காலச்சுமை’, பாமாவின் ‘கருக்கு’, ‘வன்மம்’, ‘சங்கதி’, அறிவழகனின் ‘கழிசடை’, அழகிய பெரியவனின் ‘தகப்பன் கொடி’ முதலிய நாவல்கள் பெரிதும் கவனிக்கப்பட்டன.

பட்டியலின படைப்பாளிகளின் படைப்புகள் எந்த அளவுக்கு வேகமெடுத்து வெளிப்பட்டனவோ அதே அளவுக்கு அவர்களின் படைப்புகள் குறித்த விமர்சனமும் கல்விப்புல ஆய்வுகளும் வெளிப்பட்டன. அவ்இலக்கியம் பற்றிய விவாதம் ஓர் இயக்கத்தைப் போல முன்னெடுத்துச் செல்லப்பட்டன. அவற்றில் இருந்த ஆரோக்கியத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு வயிற்றெரிச்சலைப் புறந்தள்ளிய பட்டியலினப் படைப்பாளிகள், அவர்தம் படைப்புகளை கோட்பாடு சார்ந்தும் எழுதிப் பார்த்து தமக்கான அடையாளத்தை நிறுவிக் கொண்டனர்.

அந்தவகையில் பட்டியலின படைப்பாளர்களின் படைப்புகள் குறித்த திறனாய்வு வரலாற்றில் மு.ஐயப்பனும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 2021 செப்டம்பரில் வெளியான அவரின் ‘தலித் தன்வரலாற்று புதினங்கள்’ என்னும் நூல் பாமாவின் ‘கருக்கு’ விடிவெள்ளியின் ‘கலக்கல்’ ஆகிய இரு நாவல்களை மையமிட்டு நிகழ்த்திய ஆய்வாக அமைந்திருக்கிறது. பாமா, விடிவெள்ளி இருவருமே கத்தோலிக்கக் கிறித்தவத் திருச்சபையில் துறவியாக இருந்து, பின் அதில் இருந்து வெளியேறியவர்கள். கத்தோலிக்கக் கிறித்துவர்களிடம் இருக்கும் சாதிய வன்மங்களை எழுதியவர்கள். கத்தோலிக்கக் கிறித்தவத்திற்கும் இந்துத்துவ நால்வர்ண கோட்பாட்டிற்குமான பண்பாட்டுப் போரில் கத்தோலிக்கக் கிறித்துவத்தை இந்துத்துவ நால்வருணம் தின்று செரித்த முறைமையை எழுதியவர்கள். இந்துத்துவத்தின் பாசிச முகத்தையும் சமத்துவம் பேசுகிற பண்பாட்டுக் கோட்பாட்டை இந்துத்துவம் சுவீகரித்த சமகால வரலாற்றையும் வெகுமக்களின் மொழியில் வெளிப்படுத்தியவர்கள். அவர்கள் தம் படைப்புகளை ஆய்வு பொருளாகத் தெரிந்திருக்கும் நூலாசிரியரின் அரசியல் தெளிவு, நூலில் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு இடங்கள், துறவு மடங்கள் ஆகியவற்றில் கிறித்தவ பட்டியல் இனத்தவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்மங்களை மூலத்தரவுப் படைப்பின் வழி நிரல்படுத்தியிருக்கும் இந்நூலை, பட்டியலினப் படைப்பாளர்களின் ஒட்டுமொத்த புனைவு வெளியை இனம் காண்பதற்கான ஆய்வு போக்கின் ஒரு சிறு கிளையாகக் கருதலாம். இந்நூல் பற்றியும் நூலுக்குள்ளும் கூடுதலாகப் பேச இடமிருக்கிறது.

வெளியீடு:

அறம் பதிப்பகம்,
முள்ளிப்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் – 632 316
விலை – ரூ 360/-
பேச 91 507 249 97

- ஞா.குருசாமி