உண்மையிலேயே நம் மாண்புமிகு முன்னால் இளம் பிரதமரான திரு ராசீவ் காந்தியின் படுகொலை சம்பவம் ஒரு எதிர்பாராத துன்பியல் நிகழ்வுதான். இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வன்செயலாகும்.

இன்று மிகவும் முன்னேறுகின்ற உலக சூழலில், தீவிரவாதமும் சேர்ந்தே முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழக காங்கிரசார் வழக்கம்போல புலிகளுக்கு எதிரான குரல் கொடுப்பார்கள். நாமும் இதளை தீவிரவாதத்திற்கு எதிரான செயலாகவே கருதலாம். மேலும் சில கட்சிகள் இன்னும் புலிகளுக்கு ஆதரவான குரல் எழுப்பிதான் வருகின்றன. இதனையும் தார்மிக ஆதரவாக கருதி ஏற்கத்தான் வேண்டும் ஏனெனில் மனித உரிமை மற்றும் கருத்துரிமை மிக்க நவநாகரிக உலகில் வாழ்கிறோம். ஏனென்றால் இன்னும் நம்மிடயே தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக ளில் ஒரு தௌiவு இல்லை என்றே தோன்றுகிறது. மேனாமினுக்கிகளான தேசபக்தக்கூட்டமொன்று அரச பயங்கரவாதத்தை கணக்கில் கொள்ளாமல் ஆதரிக்கவே செய்கின்றது.

ஆனால் என் கேள்வியே வேறு. எது என்னை இக்கட்டுரையை எழுத துண்டியது என்றால் ராசீவ் காந்தியின் படுகொலையை கண்டிப்போர் கவலைப்படுவோர், ஈழம் போன்ற உலகில் மடியும் மற்ற அப்பாவிகளின் துயரத்தை கண்டு கொள்ளாதது ஏன்? பிரபலங்களின் படுகொலையை கண்டிக்கும் ஏனைய கட்சித்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் இச்சம்பவத்தை பற்பல ஆண்டுகளாகவும் பல தலைமுறைக்கும் இழுத்துவருவது எதனால்? தம் தானைத் தலைவர்/தலைவிகளின் மனங்களை கு ளிர்விக்கவா? அல்லது அவ்வாறு குளிர்வித்து தேர்தலில் ஓரிரு சீட்டுக்களை பெறவா? அல்லது நாங்களும் இருக்கோம்ல என்று அரசியலில் தங்களின் இருப்பை தெரிவிக்கவா, இத்தனை கீழ்த்தரமான அரசியலை நடத்துகிறார்கள்.

மனித உயிர் அத்தனை மலிவானதா? இத்தனைக்கும் இவர்கள் மெத்தபடித்த மேதாவி அரசியல்வாதிகள். படிக்காதவன் கூட செய்ய மாட்டான் இவர்கள் செய்யும் துரோகத்தை. ஆனால் சந்தர்ப்பவசமாக, 80-க ளில் ஈழத்தில் இந்திய இராணுவ துணையோடு கொன்று குவித்த ஈழத்து அப்பாவிகளை மட்டும் ஏனோ மறந்துபோகிறார்கள். அங்கு ஈழத்தில் மாண்டுபோகும் எம் இனமக்களின் உயிர் மற்றும் உடமை இழப்பிற்கு யார் பொறுப்பேற்பது? அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு இந்திய அரசின் நேரடி அல்லது மறைமுக பங்கில்லையென நெஞ்சில் கைவைத்து கூறமுடியுமா இவர்களால்?

மேலும் தப்பி தவறியும் தமிழக காங்கிரசார் ஈழமக்களை தானாக முன்வந்து ஆதரித்த வரலாறு கிடையாது. தொடர்ந்து ஆதரிப்பவர்களையும் புலிகளின் பெயர்களை சொல்லியே தீவிரவாதத்திற்கு ஆதரவு பெருகிவிட்டதென கூக்குரலிட்டு திசைதிருப்புவதில் வல்லவர்கள். இவர்களை மக்கள் இனங்கண்டு கொள்ளவேண்டும்.ஈழத்தில் அட்டூழியம் செய்து திரும்பிய இந்திய ராணுவத்தை அன்றைய முதல்வர் வரவேற்க செல்வதை தவிர்த்தது, வரலாறு. 20 ஆண்டுகளாக ராசீவ் காந்தியின் மரணத்திற்காக ஒப்பாரி வைக்கும் என் அருமை தமிழக காங்கிரசார் தத்தம் வீட்டு சொந்தங்களின் மரணத்தையாவது ஞாபகம் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. இவர்கள் எங்கிருந்து நம் ரத்தங்களான ஈழமக்களைப்பற்றி வாய் திறப்பார்கள்.

மானமுள்ள மறத்தமிழனாக இருந்தால் தமிழகத்தில் இனியும் காங்கிரசு என்றொரு கட்சி தேவையா என்று இவர்கள் எண்ணிபார்க்கும் காலம் வந்து விட்டது. இங்கு தயவுசெய்து இறையாண்மை பற்றியோ பொறையாண்மை பற்றியோ யாரும் வாய்கிழிக்க தேவையில்லை. மனிதநேயத்தை மட்டும் சிறிது சிந்தித்து பாருங்கள். உலகில் உள்ள எவ்வுயிரும் சமம் என்பதை மட்டும் ஏன் அறிய மறுக்கிறீர்கள்? உயிர் வலி / உயிர் பயம் என்பது பணக்காரனுக்கு ஒரு மாதிரியாகவும் ஏழைக்கு ஒரு மாதிரியாகவும், பிரபலங்களுக்கு ஒரு மாதிரியாகவும் பிரபலமற்றவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் இருப்பதில்லை.

நான் கூறவருவதின் சாரம் தீவிரவாதத்திற்கு வலு சேர்ப்பதற்கல்ல. இந்த முன்னேறிய நவ நாகரிக உலகில் இன்னும் சராசரி மனித உயிர்களுக்கு மட்டும் சராசரி மனிதனே கூட மதிப்பளிக்காமல் இருப்பது எதனால்? என்பதுதான். உண்மையிலேயே நம் மாண்புமிகு முன்னால் இளம் பிரதமரான திரு ராசீவ் காந்தியின் படுகொலை சம்பவம் ஒரு எதிர்பாராத துன்பியல் நிகழ்வுதான். இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வன்செயலாகும்.

ஆனால் அன்று நடந்த படுகொலையில் தமிழகத்தை சேர்ந்த முக்கிய காங்கிரசு புள்ளிகளும் கூட்டணி தலைவிகளும் எங்கிருந்தார்கள் என்பது மட்டும் எனக்கு புரியாத புதிராக உள்ளது. தெரிந்தவர்கள் யாராவது கூறினால் அறிந்து கொள்வேன் வரலாற்றை. மேலும் இவ்விடயத்தில் விடுதலைப்புலிகளை தவிர்த்து வேறு கோணத்தில் இந்திய அரசு புலானாய்வு செய்ததா அல்லது செய்கிறதா என்பதையும் விசயமறிந்தவர்கள் கூறினால் என்னைப்போன்றவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

- த.வெ.சு.அருள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It